ஒரு குடும்பமே சிதறுண்டு போவதைக் காண நேர்வது
கடினமான விஷயம்.
கமல்ஹாசன், ‘அன்பேசிவம்’ படத்தில் வசனிப்பதுபோல, அடுத்த கணத்திற்காக வாழ்க்கை
ஒளித்து வைத்திருக்கும்
அதிர்ச்சிகளும்-சுவாராஸ்யங்களும் ஏராளம்.
இதோ.....!, வீட்டின் முன்னே அம்பாரமாய் பாத்திரங்களும்,
பண்டங்களும், புகைப்படங்களும், மலைபோல ஏராளமான புத்தகங்களும் இறைந்து கிடக்கின்றன.
வியாபாரி பாத்திரங்களை ரகம் வாரியாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார். பித்தளைப்
பாத்திரங்களுக்கான விலை அதிகம் போலும். வியாபாரியின்
முகத்தில் சந்தோஷம். ஒட்டுமொத்த வீட்டுப் பொருட்களும் விலைக்கு வந்துவிட்டதே? அவர் வாங்குவது பொருட்களையா? ஒரு வாழ்ந்து
முடிந்த பெரும் குடும்பத்தின் கௌரவம், ஆசைகள், கனவுகள் யாவற்றையும்தனே? நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு பொருளையும்
வாங்கும் பொழுது அந்த வீட்டின் தலைவி, எப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து
வாங்கியிருப்பார்? எப்படியெல்லாம் பேரம்
பேசியிருப்பார்? இது அந்த மகளுக்கு; இது
இவளுக்கு; இது இன்ன பண்டிகைக்கு என, அவர் பொருட்களை சேகரம் செய்யும் பொழுது
எவ்வளவு கனவுகளும், கற்பனைகளும் அப்பொருட்களோடு கலந்திருக்கும்? யாவும் தனக்குப் பின், சடுதியில்
குப்பைக்காரனுக்குப் போகும் என
நினைத்திருப்பாரா?
ஏராளமான புடவைகள், ஒட்டுமொத்தமாக மூட்டைகட்டப்பட்டுள்ளது. சிரிப்பு
வருகிறது. ஒவ்வொரு புடவை வாங்கும் பொழுதும், அதைத் தொட்டுத்தடவி, உடலில்
போர்த்திப் பார்த்து, பொருத்தாமாக ரவிக்கை வாங்கி...... அனைத்தும் மூட்டையாகிவிட்டது.
புகைப்படங்களை சீந்துவாரில்லை! ஒட்டுமொத்தமாக
நிராகரிக்கப்பட்டுவிட்டது. அவை பதிந்து
வைத்திருக்கும் நிகழ்ச்சிகளை நினைவுகூற எவருமில்லை. இருபது கல்யாணம் முதல், அறுபது
கல்யாணம் வரை பதிந்தவை யாவும் தெருவில்! பெற்ற பாராட்டுப் பத்திரங்கள், சுவாமி
படங்கள் உட்பட யாவற்றிற்கும் ஒரே
மரியாதையாக சாக்கு மூட்டையில் கட்டி எரிப்பதற்காக வைக்கப்பட்டுவிட்டது.
வீட்டை ஒழித்து வைப்பவர்கள், வெகு உற்சாகமாய்
இது வேண்டாம், அது வேண்டாம் என வினாடியில் தீர்மாணித்து தூக்கி
எறிந்துகொண்டிருக்கிறார்கள்.
‘கிருஷ்ணரும்-ராதையும்’ வெயிலிற்கு முகத்தைக்
காட்டிக்கொண்டு, வீதியில் கிடக்கிறார்கள். அவர்கள் பழைய பேப்பர்காரனுக்கு தேவைப்
படவில்லை. மண் பொம்மைதானே? அனேகமான, இந்தப் பொம்மைகளை வாங்கும் பொழுது, அந்த
தம்பதியினர், இந்த ‘ராதே-கிருஷ்ணா” போல
சிரஞ்சீவியாக வாழ்வோம் என நினைத்திருப்பார்கள். தூக்கி எறியப்பட்ட ஒவ்வொரு பொருளுக்குப்
பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதையொன்று கேட்பாரின்றி இருக்கிறது.
“கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து
போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்” என்று ஒரு
திரைப் பாடல் ஒன்று
இருக்கிறது. அதில் ஒரு வரி, ‘உடம்பு என்பது உண்மையில் என்ன?
கனவுகளைத் தாங்கும்
பைதானே?’ என்று வரும்.
அந்த அனித்ய வாழ்விற்குள் மனிதனுக்கு எத்தனை ஆனவம்?
‘விந்தையானது எது?’ என்ற கேள்விக்கு, ‘அனுதினமும் மானுடர்கள் செத்து வீழ்ந்து
கொண்டிருப்பதைப் பார்த்துக்
கொண்டிருக்கும் பொழுது, தான் மட்டும் சாசுவதமானவர்கள்
என்பது போன்ற எண்ணம் கொண்டு
நடந்துகொள்ளும் மனிதர்கள்தான் விந்தையானவர்கள்’
என தர்மர் பதில் கூறுவார்.
சங்கிலி போல தொடர்ந்துவரும் குடும்பமரம், ஏதோ
ஒரு தலைமுறையில், ஏதோ ஒரு காரணத்தால், கன்னியை
இழந்து தொடர்பற்றுப் போகிறது.
வழுவழுவென சறுக்கிக் கொண்டு செல்லும்
நெடுஞ்சாலைகளில், சடாரென குறுக்கிடும் சிதலமான சாலைகள் போல, வெண்ணைபோல இடர் எதுமின்றி சென்றுகொண்டிருந்த
வாழ்க்கையில், திடீரென சம்மட்டி அடிபோல தாக்கப்பட்டு நிலை குலைந்து வீழ்ந்து,
சற்றே நிதானித்து, கையை ஊன்றி எழலாமா என எண்ணும்போதே “அப்படியா சேதி, இந்தா பிடி
இன்னும் ஒரு அடி” என அடிமேல் அடியாக விழுவது பிறருக்கு ஒரு செய்தியாகத்தான் இருக்கிறது.
சம்பந்தப்பட்டோருக்குத்தான் வலியின் குரூர முகம் புரியும்.
இனி ஒருபோதும் திரும்பி வராத வஸந்தகாலங்கள் குறித்து வருந்துவதில் பொருளில்லை
என்றாலும் இனி வரும் காலங்கள் அனைத்துமே
இடர்கள்தான்; இடர்களன்றி வெறெதுவும் இல்லை என்பது, சலிப்பைத் தருகிறது!
கடின காலங்கள்தான் மனிதர்களை அடையாளம்
காட்டுகின்றன. “அனைத்தும் சுபமே” என்ற
தருணங்களில், உருகிவழியும் மனிதர்கள்,
காட்சிகள் சற்றே மாறும் பொழுது, கொஞ்சமும் லஜ்ஜையின்றி, முகத்தைத் திருப்பிக்கொள்ளுவது, அதுவும் சங்கடம் ஏதுமின்றி சாத்தியமாவது விந்தைதான்.
சுய நலத்தின் உச்ச தரிசனங்கள் கொடூரமானவை.
அசிங்கமானவை. ஆபாசமானவை. ஈரமற்றவை. ஆனாலும், தனது கோரமான சுய நலத்தை மறைக்க,
மத்திய வர்க்கம் எத்தனை பசப்பு வார்த்தைகளை உதிர்க்கிறது. அரிதாரம் பூசப்பட்ட மாய்மால வார்த்தைகள்
சடுதியில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் என அப்பட்டமாகத் தெரிந்தும் மாய மருகல்களை
உதிர்க்கத் தயங்குவதில்லை.
ஏதோ கிராமங்களில் இன்னமும் கொஞ்சம் மானுடம்
மீந்திருப்பதே சற்று நம்பிக்கை யளிக்கிறது.
கையறு நிலை என்று சொல்வார்களே, அப்படியென்றால்
என்ன என்பதை நேரடியாக அனுபவிக்கும் நிமிடங்கள் நோகவைப்பவை. குப்பைத் தொட்டியில்
வீசப்பட்டுக்கிடக்கும் குழந்தையைக் காணும் கணத்தை விவரிப்பது எங்கனம்? எடுத்து
வளர்க்கும் வயதும்,வசதியும், வாய்ப்பும் இல்லாமல்; கண்டுகொள்ளாமல் விலகவும்
முடியாமல், என்னே ஒரு கையறு நிலை?
உறவுகளும்
கூட சடுதியில் நொறுங்கும் அளவிற்கு
சன்னமாகிப் (Brittle) ஆகிப் போய்விட்டது. கால மாற்றம், உறவுகளைச் சீர்குலைத்தது போல வேறெதையும்
சீர்குலைத்திருக்காது. எல்லா தர்மங்களும், கடமைகளும் தன் வயிற்றிற்குப் பிறகுதான்
என்பது கவலையளிக்கும் நிலைமை.
உண்மை
ReplyDelete