Saturday, November 28, 2015

சார்பின்மை

சகோதரி @Deepika Govind அவர்களின் ஆங்கிலப் பதிவு,
தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

மிக மிக நேர்த்தியான சிந்தனை.
ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியது.

----------------
நான் குழப்பத்தில் இருக்கிறேன்..

ஆம். ஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்..

நான் நடுநிலையாளனாக இருக்க விரும்புகிறேன்..

அதனால் இந்த குழப்பம் எனக்கு.
நான் ஒரு ஹிந்துவாக பிறந்தேன்.. கிறிஸ்தவ பள்ளியில் படிக்கச் சென்றேன்.. வீட்டில் தீபாவளி கொண்டாடினேன்.. அதே உற்சாகத்தோடு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினேன்.. சில நேரம் கிறிஸ்தவ சர்ச்க்கு சென்றேன். அங்கே பைபிள் வாசகங்கள் கேட்டேன்..

ஆனால், என்றும் என் மதம் அது இருக்கும் முறையில் இருந்து விலகும் என்ற பயம் இல்லாமல்....இப்போது ஒரு விஷயம் சிந்தித்தால் வியப்பாக இருக்கிறது...

இப்போது இருக்கும் மீடியா மற்றும் அறிவாளிகள் ( என்று கூறிக்கொள்ளும் கூட்டம்!) சிந்தனை எப்படி இருக்கும் என்று?

ஒரு கிறிஸ்தவ மக்கள் நிறைந்த இடத்தில ஒரு ஹிந்து பள்ளி கூடத்தில் இதே போல் கீதை மற்றும் மகாபாரதம் படித்தால் இவர்கள் சிந்தனை எப்படி இருக்கும்? இதற்கு எப்படி இவர்கள் பதில் தருவார்கள்?
நிச்சயம் இவர்கள், கூச்சல் இடுவார்கள்... அது மட்டும் உறுதி!

என் 14 வருட பள்ளி படிப்பில்,
என்னை மதம் மாற்ற முயற்சி நடந்தது இல்லை... நான் இன்னமும் ஹிந்து.
நான் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில் எனக்கு மேலும் ஒரு சந்தோசம் இருக்கிறது....

ஒரு ஹிந்துவாக என்னால், 33 கோடி கடவுள்/ விக்ரகங்கள் வணங்க முடியும்.. இதில் மேலும் சில கடவுள்களை சேர்த்தால்,
அதையும் என்னால், வணங்க முடியும்..
இதில் எனக்கு கவலை இல்லை...
ஒரு ஹிந்துவாக என்னால், இதை உள்வாங்கிக்கொள்ள முடியும்..
இதை கண்டு பயம் இல்லை..

ஆனால், ஒரு விஷயம் - ஒரு கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ ஹிந்து கோவிலில் கொடுக்க படும் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது இல்லை...

எத்தனை கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் கோவில் சென்று இருகிறார்கள்..?? வைஷ்ணவ தேவி கோவில்? திருப்பதி கோவில்??
இப்போது ஹிந்துக்களைப்
பார்த்து கேட்கிறேன்..

எத்தனை ஹிந்துக்கள் அஜ்மீர் தர்கா மற்றும் தேவா ஷரிப் அல்லது கிறிஸ்தவ தேவாலயங்கள் சென்று இருகிறார்கள்? ஏன்?

மதசார்பின்மை ஹிந்துக்களுக்கு மட்டுமா??

அல்லது இதை பேணுவது ஹிந்துக்களுக்கு விதிக்க பட்ட விஷயமா?
வேறு மத மக்களுக்கு இல்லையா??

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றால்
ஏன் என் வரிப்பணம் ஹஜ் யாத்திரைக்கு இனாமாக போக வேண்டும்? இது ஒரு மதத்துக்கு செய்யும் பாரபட்சமாக தெரியவில்லையா?

இது ஒரு சாரசரியான ஹிந்துவாகிய எனக்கு எழும் இயல்பான கேள்வி..

இன்னமும் குழப்பத்தில் நான்..! இது செய்தால், என் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சந்தோஷப்படுவார்கள் என்றால் எனக்கு கொடுப்பதில் எந்த வருத்தமும் இல்லை... அவர்களுக்கு ஈத்-முபாரக் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை... இதில் எனக்கு எந்த பயமும் இல்லை..
ஏன் என்றால், நான் ஒரு ஹிந்து!

ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.. இதை எல்லாம் அந்த அறிவாளிகள்/மீடியா கண்டு கொள்ளவே இல்லை...

இந்த கோபத்தில் மற்றும் சமமின்மையில் அவர்கள் விருதை திருப்பி கொடுக்கவில்லை!

டெல்லி செயின்ட் ஸ்டிபான் கல்லூரியில் கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்த பொழுது கண்டு கொள்ளவில்லை?

மேலும் சில நிறுவனங்கள் கிறிஸ்தவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்போம் என்று சொன்ன பொழுது அதை பற்றி பேசவில்லை?!

இதே ஹிந்துக்கள் வாழும் இந்தியாவில் தான் அவர்களும் வாழுகிறார்கள்.. இந்த வேலைகளை செய்கிறார்கள்..

அப்போது எல்லாம் டிபாங்கர் பானர்ஜி எல்லாம் ஏன் இதை எல்லாம் தட்டி கேட்கவில்லை??

இப்போது நான் வசிக்கும் நாடு - தன்னை கிறிஸ்தவ நாடு என்று பறைசாற்றிக் கொண்ட நாடு.
எனவே மீடியா இங்கே நங்கூரம் இட்டு அமரவில்லை!

பிரிட்டன் அரசு செயின்ட் பால் தேவாலயத்தின் அருகில் மசூதி கட்ட அனுமதி தரவில்லை. ஆனால் எந்த கூச்சல் குழப்பம் இல்லை. அந்த நாடும் ஜனநாயக நாடு தான்.  BBC - இதை பற்றி ஒரு டாக்குமெண்டரி எடுக்கலாமே! ஏன் எடுக்க வில்லை?
அங்கே இஸ்லாமியருக்கு சம உரிமை இல்லையே? இதை பற்றி எல்லாம் பாரக் ஒபாமா வகுப்பு எடுக்கலாமே பிரிட்டிஷ் அரசுக்கு?

நான் என் மதத்தை அங்கே பெரிதாக்க விரும்பவில்லை. இன்னமும் நான் தான் சிறந்தவன், என் மதம் சிறந்தது என்று சிந்திக்கவில்லை.

எல்லோரும் சமமாக வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.. ஏன் என்றால் ' நான் ஒரு ஹிந்து'

நாளை, ஒரு வேளை, என் மகன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணக்க விரும்பினால், அந்த பெண்ணை மதம் மாற சொல்லி கேட்க மாட்டேன்.
வற்புறுத்த மாட்டேன். எனக்கு அந்த எண்ணமும் இல்லை. ஆனால், என் மகன் அந்த பெண்ணை மணக்க வேண்டும் என்றால் மதம் மாறி ஆகவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டால், நிலை என்ன?

இது திணிக்க பட்ட மத மாற்றம் இல்லையா? இதை குறையுள்ள மத சார்பின்மை என்று சொல்லலாமா? ( blurred version of secularism,created by pseudo –intellectuals !!)
என்னிடம் திருப்பி கொடுக்க எந்த அவார்டும் இல்லை!. என்னிடம் இதை டாக்குமெண்டரியாக எடுக்க வசதி இல்லை!.

ஒரு விவாதமாக்க என்னிடம் ஒரு டிவி இல்லை!.

ஆனால், என் இறைவன் என்னை இதையெல்லாம் ஏற்று கொள்ளும் பக்குவம் கொடுத்து இருக்கிறார். மதிக்கும் பக்குவம் கொடுத்து இருக்கிறார்.

ஒரு ஹிந்துவாக இதை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் எனக்கு.

இதைத்தான் மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொள்ளவேண்டுமா?
நான் ஒரு ஆண். ஹிந்து ஆண்.

என் மகனுக்கு இதையே கற்று கொடுக்க விரும்புகிறேன்.

அவனுக்கு சொல்ல விழைவது எல்லாம் இது தான்...

ஒரு தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்றால், தலை தாழ்த்தி அதை செய் என்று...

ஒரு மசூதியில் செல்ல நேர்ந்தால் அதற்கான பரிபாலங்களை செய்.
ஒரு குருத்வாராவில் சேவை செய்ய நேர்ந்தால் செய்... மறுக்காதே..
இதை செய்வதால், நீ ஹிந்துவாகவே இருப்பாய்.. ஹிந்துத்தன்மையை விட்டு விலகமாட்டாய் என்று தான் அவனுக்கு படிப்பிக்க விரும்புகிறேன்...

நீ ஒரு ஹிந்துவாக ( உண்மை ஹிந்துவாக) இருந்தால் என்றும் நீ ஹிந்துவாக இருப்பாய்.

உனக்கு இதை எல்லாம் கண்டு பயம் இருக்காது..

இதை எல்லாம் கண்டால் குழப்பம் இருக்கும் ஆனால், பயம் இருக்காது.

நான் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன்.

ஆனால் அதை தடை செய்வதை ஆதரிக்க மாட்டேன்.
இதை வைத்து என் மதத்தை பழிக்காதே.

BEEF-PARTY கொண்டாடி என் மதத்தை பழிக்க நினைக்காதே..

இந்த குறைந்த பட்ச புரிதலாவது மாற்று மதத்தினருக்கு வேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன்.

அறிவாளிகளே.. நீங்கள் உங்கள் அவார்டை திருப்பி கொடுக்க விழைந்தால் நீங்கள் துணிவுடன் சொல்லுங்கள்...

ஹஜ் மானியம் நிறுத்தப்பட வேண்டும்...

இறைச்சி தடை நீக்க வேண்டும்...

பலதார திருமணம் இஸ்லாத்தில் இருந்து நீக்க படவேண்டும் அப்படி செய்யும் இஸ்லாமியர் ஏற்று கொள்ளப்படமாட்டார்.

.. எந்த சிறுபான்மையினர்க்கும்
கல்வி நிறுவனங்களில் சிறப்பு முன்னுரிமை தர வேண்டாம்... தலாக் என்று மூன்று முறை சொல்லி விவாகரத்து வேண்டாம்..

மாற்று மத திருமணங்களுக்கு மத மாற்றம் அவசியம் இல்லை..

கட்டாயம் இல்லை.. என்று சொல்ல முடிந்தால் சொல்லி விட்டு உங்கள் விருதுகளை திருப்பி கொடுங்கள்....!

நண்பர் திரு ஆனந்தன் அமிர்தன்
அவர்களின் பதிவில் இருந்து பகிரப்பட்டது.....

Friday, November 20, 2015

சிலிர்க்கவைத்த சபரி..

சபரிமலை யாத்திரை பற்றி புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லைதான்.  எனக்கு ஐயப்பன் தரிசனமும் புதிதல்ல. ஒவ்வொருவருக்கும் சபரிப் பயணம் ஏதாவது ஒரு அனுபவத்தைத் தந்திருக்கும். அவரவர்களின் அனுபவம், ஈடுபாடு, ஆன்மீக நிலை ஆகியவற்றைப் பொருத்து, பயணங்கள்  வெவ்வேறு நிலைகளில் பக்தர்களால் உணரப்படும். எப்படியாயினும் எல்லா யாத்ரீகளிடமும், ஏதோ ஒரு நிகழ்வு பகிர்வதற்கு இருக்கும்.  இந்த வருட யாத்திரை எனக்கும் ஒரு ஆனந்தத்தைத் தந்தது.

கார்த்திகை இரண்டு.  (நவம்பர் 18, 2015) அதிகாலை ஐந்து மணிக்கு சபரிப்பயணம் துவங்கியது.

 “கடும் மழை, காற்று, மோசமான சாலைகள், குளிர்... இந்த நேரத்தில் சபரிக்கு செல்வது, உசிதமா என யோசியுங்கள்... “ போன்ற அறிவுரைகள் தான் நான் மலைக்குச் செல்வதைப் பற்றி சொல்லியவர்களிடமிருந்து கிடைத்தது.  பயணத்தை ஒத்தி வைக்கும் திட்டமெல்லாம் தோன்றவே இல்லை.  “எல்லாவற்றையும் ஐய்யப்பன் பார்த்துக் கொள்வான்..” என்ற வசனமெல்லாம் இல்லை ;  வானிலை பாதிப்பு கடற்கரை மாவட்டங் களில்தான் அதிகம்; திருச்சியைத் தாண்டிவிட்டால் பிரச்சினை இல்லை; கேரளத்தில் நிலவும் வானிலை குறித்து, ஐ.எம்.டி யில் கவலைப்படும் தகவல் இல்லை; எனவே  திட்டமிட்டபடி புறப்பட்டோம்.

மேலும் உள்மனது ‘போ’ என்றுதான் சொல்லியது. பொதுவாகவே பிறரின் ஆலோசனைகளைவிட, மனதில் ஒரு பொறி தட்டுப்படும் அல்லவா? அதன் வழியே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டேன். 

மழையினால் சாலை ஓரத்தில் பொங்கிப் பெருகும் ஒரு அருவி 

பம்பா நதி 


 குமுளி செல்லும் வரை தெளிவான வானிலை. வண்டிப் பெரியாரைத் தொட்டதும்,  பிடித்தது மழை.  கேரள மழை பற்றிச் சொல்லவும் வேண்டுமா? பிய்த்து உதறியது. பம்பாவை அடைந்த பொழுது இரவு மணி ஏழு. மழை விடவே இல்லை.  அதிர்ஷட வசமாக காரைப் பார்க் செய்ய “ஹில்டாப்பில்” இடம் கிடைக்கவே, பம்பையின் கரையோரமாகவே காரை நிறுத்த முடிந்தது.

பன்முறை சபரிக்கு சென்றுவந்திருந்தாலும், பம்பையாற்றில், ஆறு அல்லது ஏழுபடிகளாவது இறங்கித்தான் இடுப்பளவு அல்லது கழுத்தளவு நீரில் குளித்திருக்கிறேன்.  இம்முறை, கடும் மழையினால் முதல் படியைத் தொட்டுக்கொண்டு பம்பை சீறிக் கொண்டிருந்தது.  அவசரம் அவசரமாக  மழையினூடே ஆற்றில் இறங்கி குளித்தோம். கரையில் நின்றிருந்த சக சாமிகளிடம் கேட்டு சந்தனம்-திருநீரணிந்து கொண்டோம்.  பார்த்துக் கொண்டிருந்த பொழுதே, ஆற்றில் நீர் வரத்து அதிகமாகி, முதல் படியையும் மறைத்தது.  தேவஸம் போர்டு, ஆற்றில் இறங்கிக் குளிக்க தடைவிதித்து விட்டது.  கரையோரம், பக்தர்கள் குளிப்பதைத் தடுக்க சங்கிலிகள் பொருத்தப்பட்டு விட்டன. மலையேறத் துவங்கினோம்.  மழை சற்றும் கரிசனம் காட்டவில்லை.   

ஆந்திர, தமிழகத்தில் நிலவிய வானிலை காரணமாக, இங்கே கூட்டம் இல்லை. ஆன்லைனில் பதிவு செய்து வைத்திருந்ததால்,  பாலத்திலிருந்து சுற்றிக் கொண்டு செல்லாமல், பழைய வழியாகவே அனுமதித்தார்கள்.




என்னே ஒரு கொடுப்பினை!! பதினெட்டுபடிகளில் ஒரிருவரே இருந்தனர்.  
ஒவ்வொரு படியையும்  நிதானமா கண்களில் ஒற்றிக் கொண்டு செல்லும் அளவிற்கு நேரம் இருந்தது; 

நிற்கும் போலீஸாரும் அந்தளவு நேரம் எடுத்துக் கொள்வதை அனுமதித்தனர்.  கோவிலிலும் கூட்டமில்லை.

என்னவென்று சொல்ல!!  சுற்றி-சுற்றி வந்து ஆறு முறை ஐய்யப்பனை தரிசனம் பெறமுடிந்தது.  அலங்காரமின்றி, பூவலங்காரத்துடன் என ஒவ்வொருதடவையும் ஒரு நிமிடமாவது தரிசனம் பெற்றொம். இன்னமும் கண்களிலேயே நிற்கிறது.  என்ன ஒரு தரிசனம்!!  என்ன ஒரு தரிசனம்!!

மேலும் ஒரு பேறு கிடைத்தது.  வழக்கம் போல அபிஷேக நெய் வாங்கப் போனோம். அன்று, அங்கே  “நெய் ஸ்டாக் இல்லை” என போர்டு தொங்கியது. துணிந்து அருகில் இருக்கும் ‘தலைமை குருக்களை’ (மேல் சாந்தி) பார்த்தோம். அவர்களை நமஸ்கரிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.  அவர் கையால் பிரசாதங்களையும், அபிஷேகிக்கப்பட்ட நெய்யையும் பெற்ற அனுபவத்தை என்னவென்று சொல்ல?  அப்படியே கிறங்கிப் போனோம்!!

அன்றைய அதிர்ஷ்டம் அத்தோடு நிற்கவில்லை.  ஒரு அறிவுப்பு வந்தது. இன்றைக்கு ‘ஹரிவராசனம்’ 10.35 க்கே நடைபெறும் என!!  மணி அப்போது, 10.20.

ஹரிவராசனத்தின் போது சன்னதியிலே நிற்கும் வாய்ப்பா? அதுவும் அவரைப் பார்த்துக் கொண்டேயா? கடவுளே, இது நிஜம்தானா? 

மணி 10.35. ஜேஸுதாஸின் தெய்வக்குரலில் ‘ஹரிவராசனம்.....’ துவங்கியது.  அடுத்த நொடி, கோயினுள் நிசப்தம் குடி கொண்டது.  அங்கே-இங்கே எவரும் நகரவில்லை.  அப்படியே உறைய வைக்கப்பட்டவர்கள் போல, சிலையாய் நிற்கின்றனர். மழை தூறிக் கொண்டே இருக்கிறது. உள்ளே இருந்த பக்தர்களில்  கனிசமானவர்களின் உதடுகள் ஜேஸுதாஸினுடனே, ஹரிவராசனம் இசைத்தன.  வேறு எந்த சப்தமும் இல்லை.  வசியம் செய்யப்பட்டவர்கள் போல பக்தர் கூட்டம். இசைக்கப்பட்ட அந்த ஆறு நிமிடங்களில் சிலிர்த்துப் போகாதவர்கள் எவரும் இருந்திருக்க முடியாது. இப்பிறவிக்கு இதுவே போதும் என்று தோன்றியது.

கீழே இறங்கி பம்பையை அடையும் போது இரவு மணி 1.45.

நிலச்சரிவினால் விழுந்த மரம் 
புனலூர் வழியே, குற்றாலம் சென்றுவிட்டு ஊர்திரும்ப திட்டம்.  அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே வந்தோம். நடுவே கண்ணயர்ந்துவிட்டோம்.  சட்டென  விழிப்பு வர , ஆரியங்காவை கடந்து கொண்டிருந்தோம். பொழுது லேசாக புலர்ந்து கொண்டிருந்தது.  “ஆரியங்காவு” ஐயப்பனைப் பார்த்துவிட்டுச் சென்றால் என்ன? உடனே வண்டியை நிறுத்தி, ஸ்வாமியை தரிசனம் செய்தோம். ஒரு பத்து அல்லது பன்னிரண்டு நிமிடங்கள்தான் இதற்கு செலவானது.  மலைப்பாதையில் பயணத்தைத் தொடர்ந்தோம். சற்று நேரத்திலேயே எதிரே ஒரு நிலச் சரிவு! பெரிய மரமொன்றும் வேரோடு சாய்ந்து கிடந்தது. இது எப்பொழுது நடந்தது என விசாரித்தோம். “இப்பதான் சார்... ஒரு பத்து-பன்னிரண்டு நிமிடங்கள் இருக்கும்” .

 ஆண்டவனின் திட்டத்தை யாரறிவர்!!

குற்றாலத்தில் ஐந்தருவில் குளித்தோம். அருவில், எங்களையும் சேர்த்தே மொத்தம் ஒரு இருபதுபேர்தான் இருப்பர். விச்சராந்தியாக, நெரிசலின்றி ஆனந்தக் குளியல்.  எத்தனை அருவிகளில் குளித்தாலும் குற்றாலம், குற்றாலம்தான். அதற்கு ஈடு எதுவும் வராது.

அருகில் குற்றாலேஸ்வரர் கோயில். ஆன்ந்த தரிசனம். இங்கே, புகழ்பெற்ற பெரும்பாலான சிவன்கோயிலின் சன்னதிகள், காசி-விஸ்வனாதர் முதல்-அண்ணாமலையார் உட்பட அமைத்திருக்கிறார்கள்.  சகலரையும் ஒருசேர தரிசிக்கும் வாய்ப்பு.  


இந்த வருடம் மறக்க முடியாத யாத்திரை!!

Thursday, November 12, 2015

மழை

இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது.

அதன் போக்கில் குறுக்கிடாமல் இருந்தால், இப்படி கடுமையான சேதம் இருக்காது.

ஏரிகளையும், குளங்களையும் ப்ளாட் போட்டு விற்று விடுவோம். வாய்க்கால் களையும் வடிகால்களையும் விற்று ஏப்பம் விடுவோம். ஆற்றின் குறுக்கே வீடுகட்டுவோம். ஆற்றங் கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமிப்போம். சுறுங்காத ஆறுகளும் ஏரிகளும் தமிழ்நாட்டில் உண்டா?

 முன்பு ஊருக்கு பத்து குட்டைகளாவது இருந்திருக்கும்; அவைகள் எங்கே? ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தூர்த்து விட்டோம்.

பின் மழைநீர் எங்குதான் செல்லும்?

மனிதனின் பேராசைக்கு அளவே இல்லாமற் போய்விட்டது. அக்காலத்தில் ஊர் மராமத்து என்று நடக்கும். இப்போது? 100 நாள் வேலைத்திட்டத்தின் நிலைமை பற்றி யாவர்க்கும் தெரியும்தானே!!

ஒவ்வொரு மழை சீசனிலும் நடக்கும் அரசியல் டிராமாக்கள் சகிக்க வில்லை.

ஆஹா.. நன்றாக பொழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. விவசாயம் பெருகட்டும். குடிநீரப் பஞ்சம் போகட்டும் என்று வாழ்த்த ஒரு ஆள் இல்லை.

சகல டி.வி ஷோவிலும் "ஐயோ.. பெய்யுதே ... ஐயய்யோ.. பெய்யுதே  என்று புலம்பல்.." இது என்ன பார்வை?  நமக்கு என்ன நேர்ந்து விட்டது? விடாது கொட்டித்தீர்க்கும் (கேரளம் போன்று) எந்த மாநிலத்திலும் இந்த புலம்பல் இல்லை..  இது எங்கே போய் நிற்கப் போகிறதோ?

பெஞ்சாலும் சுருட்டலாம்... காஞ்சாலும் சுருட்டலாம்.

அட..தமிழ் நாடே!!!

Monday, November 9, 2015

பீகார்..

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள், அக்காலத்தையே மீண்டும் வாழ தண்டிக்கப்படுவார்கள்.

பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு தான் நாட்டின் பிரச்சினை. அதைவிட்டு, சகட்டுமேனிக்கு உளறிக் கொட்டினால் இதுதான் நடக்கும்.

புதுப்பது சிக்கல்களை மக்கள் விரும்ப வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வெற்றுக் கோஷங்களுக்கு மக்கள் மயங்கும் காலம் மலையேறிவிட்டது.

பதற்றமான சூழலும் - அமைதியின்மையும், யாரையும் கரைசேர்காது. நாடும் முன்னேறாது.

சமுதாயத்தில் யாரையும் insecure ஆக உணரவைப்பது யாருக்கும் நல்லதல்ல. தொடுவதற்கு அஞ்ச வேண்டிய பல sensitive ஆன விஷயங்களை, சர்வ சாதாரணமாக ஒரு யோசனையும் இன்றி கையாண்டதன் பலன் புரிந்திருக்கும்.

புரிந்ததா, NRI கள் ஓட்டு போடமாட்டார்கள்.அடித்தள மக்கள் தான் நிஜம். அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு யாருக்காக அரியணை ஏறி இருக்கிறீகள்? அதானிகளுக்கும் - அம்பானிகளுக்குமா?

வழிகாட்டும் சீனியர்களை அரியணை ஏற்றாவிட்டாலும் ஓரம் கட்டாம லிருந்தாலிருக்கனும்.

அறிவு ஜீவிகள் என்ன செய்கிறார்களோ?

Thursday, November 5, 2015

கனவு காணும் வாழ்க்கை யாவும் .....

ஒரு குடும்பமே சிதறுண்டு போவதைக் காண நேர்வது கடினமான விஷயம்.

கமல்ஹாசன், ‘அன்பேசிவம்’ படத்தில்  வசனிப்பதுபோல, அடுத்த கணத்திற்காக வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும்  அதிர்ச்சிகளும்-சுவாராஸ்யங்களும் ஏராளம்.

இதோ.....!,  வீட்டின் முன்னே அம்பாரமாய் பாத்திரங்களும், பண்டங்களும், புகைப்படங்களும், மலைபோல ஏராளமான புத்தகங்களும் இறைந்து கிடக்கின்றன. வியாபாரி பாத்திரங்களை ரகம் வாரியாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார். பித்தளைப் பாத்திரங்களுக்கான விலை அதிகம் போலும்.  வியாபாரியின் முகத்தில் சந்தோஷம். ஒட்டுமொத்த வீட்டுப் பொருட்களும் விலைக்கு வந்துவிட்டதே?  அவர் வாங்குவது பொருட்களையா? ஒரு வாழ்ந்து முடிந்த பெரும் குடும்பத்தின் கௌரவம், ஆசைகள், கனவுகள் யாவற்றையும்தனே?  நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு பொருளையும் வாங்கும் பொழுது அந்த வீட்டின் தலைவி, எப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கியிருப்பார்?  எப்படியெல்லாம் பேரம் பேசியிருப்பார்?  இது அந்த மகளுக்கு; இது இவளுக்கு; இது இன்ன பண்டிகைக்கு என, அவர் பொருட்களை சேகரம் செய்யும் பொழுது எவ்வளவு கனவுகளும், கற்பனைகளும் அப்பொருட்களோடு கலந்திருக்கும்?  யாவும் தனக்குப் பின், சடுதியில் குப்பைக்காரனுக்குப் போகும்  என நினைத்திருப்பாரா?

ஏராளமான புடவைகள்,  ஒட்டுமொத்தமாக மூட்டைகட்டப்பட்டுள்ளது. சிரிப்பு வருகிறது. ஒவ்வொரு புடவை வாங்கும் பொழுதும், அதைத் தொட்டுத்தடவி, உடலில் போர்த்திப் பார்த்து, பொருத்தாமாக ரவிக்கை வாங்கி...... அனைத்தும் மூட்டையாகிவிட்டது.

புகைப்படங்களை சீந்துவாரில்லை! ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது.  அவை பதிந்து வைத்திருக்கும் நிகழ்ச்சிகளை நினைவுகூற எவருமில்லை. இருபது கல்யாணம் முதல், அறுபது கல்யாணம் வரை பதிந்தவை யாவும் தெருவில்! பெற்ற பாராட்டுப் பத்திரங்கள், சுவாமி படங்கள்  உட்பட யாவற்றிற்கும் ஒரே மரியாதையாக சாக்கு மூட்டையில் கட்டி எரிப்பதற்காக வைக்கப்பட்டுவிட்டது.

வீட்டை ஒழித்து வைப்பவர்கள், வெகு உற்சாகமாய் இது வேண்டாம், அது வேண்டாம் என வினாடியில் தீர்மாணித்து தூக்கி எறிந்துகொண்டிருக்கிறார்கள்.

‘கிருஷ்ணரும்-ராதையும்’ வெயிலிற்கு முகத்தைக் காட்டிக்கொண்டு, வீதியில் கிடக்கிறார்கள். அவர்கள் பழைய பேப்பர்காரனுக்கு தேவைப் படவில்லை. மண் பொம்மைதானே? அனேகமான, இந்தப் பொம்மைகளை வாங்கும் பொழுது, அந்த தம்பதியினர், இந்த  ‘ராதே-கிருஷ்ணா” போல சிரஞ்சீவியாக வாழ்வோம் என நினைத்திருப்பார்கள்.  தூக்கி எறியப்பட்ட ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதையொன்று கேட்பாரின்றி இருக்கிறது.

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்என்று ஒரு திரைப் பாடல் ஒன்று 

இருக்கிறது. அதில் ஒரு வரி, ‘உடம்பு என்பது உண்மையில் என்ன? கனவுகளைத் தாங்கும் 

பைதானே?’ என்று வரும்.  அந்த அனித்ய வாழ்விற்குள் மனிதனுக்கு எத்தனை ஆனவம்?  

‘விந்தையானது எது?’ என்ற கேள்விக்கு,  ‘அனுதினமும் மானுடர்கள்  செத்து வீழ்ந்து 

கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, தான் மட்டும் சாசுவதமானவர்கள் 

என்பது போன்ற எண்ணம் கொண்டு நடந்துகொள்ளும் மனிதர்கள்தான் விந்தையானவர்கள்’ 

என தர்மர் பதில் கூறுவார்.  

சங்கிலி போல தொடர்ந்துவரும் குடும்பமரம், ஏதோ ஒரு தலைமுறையில், ஏதோ ஒரு காரணத்தால்,  கன்னியை இழந்து தொடர்பற்றுப் போகிறது.

வழுவழுவென சறுக்கிக் கொண்டு செல்லும் நெடுஞ்சாலைகளில், சடாரென குறுக்கிடும் சிதலமான சாலைகள் போல,  வெண்ணைபோல இடர் எதுமின்றி சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில், திடீரென சம்மட்டி அடிபோல தாக்கப்பட்டு நிலை குலைந்து வீழ்ந்து, சற்றே நிதானித்து, கையை ஊன்றி எழலாமா என எண்ணும்போதே “அப்படியா சேதி, இந்தா பிடி இன்னும் ஒரு அடி” என அடிமேல் அடியாக விழுவது பிறருக்கு ஒரு செய்தியாகத்தான் இருக்கிறது. சம்பந்தப்பட்டோருக்குத்தான் வலியின் குரூர முகம் புரியும்.
இனி ஒருபோதும் திரும்பி வராத வஸந்தகாலங்கள்  குறித்து வருந்துவதில் பொருளில்லை என்றாலும்  இனி வரும் காலங்கள் அனைத்துமே இடர்கள்தான்; இடர்களன்றி வெறெதுவும் இல்லை என்பது,  சலிப்பைத் தருகிறது!

கடின காலங்கள்தான் மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன.  “அனைத்தும் சுபமே” என்ற தருணங்களில், உருகிவழியும் மனிதர்கள்,  காட்சிகள் சற்றே மாறும் பொழுது, கொஞ்சமும் லஜ்ஜையின்றி,  முகத்தைத் திருப்பிக்கொள்ளுவது, அதுவும்  சங்கடம் ஏதுமின்றி சாத்தியமாவது விந்தைதான். 

சுய நலத்தின் உச்ச தரிசனங்கள் கொடூரமானவை. அசிங்கமானவை. ஆபாசமானவை. ஈரமற்றவை. ஆனாலும், தனது கோரமான சுய நலத்தை மறைக்க, மத்திய வர்க்கம் எத்தனை பசப்பு வார்த்தைகளை உதிர்க்கிறது.  அரிதாரம் பூசப்பட்ட மாய்மால வார்த்தைகள் சடுதியில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் என அப்பட்டமாகத் தெரிந்தும் மாய மருகல்களை உதிர்க்கத் தயங்குவதில்லை.

ஏதோ கிராமங்களில் இன்னமும் கொஞ்சம் மானுடம் மீந்திருப்பதே சற்று நம்பிக்கை யளிக்கிறது.

கையறு நிலை என்று சொல்வார்களே, அப்படியென்றால் என்ன என்பதை நேரடியாக அனுபவிக்கும் நிமிடங்கள் நோகவைப்பவை. குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக்கிடக்கும் குழந்தையைக் காணும் கணத்தை விவரிப்பது எங்கனம்? எடுத்து வளர்க்கும் வயதும்,வசதியும், வாய்ப்பும் இல்லாமல்; கண்டுகொள்ளாமல் விலகவும் முடியாமல், என்னே ஒரு கையறு நிலை?
உறவுகளும் கூட சடுதியில்   நொறுங்கும் அளவிற்கு சன்னமாகிப் (Brittle) ஆகிப் 

போய்விட்டது.  கால மாற்றம், உறவுகளைச் சீர்குலைத்தது போல வேறெதையும் 

சீர்குலைத்திருக்காது. எல்லா தர்மங்களும், கடமைகளும் தன் வயிற்றிற்குப் பிறகுதான் 

என்பது கவலையளிக்கும் நிலைமை. 

Wednesday, November 4, 2015

Value of Life

A man went to Guru Nanak Sahib and asked, "What's the value of life?"

Gurunanak ji gave him one stone and said, "Find out the value of this stone, but don't sell it."

The man took the stone to an Orange Seller and asked him what its
cost would be. The Orange Seller saw the shiny stone and said, "You can take 12
oranges and give me the stone." The man apologized and said that the guru has asked him not to sell it.

He went ahead and found a vegetable seller. "What could be the value of this stone?" he asked the vegetable seller. The seller saw the shiny stone and said, "Take one sack of potatoes and give me the stone." The man again apologized and said he can't sell it.

Further ahead, he went into a jewellery shop and asked the value of the stone.

The jeweler saw the stone under a lens and said, "I'll give you 50 Lakhs for this stone." When the man shook his head, the jeweler said, "Alright, alright, take 2 crores, but give me the stone." The man explained that he can't sell the stone.

Further ahead, the man saw a precious stone's shop and asked
the seller the value of this stone.

When the precious stone's seller saw the big ruby, he lay down a red cloth and put the ruby on it.

Then he walked in circles around the
ruby and bent down and touched his head in front of the ruby. "From where did you bring this priceless ruby from?" he asked. "Even if I sell the whole world, and my life, I won't be able to purchase this priceless stone.

Stunned and confused, the man returned to the guru and told him
what had happened. "Now tell me what is the value of life, guru ji?"

Gurunanak said, "The answers you got from the Orange Seller,
the Vegetable Seller, the Jeweler & the Precious Stone's Seller explain the value of our life...

You may be a precious stone, even priceless, but people will value you based on

1⃣their financial status,

2⃣their level of information,

3⃣their belief in you,

 4⃣their motive behind entertaining you,

5⃣their ambition, and

6⃣their risk taking ability

But don't fear, you will surely find someone who will discern your true value!

Respect yourself!

You are also unique!

No one can replace you!