Tuesday, February 17, 2015

மாற்று மருத்துவம்

“ஃபேஸ்புக்” கில் பரிந்துரைக்கப் படும் மாற்று மருத்துவ முறைகளைப் பற்றி, ஒருமுறை எழுதிவிடுவது நல்லது என நினைக்கிறேன்.

தற்பொழுது, ஒரு நாளைக்கு ஒரு பத்து பேராவது, சகலவிதமான நோய்களுக்கும் மாற்று மருத்துவ முறைகளைப் பற்றி எழுதுகிறார்கள். 

எழுதுகிறார்கள் என்று கூட சொல்ல முடியாது.  காப்பி பேஸ்ட் செய்கிறார்கள். இவர்களில் கனிசமானோர் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அல்லர். செவி வழி பாட்டி மருத்துவ குறிப்புக்களே! 

குறிப்பாக, சிறுநீர்க் கற்கள், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை  நோய் போன்றவற்றிற்கான தீர்வுகள் மிக  அதிகமான வருகின்றன. 

ஏன், புற்று  நோய்க்குக் கூட மருந்து சிபாரிசு செய்கிறார்கள்.

மாற்று மருத்துவ முறைகளில் இருக்கும் பிரச்சினை என்ன வென்றால், தங்களால் தீர்க்க முடியாத வியாதிகளே இல்லை என கூறிக் கொள்வதுதான். இது தவிர அல்லோபதியை திட்டித் தீர்ப்பதும் நடக்கும்.

மாற்று மருத்துவ முறைகளில் பலனே இல்லை என்று சொல்லக் கூடாது. 

ஆனால், பெரும்பாலும் அவை ஆராய்ச்சிக்கு உட்பட்டதில்லை.  ஒரே மாதிரி நோய்வாய்ப்பட்ட இரு மனிதர்களுக்கு மாற்று மருத்துவ முறையில் ஒருவருக்கும், ஆங்கில மருத்துவ முறையில் ஒருவருக்கும் சிகிச்சையளித்து, அதில், மாற்று மருத்துவ முறை தன்னை நிரூபித்துக் கொண்டால் மட்டுமே, அது நிரூபணமானதாகும்.

தற்போது, முகனூலில் நடப்பது என்னவென்றால், எங்கோ ஒருவர் எழுதியதை, குஷாலாக, காப்பி – பேஸ்ட் செய்வது தான்.

வெளினாட்டு பாதிரியார் ஒருவர், சோற்றுக் கற்றாழை புற்று நோயைத் தீர்க்கலாம் என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகமே என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரே தனது முன்னுரையில் – இந்த முறை  நவீன சிகிச்சைக்கு மாற்று அல்ல என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதை தமிழ்ப் படுத்தி, நூறு ரூபாய்க்கு புற்று நோய் தீரும் என யாரோ ஒருவர் எழுத, அதைக் காப்பி பேஸ்ட் செய்து ஒரு கோஷ்யே அலைகிறது. 

அது மாத்திரம் அல்ல. சர்க்கரை நோய்க்கு வெந்தியம்-கொத்தமல்லி, அப்புறம் ஒரு செடி, வெண்டைகாய் மருந்து, பீன்ஸ் மருந்து என பலவும் சொல்லித் திரிகிறார்கள். சிறுநீர் கற்களுக்கும் கணக்கிலடங்கா முறைகள் சொல்கிறார்கள்.

இவையாவும் ஸ்டேன்ட் அலோன் ட்ரீட்மென்ட் அல்ல.. துணை நிற்கும் உபாயங்களே.. 

இந்த காப்பி & பேஸ்ட் இன்டெர்னெட் டாக்டர்களின் பேச்சை நம்பி, எத்துனை பேர் தங்களது உடலை கெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.  

நீங்கள் கூட படித்திருக்கக் கூடும்.. சில நாள் முன்பு, சில நாட்கள் மருந்து சாப்பிட்டாலே, சர்க்கரை நோய் தீரும் என வட மானிலத்தில் ஒருவர் சொன்னதை நம்பி, அங்கே கொடுத்த மருந்துகளை விழுங்கிவைத்து, பின் சர்க்கரை 500-ஐ தாண்டிப் போக, அபாயகரமான நிலையில் மருத்துவ மணையில் சேர்க்கப் பட்டார்.

முகநூலில் தாங்களும் ஏதாவது சொல்கிறோம் பேர்வழி என எதையாவது சொல்லித் திரிவதா? அவர்கள் நோயாளிகளின் உயிருடன் விளையாடு கிறார்கள் என்பதாவது தெரிகிறதா இல்லையா எனப் புரியவில்லை.

சொல்வது யாராவது தேர்ச்சிபெற்ற மருத்துவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. சும்மா ஃபார்வேர்ட் செய்யும் கோஷ்டிகள். ஏதேனும் சந்தேகம் கேளுங்கள்? பதிலே வராது – அல்லது சொல்லத் தெரியாது. 

சும்மா சித்தர்கள்-முனிவர்கள் என்பது போல, மரியாதைப் பட்டவர்களின் பெயர்களை வைத்துக் கொண்டு ஜல்லியடித்தால் எப்படி?

ஆங்கில மருத்துவம் மட்டுமே உயர்வு என்று சொல்லவில்லை. குறைந்த பட்சம் எங்களால் தீர்க்க முடியாத வியாதிகள் என, அவர்கள் லிஸ்ட் சொல்லி விடுவார்கள். 

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது வேறு. வணிகம் என்பது வேறு. விஞ்ஞானம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைப் பயன்படுத்தி எப்படி காசு பார்ப்பது என்பது வணிகம். பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கிறார்கள். அது விஞ்ஞாணம். அதை வைத்துக் கொண்டு பணம் பண்ணும் மருத்துவ கம்பெணிகள் அதிகம். (சில சமயம் மருந்துக்காக நோய்களை உண்டு பண்ணுகிறார்களோ என சந்தேகம் கூட வருகிறது)

தற்போது அல்லோபதியைக் கண்டு, மக்கள் அலறுவதின் காரணம் அவர்கள் காசேதான் கடவுளடா என்று இருப்பது தான். கிளினிகலாக டயக்னோசிஸ் செய்யக் கூடிய வியாதிகளுக்குக் கூட பல்லாயிரம் ரூபாய் செலவுக் கணக்கில் பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. 

ஆங்கில,  நோய் கண்டுபிடிக்கும் முறைகளும்-மருந்துகளும் சாதாரண மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டு போய்விட்டன,. எனவேதான் ஜனங்கள் மாற்று மருத்துவ முறைகளை நாடுகின்றனர். 

மக்களின் இந்த பீதியை பயன்படுத்திக் கொண்டு, மாற்று மருத்துவ முறைகளில் காசு செய்யும் கோஷ்டிகளும் பல இருக்கின்றன. 

சில தினசரி பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். அப்பப்பா... எத்துனை விளம்பரங்கள்? ‘வாலிப வயோதிக அன்பர்களே.. ‘ முதற்கொண்டு, இரத்தக் கொதிப்பு – சர்க்கரை உட்பட, பல நோய்களுக்கும் தீர்வு சொல்லி, மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு, எப்படி வியாபாரம் செய்கின்றனர்  என்பது புரியும்.

இம்மாதிரியான லாட்ஜ் டாக்டர்களைப் போல ஆரம்பித்துவிட்டனர், இந்த முகனூல் போலி டாக்டர்கள். 

சர்க்கரை 500-ஐத் தாண்டும் பொழுது கூட, தனக்கு ஒன்றும் இல்லை என நாமாகவே நினைத்துக் கொண்டால் சரியாயிற்றா? பரலோகம்தான் போக வேண்டும்.

ஒரு இண்டகரேட்டட்  மருத்துவ முறை இருந்தால், நல்லது. அதாவது அல்லோபதி-மற்றும் மாற்று மருத்துவ முறைகளை இணைத்து செயல்படுத்தப் படும் முறை. சைனாவில் இது போல செய்கிறார்கள் என்று கேள்வி.. உண்மை தெரியவில்லை.

இனி,

அடிப்படையில், ஆரோக்கியம் பல விஷயங்களை ஆதாரமாகக் கொண்ட்து. 

1. நமது வாழ்க்கை முறை.

2. உணவுப் பழக்க வழக்கம்-மற்றும் உண்ணும் முறை.

3. ஹெரிடிட்டரி.

4. சுற்றுச் சூழல்.

5. செடன்டரி லைஃப்.

6. நமது எண்ணங்கள். (சதா எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருந்தால், என்ன மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது)

குப்பை உணவுகளைத் தவிர்த்து, மனதில் நல் எண்ணங்களை வளர்த்து, சோம்பித் திரிவதைத் தவிர்த்து, முறையாக ஒரு யோகா மாஸ்டரிடம் யோகா பயின்று, பசித்த போதுமட்டும் உண்டு, மலச் சிக்கல் இல்லாமல் பழகி, ஏழு மணி நேரம் உறங்கி வந்தாலே பல நோய்கள் அண்டாது.

யோகா கூட, துணை முறையாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர, அதை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தின்பேன்; எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்; ஆனால் அரை மணி நேரம் யோகா செய்தால் போதும் என்றால், அவர்களைப் பார்த்து, சிரிக்காமல் வேறு என்ன செய்வது?

இது ஒருபுறம் இருக்க, இப்பதிவின் நோக்கம், இன்று வெறும் வயிற்றில் இள நீர் சாப்பிட்டால், இரத்த நாளங்கள் வெடிக்கும்; ஃபுட் பாய்ஸின் ஆகும் என ஒருவர் பயமுறுத்தி யிருந்தார். 


இளனீர் விஷம் அல்ல; அது ஃபுட் பாய்ஸின் ஆகாது.   எது சாத்தியம் என்றால், ஏற்கனவே ஆசிட் ரெஃப்லெக்ஸ் உள்ளவர்களுக்கு,  நெக்லிஜிபில் அளவுக்கு, வயிறு உப்புசம் ஆகக் கூடும். அவ்வளவே! ஏனெனில் இளனீரின் பி.ஹெச். வேல்யூ 4.2 விலிருந்து 5.3 வரை இருக்கும். அதாவது ஸ்லைட்லி அஸிடிக். மற்றபடி இளநீர் உடலுக்கு மிக நல்லது.

காப்பி – பேஸ்ட் ஆசாமிகளை தவிர்க்க இயலாது. ஆனால் நாம் விழிப்புணர்வோடு இருக்கலாம் அல்லவா?

உண்மையில், விந்தை புரியும் மூலிகைகள் இருக்கின்றன. தகுதியான ஆட்களிடம் கேட்டு/பயின்று பலன் பெறுவோம்.



2 comments:

  1. அருமையான கருத்துகள். நாம் இதைச் சொன்னால் நம்மையே முறைக்கீறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Hussainamma! Nalla irukkingala? Romba nalaachu. God bless u mam!

      Delete