Wednesday, February 4, 2015

அற்றார்....

இன்று எனது  நண்பர் ஒருவர், ஆதரவற்றோர்களுக்கு (சுமார் 100 பேர்) ஒரு வேளை உணவளித்தார். அற்றார் பசி, ஒருவேளை தீர்த்தேன் என்றார்.

அற்றார் என்றால், அம் முதுமக்கள் ஏதுமற்றர்கள்.
உறவு அற்றார்..
பொருள் அற்றார்..
உற்றம் அற்றார்..
சுற்றம் அற்றார்..
நட்பு அற்றார்...

ஆனாலும்....

உணர்வற்றவர்களா?
பசியற்றவர்களா?
சுய மதிப்பற்றவர்களா?
கௌரவமற்றவர்களா?
மானமற்றவர்களா?
ஈனப் பிறவிகளா?

கேள்வி மனதைக் குடைகிறது!

ஒரு வருடத்திற்கு முன்பு வரை அனாதைகளுக்கு உணவளிப்பது ‘சமூக சேவை.’  அல்லது  ‘எனக்கும் மனித நேயம் இருக்கிறது, அவர்களுக்கு உணவளிப்பது ஒரு சமூக கடமை.’ என்பதாகத்தான் புரிந்து கொண்டி ருந்தேன்.

சற்றே, மிகவும் சற்றே உற்று நோக்கினால் கூட, மனம் பரிதவித்துப் போகிறது! அவர்களுக்குளாக, ஒரு வேதனைச் சமுத்திரம் பொங்கிக் கொண்டிருப்பதும், விரக்தியின் உச்சத்தில் பரிதவித்துக் கொண்டிருப்பதும் புரிகிறது.

அவர்கள் விரும்புவது என்ன? வெறும் உணவுப் பொட்டலங்களையா? ‘வயிற்றை நிரப்பிக் கொள்வது’ மட்டுமே அவர்களது விழைவாக இருக்கிறதா?

‘எல்லாம் நல்லாத்தான் இருந்ததையா, காலத்தின் கோலம் எங்களை இப்படி ஆக்கிவிட்டது’ என விழி நீர் சிந்தாத முதியோர்களைக் கண்டதுண்டா?’  ‘சீக்கிரம் ஆண்டவன் எங்களை அழைத்துக் கொள்ள வேண்டும்’ என வேண்டுகோள் வைக்காத, உதாசீனப்படுத்தப் பட்ட முதியோர்களைக் கண்டதுண்டா?

தற்போது மானுடம் நசிந்துதான் போயிற்றா?

சுய நலப் பிண்டங்களாக மாறிவிட்டதா நமது சமுதாயம்?

இந்திய நாட்டின் சிறப்பே, அது எந்த மதமாக இருந்தாலும், குடும்பத்தையும், வயதானவர்களைப் பேணுவதை யதார்த்தமான கடமையாக கொண்டதல்லவா நமது கலாச்சாரம்? எங்கே தவறிழைத்தோம்?  அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் ஏன் பெருகிக் கொண்டே போகின்றன?

‘எங்க உடம்புல தெம்பும், கையில காசும் இருக்கிற வரைக்கும் நாங்க எல்லோருக்கும் இனிப்பாத்தான் இருந்தோமுங்க... எந்த குறையும் இல்லாம எல்லப் புள்ளைங்களுக்கும் நல்லாத்தான் குடும்பம் அமச்சுக் கொடுத்தோமுங்க.. அவுங்களுக்கு கால் முளைச்சுடுச்சு..., எங்களை முட்டாள்ன்னு நினைக்கறாங்க..  தெம்பு போனதுக்கப்புறம், எங்களை சுமையா நினைக்கறாங்க..  நாங்க அவுங்களுக்கு வேண்டாத பளுவா போயிட்டோமுங்க..’  சொல்லும் வார்த்தைகளே இப்படியென்றால், மனதில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள் எவ்வளவு இருக்கும்?

தாய், தந்தை, மக்கட் செல்வங்கள், உற்றம், சுற்றம் ஏதும் இல்லாமல் ‘சுயம்பு அனாதைகளாக’ பிறந்தவர்களா இந்த முதியோர்கள்?

‘எல்லாம் இருந்துதையா... இப்ப யாரும் கண்டுக்கல... யாரையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லீங்கையா! எல்லாம் எங்க விதி..’
பேச மறுத்து, தனக்குள்ளேயே புழுங்கும் பரிதாபிகளாகி விட்டனரே?..- ஏன்?’   

நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதுவேதான் தங்களுக்கும் திரும்ப வரும் என்பது கூடவா சமூகத்திற்கு புரியவில்லையா?

‘இன்னும் கொஞ்சம் சாப்பாடு போட்டுக்கறீங்களா..?’

வேணாங்கநீங்க அன்பா கேட்டதே போதும்….’


புரிகிறதா அவர்களுக்கு என்ன வேண்டும் என?

No comments:

Post a Comment