Thursday, January 28, 2016

சிவாய நம

 சிவாயநம

பரம்பொருள் ( சிவபெருமான்)  வீற்றிருக்கும் சிவத் தலங்கள் பற்றிப் பார்ப்போம்

 சிவபெருமானை மூல முதல்வராக ( தலைவனாக)  கொண்டு அமைந்துள்ள கோயில்கள் சிவத்தலங்கள் என்று அழைக்கப் படுகின்றன

 இத்தலங்கள் சிவப்பதிகள் என்றும், சிவன் கோயில்கள் என்றும் சிவாலயங்கள் என்றும் அறியப் படுகின்றன

இந்தியா, இலங்கை,
நேபாளம், கம்போடியா, தமிழ்நாடு என உலக நாடுகள் பலவற்றில் சிவத்தலங்கள் உள்ளன

 அவற்றில் அதிக சிவத்தலங்களை கொண்ட நாடாக தமிழ்நாடு அமைந்துள்ளது

அவை எண்ணிக்கை அடிப்படையில்

முப்பீட தலங்கள்,

பஞ்சபூதத் தலங்கள்,

 பஞ்ச கேதார தலங்கள்,

பஞ்ச தாண்டவ தலங்கள்,

பஞ்ச மன்ற தலங்கள்,

பஞ்ச பீட தலங்கள்,

பஞ்ச குரோச தலங்கள்,

பஞ்ச ஆசன தலங்கள்,

 பஞ்ச லிங்க தலங்கள்,

 ஆறு ஆதார தலங்கள்,

 சப்த விடங்க தலங்கள்,

அட்டவீரட்டானத் தலங்கள்,

நவலிங்கபுரம்,

 நவ கைலாயங்கள்,

நவ சமுத்திர தலங்கள்,

தச வீராட்டன தலங்கள்
எனவும், கூறப்படுகின்றனவாகும்

சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு

தேவாரத் திருத்தலங்கள்,

திருவாசகத் திருத்தலங்கள்,

 தேவார வைப்புத் தலங்கள்,

திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்,

திருவிசைப்பாத் திருத்தலங்கள்

 எனவும், கூறப்படுகின்றவனவாகும்

வன விசேச தலங்கள்,

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்,

சோதிர்லிங்க தலங்கள்,

ஆதி கைலாய தலங்கள்

எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களின் பட்டியல்,

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களின் பட்டியல்,

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்,

 தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்,

தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்,

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்
எனவும் வகைப்படுத்தப் பட்டுள்ளது.

எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டவை சிலவற்றின் விவரம் பற்றிப் பார்ப்போம்

அட்ட  ( எட்டு) மூர்த்தங்கள்

நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக சிவபெருமான் இருக்கிறார்.
அதனால் அவர் அட்டமூர்த்தி என்று அழைக்கிறார்கள்.

 அவ்வாறான எண் பொருளாக சிவபெருமான் இருக்கும் தலங்கள் அட்ட மூர்த்தர்கள் என்று அழைக்கப் பெறுகின்றன.

நிலம் - திருவாரூர் ,காஞ்சிபுரம்

நீர் - திருவானைக்கா

தீ - திருவண்ணாமலை

காற்று - திருக்காளத்தி

ஆகாயம் - சிதம்பரம்

சூரியன் - திருச்சிராப்பள்ளி

சந்திரன் - மதுரை

ஆன்மா - திருப்பெருந்துறை

பஞ்சபூத சிவத்தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

மண் (பிருத்திவித்தலம்) -காஞ்சிபுரம்,

திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)

நீர் (அப்புத்தலம்) -திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்,
திருச்சிராப்பள்ளி

தீ (தேயுத்தலம்) -திருவண்ணாமலை

வளி (வாயுத்தலம்)-திருக்காளத்தி

வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

பஞ்ச லிங்க தலங்கள்

அர்கேசுவரர் லிங்கத்தலம்

பாதாளேசுவரர் லிங்கத்தலம்

மரனேசுவரர் லிங்கத்தலம்

மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்

வைத்திய நாதேசுவரர் லிங்கத்தலம்

ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இவைதான்.

தில்லை (சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.

திருவாரூர்-அசபா தாண்டவம்.

மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.

அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.

திருமுருகன்பூண்டி-பிரம தாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து ( ஞானக்கூத்து)  இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம். அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள் (அடைப்புக் குறிக்குள் சபைகள்)

தில்லை (சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).

திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).

மதுரை-வெள்ளி மன்றம் (இராஜத சபை).

திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).

திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

பாண்டி நாட்டு பஞ்சபூத ஸ்தலங்கள்

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் ,சங்கரன்கோவில் - நிலம்

கரிவலம்வந்த நல்லூர் - நெருப்பு

தேவதானம் - ஆகாயம்

தாருகாபுரம் - நீர்

தென்மலை - காற்று

சப்த விடங்க சிவத்தலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.
அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.

திருவாரூர் வீதிவிடங்கர் அசபா நடனம்

திருநள்ளாறு நகரவிடங்கர் உன்மத்த நடனமம்

திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டினம்
சுந்தரவிடங்கர்
வீசி நடனம்

திருக்காறாயில்
என்கிற திருக்காரைவாசல்ஆதிவிடங்கர்
குக்குட நடனம்

திருக்கோளிலி
 என்கிற திருக்குவளை அவனிவிடங்கர் பிருங்க நடனம்

திருவாய்மூர்
நீல விடங்கர்
கமல நடனம்

திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்
புவனி விடங்கர் கம்சபாத நடனம்

அட்ட வீரட்டானக் கோயில்

சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன. அவை

திருக்கண்டியூர் பிரம சிரக்கண்டீசுவரர் கோயில் -பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது

திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் - அந்தகாசூரனைச் சம்காரம் செய்தது

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில், கடலூர் - திரிபுரத்தை எரித்தது

கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில், திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது

வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில், வழுவூர் - யானையை தோல் உரித்தது

திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில், திருவிற்குடி -சலந்தாசுரனைச்
சம்காரம் செய்தது.

கொருக்கை வீரட்டேசுவரர் கோயில், திருக்குறுக்கை -காமனை எரித்தது.

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில், திருக்கடவூர் - எமனை உதைத்தது.

பஞ்ச கேதரங்கள்


இமயமலைச் சாரலில் அமைந்துள்ள கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர் மற்றும் கபிலேஷ்வர் முதலிய இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள் தோன்றியதாக  நம்புகிறார்கள். இதனால் சிவபெருமானை கேதரநாதன் என்றும் அழைக்கின்றார்கள்
அவை

கேதார்நாத் - உடல்

துங்கநாத் - புஜம்

ருத்ரநாத் - முகம்

மத்மஹேஷ்வர் - தொப்புள்

கபிலேஷ்வர் - தலைமுடி

தமிழகத்தின் நவ கைலாயங்கள்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும்
தூத்துக்குடி மாவட்டத்திலும்
தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கபடுகின்றன அவை

பாபநாசம்

சேரன்மகாதேவி

கொடகநல்லூர்

முறப்பநாடு

திருவைகுண்டம்

தென்திருப்பேரை

 செப்பறை

சேர்ந்த பூ

மங்களம்

முதலானவை நவ கயிலாயங்கள் ஆகும்

 தேவாரத் திருத்தலங்கள்

இந்தியாவில் பல சிவத்தலங்கள் இருப்பினும், தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் ( 274)  இருநூற்று எழுபத்து நான்காகும். இவைகளில் இருநூற்று அறுபத்து நான்கு (264) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

திருவாரூர்
பிறக்க முக்தி தருவது

சிதம்பரம்
தரிசிக்க முக்தி தருவது

திருவண்ணாமலைநினைக்க முக்தி தருவது

காசி இறக்க முக்தி தருவது


பாரதம் முழுதும் இவ்வாறாக பல்வேறு சிவத்தலங்கள் உள்ளன இவைகளை நாம் தரிசனம் செய்து மீண்டும் பிறப்பில்லாமல் சிவபெருமானின் திருவடிக்கீழ் பேரானந்தமாக இருக்க முயற்சி செய்து வாழ்வோம்

திருச்சிற்றம்பலம்

Tuesday, January 26, 2016

திருவாசி – குணசீலம் – உத்தமர்கோயில்.

இதற்குமுன்  கண்ட இரு பதிவுகளில் தரிசித்த, திருவெள்ளாறை, திருப்பைஞ்ஞீலி கோயில்களுக்குப் பின், மிகவும் தற்செயலாக, அப்போதுதான், கேள்விப்பட்ட ஒரு சிவஸ்தலம், திருவாசி. இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர். திருப்பாச்சிலாச்சிராமம் என்று வழங்கப்பட்ட இடம், தற்போது சுருங்கி திருவாசி என அழைக்கப்படுகிறது. இறைவி: பாலாம்பிகை. பதிகம்: திருஞானசம்பந்தர் (1), சுந்தரர் (1)

ராஜா, கொல்லிமழவனின் மகளுக்கு தீராத வலிப்பு நோய் நோயிருந்தது.  கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். திருஞானசம்பந்தர், திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு வந்தார். மன்னன்  சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி “துணிவளர் திங்கள் துளங்கி விளங்க..” எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லை. திருவடியின் கீழ் அதற்குப்பதில் ஒரு உள்ள சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார்.


இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்க, அவர் கொடா மலிருக்க, கோபத்தினால், சிவனை இகழவதுபோலப் பாடி, முடிவில், தான் இகழவில்லை-பொறுத்தருளவேண்டும் என்ற பொருளில் பதிகம் பாட, இறுதியில் சிவன் பொன் தர, அந்தப் பொன்னை இரு வணிகர்களிடம் காட்டி, தரம் சோதிக்க, வணிகர் வடிவில் வந்த சிவா-விஷ்ணு, தரமான தங்கம்தான் என மாற்றுரைக்க, தங்கத்தை மாற்றுரைத்துக் காட்டியதால் "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டதாம்.

தற்சமயம் கோயில் திருப்பணி நடந்து வருகிறது.

---------------------------------------------------------------------------------
குணசீலம்: 


இறைவன்:பிரசன்ன வெங்கிடாசலபதி-நின்றகோலம்.
இறைவி:   ஸ்ரீதேவி,பூதேவி
தாந்தீய மகரிஷி.-குணசீலமகரிஷி தவத்திற்கிணங்கி ஸ்ரீவெங்கடேச பெருமாளாக காட்சி.




---------------------------------------------------------------------------------
உத்தமர் கோயில்:

திருச்சிக்கு ட்ரெயினில் செல்லும் வழியில் ‘பிச்சாண்டார் 
கோயில்’ என்னும் ஸ்டேஷன் வரும். அங்கு இவ்வளவு 
பிரசித்தமான கோயில் இருக்கும் எனத் தோன்றவில்லை. 

சிவன், விஷ்னு,ப்ரம்மா என மூவரும் காட்சிதரும் அழகான 
கோயில்.

சுவாமி : பிச்சாண்டார், பிச்சாடனர், பிச்சாண்டவர். சிவன்) -  
               மற்றும் சௌந்தர்ய பார்வதி,
              
               புருஷோத்தமன் (விஷ்னு).  
               பூர்ணவல்லித் தாயார்
               
               பிரம்மா, சரஸ்வதி.
       
        இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
             
தீர்த்தம் :  கதம்பதீர்த்தம். (அய்யன் வாயக்கால், ஒரு கிணறு, 

பிரகலாத தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்) 

விருட்சம் :  கதலி மரம்  (வாழை) என்று சொல்கிறார்கள்

புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் 
கோயில் எனப் புகழ்  பெற்றது. முப்பெரும் தேவியர் 
உடனுறை மும்மூர்த்திகள் அருளும் ஒரே  திருத்தலம். 
சப்தகுரு பகவான்கள் அருளும் ஒரே குருபரிகார ஸ்தலம். 
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த 
 திருக்கோவில்.

பிக்ஷாடன மூர்த்தியாக சிவன் காட்சி அளிப்பதால் 
பிக்ஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.   
திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர்
சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி 
தந்தருளிய  பெருமான் இவர்.  மும்மூர்த்திகளும் முப்பெரும் 
தேவியருடன் அருகருகே தனித்தனி சந்நிதிகளில் அமைந்து 
அருளும் ஸ்தலம்  இந்தியாவில் இது ஒன்றே. 

மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைணவத் 
திருப்பதிகளில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த பெருமை  உடையது.

சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய பிச்சாடனர் 
திருகோலம் அவதரித்த தலம். சப்தகுருக்கள்என்று 
 அழைக்கப்படும், பிரம்மகுரு, விஷ்ணுகுரு, சிவகுரு, சக்திகுரு, 
சுப்ரமயணிகுரு, தேவகுரு, பிரஹஸ்பதி, அசுரகுரு 
சுக்ராச்சார்யார் ஆகிய ஏழு குருபகவான்களைக் கொண்டு 
விளங்கும் தலம்.  தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் 
விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் 
ஸ்தலம்.  பிரம்மாவின் இடப்புறம் தனிசன்னதியில் 
ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கும் இடம்.  அனுமனின் 
வால் தலைவரை இருப்பதையும், அதில் மணியினைக் 
கட்டியிருப்பதையும் காட்டினார் குருக்கள்.






பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கிள்ளி 
எறிந்ததால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க, மகாலட்சுமியைக் 
கொண்டு பிச்சையிட்டதாகவும், அதனால் அச்சாபம் 
நீங்கியதாகவும் கூறுவது உண்டு.

(படங்களில் சில 'நெட்'   உதவி.)

திருப்பைஞ்ஞீலி

திருவெள்ளாறை பிரமிப்பு நீங்காமலிருக்கும் பொழுதே, தரிசித்த அடுத்த கோயில்,  திருப்பைஞ்ஞீலி. இதுவும் திருச்சிக்கு அருகில்தான். இங்கும் முற்றும்பெறாமலிருக்கும் ராஜ கோபுரம். முற்றுப் பெற்றவரை கருங்கல்லால் ஆகியிருக்கிறது. கோபுரத்தின் நுழைவாயிலின், உட்பக்கம்,வியப்படைய வைக்கிறது. என்ன ஒரு அமைப்பு!! படத்தைப் பாருங்கள்.

இறைவன்: ஞீலிவனேஸ்வரர்.  இறைவி: விசாலாட்சி.
ஸ்தல விருட்சம்: ஞீலி வாழை.

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. 

ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு நாலு  கால் மண்டபமும் அதன் பின்புறம் மூன்று  நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று அழைக்கப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞீலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. 

யம தர்மராஜா சந்நிதி: இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். திருக்கடவூரில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்ததால், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக, பூமியின் பாரம் அதிகரிக்க, பூமிதேவியும் மற்றவர்களும் சிவபெருமானிடம் முறையிட,  சிவன் எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்தாரம். முதலில் இவரை தரிசித்துவிட்டு, கைகால்கழுவிட்டு  பின்னர்தான்  மூலவரை தரிசிக்க வேண்டுமாம்.

திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும். இந்த படிகளே நவக்கிரங்களாம். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதையும் நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர்.



கோபுரத்தின் உள்ளே!




ஸ்தல விருட்சம் - கல்வாழை 




திருவெள்ளறை

இன்று திருச்சி அருகே உள்ள ‘திருவெள்ளறை ’ என்னும் ஊரில் உள்ள புண்டரீகாட்ச பெருமாளை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. 

கோயிலின் அருகே இறங்கி, தலையுயர்த்தி பார்த்த கணமே, மனம் பரவசக்கடலில் மூழ்கியது. எதிர்பார்த்தது,  மற்றும் ஒரு தென்னக வைஷ்னவ கோயிலை; ஆனால் காணக்கிடைத்தது “பிரமிப்பு, ஆச்சர்யம், கம்பீரம், தொன்மை” ஆகிய அனைத்தும் ஒருங்கினைந்த ஓர் ஆச்சர்யக் கோயிலை. 

ஐம்பதடி உயரமுள்ள ஒரு கரட்டின் மீது அமையப்பெற்றது இக்கோயில். (திரு+வெள்ளை+பாறை என்பது மருவி திருவெள்ளாறை என்றானதாம்). திவ்யதேச ஸ்தலங்களில் ஒன்று. பெரியாழ்வார், திருமங்கையாழ்வரால் மங்களாசாஸனம் செய்யப் பெற்றது. 14 ஏக்கர் பரப்பில் விரிந்து பரந்திருக்கிறது கோயில். கோயிலைச் சுற்றி 36 அடி உயரத்திற்கு பிரமாண்டமான சுற்றுச் சுவர். கோட்டைபோல காட்சி தருகிறது.

நுழைவு வாயில் (ராஜ கோபுரம்) முடிக்கப்படாத நிலையில் உள்ளது. அந்த நிலையிலேயே என்ன ஒரு பேரழகு.  காண இரு கண் போதாது.வெளி நாடாக இருந்தால், இத்தனை அழகுடன், பழமையுடன், எழிலுடன், கம்பீரமாய் இருக்கும் இந்த முடிக்கப்படாத கோபுரத்திற்கு கிடைக்கக் கூடிய மரியாதையே தனியாய் இருக்கும்.

மூலவர் சன்னிதியில் பூமிப்பிராட்டி, பெரிய பிராட்டி, சூர்ய-சந்திரர்கள்,ஆதிசேஷன். நின்ற நிலை கோலம். 

 இக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோயிலிற்கும் முந்தியதாம். ராமர் காலத்தை ஒட்டியது என்கிறார்கள்.(ஸ்ரீ ராமருக்கு நான்கு தலைமுறைகள் பின்னால் - சிபி சக்ரவர்த்தி காலம்)  

இங்கே, விஷ்வேக்ஷனர், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், நாதமுனிகள், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், ஆண்டாள், ராமானுஜர், மனவாள மாமுனிகள் ஆகியோருக்கும் சன்னதிகள் இருக்கின்றன. பெருமாள்மீது தாயாருக்கு இங்கு உரிமை அதிகமாம் (திவ்ய தேசங்களில் இதுபோல, நாச்சியார் கோவிலும், ஸ்ரீவில்லிப்புத்தூரும் வரும்). உய்யக்கொண்டான் பிறந்த ஸ்தலம்.

மூலவரை தரிசிக்கச்  செல்ல தக்க்ஷணாயன காலத்திற்கு ஒன்றும், உத்ராயண காலத்திற்கு ஒன்றாகவும்  இரு நுழைவுகள்.

ஸ்வஸ்திக் வடிவக்குளம் ஒரு விஷுவல் டிலைட்.

கோவில் பின்னால், வஸந்த மண்டபமும், குகைக்கோயிலும் உள்ளன. குகைகள் பல்லவர் காலத்தியது.

கோயிலைப்பற்றிய புராணங்கள் எண்ணற்றவை.கோயிலின் சிற்பக்கலைக்காகவும், கம்பீரத்திற்காகவும், தொன்மைக் காகவும், அழகுக்காகவும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய கோயில்.  

சில புகைப் படங்களைப்  பாருங்கள்.














Thursday, January 21, 2016

ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

காஞ்சி மடத்தின், 58வது பீடாதிபதியான ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்(1586-1638) அதிஷ்டானம் இருக்கும் இடம், மிகச் சரியாக எங்கே என தெரியாமல் இருந்த பொழுது, காஞ்சி மடத்தின், 68 வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (1907 – 1994) அவர்களின் அனுக்ரஹத்தினால், விழுப்புரத்திற்கு அருகே உள்ள வடவாம்பலம் என்ற இடத்தில், ஒரு குறிப்பிட்ட வயற்காட்டின் அருகே தோண்டிப் பார்க்கும் பொழுது, அந்த இடத்தில் கபால ஹஸ்தியும், கூடவே ‘சதாசிவம்.. சதாசிவம்’ என்ற  ஒலியும் கேட்கவே இதுவே அவரது  அதிஷ்டான இடம் என, ஸ்ரீ பெரியவரால் உறுதி செய்யப்பட்டது.  1927 ம் ஆண்டு, ஜனவரி 17ந்தேதி, மஹா பெரியவரால் ப்ருந்தாவனம் பிரதிஷ்டை செய்யப் பட்டது.

கடலூரிலேயே, நாற்பது வருடங்களாக இருந்தாலும், அருகிலேயே இருக்கும் சில இடங்களைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் போய்விடுகிறது. இந்த தகவல், நேற்று (20/01/16) அன்று காலைதான் தெரியவர, இன்று காலை இந்த அதிஷ்டானத்தை தரிசிக்கும் வாய்ப்பும் பெற்றேன். வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத, பரவசமான அனுபவம் அது.

ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், விருத்தாஜலத்தில் ‘விஸ்வமஹி’ என்பவருக்கு மகனாய் உதித்தவர். இயற்பெயர் ‘விஸ்வேஸ்வர்ர். இவர் நவசங்கரர், விஸ்வாதிக ஆத்ம போதர் என்றும் போற்றப்பட்டவர்.

அங்கே பூஜை செய்து கொண்டிருப்பவர் கூறிய தகவல்: 

1927ஆம் வருடம், நடமாடும் தெய்வம் தென் ஆற்காடு ஜில்லாவில் பண்ருட்டி பக்கம் தென்பெண்ணைக் கரையில் உள்ள 'வடவாம்பலம்' என்ற கிராமத்தை அடைந்தார். அங்கு வந்தது முதல் கிராமவாசிகள், அக்கம் பக்கம் உள்ள முதியவர்கள் என்று பலரிடமும் 'இந்தகிராமத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை 58வது பீடாதிபதியாக அலங்கரித்த ஸ்ரீமத் ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸித்தி அடைந்த அதிஷ்டானம் எங்கிருக்கிறது? ஸ்ரீமடம் ஆவணம் இங்கு தான் இருப்பதாக சொல்கிறது. ஆனால் இப்போது அந்த இடம் இருந்ததற்கான சுவடே தெரியவில்லையே உங்களில் எவருக்கேனும் தெரியுமா, கேள்விப்பட்டது உண்டோ' என பலவிதத்திலும் விசாரித்ததில் பயன் ஏதும் கிட்டவில்லை.

இந்த நிலையில் அந்த புனித ஸமாதி இடத்தை எப்படியும் கண்டுபிடிப்பது என்ற ஸங்கல்பம் கொண்டது போல் அவ்விடத்தில் உள்ள வயல்கள், தோப்புகள் என பலவற்றையும் தானே நடந்து சென்று சோதிக்க ஆரம்பித்தார். ஒருநாள் காலையில் ஒரு வாழைத்தோப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அந்த இடத்தை தோண்டிப்பார்க்க உத்தரவிட்டார். ஆனால் உடன் வந்த கிராம மக்கள் அங்கு சமாதி இருக்க வாய்ப்பில்லை என்று கூற, இருப்பினும் தான் சொல்லும் இடத்தை தோண்டி பார்க்கும்படி பணிக்க, மடத்தில் உள்ள குமாரமங்கலம் சாம்பமூர்த்தி என்பவர் மண்வெட்டி கொண்டு பெரியவர் காட்டிய இடத்தில் தோட ஆரம்பித்தார். 10, 15 அடி தோண்டிய உடன் ஒரு அதிசயம் தென்பட்டது.

என்னவெனில் மண்வெட்டி பூமியில் ஒரு கபாலத்தில் தட்டுப்பட்டு அப்படியே நின்றது. உடனே தோண்டிக் கொண்டிருந்தசாம்பமூர்த்தி அவர்கள் 'நிறுத்து, நிறுத்து...சதாசிவம் சதாசிவம்' என கத்திக் கொண்டு மூர்ச்சையாய் கீழே விழுந்தார். பெரியவர் இதுவே ஸமாதி ஸ்தலம் என்று கூறிவிட்டு உடனே முறைப்படி ஸமாதி அதிஷ்டானம் கட்ட ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் சிலையாக நின்றனர். எப்படி சர்வ சகஜமாக நேராக குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அடையாளம் காட்ட முடிந்தது என வியந்தனர். த்ரிகால ஞானிக்கு இவையெல்லாம் பெரியதா!

மயக்கம் தெளிந்த சாம்பமூர்த்தி அவர்கள் சொன்ன விவரம் மேலும் வியப்பூட்டியது. பெரியர் சொன்ன இடத்தில் தோண்ட ஆரம்பித்த உடனேயே அந்த பள்ளத்தில் சிறிய சன்னியாசி உருவம் தென்பட்டதாம். பள்ளம் ஆழமாக ஆழமாக அந்த உருவமும் பெரியதாய் வளர்ந்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் காஷாயம், தண்டம், கமண்டலம்,விபூதி, ருத்ராக்ஷம் இவைகளுடன் கோடி சூர்ய ப்ரகாசத்துடன் நின்றதாம். அவர் முன் பல வேத வித்துக்கள் உபநிஷத் பாராயணம் செய்து கொண்டிருக்க திடீரென அம்மஹான் முன்னால் இருந்த வேதியர்களிடம் 'நிறுத்து நிறுத்து...சதாசிவம் சதாசிவம்' என்று சொன்னாராம். தானும் அதையே சொல்லி நினைவிழந்ததாகக் கூறினார். கி.பி.1638ல் ஸித்தியான அந்த மஹானின் ஸ்மாதி ஸ்தலத்தை 289 வருடம் கழித்து நடமாடும் தெய்வம் சுட்டிக் காட்டினார் என்றால் என்னே அவரது ஞானதிருஷ்டி... 







அருகிலே  இருக்கும் பூவரசங்குப்பம் என்னும் ஸ்தலத்தில் இருக்கும், அமிர்தவல்லி உடனுரை  நரசிம்மரையும் தரிசிக்கும் பேறு கிடைத்தது.


பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்ஹ ஸ்வாமி