வழமையாக,
முதல் நாள் நடக்கும் திருமண வரவேற்பிற்குச் செல்ல இயலாததால், அடுத்த நாள் திருமணத்திற்குச்
சென்றிருந்தேன். மிகவும் தெரிந்தவர்கள், மற்றும்
உறவினர்களைத்தவிர மீதியுள்ள அனைவரும் வரவேற்பிற்கு மட்டும் செல்வது நடைமுறையாகிவிட்டதே!
தாலிகட்டும்
நேரம் நெருங்கியது. அனைவரின் கையிலும் பூவிதழ்களும் அட்சதைகளும் வழங்கப்பட்டன.
அனைவரது வாழ்த்தும் மணமக்களுக்குக் கிட்டட்டும் என்பதற் காகத்தானே, இவை அனைவரது கையிலும்
தரப்பட்டன?
ஆசீர்வதிக்கத் தயாராகும் பொழுது, திடீரென, எங்கிருந்து முளைத்தார்களோ
தெரியவில்லை, பத்து பதினைந்து நபர்கள், தங்கள் கையில் மொபைல் ஃபோண்களை நீட்டிக்கொண்டு,
மணமக்களை மொத்தமாகச் சூழ்ந்து கொண்டனர்;
அவையில் இருக்கும் அனைவருக்கும் தங்களது ப்ருஷ்ட பாகங்களைக் காட்டிக் கொண்டு! தாலி கட்டும்
நிகழ்ச்சியைப் பதிவு செய்து கொள்கிறார்களாம். நல்லது! ஆனால், மலர்களையும் அட்சதையையும்
யார்மேல், எதன் மேல் தூவ? அழிச்சாட்டியம்!
கூடியிருந்தவர்கள்
பலரும் இதனைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை இல்லை. ஒரு தோராயமாக, அட்சதைகளை, மணமக்கள் மேடை நோக்கி, தங்கள் புஜ
சக்திக்கு ஏற்றவாறு வீசி யெறிந்துவிட்டு, நடையைக் கட்டினர். முன்வரிசையில் இருந்தோர் அனைவரும் தங்கள்
தலையில் விழுந்த அரிசிகளை தட்டிவிட்டுக்கொண்டனர்.
ஸ்மார்ட்
ஃபோன் வந்தாலும் வந்தது, அனைவரும்
புகைப்பட நிபுணராகிவிட்டனர். Auto மோடில் போட்டால் அனைத்தை யும் ஸ்மார்ட் ஃபோணே
பார்த்துக் கொள்ளும். நிபுனத்துவம் ஏதும் பெற்றிருக்க
வேண்டியதில்லை. முன்பெல்லாம் ஒரிரு
ஃபோட்டோகிராபர்கள்தான், மணமக்களை மறைத்துக் கொள்வர். அதற்கே காண்டு வரும். இப்பொழுது
சிறியவர் முதல் பெரியவர் வரை, அவரவர் வசதிக்கேற்ப ஒரு ஸ்மார்ட்ஃபோன் என்கிற ஆயுதத்தோடு,
ஒரு படையே திரண்டு, மேடையை ஆக்கிரமித்துக்
கொள்கின்றனர்.
இந்த
வாரம் ‘The Hindu’ நாளிதழ் (24/06/2016) ஒரு கட்டுரையை வெளியிட்டி ருக்கிறது.
கட்டுரையாளர் (எஸ். புரபு) மிகவும் நொந்து போய்விட்டார் போலிருக்கிறது.
மனிதர் சென்னையில் பிரம்மோத்சவம் ஒன்றிற்கு, சாரி..சாரி, செல்ஃபோன் உற்சவத்திற்குச்
சென்றிருக்கிறார். அதே கடுப்பில் கட்டுரை எழுதிவிட்டார். அதன்
சுருக்கம் கீழே:
---
கோயில்,
பக்திப் பிரவாகமிட்டிருந்தது. மிக நீண்ட
வரிசைகள். தாள இயலாத கூட்டம். “சிறப்பு தரிசன” வரிசைகளும், நெரிசலில் பிதுங்கிக் கொண்டிருந்தன. கவலை, தேவை, பிரார்த்தனை, நன்றி தெரிவிக்க
அல்லது சும்மா தரிசிக்க என பல்வேறு நோக்கங்களை உத்தேசித்து கோயில்களில்
கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுசரி... ஏன்
கோயிலுக்கு வரவேண்டும்? இறைவனுக்கு
முன்னால், ‘தன்னை’ இழந்து, அவனது அருளில் கரையவேண்டும் என்பதற்குத்தானே? கண் இமைக்காது, அபிஷேக ஆராதனைகளை காண விருப்பம்
கொண்டிருக்க வேண்டும். அவனை இரு கரம் கூப்பி வணங்கவேண்டும். அதற்காகத்தானே?
ஆனால்,
தற்போதும் கரங்கள் கூப்பப்படுகின்றன. உயருகின்றன! வணங்குவதற்கல்ல! கூப்பிய கரங்களுக்குள் கைபேசிகள் தான்
இருக்கின்றன. ஆமாம். பக்தி, எலக்ட்ரானிக்
கருவிகளால் ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டது. இறைவனை தனது கேமிராவிற்குள் கொண்டுவர, படுபிரயத்தனம்
நடைபெறுகிறது.
கோயில்
சுவர்களில், புகைப்படம் எடுக்கத் தடைசெய்யப்ப ட்டுள்ளது என்ற அறிவிப்புகளை யாரும்
கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. பக்தர்களின் கவனம் முழுவதும் முக்கியமான
தருணத்தை மொபைல்களில் பதிவு செய்துகொள்வதில் இருக்கிறதே தவிர, தரிசிப்பதில் இல்லை.
சமயக்
குரவர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனின் வீதி
உலாக்களும்,உற்சவங்களும்,
ஆராத னைகளும், பக்தர்களின் மீது எவ்விதம் நேர்மறையான சக்தியைச் செலுத்தும், என எழுதி வைத்துள்ளனர். திருவாரூர் தியாகராஜர், சென்னை கபாலீஸ்வரர்
மற்றும் ஆரூத்ரா தரிசனங்கள் யாவும் வீதியில் கூடியிருந்த மக்களின் கண்களில்,
எப்படி கண்ணீரை வழிந்தோடவைத்தன, அவர்கள் உற்சவம் முடிந்து வீடு திரும்பும்
பொழுது, எவ்வளவு இனிய கணங்களைச் சுமந்து சென்றனர் என கரைந்துருகி பாடிவைத்துள்ளனர்.
முக்கியத்
தருணங்களில் எல்லாம், பக்தர்களின் கரங்கள் பரபரப்பாக செயல் படுகின்றன.
வணங்குவதற்கல்ல; புகைப்படமெடுக்க. நீ
நன்றாக எடுத்தாயா, நான் நன்றாக எடுத்தேனா என்று போட்டி வேறு. சரணாகதி என்பது இறைவனிடம் நடக்கவில்லை; செல்
ஃபோண்களிடம்தான்.
‘பிரார்த்தனைகள்
யாவும் அமைதியுடன் கட்டுப்பாட்டுடன்’ என்பது காலாவதியான சங்கதி போலும்.
வீட்டிற்கு
வந்தாலும், நன்றாக தரிசனம் கிட்டிற்றா என்ற விசாரிப்பைவிட, ‘எங்கே எடுத்த
ஃபோட்டோக்கள்? ... காண்பி’ என வினவப்படுவதே அதிகம். கோயில் பிரகாரங்களில் வலம் வரும்பொழுதுகூட, செல்
ஃபோண்களில் ‘செய்திகளை டைப் கொண்டு’ தானே செல்கிறார்கள்?
வழிபாட்டுத்
தலங்கள் வழிபாட்டுக்கு மட்டும்தான் என எப்பொழுது மக்கள் ‘தாங்களாகவே’ உணர்வார்கள்?
---
அது
சரி..... காலம் மாறிப் போச்சு, செல்ஃபி மோகத்தில் உயிரையே விட்ட பலர் இருக்கும்
பொழுது, ஆஃப்டரால், தரிசனமா முக்கியம் என்கிறீர்களா?