Sunday, January 17, 2016

ஒசூர் - திருவனந்தபுரம்

மனசு குரங்கேதான். இல்லாததிற்காக ஏங்குவதும், இருப்பது சலித்துப் போவதும், அதன் மாறா இயல்பு போல.  தனிமைச் சூழலில் கடலூர் சலிப்பைத் தர, ஹோசூருக்கும், திருவனந்த புரத்திற்கும் சென்றுவரலாம் என, IRCTC ஐ நாட, அது வழக்கம் போல ஹொசூருக்கு, second ACல் 45 வது சீட்டை ஒதுக்கித் தந்தது. 

கடற்கரையோர ஹ்யுமிடிட்டியினால் பிசுபிசுக்கும் கடலூர் க்ளைமேட்டிலிருந்து விலகி,  ஹோசூர் ரயில் நிலையத்தில் இறங்கும் போதே, சுருக்கென  குளிர் குத்தியது. அநியாயம். ஒரு ஏழு மணி நேர பயணத்தில், க்ளைமேட்டில் இவ்வளவு மாறுதலா? ஸ்வெட்டர் சகிதம் திரிய வேண்டியதாயிற்று.

தமிழ் நாட்டின் ஸ்பெஷாலிட்டியே ஆட்டோக் கொள்ளைதானே?  மீட்டர் என்பதெல்லாம், இங்கே விலக்கப் பட்ட வார்த்தை. ரயில் நிலையத்திலிருந்து ஒன்றறை கி.மீ தொலைவில் இருக்கும் வீட்டிற்கு ரூ.200/-?   ‘போய்யா... நடந்தே போய்க்கறேன்’ எனக்கிளம்பினால், துரத்திக் கொண்டு வந்து, நூறு ரூபாய்க்கு!

1973-ல், இந்த ஊருக்கு, அப்போதைய P&T துறையில், பணியாற்ற முதன்முதலில் அப்பாயின்மென்ட் ஆனது நினைவுக்கு வந்தது. அப்போது ஓசூர் தூங்கிவழியும். தமிழ் பேசுவர்கள் மிகக் குறைவு. ஒரே ஒரு ஹோட்டல். விசித்திரமாக காலைஆறு மணிக்கே  சித்ரான்னம் போடுவார்கள். இட்லி கேட்டால்,  ‘இல்லை’. 

இருந்த ஒரே தியேட்டரில் (பாலாஜி என்று நினைவு), எப்போதும் தெலுங்கில் மாட்லாடும் சினிமாக்கள் தான். எப்போதாவது, தமிழ்ப்படம்  மூன்று நாட்களுக்கு காட்டுவார்கள். வேறு பொழுது போக்கு இல்லாத அந்த ஊரில், தெலுங்கு சினிமாவையும் விட்டு வைக்காமல், பார்த்து வைப்பேன். கிருஷ்ணாராவோ – நாகேஸ்வர ராவோ,  கிளிப்பச்சை நிற பாண்டும், வெள்ளை நிற ஷூவும், செக்கச் செவேல் என்று சட்டையும் அணிந்து கொண்டு, தலைக்கு மேல் பைசா நகர கோபுரம் போல் கொண்டை போட்டுக் கொண்டிருக்கும் வாணிஸ்ரீயுடனோ அல்லது அவர் போன்ற எதோ ஒரு ‘ஸ்ரீ’ யுடன் மரத்தை சுற்றுவந்து பாடியதையெல்லாம் பார்த்த காலம் அது. இப்போது டி.வி பெட்டியை ஆன்’ செய்தே மாதம் பல ஆகிறது.

அருகில் இருக்கும் மலைமீது சந்திர சூடேஸ்வரர்  கோயில். கோயில் அழகாக-ஏகாந்தமாக இருக்கும். அச்சுறுத்தும் அமைதி. தியானம் உடனே கைகூடும். ஆனால், ஆறு மணிக்கெல்லாம் கீழே இறங்கியாகணும். ஆள் நடமாட்டம் இருக்காது! இருட்டு. இப்பொழுது மலையெங்கும் விளக்குபோட்டு, சாலை அமைத்து, பார்க் வைத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். அந்த ஏகாந்தம் மிஸ்ஸிங்.
அப்பொழுது, ஊரில் மொத்தமே இரண்டே இரண்டு சிறிய கடைத்தெருக்கள்தான். மக்களும் நியாயமாக நடந்து கொண்டார்கள்.

இப்ப நிலைமை தலைகீழ். ஊர் விரிந்து பரந்து கிடக்கிறது. பெரிய துணிக்கடைகள்-நகைக்கடைகள். ஏகப்பட்ட மால்கள். எங்கும் தமிழ்.  ஊரில் பெருகியிருக்கும் மற்றொரு சமாச்சாரம், வழிப்பறி. பெண்களிடம் செயினையோ-தாலியையோ பறித்துக் கொண்டு ஓடுவது தினசரி நிகழ்வு. வீட்டை பூட்டிக் கொண்டு, நாலு நாள் வெளியே சென்று, திரும்பி வந்து பார்க்கும்போது வீடு உடைபடாமல் இருந்தால், பிள்ளையாருக்கு 108 தேங்காய் உத்திரவாதம்.

ஏகப்பட்ட, சிறிய - பெரிய தொழிற்சாலைகள்.  ரியல் எஸ்டேட் கொடிகட்டிப் பறக்கிறது. தீப்பெட்டி வீடுகள் கூட ஐம்பது லட்சம் ரூபாயாம். இங்கே வீடு வாங்கும் உத்தேசத்தை அடுத்த ஜென்மாவிற்கு ஒத்தி வைத்து விட்டேன்.

இங்கே, இருக்கும் மற்றொரு நல்ல அம்சம், சிறப்பாக இன்னமும் நடந்து கொண்டிருக்கும் கலைஞர் துவக்கி வைத்த திட்டமான உழவர் சந்தை. கேரட்-பீன்ஸ்-குடைமிள்காய் போன்ற காய்கள் எல்லாம் கிலோ இருபது ரூபாய்தான். மற்றவை பத்து ரூபாய்க்கே! தேங்காய் கூட பத்து ரூபாய்தான். நம் ஊரில் இதைப்போல நான்கு மடங்கு விலை. ம்.ம்.ம்.ம். விவசாயிக்கும் லாபம் இல்லாமல், பயனாளிகளுக்கும் பயனில்லாமல், இடைத் தரகர்கள்தான் சுருட்டுகிறார்கள். இவ்வளவு சகாயமாக விற்கும் விவசாயிகளிடமும், ஜனங்கள் பேரம் பேசித்தான் வாங்குகிறார்கள்.

இங்கே இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, திருவனந்தபுரம் செல்ல திட்டம்.  தி.புரத்திற்கு, விரும்பிய நாளில் ட்ரெயின் இல்லாததால், மாலையில் ஓசூரைக் கடக்கும் நா.கோயில் எக்ஸ்பிரஸைப் பிடித்து, நாகர்கோவிலுக்கு சென்று, அங்கிருந்து தி.புரத்திற்கு பாஸஞ்சர் பிடிக்கலாம் என யோசனை. ஹோசூரை கடந்து செல்லும் எல்லா தொடர்வண்டிகளும் அரைமணி நேரம் தாமதமாகத்தான் வரவேண்டும் என்பது, இராஜராஜன் காலத்திலிருந்தே அமுலில் இருக்கும் சட்டம்.

அடுத்த நாள் காலை 7.56க்கு   நான் பயணித்த ரயில்  நாகர்கோவிலை அடைய, 7.57க்கு தி.புரம் பாஸஞ்சர் புறப்பட்டுக் கொண்டிருந்தது. (அது என்ன பாஸஞ்சர் என்ற பெயர்? எக்ஸ்பிரஸ்களில் பாஸஞ்சர்கள் ஏறுவதே இல்லையா?) வெளியேபோய் டிக்கட் வாங்கிவர நேரம் இல்லாததினால், அங்கே இருந்த ஒரு ரயில்வே அம்மனியிடம் , ‘ரயில்வே கார்டு’ டிக்கட் கொடுப்பாரா என வினவ (கொடுக்க ரூல்ஸ் உண்டு), அவர் முடியாது என பதிலுரைக்க, அடுத்த வண்டிக்கு இரண்டரை மணி நேரம் காத்திருக்கனும் என்பதால், டிக்கட் வாங்காமல் பாஸஞ்சர் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

அவமானமும்-குற்ற உணர்வும் மேலிட பயணித்தேன். வழியில் எந்த ஸ்டேஷனிலாவது, இறங்கி டிக்கட் வாங்கிவிடலாமா என முயல, டிக்கட் கவுன்டர்கள் எல்லாம் காத தூரத்தில் இருந்தது.  ‘நெய்யாடிங்கராவிற்கு’ மேல் மனதை சமாதானப்படுத்த முடியாமல், இறங்கிவிட்டேன். நேரே கவுன்டருக்குப் போய் தி.புரத்திற்கு டிக்கட் கேட்க, இனிமே வண்டி 1130க்குத்தான் என்றார். பரவாயில்லை என, டிக்கட் வாங்கி அதை, அங்கேயே  கிழித்துப் போட்டுவிட்டு, தி.புரத்திற்கு ஆட்டோவில் பயணித்தேன்.

பாஸாஞ்சர் ட்ரெயின் டிக்கட்டை ஆன்லைனில் விற்றால் என்ன? அடுத்த ட்ரெயினைப் பிடிப்பவர்களுக்கு எவ்வளவு சௌகரியமாய் இருக்கும்!  பாஸஞ்சர் ட்ரெயினுக்கு டிக்கட் எண்ணிக்கைக் கட்டுப்பாடு கிடையாதே!  பின் ஏன் செய்யவில்லை எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு நேர் எதிர் கேரளா. மீட்டர் போடாத ஆட்டோக்களே இல்லை. இருபது ரூபாய்க்குக் கூட பயணித்துவிட முடியும். அடாவடியோ-அக்கிரமமோ இல்லை.  கேரளாவில் பல இடத்திற்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலும் ஆட்டோக்காரர்கள்  நியாயமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கட்டுப்படியாகும் போது, நம்மவர்கள் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? நெய்யாடிங்கராவிலிருந்து, நான் செல்லவிருந்த இடத்திற்கு 20 கி.மீ.  300 ரூபாய்தான்.

திருவனந்தபுரம், எப்பொழுதும் போல அமைதியாக சம்சாரித்துக் கொண்டிருந்தது. சாலைகளில் நகரமும், சற்றே விலகினால் அமைதியான கிராமமும் போன்ற தோற்றம்.  நகர் எங்கிலும் ஊடாடும் நதிகள். இரண்டு வீதிக்கு ஒரு கோயிலாவது இருக்கும். எல்லா கோயில்களிலும் ஜேஸுதாஸோ அல்லது அவர் போன்ற ஒரு குரலிலோ ஒருவர் பாடிக்கொண்டிருப்பார். 

கேரளத்துப் பெண்கள் ரம்மியம்தான். அவர்களது ஸ்டைலில், கூந்தலை சற்றே வாரி-பெரும்பகுதியை தோளில் பரப்பி, பளபளக்கும் ஈரத்தோடு, நெற்றியில் சந்தனம்-குங்குமம்  துலங்க,  வலம் வருகின்றனர். பாரதி சும்மாவா சொன்னார், “சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து…” என?

நான் சென்ற சமயம், ஏ.கே 47 சகிதம், கோவில் கொண்டிருக்கும், பத்மனாப சுவாமி ஏக பிஸி. நூற்றைம்பது ரூபாய் டிக்கட் வாங்கிச் சென்றாலும் இரண்டுமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.   நிறைவாகத் தரிசனம் பெறமுடிந்த்து.


கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே!

-----------------------------------------------------------------------------

அடுத்தனாள் திருவட்டார், ஸ்ரீ அதிகேசவபெருமாள். திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்று. அவரும் சயனகோலம்தான். கும்பாபிஷேகத்திற்காக வேலைகள் நடந்து வருவதால், மிக அருகே செல்ல முடியவில்லை! எனினும், கூட்டமே இல்லாமல் மெய்சிலிர்க்கும் தரிசனம்.  அற்புதமான கோயில். அழகான பிரகாரங்கள். ஒன்று போல் இல்லாமல் வெவ்வேறு வடிவில், தூண்கள் எங்கும் தீப லட்சுமிக்கள். அற்புதமான தலம்.
 
பிரஹாரம் 

முகப்பு 


தீப லட்சுமிகள் 


---------------------------------------------------------------------------------
சுசீந்திரம். பலமுறை பார்த்த தலம். கோயில் ஸ்தல புராணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். புதிதாகச் சொல்வதற்கு ஏதும் இல்லை. ஆனால்  இன்னமும், எந்த சன்னிதி - எங்கே எனக் குழம்பாமல் இருக்க முடியவில்லை. இறைந்து கிடப்பது போல, ஆங்காங்கே பல சன்னிதிகள். அட.. இதை போனமுறை பார்க்க முடியவில்லையே நினைக்க வேண்டியிருக்கும். கம்பீரமாய் ஆஞ்சனேயர். 

(வெண்ணை வாங்காவிடில் கடையில் கோபித்துக் கொள்வார்கள் போல.)
 Image result for suseenthiram temple

--------------------------------------------------------------------------------------------------------------------
நாகர்கோவில் நாகராஜர். பெரிய கோவில்தான், எனினும் மூலவருக்கு மேலே கட்டமில்லை. கூரைதான் வேய்ந்திருக்கிறார்கள். கோயில் குளத்திற்கு செல்லும் வழியை ஏன் இவ்வளவு குறுக்கி வைத்திருக்கிறார்கள்? எவரேனும் வழுக்கி விழுந்தாலும். கூட சட்டென கை கூட கொடுக்க முடியாமல்!




---------------------------------------------------------------------------------------------------------------------



இவை நெய்யாடிங்கரா கிருஷ்ணன் கோயில்  படங்கள்.
( இக்கோயிலுக்கு ஒரு சுவாரஸ்யமான  கதை இருக்கிறது)


திருவட்டார்  அருகே லட்சுமி நரசிம்மர் கோயில் 
 ----------------------------------------------------------------------------------------------------------------


மேலாங்காடு அக்காள் - தங்கை கோயில்கள் 

------------------------------------------------------------------------------------------------------------------

குமாரசுவாமி முருகன் கோவில் (முருகன் இங்கே ஆஜானுபாகுவாக காட்சியளிக்கிறார்)



8 comments:

  1. ஜமாய்ங்கோ அண்ணா. அது என்ன 45 ராசி விடாதா? நீங்க பரவாயில்லை அலுக்காம பயணம் செய்றீங்க. நான் இதுக்கு சரியா வரமாட்டேன். கிடச்ச கொய்யா பழத்தை சாப்பிட்டுவிட்டு ஓய்ஞ்சுருவேன். அடுத்த பயணம் எங்கே எப்போ....
    அரசு.

    ReplyDelete
  2. "ஏழைகளின் ரத"த்தின் இம்சை இல்லாமல், உடன் பயணித்த அனுபவம்... மிக்க இனிமை.

    ReplyDelete
  3. பயணக் கட்டுரை அருமை ! இந்திய ரயில்வேயில் ஆன்லைன் அக்கவுண்ட் வைத்திருந்தால் DaySave டிக்கெட் நீங்கள் லேப்டாப்பில் அல்லது மொபையில் போனில் கூட வாங்கலாம். இந்த டிக்கட் ஒரு நாளைக்குள் குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்குள் அன்றைய தினத்துக்குள் எந்த ரயிலிலும் பயன்படுத்தலாம்.

    ReplyDelete
  4. Nice photos and narration. Thanks for sharing.

    ReplyDelete
  5. பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் அலாதியானது. அச்சுகத்திற்கு நம்மை அடிமைப்படுத்தக் கூடியது. எல்லோருக்கும் அமையுமா இந்த வாய்ப்பு? Enjoy பண்ணுங்க சார்.

    ReplyDelete
  6. என்னே அதிஷ்டக்கார புள்ளெ...... அதே 2AC 45 லேயே பயணம் பண்ணுது......

    ReplyDelete