Sunday, April 3, 2016

ஐம்பது ரூபாய்......

யார் இந்தக் கிழவி? தெரியாது!

பெயர்..ஊர்.? தெரியாது!

வயசு?  70? 80? யாருக்குத் தெரியும்.

கக்கன்  நகரின்,  நான்காவது தெருவின் ஓரத்தில் இருக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் அருகே படுத்துக் கிடப்பாள், அந்தக் கிழட்டுப் பிச்சைக்காரி.  வெயில் ஏறும் பொழுது, எதிர்வீட்டில் இருக்கும் மகிழமரத்தின் நிழலில் படுத்துக் கொள்வாள்.

காலை 11 மணிக்கு, தெருவில், ஒரு குச்சியை ஊன்றிக் கொண்டு, தெருவில் நடக்க ஆரம்பிப்பாள்.  தலை முட்புதர்போல, காடாகஇருக்கும். எண்ணெய் கண்டு மாமாங்கம் ஆகியிருக்கும்.  நடுநடுவே முடி ‘சடை’ தட்டிப் போயிருக்கும். குழிவிழுந்துபோன கண்கள். ஒட்டிப்போயிருக்கும் வாய். கருத்த முகம்.  துருத்திக் கொண்டிருக்கும் தோள்பட்டை எலும்புகள். ஈர்குச்சி போன்ற கைகள்.   என்றைக்கு  கட்டிக் கொண்ட புடவையோ தெரியாது. ஒரே புடவையை, பெயருக்கு சுற்றிக் கொண்டு, தாழ்த்திய பார்வையோடு வருவாள்.  

ஒருகாலத்தில் அந்தப் புடவை சிவப்பாக இருந்திருக்கணும். இப்பொழுது அழுக்கும், சிக்கும், கரையும் நிரம்பி, அந்தப் கிழிந்த புடவையும் அவளது உடலில் ஒரு பகுதி போல, அவளுடன் இணைந்தே விட்டது.

அவளுக்கு பற்கள் இருக்கின்றனவா இல்லையா தெரியாது! ஒடிந்துவிடுவது போல உடல். முதுகு லேசாக கூன் போட்டிருக்கும். வாசல் கேட்டருகே வந்து நிற்பாள். வாயைத் திறந்து எதுவும் கேட்கமாட்டாள். கேட்டைத் தட்டுவதற்கும் உடலில் தெம்பில்லை போல. குரல் உயர்த்தி கூப்பிடவும் மாட்டாள். கையில் ஒரு அலுமினியத் தட்டு இருக்கும். அவள் வருவதற்கு முன்பே அவளிடமிருந்து ஒரு வாடை கிளம்பி வரும்.  தெரு ஓரமாக, காம்புவுன்ட் சுவற்றைப் பிடித்தபடி  மிக மெல்ல வருவாள். ஒரு வீட்டைக் கடக்கவே, வெகு நேரம் ஆகும்.

அந்தத்   தெருவில் முப்பது வீடுகள் இருக்கும்.  ஆரம்பத்தில், இவளைப் பார்த்து அருவருத்தோ அல்லது இந்தக் கிழட்டுப் பிச்சைக்காரி ஏதேனும் கேட்டு, ‘இல்லை’ என்று சொல்வதற்கு அஞ்சியோ கதவைத் தாளிட்டுக்கொள்வார்கள்.  கிழவி ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடமாவது  நிற்பாள். இல்லை என்று சொன்னாலும் நிற்பாள்.  ஏதேனும் ஒரு வீட்டில் ஏதாவது உண்பதற்கு தட்டில் போட்டுவிட்டால், அங்கேயே உட்கார்ந்து தின்பாள்.  சைகையில் தண்ணீர் கேட்பாள். குடித்துவிட்டு மீண்டும் டிரான்ஸ்ஃபார்மருக்கோ, மகிழமரத்துக்கோ சென்றுவிடுவாள். அடுத்த வேளை உணவிற்கு, ஞாபகமாக எந்த வீட்டில் பிச்சை எடுத்தாளோ, அதற்கு அடுத்த வீட்டிலிருந்து தொடருவாள்.

மனிதம் முற்றாக ஒழிந்துவிட வில்லைதானே?  அவளுக்கும் அந்தத் தெருவில் இருவேளை உணவு கிடைத்துக் கொண்டிருந்தது. இரவு பத்து மணியானதும் மெல்ல நடந்து, மெயின் ரோடில், ஓரமாகப் போடப்பட்டிருக்கும் ஒரு குடிசைக்கு செல்வாள். அவளுக்கும் அந்தக் குடிசையில் இருப்பவர்களுக்கும் என்ன உறவு? தெரியாது. காலை எட்டு மணிக்கெல்லாம் கிழவி மகிழமரத்துக்கு ஆஜராகிவிடுவாள்.

கக்கன் நகரின், நான்காவது தெருவின் கடைசியில் இருப்பவர் அரவிந்தன்.  வீட்டில் அவர்மட்டும்தான். அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர். கிழவிக்கு அதைப் பற்றி என்ன தெரியும்? அவர் வீட்டின் முன்பும் வந்து நிற்பாள். பெரும்பாலும் கிழவி வரும் நேரத்தில், போடுவதற்கு ஒன்றும் இருக்காது. அரவிந்தன் மனசு கேட்காமல், காசு கொண்டுவந்து கொடுத்து, “கடையில் ஏதாவது வாங்கித் தின்கிறாயா?” என்றால், 'வேண்டாம்' என்பாள்.  சோறுமட்டுமே வேண்டும் கிழவிக்கு. போகப் போக அந்தக் கிழவிக்கும் சேர்த்தே சோறுவைப்பதை வழக்கமாக்கிக் கொண்டார் அரவிந்தன்.

அன்றும், வழக்கம் போல வெய்யில் ஏறும் மதிய நேரத்தில், குச்சியை ஊன்றியபடி, கேட்டருகே வந்து நின்றுகொண்டாள் கிழவி.

அவள் தட்டில் இரண்டு இட்லிகளைப் போட்டுவிட்டு, வாசலில் ஈஸிச் சேரில் சாய்ந்து கொண்டார் அவர்.

“ஏ.. கிழவி.. உம்பேரென்ன?”

....

“உன்னத்தான் கேக்குறேன். உம்பேரென்ன?”

சோறுமட்டுமே வாங்கி பழக்கப்பட்ட கிழவி, கேள்வியை எதிர்பார்த்திருக்க வில்லை போலும்.

“தனலட்சுமி..”

“தனலட்சுமியா.....? நல்லாத்தான் பெயர்வச்சுருக்காங்க ...”

“எந்த ஊர்?’

“மரக்காணம் பக்கத்துல..”

“என்ன வயசாவுது உனக்கு..”

“தெர்ல சாமி..”

“ராத்திரி ஆனதும், ரோட்டுக்குப் போறியே... அந்த குடிசையில யார் இருக்காங்க..?”

“மவனும், மருமவளும்..”

ஆடிப்போனார் அரவிந்தன். பெற்றோரைத் துரத்திவிடுவதை கதைகளில்தான் படித்திருக்கிறார்.

“நெசமாவா சொல்லுறே கிழவி..?”

“மவன் ஒரு குடிகாரப்பய... இன்னா வேல செய்யுறான்னு தெரியாது.. பாதி நாள் செயிலுக்குப் போவான். இருக்குற நாள்ல, மருமவளை போட்டு அடிப்பான்.”

அவளது மகன் பொறுக்கிக குடிகாரன்  என்பதும், அவன் மனைவி செங்கல் சூளையில், 'கல் அறுக்கும் ' வேலை செய்கிறாள் எனவும், அந்த வேலைக்கு '"அட்வான்ஸ்" வாங்கி அவள் மகன் குடித்து தீர்த்துவிட்டான் என்பதும், சூளையில் கொடுக்கும், மிச்ச கொஞ்ச சம்பளம் அவளது சோற்றிற்கும், அஞ்சாவது படிக்கும் பேரனின் படிப்பிற்கும் செலவாகிப் போகிறது எனவும், யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம் என்பதால், இங்கே பிச்சை எடுப்பதாகவும் ‘மேல் விபரங்களைத்’ தெரிந்து கொண்டார்.

மனித வாழ்க்கை எவ்வளவு சிக்கல் நிறைந்தது! கிழவி பிச்சை எடுக்கத் தீர்மாணிப்பதற்கு எவ்வளவு சித்தரவதை பட்டிருப்பாள். அவள் புருஷனைப் பற்றி கேட்க நினைத்து, வேண்டாம் என விட்டார். அவளது நினைவுகளைத் தோண்டி எடுத்தால், அவளுக்கு மனம் பாரமாகுமோ என்னவோ தெரியாது, அந்த சுமையைத் தன் மனது தாங்காது எனத் தெரியும். கிழவிக்கு என்ன வேலை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் ? விளக்குமாற்றைத் தூக்கக் கூட சக்தியற்ற உடல்.

அவளிடம் பேச்சு கொடுத்தார்.

“தலையை ஏன் இப்படி போட்டு வச்சுருக்கே... நாத்தம் வருதில்ல... கொஞ்சம் எண்ணைய் போட்டு சீவ வேண்டியது தானே?”

“சோத்துக்கே லோல்படுறேன்... சிங்காரத்துக்கு எங்கே போவரது.?”

உள்ளே சென்று, ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து வந்தார். “இந்தா கிழவி.. இந்த ரூபாய வச்சுகிட்டு, ரோட்டுல இருக்கும் கடையில போய் மொட்டை போட்டுகிட்டு வா... நாத்தம் தாங்குல..”

“ஷாப்பு கடையில என்ன வுட மாட்டாங்க சாமி...”

“டவுன் கடைக்கு போவாதே...  மரத்தாண்ட ஒக்காந்திருப்பாங்கள்ள.. அவுங்கிட்ட மொட்ட போட்டுக்க...”

“சரி சாமி..”

“காச வாங்கிகிட்டு, மரத்தாண்ட போய்ப் படுத்துக்கப்படாது... மொட்டை போட்டுகிட்டு வந்து காமிக்கோணும்.. தெரியுதா..?”

ஐம்பது ரூபாய் நோட்டை, பொக்கிஷம் போல, தனது புடவையில் செருகிக் கொண்டாள் கிழவி.

“பத்திரம்.. எங்கேயாவது கீழே போட்டுடப் போற....”

“நான் கீள போட மாட்டேன் சாமி.. எம்மவன் வந்துட்டான்னா, அவன் கண்ணுல படாம வச்சுக்கணும்.. குடிக்கறதுக்கு புடுங்கிகிட்டுப் போயிடுவான்.”

“உங்கிட்ட கூடுவா புடுங்கிக்குவான்..?”

"குடிக்குற மாட்டுக்கு செக்காவது.. சிவலிங்கமாவது சாமி..”

“சரி..சரி.. பத்திரமா வச்சுக்க..”


இரண்டு நாள் கழித்துத்தான் கிழவியைப் பார்த்தான் அரவிந்தன். அதே பரட்டைத் தலை.

“ஏ.. கிளவி, காச கொடுத்து, மொட்ட போட்டுக்கோன்னா, காச செலவு செஞ்சுட்டு, அப்படியே வந்து நிக்குறியா நீ...?”

“ஏமாத்துல சாமி.. இத பாரு... நீ கொடுத்த அம்பது ரூவா..” 

இடுப்பிலிருந்து அவர் கொடுத்த ரூபாயை எடுத்துக் காண்பித்தாள் கிழவி.

“ஏன் மொட்டை போடல?”
கலியன், போட மாட்டேனுட்டன் சாமி... நா என்ன செய்யுறது?”

“ஏன் அவன் உனக்கு மொட்டை போட மாட்டானாம்?”

“நாத்தம் பிடிச்சவளாம் நானு... பிச்சைக்காரிக்கு அவன் மொட்டை போடுறத, யாராவது பாத்துட்டாக்க அவங்கிட்ட வேற யாரும் முடிவெட்ட வரமாட்டாங்களாம். துரத்திவிட்டுட்டான் சாமி.. என்னா செய்யச் சொல்ற?”

ஓ.. இப்படி ஒன்று இருக்கிறதா?

சற்று நேரம் யோசித்தார் அரவிந்தன்.

அரைமணி நேரம் கழித்து, கிழவி தன் மொட்டைத்தலையைத் தடவிக் கொண்டு, வேறு ஒரு பழைய புடவையைச் சுற்றிக் கொண்டு கிளம்பிப் போனாள்.


தன்மேல் விழுந்திருந்த முடிகளை கழுவ பாத்ரூமிற்குச் சென்றார் அரவிந்தன்.

6 comments:

  1. கதை அருமை. கிழவி நிலையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.
    அவளும் ஒரு தாய்தான்.
    வறுமை நிலை பெரிதுதான்.
    ஆனால் அதை விட பொருப்பற்ற பிள்ளைகள் உருப்படாமல் போயிருப்பதை, குடியை சொன்னது,
    எல்லாவற்றையும் விட ஒரு மனித நேயத்தை காட்டியுள்ளீர்கள்.
    அருமை.
    திருநாவுக்கரசு

    ReplyDelete
  2. அருமை இதை ஏன் நீங்க விகடனுக்கு அனுப்பக் கூடாது.!
    அரவிந்தன் நீங்கதான் எனக்குத் தெரியும்.!

    ReplyDelete
  3. Story completed with a super note.

    ReplyDelete
  4. இது கதையல்ல... நிஜம்..நிறைய ஏழை க் குடும்பங்களில் நடப்பவையே.

    ReplyDelete
  5. பெண்ணை பெற்றவன் நெடுங்கதை
    ஒரு நல்ல நாவலை படித்த
    உணர்வைத் தந்தது.!
    நாம் விரைவில் ஒரு மாத இதழ் தொடங்க தீர்மானித்துள்ளோம்.!
    அதில் இதை ஒரு தொடராக எழுத வேண்டும்.!

    ReplyDelete
  6. சாகித்ய அகாடெமியின் பரிசுக்கேற்ற சிறுகனத

    ReplyDelete