சபரிமலை யாத்திரை பற்றி புதிதாகச் சொல்வதற்கு
ஏதுமில்லைதான். எனக்கு ஐயப்பன் தரிசனமும்
புதிதல்ல. ஒவ்வொருவருக்கும் சபரிப் பயணம் ஏதாவது ஒரு அனுபவத்தைத் தந்திருக்கும்.
அவரவர்களின் அனுபவம், ஈடுபாடு, ஆன்மீக நிலை ஆகியவற்றைப் பொருத்து, பயணங்கள் வெவ்வேறு நிலைகளில் பக்தர்களால் உணரப்படும்.
எப்படியாயினும் எல்லா யாத்ரீகளிடமும், ஏதோ ஒரு நிகழ்வு பகிர்வதற்கு
இருக்கும். இந்த வருட யாத்திரை எனக்கும்
ஒரு ஆனந்தத்தைத் தந்தது.
கார்த்திகை இரண்டு. (நவம்பர் 18, 2015) அதிகாலை ஐந்து மணிக்கு சபரிப்பயணம்
துவங்கியது.
“கடும் மழை, காற்று, மோசமான சாலைகள், குளிர்...
இந்த நேரத்தில் சபரிக்கு செல்வது, உசிதமா என யோசியுங்கள்... “ போன்ற அறிவுரைகள் தான்
நான் மலைக்குச் செல்வதைப் பற்றி சொல்லியவர்களிடமிருந்து கிடைத்தது. பயணத்தை ஒத்தி வைக்கும் திட்டமெல்லாம் தோன்றவே
இல்லை. “எல்லாவற்றையும் ஐய்யப்பன்
பார்த்துக் கொள்வான்..” என்ற வசனமெல்லாம் இல்லை ; வானிலை பாதிப்பு கடற்கரை மாவட்டங் களில்தான்
அதிகம்; திருச்சியைத் தாண்டிவிட்டால் பிரச்சினை இல்லை; கேரளத்தில் நிலவும் வானிலை
குறித்து, ஐ.எம்.டி யில் கவலைப்படும் தகவல் இல்லை; எனவே திட்டமிட்டபடி புறப்பட்டோம்.
மேலும் உள்மனது ‘போ’ என்றுதான்
சொல்லியது. பொதுவாகவே பிறரின் ஆலோசனைகளைவிட, மனதில் ஒரு பொறி தட்டுப்படும் அல்லவா?
அதன் வழியே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டேன்.
![]() |
மழையினால் சாலை ஓரத்தில் பொங்கிப் பெருகும் ஒரு அருவி |
![]() |
பம்பா நதி |
குமுளி செல்லும் வரை தெளிவான வானிலை. வண்டிப்
பெரியாரைத் தொட்டதும், பிடித்தது
மழை. கேரள மழை பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
பிய்த்து உதறியது. பம்பாவை அடைந்த பொழுது இரவு மணி ஏழு. மழை விடவே இல்லை. அதிர்ஷட வசமாக காரைப் பார்க் செய்ய
“ஹில்டாப்பில்” இடம் கிடைக்கவே, பம்பையின் கரையோரமாகவே காரை நிறுத்த முடிந்தது.
பன்முறை சபரிக்கு சென்றுவந்திருந்தாலும், பம்பையாற்றில், ஆறு அல்லது
ஏழுபடிகளாவது இறங்கித்தான் இடுப்பளவு அல்லது கழுத்தளவு நீரில்
குளித்திருக்கிறேன். இம்முறை, கடும்
மழையினால் முதல் படியைத் தொட்டுக்கொண்டு பம்பை சீறிக் கொண்டிருந்தது. அவசரம் அவசரமாக மழையினூடே ஆற்றில் இறங்கி குளித்தோம். கரையில்
நின்றிருந்த சக சாமிகளிடம் கேட்டு சந்தனம்-திருநீரணிந்து கொண்டோம். பார்த்துக் கொண்டிருந்த பொழுதே, ஆற்றில் நீர்
வரத்து அதிகமாகி, முதல் படியையும் மறைத்தது.
தேவஸம் போர்டு, ஆற்றில் இறங்கிக் குளிக்க தடைவிதித்து விட்டது. கரையோரம், பக்தர்கள் குளிப்பதைத் தடுக்க
சங்கிலிகள் பொருத்தப்பட்டு விட்டன. மலையேறத் துவங்கினோம். மழை சற்றும் கரிசனம் காட்டவில்லை.
ஆந்திர, தமிழகத்தில் நிலவிய வானிலை காரணமாக, இங்கே கூட்டம் இல்லை.
ஆன்லைனில் பதிவு செய்து வைத்திருந்ததால்,
பாலத்திலிருந்து சுற்றிக் கொண்டு செல்லாமல், பழைய வழியாகவே
அனுமதித்தார்கள்.
என்னே ஒரு கொடுப்பினை!! பதினெட்டுபடிகளில் ஒரிருவரே இருந்தனர்.
ஒவ்வொரு படியையும் நிதானமா கண்களில் ஒற்றிக் கொண்டு செல்லும்
அளவிற்கு நேரம் இருந்தது;
நிற்கும் போலீஸாரும் அந்தளவு நேரம் எடுத்துக் கொள்வதை
அனுமதித்தனர். கோவிலிலும் கூட்டமில்லை.
என்னவென்று சொல்ல!! சுற்றி-சுற்றி வந்து ஆறு முறை ஐய்யப்பனை தரிசனம்
பெறமுடிந்தது. அலங்காரமின்றி,
பூவலங்காரத்துடன் என ஒவ்வொருதடவையும் ஒரு நிமிடமாவது தரிசனம் பெற்றொம். இன்னமும்
கண்களிலேயே நிற்கிறது. என்ன ஒரு தரிசனம்!!
என்ன ஒரு தரிசனம்!!
மேலும் ஒரு பேறு கிடைத்தது. வழக்கம்
போல அபிஷேக நெய் வாங்கப் போனோம். அன்று, அங்கே “நெய் ஸ்டாக் இல்லை” என போர்டு தொங்கியது. துணிந்து அருகில் இருக்கும் ‘தலைமை குருக்களை’
(மேல் சாந்தி) பார்த்தோம். அவர்களை நமஸ்கரிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் கையால் பிரசாதங்களையும், அபிஷேகிக்கப்பட்ட
நெய்யையும் பெற்ற அனுபவத்தை என்னவென்று சொல்ல?
அப்படியே கிறங்கிப் போனோம்!!
அன்றைய அதிர்ஷ்டம் அத்தோடு நிற்கவில்லை. ஒரு அறிவுப்பு வந்தது. இன்றைக்கு ‘ஹரிவராசனம்’
10.35 க்கே நடைபெறும் என!! மணி அப்போது,
10.20.
ஹரிவராசனத்தின் போது சன்னதியிலே நிற்கும் வாய்ப்பா? அதுவும் அவரைப்
பார்த்துக் கொண்டேயா? கடவுளே, இது நிஜம்தானா?
மணி 10.35. ஜேஸுதாஸின் தெய்வக்குரலில் ‘ஹரிவராசனம்.....’ துவங்கியது. அடுத்த நொடி, கோயினுள் நிசப்தம் குடி கொண்டது. அங்கே-இங்கே எவரும் நகரவில்லை. அப்படியே உறைய வைக்கப்பட்டவர்கள் போல, சிலையாய்
நிற்கின்றனர். மழை தூறிக் கொண்டே இருக்கிறது. உள்ளே இருந்த பக்தர்களில் கனிசமானவர்களின் உதடுகள் ஜேஸுதாஸினுடனே,
ஹரிவராசனம் இசைத்தன. வேறு எந்த சப்தமும்
இல்லை. வசியம் செய்யப்பட்டவர்கள் போல
பக்தர் கூட்டம். இசைக்கப்பட்ட அந்த ஆறு நிமிடங்களில் சிலிர்த்துப் போகாதவர்கள்
எவரும் இருந்திருக்க முடியாது. இப்பிறவிக்கு இதுவே போதும் என்று தோன்றியது.
கீழே இறங்கி பம்பையை அடையும் போது இரவு மணி 1.45.
![]() |
நிலச்சரிவினால் விழுந்த மரம் |
புனலூர் வழியே, குற்றாலம் சென்றுவிட்டு ஊர்திரும்ப திட்டம். அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே வந்தோம்.
நடுவே கண்ணயர்ந்துவிட்டோம். சட்டென விழிப்பு வர , ஆரியங்காவை கடந்து
கொண்டிருந்தோம். பொழுது லேசாக புலர்ந்து கொண்டிருந்தது. “ஆரியங்காவு” ஐயப்பனைப் பார்த்துவிட்டுச்
சென்றால் என்ன? உடனே வண்டியை நிறுத்தி, ஸ்வாமியை தரிசனம் செய்தோம். ஒரு பத்து
அல்லது பன்னிரண்டு நிமிடங்கள்தான் இதற்கு செலவானது. மலைப்பாதையில் பயணத்தைத் தொடர்ந்தோம். சற்று
நேரத்திலேயே எதிரே ஒரு நிலச் சரிவு! பெரிய மரமொன்றும் வேரோடு சாய்ந்து கிடந்தது. இது
எப்பொழுது நடந்தது என விசாரித்தோம். “இப்பதான் சார்... ஒரு பத்து-பன்னிரண்டு
நிமிடங்கள் இருக்கும்” .
ஆண்டவனின் திட்டத்தை யாரறிவர்!!
ஆண்டவனின் திட்டத்தை யாரறிவர்!!
குற்றாலத்தில் ஐந்தருவில் குளித்தோம். அருவில், எங்களையும் சேர்த்தே
மொத்தம் ஒரு இருபதுபேர்தான் இருப்பர். விச்சராந்தியாக, நெரிசலின்றி ஆனந்தக்
குளியல். எத்தனை அருவிகளில் குளித்தாலும்
குற்றாலம், குற்றாலம்தான். அதற்கு ஈடு எதுவும் வராது.
அருகில் குற்றாலேஸ்வரர் கோயில். ஆன்ந்த தரிசனம். இங்கே, புகழ்பெற்ற
பெரும்பாலான சிவன்கோயிலின் சன்னதிகள், காசி-விஸ்வனாதர் முதல்-அண்ணாமலையார் உட்பட
அமைத்திருக்கிறார்கள். சகலரையும் ஒருசேர
தரிசிக்கும் வாய்ப்பு.
இந்த வருடம் மறக்க முடியாத யாத்திரை!!
சாமியே சரணம். கொடுப்பினை மிக அதிகம். கொஞ்சம் வயிறு தீ மாதிரி இருக்கு. நீங்க தரிசனம் செய்தது மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteKutrala aruviyin pongu nadai.... Neraga payanitha anubhavam... Class act Chithappa! This writing is a varaprasadam!
ReplyDeleteஅருமையான பயண அனுபவம், அற்புதமான தரிசனம். படிக்கும் போதே ஏக்கம் கொள்ள வைத்தது. நானும் பலமுறை சபரிமலைக்கு போயிருக்கிறேன். இப்படியொரு அனுபவம் கிட்டியது இல்லை.
ReplyDeleteநான் முதன்முதலாக சபரிமலை சென்ற அனுபவத்தை ஒரு பதிவாக எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்..
http://senthilmsp.blogspot.com/2014/12/blog-post_25.html