Saturday, July 11, 2015

கோடை சுற்றுலா - 2015

இந்த வருடமும், நண்பர்களுடன், மூன்று நாள் சுற்றுலா சென்றிருந்தோம்.
குற்றாலம் காய்ந்து போய்க் கிடக்க, காட்டெருமைக் கூட்டம் போல வெறும் பாறைகளே கண்களை நிறைத்ததால், தமிழக எல்லையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள, “பாலருவி” என்ற அருவிக்குச் சென்றோம். பொருத்தமான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்.  பால்போல ‘வெள்ளை வெளேர்’ என வீழ்கிறது அருவி.

பாலருவி கேரளாவில், “ஆரியங்காவு”க்கு அருகில் உள்ளது. ‘கல்லாடா’ ஆற்றின் அருவி இது.   நான் பற்பல அருவிகளுக்குச் சென்றிருந்தாலும், இந்த அருவி மிக வித்தியாசமாக இருக்கிறது.  299 அடி உயரத்திலிருந்து விழுகிறது அருவி.

இது வரை அருவிகள் என்றால், உயரத்திலிருந்து, நீர், பாறைகளின் மீது கொட்ட, நாம் தலையை உள்ளே நீட்டி, குளித்து மகிழ்வது எனக் கருதியிருந்தது போலன்றி, இந்த வீழ்ச்சி, மிக உயரத்திலிருந்து, கீழே உள்ள ஒரு நீர்த் தேக்கத்தில் விழுகிறது. மார்பளவு நீரில் நின்றுகொண்டு அருவியில் குளிக்கலாம் - நீந்தலாம். இந்த அருவிக்கு இதுதான் முதன் முதலில் செல்வது என்பதாலோ என்னவோ, இதன் அழகு பிரமிப்பாக இருந்தது.

இதமான, மப்பும் மந்தாரமான மந்தகாச காலநிலையில்,
சாரல் மழை எங்கும் தூவ, அடர்ந்த பசுங்காடுகள் சூழ,
எழிலான கருத்த ராட்சதன் போன்ற முரட்டு மலையின் மேலிருந்து, பேராணவம் மிக்க எழிலான மங்கை ஒருத்தி, எனக்கு நிகர் எங்கேனும் உண்டா என வினவும் ‘கம்பீர நாட்டியம்’ போல பேரோசையோடு தெளித்து விழுகிறது அருவி.

தெளிந்த - குளிர்ந்த நீர்...  நெருக்கியடித்து முட்டித் தள்ளும் கூட்டம் இல்லாமல், அமிர்தம் உண்டது போல, ஒரு மணி நேரத்திற்கும் மேல் அருவியிலும் தேக்கத்திலும் நீந்தித் திளைத்து மகிழ்ந்தேன். 

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கேரள அரசாங்கம் இந்த அருவியினையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்கிறார்கள். அருவிக்கு அருகில் உள்ள படிக்கட்டுகளைக் கூட ஒரு பெண் ஊழியர் கழுவி விட்டுக் கொண்டே இருக்கிறார். வாகனங்கள் நிறுத்தப் படுவதிலும் ஒரு ஒழுங்கு.

குற்றாலத்தில், அருவி எங்கே இருக்கிறது என்பது கூடத்தெரியாமல்,  எல்லா அருவிகளின் அருகிலும், பஜ்ஜிக் கடைகள், குல்லாய்க்கடைகள், ஊறுகாய்க்கடைகள், சிப்ஸ்கடைகள், தோசைக் கடைகள், ஸ்பைசஸ் (போலி) கடைகள், டீக்கடைகள் என காளான் போல, நடக்கக் கூட  இடமில்லாமல், நெருக்கியடித்து வியாபாரம் செய்வார்களே அது போல அருவறுக்கும் காட்சி இங்கே இல்லை.  ஒரு ஒரு கேரள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு சுகாதாரமான காஃபி ஷாப். அவ்வளவே.

தமிழக சுற்றுலா இடங்களில் மட்டும் எதற்காக இவ்வளவு கடைகள்? 

இயற்கையை அதன் போக்கில் விடாமல், நாசப்படுத்தி அழகை ரசிக்க விடாமல், பார்க்க விடாமல், அனுபவிக்க விடாமல் எதற்கு இத்தனை உபத்திரவங்கள்?

ஊட்டியில், தொட்டபெட்டா சிகரத்தில் உள்ள ‘டெலஸ்கோப் ஹவுஸிலிருந்து’ ஒரு நூறு அடி தூரத்தில் இருக்கும் வியூ பாயிண்டிலிருந்து பார்த்தால், பொள்ளாச்சி உட்பட பலப்பல சுற்றுப் பகுதிகள் தெளிவாகத் தெரியும்.  உண்மையிலேயே மிக நல்ல வ்யூபாயிண்ட். 

ஆனால், டெலஸ்கோப் ஹௌஸிலிருந்து, வ்யூ பாயிண்ட்டிற்கும் இடைப்பட்ட அந்த மிகக் குறுகிய  நூறு அடி பாதையின் இருபுறத்திலும் எத்தனை கடைகள்? 

அந்த நூறடிக்குள்தான்,  நமக்கு ‘பஜ்ஜி தின்றாக வேண்டும்”, போண்டா மெல்லனும், ‘ஸ்வெட்டர் வாங்கனும்’, ‘சாக்ஸ் வாங்கனும்’, ‘குல்லாய் வாங்கனும்’, ‘சுண்டல் தின்ன வேணும்’, ‘வளையல் வாங்கனும்’, ‘ப்ளாஸ்டிக் பொருட்கள் வாங்கனும்’, ‘சிப்ஸ் வாங்கனும்’, ‘பொரி தின்னனும்', ‘ஹேர் கிளிப்கள் வாங்கி செருகிக் கொள்ள வேண்டும்’,  உலகின் அத்தனை ‘டிம்டிம்ஸ்’ பொருட்களும் விற்றாகனும்.... சை... என்ன ரசனை நமக்கு?  இதை அரசாங்கம் ஒழுங்கு படுத்த வேண்டுமா? வேண்டாமா?

கன்யாகுமரியிக்கும் சென்றிருந்தேன்... அப்ப்பா... சொல்லி மாளாது கடைகள்.. எதையும் ரசிக்க முடியாது!  நெருக்கியடித்து, சந்தைக் கடைபோல இருக்கிறது கன்யாகுமரி..  சகல இடங்களிலும் நீக்கமற நடக்க விடாமல், கடைகள்.

வியாபார ஸ்தலங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை! உள்ளூர் பொருளாதாரம் அதைச் சார்ந்ததுதான்.  அதற்கென ஒரு விரிந்த இடம் ஒதுக்கி, அங்கே மட்டும்தான் வியாபாரம் என கட்டுப் படுத்தினால் என்ன?  உலகெங்கும் அப்படித் தானே நடக்கிறது?

சுற்றுலாத் தலங்களை எவ்விதம் பராமரிப்பது என்பதை உடணடியாக கற்றுக்கொண்டு அமுல் படுத்தியாக வேண்டும்.

இனி சில படங்கள்...





No comments:

Post a Comment