Tuesday, January 26, 2016

திருப்பைஞ்ஞீலி

திருவெள்ளாறை பிரமிப்பு நீங்காமலிருக்கும் பொழுதே, தரிசித்த அடுத்த கோயில்,  திருப்பைஞ்ஞீலி. இதுவும் திருச்சிக்கு அருகில்தான். இங்கும் முற்றும்பெறாமலிருக்கும் ராஜ கோபுரம். முற்றுப் பெற்றவரை கருங்கல்லால் ஆகியிருக்கிறது. கோபுரத்தின் நுழைவாயிலின், உட்பக்கம்,வியப்படைய வைக்கிறது. என்ன ஒரு அமைப்பு!! படத்தைப் பாருங்கள்.

இறைவன்: ஞீலிவனேஸ்வரர்.  இறைவி: விசாலாட்சி.
ஸ்தல விருட்சம்: ஞீலி வாழை.

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. 

ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு நாலு  கால் மண்டபமும் அதன் பின்புறம் மூன்று  நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று அழைக்கப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞீலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. 

யம தர்மராஜா சந்நிதி: இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். திருக்கடவூரில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்ததால், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக, பூமியின் பாரம் அதிகரிக்க, பூமிதேவியும் மற்றவர்களும் சிவபெருமானிடம் முறையிட,  சிவன் எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்தாரம். முதலில் இவரை தரிசித்துவிட்டு, கைகால்கழுவிட்டு  பின்னர்தான்  மூலவரை தரிசிக்க வேண்டுமாம்.

திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும். இந்த படிகளே நவக்கிரங்களாம். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதையும் நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர்.



கோபுரத்தின் உள்ளே!




ஸ்தல விருட்சம் - கல்வாழை 




1 comment:

  1. அருமை. கோவில்கட்கு செல்லும்கால் தல வரலாறு அலுவலகம் திறந்திருப்பின் கேட்டு பெற்று, கட்டப்பட்ட காலம், யாரால் என்ற விபரங்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
    தங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    திருநாவுக்கரசு.

    ReplyDelete