Thursday, January 21, 2016

ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

காஞ்சி மடத்தின், 58வது பீடாதிபதியான ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்(1586-1638) அதிஷ்டானம் இருக்கும் இடம், மிகச் சரியாக எங்கே என தெரியாமல் இருந்த பொழுது, காஞ்சி மடத்தின், 68 வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (1907 – 1994) அவர்களின் அனுக்ரஹத்தினால், விழுப்புரத்திற்கு அருகே உள்ள வடவாம்பலம் என்ற இடத்தில், ஒரு குறிப்பிட்ட வயற்காட்டின் அருகே தோண்டிப் பார்க்கும் பொழுது, அந்த இடத்தில் கபால ஹஸ்தியும், கூடவே ‘சதாசிவம்.. சதாசிவம்’ என்ற  ஒலியும் கேட்கவே இதுவே அவரது  அதிஷ்டான இடம் என, ஸ்ரீ பெரியவரால் உறுதி செய்யப்பட்டது.  1927 ம் ஆண்டு, ஜனவரி 17ந்தேதி, மஹா பெரியவரால் ப்ருந்தாவனம் பிரதிஷ்டை செய்யப் பட்டது.

கடலூரிலேயே, நாற்பது வருடங்களாக இருந்தாலும், அருகிலேயே இருக்கும் சில இடங்களைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் போய்விடுகிறது. இந்த தகவல், நேற்று (20/01/16) அன்று காலைதான் தெரியவர, இன்று காலை இந்த அதிஷ்டானத்தை தரிசிக்கும் வாய்ப்பும் பெற்றேன். வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத, பரவசமான அனுபவம் அது.

ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், விருத்தாஜலத்தில் ‘விஸ்வமஹி’ என்பவருக்கு மகனாய் உதித்தவர். இயற்பெயர் ‘விஸ்வேஸ்வர்ர். இவர் நவசங்கரர், விஸ்வாதிக ஆத்ம போதர் என்றும் போற்றப்பட்டவர்.

அங்கே பூஜை செய்து கொண்டிருப்பவர் கூறிய தகவல்: 

1927ஆம் வருடம், நடமாடும் தெய்வம் தென் ஆற்காடு ஜில்லாவில் பண்ருட்டி பக்கம் தென்பெண்ணைக் கரையில் உள்ள 'வடவாம்பலம்' என்ற கிராமத்தை அடைந்தார். அங்கு வந்தது முதல் கிராமவாசிகள், அக்கம் பக்கம் உள்ள முதியவர்கள் என்று பலரிடமும் 'இந்தகிராமத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை 58வது பீடாதிபதியாக அலங்கரித்த ஸ்ரீமத் ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸித்தி அடைந்த அதிஷ்டானம் எங்கிருக்கிறது? ஸ்ரீமடம் ஆவணம் இங்கு தான் இருப்பதாக சொல்கிறது. ஆனால் இப்போது அந்த இடம் இருந்ததற்கான சுவடே தெரியவில்லையே உங்களில் எவருக்கேனும் தெரியுமா, கேள்விப்பட்டது உண்டோ' என பலவிதத்திலும் விசாரித்ததில் பயன் ஏதும் கிட்டவில்லை.

இந்த நிலையில் அந்த புனித ஸமாதி இடத்தை எப்படியும் கண்டுபிடிப்பது என்ற ஸங்கல்பம் கொண்டது போல் அவ்விடத்தில் உள்ள வயல்கள், தோப்புகள் என பலவற்றையும் தானே நடந்து சென்று சோதிக்க ஆரம்பித்தார். ஒருநாள் காலையில் ஒரு வாழைத்தோப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அந்த இடத்தை தோண்டிப்பார்க்க உத்தரவிட்டார். ஆனால் உடன் வந்த கிராம மக்கள் அங்கு சமாதி இருக்க வாய்ப்பில்லை என்று கூற, இருப்பினும் தான் சொல்லும் இடத்தை தோண்டி பார்க்கும்படி பணிக்க, மடத்தில் உள்ள குமாரமங்கலம் சாம்பமூர்த்தி என்பவர் மண்வெட்டி கொண்டு பெரியவர் காட்டிய இடத்தில் தோட ஆரம்பித்தார். 10, 15 அடி தோண்டிய உடன் ஒரு அதிசயம் தென்பட்டது.

என்னவெனில் மண்வெட்டி பூமியில் ஒரு கபாலத்தில் தட்டுப்பட்டு அப்படியே நின்றது. உடனே தோண்டிக் கொண்டிருந்தசாம்பமூர்த்தி அவர்கள் 'நிறுத்து, நிறுத்து...சதாசிவம் சதாசிவம்' என கத்திக் கொண்டு மூர்ச்சையாய் கீழே விழுந்தார். பெரியவர் இதுவே ஸமாதி ஸ்தலம் என்று கூறிவிட்டு உடனே முறைப்படி ஸமாதி அதிஷ்டானம் கட்ட ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் சிலையாக நின்றனர். எப்படி சர்வ சகஜமாக நேராக குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அடையாளம் காட்ட முடிந்தது என வியந்தனர். த்ரிகால ஞானிக்கு இவையெல்லாம் பெரியதா!

மயக்கம் தெளிந்த சாம்பமூர்த்தி அவர்கள் சொன்ன விவரம் மேலும் வியப்பூட்டியது. பெரியர் சொன்ன இடத்தில் தோண்ட ஆரம்பித்த உடனேயே அந்த பள்ளத்தில் சிறிய சன்னியாசி உருவம் தென்பட்டதாம். பள்ளம் ஆழமாக ஆழமாக அந்த உருவமும் பெரியதாய் வளர்ந்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் காஷாயம், தண்டம், கமண்டலம்,விபூதி, ருத்ராக்ஷம் இவைகளுடன் கோடி சூர்ய ப்ரகாசத்துடன் நின்றதாம். அவர் முன் பல வேத வித்துக்கள் உபநிஷத் பாராயணம் செய்து கொண்டிருக்க திடீரென அம்மஹான் முன்னால் இருந்த வேதியர்களிடம் 'நிறுத்து நிறுத்து...சதாசிவம் சதாசிவம்' என்று சொன்னாராம். தானும் அதையே சொல்லி நினைவிழந்ததாகக் கூறினார். கி.பி.1638ல் ஸித்தியான அந்த மஹானின் ஸ்மாதி ஸ்தலத்தை 289 வருடம் கழித்து நடமாடும் தெய்வம் சுட்டிக் காட்டினார் என்றால் என்னே அவரது ஞானதிருஷ்டி... அருகிலே  இருக்கும் பூவரசங்குப்பம் என்னும் ஸ்தலத்தில் இருக்கும், அமிர்தவல்லி உடனுரை  நரசிம்மரையும் தரிசிக்கும் பேறு கிடைத்தது.


பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்ஹ ஸ்வாமி


3 comments:

 1. நல்ல அனுபவம் பெற்றிருக்கிறீர்கள். இதைப்போன்ற தலங்களுக்கு செல்ல பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும். சளைக்காமல் உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்க.
  அரசு.

  ReplyDelete
 2. சிலிர்க்க வைக்கிறது! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 3. HE is still remembered and sang before doing any Nama Sankeerthanam. "Bhodendra Yogeendram Deeskikendram Upasmahe". To propagate Rama Nama, he resigned from the Kamakoit Pedam.

  ReplyDelete