தொழிற்சாலையில் நுழையும் போதே, “சூழ்நிலையில்”, ஏதோ வழக்கத்திற்கு மாறாக உணர்ந்தான் முகுந்தன். தொழிலாளர்கள் மூலைக்கு மூலை கொத்துக் கொத்தாக நின்று கொண்டிருந்தனர். அனைவரின் முகத்திலும், கோபம், ஆத்திரம், ஆவேசம் நீக்கமற தீற்றப்பட்டிருந்தது. ஆங்காங்கே லத்தியுடன் தென்படும் “காவல் துறையினர்” நிலைமையின் தீவீரத்தை சந்தேகமற உணர்த்தினர். தொழிற்சாலை கேண்டீன் சுவற்றில், வரிசையாகத் தொங்க விடப்பட்டிருக்கும், யூனியன் “நோட்டீஸ் போர்டுகள்” நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தன. ஒரு போர்டைத் தேர்ந்தெடுத்து ‘சிவப்பு நிறத்தில்’ அச்சடிக்கப் பட்டிருந்ததைப் படித் தான் முகுந்தன்.
விஷயம் மிகவும் சீரியஸ்தான். நிர்வாகம், தொழிற்சாலையில் ஆட்குறைப்பு செய்ய தீர்மானித்திருப்பதாகவும், கணிசமான தொழி லாளர் களுக்கு ‘கட்டாய ஓய்வு’ அளித்து வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்திருப் பதாகவும், இத்திட்டத்தினை தொழிற்சங்கங்கள், ஒன்றினைந்து, ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதாகவும், போராடு வதற்காக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டிருப்பதையும் அறிவித்திருந்தார்கள்.
ஆறு மாதமாகவே, அரசல் புரசலாக இந்தச் செய்தி உலவிக் கொண்டி ருந்தது உண்மை தான். ஆனால் இவ்வளவு விரைவில், ‘திடுதிப் பென்று‘ இந்த அறிவிப்பை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அது ஒரு இரசாயனப் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. வட சென்னை புறநகர்ப் பகுதியில் இருக்கிறது. ஃப்ளோரின் உற்பத்தி செய்கி றார்கள். போட்டித் தொழிற்சாலைகள் அதிகம் இல்லா ததாலும், ஃப்ளோரினுக்கு உள்நாட்டில் நல்ல டிமான்ட் இருந்ததாலும் தொழிற்சாலை லாபகரமாக நடந்து கொண்டிருந்தது. உற்பத்திக்கும் குறைவில்லை. இங்கு, “யூனிட்” என அழைக்கப்படும் ஃபாக்டரியில் மட்டும் 500 பேர் வேலை செய்கிறார்கள். அலுவலகத்தில் ஒரு முப்பது பேர் வேலை செய்கின்றனர்.
திடீரென ‘சீனாவின்’ உருவில் வந்தது வினை. இவர்கள் உற்பத்தி செய்யும் அதே ஃப்ளோரினை, சீனர்கள், இவர்களின் விலையில் “பாதி” யில் இந்தியாவில் சப்ளை செய்தார்கள். வினியோகஸ்த்தர்கள் அதிக விலை கொடுத்து இவர்களது ஃபாக்டரியிலிருந்து வாங்குவதை விட குறைந்த விலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டார்கள்.
இந்த திடீர் தாக்குதலால் சற்று நிலை குலைந்தாலும், நிர்வாகத்தில் கூடுமானவரை செலவினங்களைச் சுருக்கியும், லாபத்தினைக் குறைத்தும், தொழிற்ச்சாலையினை ஓட்டி வந்தார்கள்.
எனினும், ஒர் அளவிற்கு மேல், போட்டியினை சமாளிக்க முடியாமல், நிலைமை கையை விட்டுப் போனது. விற்பனையில் கடும் வீழ்ச்சியினை சந்தித்த்து ஆலை. ஒன்று தொழிற்சாலையை மூடி விட வேண்டும் அல்லது தொழிற் சாலையின் ஆட்களில் பாதிக்கும் மேல், விற்பனைக்கு ஏற்ப ‘ஆட் குறைப்பு’ செய்து செலவைக் குறைத்தாக வேண்டும் என்ற கடுமையான நிலைக்கு தொழிற்சாலை தள்ளப்பட்டது. பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பெயர்கள் கூட இறுதி செய்யபட்டுவிட்டது.
நிலைமையை விளக்கி, ஆட்குறைப்பு பற்றிய தகவல் தொழிற் சங்களுக்கு அறிவிக்கப் பட்டதும், எதிர்பார்க்கக் கூடிய பதற்றமான சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது. காவல் துறை யினரும், லேபர் ஆபீஸரும் தொழிற்சாலையில் முகாமிட் டுள்ளனர்.
முகுந்தன் இந்த ஃபாக்டரியில் ஒரு “அக்கவுன்டன்ட்’. தொழிற் சாலையின் நிர்வாக அடுக்குகளில் மேலேயும் இல்லாமல், கீழேயும் இல்லாமல் இருக்கும் ஒரு ‘திரிசங்கு’ நிலை அலுவலர்.
தொழிற் சங்கங்கள் இவனை “தொழிலாளிகளில்” ஒருவராகவோ, நிர்வாகம் தனது ‘நிர்வாகிகளில் ஒருவராகவோ’ சேர்த்துக் கொண்டதில்லை. எனினும் அக்கவுன்டன்ட் ஆக இருப்பதால் இவனுக்கு, தொழிற்சாலையின் நிதி நிலையும், உற்பத்தி நிலையும் நன்கு தெரியும்.
நிலைமை, மிக மோசமாக இருப்பதென்னவோ உண்மைதான். இதே நிலையில் தொழிற்சாலை நடத்த முடியாது. நிர்வாகம் சொல்லும் “ஆட்குறைப்பும்” தொழிற்சாலையை ‘ஆட்டோமைஸ்’ செய்வதும் தான் வழி.. நிர்வாகம் இரண்டு மாதங்களாக நடத்தும் ‘மீட்டிங்’ களில் இந்த ‘ஆட் குறைப்பு’ பற்றிய விவாதம்தான் பிரதான அங்கம் வகித்துள்ளது.
முகுந்தன், அக்கவுன்டன்ட் என்ற முறையில், “எவ்வளவு பேரை வீட்டுக் கனுப்பினால் எவ்வளவு ரூபாய் செலவு மீதமாகும்” என்று நிர்வாகத்தில் கேட்கப்பட்டிருந்தத்தற்கு ‘ஸ்டேட்மென்ட்’ கொடுத்திருந்தான்.
உண்மையில் ஊழியர்கள் பாவம்தான்! திடீரென வேலை இல்லை யென்றால் என்ன செய்வார்கள்? தான் ஃபாக்டரியில் இல்லாமல், அலுவலகத்தில் இருப்பதால், ‘ஆட்குறைப்பிலிருந்து’ தப்பித்துக் கொண்டோம் என்ற சிந்தனையுடன் தனது அலுவலக அறைக்குள் சென்றான் முகுந்தன்.
பணி நீக்கம் செய்யப்படும் லிஸ்ட்டில் தனது பெயர் இல்லை என்பதால், மாலை வீடு திரும்பும் போது ஊழியர்கள் ஏதும் மறியல் செய்வார்களா? ஏதும் அடிதடி ரகளை நடந்துவிடுமா? என பல்வேறு விதமாக சிந்தனை ஓடியது அவனுக்குள்.
சே.. சே.. அப்படி யெல்லாம் இருக்காது. போலீஸ் பாதுகாப்பு போட்டி ருக்கிறார்கள்! வேலையிலிருந்து எடுக்கும் அதிகாரம் எனக்கா இருக்கிறது? கேரோவோ, மறியலோ மேல் மட்ட நிர்வாகத்தைத் தான் செய்வார்கள். “எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை” தனக்குள் சமாதானம் செய்து கொண்டு தனது அலுவலக அறைக்குள் சென்றான் முகுந்தன்.
எப்போதும் புன்முறுவலுடன் “குட் மார்னிங்” சொல்லும் எழுத்தர் ‘சுமேதா’, முகுந்தனை மௌனமானப் பார்த்தாள்.
“குட் மார்னிங்க் சுமேதா” என்ன டல்லாக இருக்கிறாய்?”
“ஒன்னுமில்லை சார்.. இன்றைய தபால்களை ஃபைலில் போட்டு வைத்தி ருக்கிறேன்.. பாருங்கள்” என்றாள்
என்ன ஆச்சு இவளுக்கு? இப்படி சுணக்கமாக இருக்க மாட்டாளே! ஒருவேளை ஆட்குறைப்பு லிஸ்ட்டில் இவள் பேரும் இருக்கிறதா? இருக்காதே! யூனிட்களில் தானே ஆட்குறைப்பு. ஆபீஸில் இல்லையே?
யோசனையுடன் தபால் கட்டைப் பிரித்தான். முதல் கடிதம் அவனது பெயருக்கு வந்திருந்த்து. “கான்ஃபிடன்ஷியல்” என்ற உறையுடன்.
‘திரு முகுந்தன் அவர்களுக்கு,
பல்வேறு நிர்வாகக் குழு மீட்டிங்குகளில் “தொழிற்சாலையின் தற்போதைய உற்பத்தி நிலை, நிதி நிலை” குறித்து நடந்த விவாதங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இது குறித்து நிர்வாக போர்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும் இணைத்துள்ளோம்.
இந்த தொழிற்சாலையினை தொடர்ந்து நடத்த வேண்டுமானால், இருக்கும் மனித சக்தியில் அறுபது சதவிகிதம் குறைத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் நிர்வாகம் இருக்கிறது. இல்லையெனில் தொழிற் சாலை யினை மூடி விட வேண்டும்.
இங்கு பணி செய்யும் தொழிலாளர் நலன் கருதி, நாங்கள் முதல் முடிவினை அமுல்படுத்த உள்ளோம். அதன்படி “யூனிட்களிலும்” , “அலுவலகங்களிலும்” பணி புரிபவர்களில் அறுபது சதமானவர்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்பட தீர்மானிக்கப் பட்டுள்ளது. அத்தகைய நபர்களின் பெயர்களையும் இறுதி செய்துள்ளோம். துரதிர்ஷட வசமாக தங்களது பெயரினையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் தொழிற்சாலையின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, நிர்வாகம் கொடுக்க உத்தேசித்துள்ள ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிதி நிலைமை சீரானதும், தங்களது சேவையினை, நாங்களே நாடிப் பெற்றுக் கொள்வோம். தாங்கள் இதுவரை நிர்வாகத்திற்கு அளித்து வந்த ஒத்துழைப்பிற்கு நன்றி!. ஆபீஸில் பணிபுரியும் அலுவர்களுக்கு, இந்த ஆட்குறைப்பு உத்தரவுகள் உடனடியாக அமுலுக்கு வருகிறது.
நன்றியுடன்,
ஒப்பம்
மேனேஜிங் டைரக்டருக்காக.
காலுக்குங் கீழ் உலகம் திடீரென நழுவியது போலிருந்தது முகுந்தனுக்கு. நில நடுக்கம் ஏறபட்டாற்போல் உணர்ந்தான். தலை சுற்றியது. நம்ப இயலாமல் மீண்டும் ஒருமுறை அந்த கடிதத்தை படித்தான். எதிர்காலம் திடுமென தன்னிடமிருந்து பிடுங்கப்பட்டது போலிருந்தது.
எனக்குமா? நிஜமாலுமேவா? இனி என்ன செய்வேன்? இந்த கம்பெனிக்காக எவ்வளவு உழைத்திருப்பேன்? கொஞ்சம் கூட நன்றியே இல்லாமல், என்னையும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்களே? நடந்த மீட்டிங்குகளில், இந்த பணி நீக்கம் அலுவலகங்களுக்கும் உண்டு என ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே? நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டான்.
சப்தமின்றி வந்து ஒரு “டம்ளர்” ஐஸ் வாட்டரை வைத்துவிட்டு அகன்றாள் சுமேதா!
இவளுக்கு முன்னமேயே தெரிந்திருக்க வேண்டும்!
நிர்வாக அதிகாரி கூப்பிட்டனுப்பினார்.
“ஐ யாம் சாரி..மிஸ்டர் முகுந்தன்.. உங்களது உழைப்பும், நேர்மையும், உண்மையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. மெச்சத் தகுந்தது தான். ஆனாலும் தொழிற்சாலை இருக்கும் நிலைமை கருதி, நிர்வாகம் சில கடுமையான முடிவுகளை எடுக்க நேர்ந்துவிட்டது. அக்கவுன்ட்ஸ் முழுவதும் கம்ப்யூட்டரைஸ் பண்ணப்போறோம். உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.”
‘இட்ஸ் ஆல்ரைட் சார்.. பரவாயில்லை..’
கண்ணீரை மறைக்க மிகவும் சிரமப் பட்டான்.
காம்பவுன்ட் சுவற்றின் வெளியே ‘ஜிந்தாபாத்.. “ கோஷங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
மதியம் மூன்று மணிக்கு சுமேதாவை கூப்பிட்டான்.
“நான் புறப்படுகிறேன் சுமேதா. இதுவரை அலுவலகத்தில் நீ செயத பணிகளுக்கு பாராட்டும், நன்றியும்! ஐ அம் லீவிங்க் திஸ் ஆபீஸ் ஒன்ஸ் அண்ட் ஃபார் ஆல். தேங்க் யூ..”
அவனது முகத்தை நேராகப் பார்க்க தயங்கி, வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் சுமேதா.
வெறுமை பொங்க, வெளியே வந்து தனது ஹீரோ ஹோண்டா பைக்கை எடுத்தான்!
‘என்ன மச்சி... உனுக்கும் வெச்சுட்டானா ஆப்பு? தெனமும் ஆபீஸுக்கு வர்ரக்குள்ள பெரிய ஆபீஸர்ன்னு நெனப்புல, திரும்பாமக் கூட போவிய... இப்ப என்ன ஆச்சு...” என்றார் ஒரு ஒரு காக்கிச் சட்டை ஊழியர்.
‘சும்மார்ரா... அவுரு என்ன செய்வாரு... அவரை போய் ஏன் காயரே? நமக்காவது யூனியன் இருக்கு.. அவுரு எங்க போய் சொல்லுவாரு.... நீ போ சார்.. “ என்றார் ஒரு சக தொழிலாளி.
செலுத்தப் பட்டது போல, பைக்கில் வீட்டை நோக்கி சென்றான்.
இதை எப்படி ‘அனு’ விடம் சொல்வேன்? வீட்டு செலவுகளுக்கும், வீட்டுக்கடன் தவணைக்கும் எங்கே போவது? இருக்கும் சேமிப்பில் இரண்டு மாதம் ஓட்டலாம். பிறகு?
“அனு” அவன் காதல் மனைவி. திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. “ஜெயராஜின்” ஓவியம் போல இருப்பாள், கச்சிதமாக.. அழகாக. முகத்தில் எந்த நேரமும் வாடாத புன்னகை. ஒருவர் மேல் ஒருவர் கொள்ளை பிரியத்துடன், ஆதர்ச தம்பதிகளாக இருப்பவர்கள். ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை.
தூரத்தில் தெரியும் தனது ஃப்ளாட்டினைப் பார்த்தான். “பிரைட் ஃப்யூட்சர்” அபார்ட்மென்ட்ஸ். எட்டாவது மாடி.
அனுவும் அவனும், ஆசை ஆசையாய் வாங்கியது. வீட்டை நேர்
த்தியாக, சுத்தமாக, அழகாக பராமரிப்பாள் அனு. ஒவ்வொரு அறையிலும் அவளது ரசனை வெளிப்படும். வீடு வாங்கி, ஆறு மாதம் தான் ஆகிறது. மாதத் தவணையே ரூபாய் பதினைந்தாயிரம் கட்டவேண்டும்.
இந்த தவணைத் தொகை நினைவுக்கு வந்தவுடனே வயிறு கலங்கிற்று. எப்படி கட்டுவேன் இந்த தொகையினை? சிந்தனை ஒரு இடத்தில் நிற்கவில்லை.
அபார்ட்மென்டில், அவனது ஃப்ளாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இட்த்தில், பைக்கினை நிறுத்திவிட்டு லிஃப்டை நோக்கி நடந்தான். லிஃப்ட் பொத்தானை அழுத்தும் போது தான், வண்டியிலேயே “லன்ச் பேக்கினை” வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வர, “சே...” சலித்துக் கொண்டு, திரும்பி வந்து சாப்பாட்டுப் பையினை எடுத்துக் கொண்டு வந்தான்.
எப்போதும் போல சிரித்த முகத்துடன், ‘கை கால் கழுவிகிட்டு வாங்க.. காஃபி தர்ரேன்.’ என்றாள் அனு.
‘.......’
‘ஏன் முகம் ஒரு மாதிரியாய் இருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லியா?”
‘ஒன்னுமில்லியே... இன்னிக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகம்.. அதுதான்’
‘சந்தேகமாய்’ பார்த்துக் கொண்டே சென்றாள் அனு.
மனைவியை ஏமாற்றுவது என்பது கடினமான காரியம்.
காபி சாப்பிட்டு விட்டு, ‘அனு, நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வர்றேன்..’ என உடை மாற்றிக் கொண்டு கிளம்பினான.
‘எங்கே?” என அனு பார்வையால் வினவியதற்கு, பதிலளிக்காமல் வெளியே சென்றான்.
கொஞ்சம் நேரம் இலக்கின்றி சுற்றினான். மணி எட்டாகிவிட்டது. இந்த நேரத்திற்கெல்லாம் வீட்டிற்கு வந்திருப்பார் நண்பன் ராமனாதன், என தீர்மானித்து, அவரது வீடு நோக்கி நடந்தான். ராமனாதன் என்பவர், முகுந்தனது நெருங்கிய நண்பன். இவனை விட மூத்தவர். ஒரு பெரிய ஆடிட் கம்பெனியில் வேலை செய்கிறார்.
கல்யாணம் முதல், வீடு வாங்கும் வரை, சகலத்திற்கும், அவனுக்கு வழி காட்டி யிருக்கிறார். அவரை கலந்தலோசிக்காமல் இவன் எதுவும் செய்ததில்லை. அவரது வீடு இவன் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது.
“வாப்பா. முகுந்தா.. என்ன திடீர்னு? ஃபோன் கூட பண்ணாமல்? ஏதாவது விசேஷமா?”
“உங்களிடம் தனியாய்ப் பேசனும்”
‘ம்ம்ம்?... சரி வா வெளியே போய்ப் பேசலாம்” சட்டை மாற்றிக் கொண்டு வெளியே வந்தார்.
‘இப்ப சொல்லு...’
சொன்னான்.
“இதோ பார்ப்பா. பிரைவேட் கம்பெனி என்றால் அப்படித்தான்.. ‘உன்னோட அக்கவுண்ட்ஸ்’ படிப்புக்கு, நல்ல சம்பளத்தில் உடனடியாய், வேறு வேலை கிடைப்பது சாத்தியமில்லை. ....கிடைக்கும்! கொஞ்சம் டைம் ஆகும்.
உடனே வேணுமின்னா, ரொம்ப கம்மியான சம்பளத்தில் தான் கிடைக்கும். எனக்குத் தெரிந்த ஆடிட்டர்களிடம் சொல்லி வைக்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரு. கவலைப்படாதே!”
‘அனுவிடம் சொல்ல வேண்டாமென்று பார்க்கிறேன்’
“அந்தமாதிரி கிறுக்குத்தனமாய் ஏதும் யோசனை பண்ணாதே! எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிவிடு. அவளுக்கு தெரியாமல் மறைப்பது தான் தப்பு..
‘அவள் மனசு ரொம்ப கஷ்டப்படும்...’
“இந்த சினிமா வசனத்தை முதலில் நிறுத்து. அப்புறம் பொய் மேல் பொய்யாய் சொல்லிக் கொண்டே போக வேண்டிவரும். இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் மறைக்க முடியாது, தெரிஞ்சுக்கோ!. ரெண்டு பேருமாய் சேர்ந்து, கொஞ்ச நாள் எப்படி சிக்கனமாய் வண்டியை ஓட்டுவது என்று யோசனை செய்யுங்கள்”
ராமனாதனிடம் பேசியபின், முகுந்தன் மனதில் பளுவும், வேதனையும் கூடிப்போயின.
ஓயாமல் மோதும் கடலலைகள் போல முடிவற்ற எண்ணங்களும் கவலைகளும், அவனுக்குள் மோதிக் கொண்டேயிருந்தன.
தனது வீட்டிற்கு வந்து, மௌனமாக உண்டு முடித்தான். அனுவிடம் ஏதும் பேசாமல் கட்டிலில் விழுந்தான்.
‘அனு’, குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவனருகில் வந்து படுத்தாள்.
“இப்ப சொல்லுங்கள்.. என்ன ஆயிற்று உங்களுக்கு? என்ன விஷயம்?” ஆபீசில் ஏதாவது பிரச்சினையா? என்ன நடந்தது? அவன் முகத்தைப் பிடித்துக் கேட்டாள் அனு.
விவரித்தான் முகுந்தன்.
அவள் முகத்தில் பீதியும், கவலை ரேகைகளும் உடனடியாய் தோன்றின. ஆனால், தனது கவலைகள், கணவனது துயரத்தை மேலும் தூண்டும் என உணர்ந்து, சடுதியில் அவற்றை மறைத்தாள்.
“ராமனாதன் சாரைப் பாத்தீங்களா?”
“ம்ம்ம்... பார்த்தேன்.. வேற வேலைக்கு முயற்சி பண்றேன்” என்றார்.
‘பாருங்க... ராமனாதன் சார் சொன்னா நிச்சயம் எதனாச்சும் செய்துகொடுப்பார். அப்படியே வேற வேலை கிடைக்க தாமதமானாலும், நகைகள் இருக்கு... சாமாளிக்கலாம்.. மனசைப் போட்டு குழப்பிக்காதிங்க... ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு வழி வச்சிருப்பான்.... இப்ப கவலைப்படாமல் தூங்குங்கள். காலையில் பார்த்துக் கொள்ளலாம்.”
‘அனு...’
‘சொல்லுங்க...’
‘என்ன பண்றதுண்ணே தெரியல.. எதிர்காலத்தை நினைச்சா கதி கலங்குது.. வேலை கிடைக்கலேன்னா?. இல்லே ரொம்ப கம்மியான சம்பளத்தில் வேலை கிடைச்சா? நம் கதி என்ன ஆகும்? வீட்டுத் தவணையே பதினைந்தாயிரம் கட்டணும். அப்புறம் மாசாந்திர செலவு.. குழந்தைக்கான செலவு.. ரொம்ப பயமாயிருக்கு அனு...“
‘பயந்தோ, கவலைப்பட்டோ என்ன ஆகப்போகிறது. நடந்தது நடந்து போச்சு...! இதுவெல்லாம் நம் கையில் இல்லை. இனி ஆக வேண்டியதைத் தான் பார்க்கனும். எல்லாம் காலையில் பேசிக் கொள்ளலாம் .. பேசாம தூங்குங்க...
அவனுக்கு தூக்கம் வரவில்லை. பொதி பொதி யாய் கவலை மனதை அழுத்தியது.
கவலைகளையும் மீறி எப்போது தூங்கினான் எனத் தெரியவில்லை. விழித்த போது காலை மணி ஏழு!
கூடத்தில் அனு, வீட்டு வேலை செய்யும் ‘சரசு’ விடம் பேசிக் கொண்டி ருந்தாள்.
“........ ..உனக்கு இதில் கஷ்டம் ஏதுவுமில்லையே சரசு.. இவருக்கு வேற வேலை கிடைச்சதும், உன்னை மறுபடி வேலைக்கு கூப்பிட்டனுப்புகிறேன்.. வருத்தப் படாதே.. கோவிச்சுக்காதே...”
‘ஐய... இப்ப இன்னாத்துக்கு, இப்படி டயலாக் பேசிக்கினு கீர... இனிமே, நானு வேலைக்கு வரவேணாம்னு சொல்ற.. எனக்கு சம்பளம் கொடுக்க உனுக்கு இப்ப வழியில்ல.. ஒன்னோட வூட்டுக்காரருக்கு வேல பூடுது... அவ்வளோவ் தானே?
ஆண்டவன் நான் பொறக்கும் போதே ‘அனு’வம்மா வூட்ல வேல செஞ்சு பொளச்சுக்கன்னு, என் தலில எளுதி வுட்டார என்ன?
இத பாரு அனுவம்மா, சாமி, புத்தியையும், கை-காலயும் கொடுத்தது பொலம்பிகினு கடக்கிறதுக்கு இல்ல.. அத்த வச்சு பொழச்சுக்கறதுக் குத்தான். இந்த வூடு இல்லன்னா வேற வூடு.. இதுக்கெல்லாம் இந்த ‘சரசு’ அசர மாட்டா..
கேட்டுக்க அனுவம்மா... நீ குடுக்கற ஆயிரம் ரூவா இல்லாங்காட்டி நா செத்துப் பூடுவனா என்ன? நாங்க வெட்டி கௌரவம் எல்லாம் பாக்க மாட்டோம். ஆயிரம் ரூவா வேல போச்சுன்னா இன்னா? ஐநூறு ரூவா வேலை சிக்காம பூடுமா? அப்பால, ஆயிரம் ரூவாயிலேயோ அதுக்கு மேலேயோ வேல கெடச்சுதுன்னா, ஐநூறு ரூவா வேலய விட்டுடுவேன்.
என்னா? வேற வூட்டுல வேலை கெடக்க கொஞ்ச நாளாவும்.. அம்புட்டுத் தானே?.. அது வரிக்கும் சமாளிச்சுக்குவேன். ஆயினாலே, எனக்கு என்னோட வேலயப் பத்தி ஒன்னும் கவல இல்ல அனுவம்மா..
இன்னா? உன்னிய மாதிரி நல்ல மனுஷாள பாக்கறதுதான் கஷ்டம். அதுகோசரம் இன்னா பண்ண முடியும் சொல்லு? பொலம்பிகினு கடந்தா ஆச்சா?
அப்பால, உனுக்கு எதுனாச்சும் ஒடம்பு முடியாங்காட்டி சொல்லி அனுப்பு.. நான் வந்து ஆக்கி பொடறேன்.. அதுக்கெல்லாம் நீ காசு கொடுக்க வேணாம்... என்னா, தெர்தா? “
படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த முகுந்தனுக்கு, ‘சரசு’ பேசிய ஒவ்வொரு வார்த்தையும், முகத்தில் அறைவது போலிருந்தது. சரசுவின் நம்பிக்கையும், தைரியமும் எனக்கில்லாமல் போய்விட்டதே!. எதற்காக பல்வேறு விதமாக நம்பிக்கையற்றுப் போய் சிந்தனை செய்தேன்? எனது படிப்புக்கும், அனுபவத்திற்கும், திறமைக்கும் ஏற்ப வெறியாய் வேலை தேடுவதைவிட்டு..வெட்டியாக புலம்பிக் கொண்டு.. அனுவையும் கவலைப் பட வைத்து... சே.. என்ன இது... இந்த மிடில் கிளாஸ் புத்தி.....
வெளியேறிக் கொண்டிருந்த சரசுவைக் கூப்பிட்டான் முகுந்தன்.
“இரு சரசு.. நீ ஒன்னும் வேலையிலிருந்து நிக்க வேண்டாம். எப்போதும் போல வேலைக்கு வா.. எனக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும்”
‘இன்னாங்கடா இது... திடீல்ன்னு உங்களுக்கு இன்னா ஆச்சு? “
அவனுக்குள் ‘என்ன ஆச்சு’ என்பதும், நம்பிக்கையையும் தைரியத்தையும் அவனுள் விதைத்தவள் சரசுதான் என்பதும் முகுந்தனுக்குத்தானே தெரியும்?
-0-