“நீயும் வாயேண்டா”
“இல்ல.. நா வரல... நீ போய்ட்டு வா..”
‘நா போரதக்கு நீ என்ன உத்தரவு போடரது?.. நீயும் வாடான்னா..’
‘.......’
‘ஏன்.. அன்னிக்கு ஏதாவது வேல ஒத்துக்கிட்டிருக்கியா..?’
‘அதெல்லாம் ஒரு “மைசூரும்’ இல்ல...’
‘அப்புறம் என்ன.. வந்து தொலை... இங்க இருந்து என்னத்த புடுங்கப்
போற..’
‘பாக்கலாம்டா...’
நான் கூப்பிட-கூப்பிட, வரமறுத்து சண்டித்தனம் செய்து கொண்டிருப்பவன். ‘வெங்குட்டு.’
கொஞ்சம் எல்லோர் மூக்கையும் சுற்றிவந்தால் எனக்கு உறவு முறை வரும்.
ஒண்ணுவிட்ட அல்லது ஓடிப்போன ‘அம்மாஞ்சி’ முறை. அதெல்லாம் எனக்கு வேண்டாம். அவன்
என் நண்பன் – அதுவே எனக்குப் போதுமானது.
“வெங்குட்டு” வைப்பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டும். தோற்றத்தில்,
மெல்லிய ஆனால் உரமான தேகம்.. யாரையும் ஊன்றி ஊடுருவிப் பார்க்கும் தீட்சண்யமான
கண்கள். நெற்றியில் அப்பொழுதுதான் இட்டுக்
கொண்டது போன்ற வெண்மைத் திருநீறு – எப்பொழுதும். அவன் அம்மாவைப் போன்ற ஜாடை. உடல்
வாகில் லேசாக பெண்மைத்தனம் கலந்திருக்கும். தேஜஸான முகம். முப்பது வயதை
நெருங்குகிறான்.
சுபாவத்தில் அவன் ஒரு பசுமாடு. எந்த வம்புக்கும் போக மாட்டான். பொய்
சொல்ல மாட்டான். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. அம்மா போட்டதைத் தின்றுவிட்டு,
ஓயாமல் உழைப்பான். பி.காம் படித்திருக்கிறான்.
தொழில்? பஞ்சாங்கம்
பார்த்துக் கொண்டிருக்கிறான். திவசம், அமாவாசை திதி செய்து வைப்பான். சின்ன
சின்னதாக கிரகப்பிரவேசம் நடத்தித் தருவான், கூப்பிட்டால் எல்லா வகையான புரோகிதமும்
செய்வான். எப்பொதாவது கும்பாபிஷேகத்திற்கு ‘உபரி’ யாக போய்வருவான். மந்திரங்களை
ஸ்பஷ்டமாகச் சொல்லுவான். கடனே என செய்துவைக்கும் ஆள் இல்லை. கர்த்தாக்களை, காதில்
விழும் மந்திரங்களை திரும்பச் சொல்லச் சொல்லி, சொல்லுவான்.
கொஞ்ச காலம், காஞ்சியில் புரோகிதம் படித்தான். ஆனாலும் அவனது குரு
அவன் தாத்தாதான். அவனுக்கு திருப்தியாகும் வரை, மந்திரங்களுக்கு பொருள் கேட்டு அவரை
நோண்டியெடுத்துவிடுவான். அவர்தான் அவனுக்கு பெரிய ‘வாத்யார்’.
உபரியாக, டிராக்டர் ஓட்டுவான். எலக்ட்ரஷியன் வேலையும் பார்ப்பான்.
கொஞ்சூண்டு நிலம் இருக்கிறது. மல்லாட்டை (நிலக் கடலை), எள் போட்டுக் கொண்டிருந்தான். கையைக் கடிக்கவே,
தற்போது சவுக்கு போட்டிருக்கிறான்.
ஐயருக்கு தட்சிணையாக ‘ஏண்டா ரேஷன் அரிசியா கொடுக்கறாங்க?’ என்பது
அவனுக்கு தீராத சந்தேகம்.
அவனுக்கென சில ‘டிரஸ் கோடு’ வைத்திருக்கிறான். பஞ்சாங்கம் செய்யும்
பொழுது பஞ்சகச்சமும், டிராக்டர் ஓட்டுவது போன்றவைகளுக்கு பேண்டும், மற்ற
சமயங்களில் நாலு முழ வேட்டியும்.
அவன் சொந்தங்களுக்கு மாத்திரம் ‘கேட்டரிங்க்’ (சமையல்) செய்து
கொடுப்பான். அவன் சமைக்கும் பிட்ளையும், ரசமும் அன்று முழுவதும் மணக்கும்.
வருமானத்திற்கு பஞ்சமில்லை. மாசம் ஐம்பதாயிரத்திற்குமேல் வரும்.
வயது முப்பதை நெருங்கினாலும், கல்யாணம் ஆகவில்லை. சன்னியாசியெல்லாம்
இல்லை! பெண் கிடைக்கவில்லை! அவன் அம்மா அவனுக்கு கல்யாணம் ஆகனும்ணு வேண்டி
ஹனுமனுக்கு மூணு முறை வாலில் பொட்டு வைத்து முடித்து விட்டாள். திருமணஞ்சேரிக்கு
அழைத்துப் போய் டெண்ட் அடித்தாள். வாரம் ஏழு நாள் விரதம் இருக்கிறாள். ம்ம்ஹூம்..
ஒரு ஜாதகமும் கிடைக்க வில்லை.
ஐஸ்வர்யா கனவில் ஆரம்பித்து, நயன்தாராவைக் கடந்து தற்போதைக்கு பரவை
முனியம்மா அழகிற்காவது யாராவது கிடைத்தால் போதும் என ஆசைகளைத் திருத்திக்
கொண்டுவிட்டான்.
“நம்ம சனத்தில எவனும் ஒரு பெண்ணிற்கு மேல் பெத்துக்க மாட்டாண்டா. சீர்
செஞ்சு மாளாதுல்ல. அம்மாதிரியான ‘ஒத்தை பெண்’ கேசுகளும் நல்லா படிச்சு, பி.இ
முடிச்சுட்டு ஐ.டி-க்கு போய், அமரிக்க மாப்பிள்ளையா பாத்து வளச்சுப்
போட்டுறுளாங்க.. என்ன மாதிரி பஞ்சாங்கத்திற்கு எவன் பொண்ணு கொடுப்பான்னு” கேட்கிறான்.
‘என்ன குறச்சல் எங்க வெங்குவுக்கு.. நல்லா சம்பாதிக்கறான்.. நல்ல
பையன். பகவான் கண்ண தொறக்க மாட்டேங்கிறான்’ என்பாள் அம்மா..
‘பகவான் இப்பல்லாம், ஐ.டி பக்கமும்-அமெரிக்கா பக்கமும்தான் இருக்கார்’
நம்மள மாதிரி ஆளுங்களுக்கு துளசி தீர்த்தமும் சடாரியும் தான்.. பேசாம போம்மா...’
யாரோ சொன்னார்கள் என, ‘மேட்ரிமோனி.காமில்’ கொடுத்துப் பார்த்தான்.
ஒன்று இரண்டு பதில் வந்தது.
நகைச்சுவை உணர்வு மிக்கவராக, பெண்களுக்கு பரிபூரண உரிமை அளிப்பவராக,
விட்டுக் கொடுப்பவராக, சொந்த வீடு இருப்பவராக, அமரிக்காவில் இருப்பவராக, அம்மா
இல்லாத பிள்ளையாக... எம்.பி.ஏ முடித்தவராக... என்கிற ரீதியில், ஏகப்பட்ட
கண்டிஷன்கள். அக்கேஷனல் ட்ரிங்கர்ஸ், ஸ்மோக்கர்ஸ் பரவாயில்லை என சலுகைகள். ஏனெனில்
அவர்களும் அப்படித்தானாம்.
இதெல்லாம் ஆண் அடிமைத்தனத்தில் வராதா?
“இந்த பொண்ணுங்களுக்கெல்லாம், ‘பெருமாளே’ இன்னொரு அவதாரம்
எடுத்துவந்தால் கூட காணாது போலடா.. என்னடா கண்டிஷன் இது? ஆம்பளயா.. யோக்யமா.. நேர்மையா.. கலாச்சார பிடிப்போட மாப்பிள்ளைகள்
இருக்கணும்னு ஒருத்தியும் கேக்க மாடாளா? பேசாம அவுங்களை அமரிக்க மேப்பை கட்டிக்கச்
சொல்லு” என்பான்.
‘நீ எரிச்சல்ல பேசற... உனக்கு ஒரு பெண் இருந்தால் நீயும் இப்படித்தான்
கண்டிஷன் போடுவ...’ என்பேன்.
‘மசுறு...’ என்பான்.
இடையில், வெங்கிட்டு, ரொமாண்டிக் ஆகி, வேறு சனப் பெண்ணைக்
காதலித்தான். ரகசியமாய் பேசிக் கொள்வார்கள். என்ன சனம் எனக் கேட்க வேண்டாம். சண்டை
வரும்.
இந்த காதல் சினிமா, ஒரு ஆறு மாதம் ஓடியது. இந்த விஷயம் வெங்கிட்டுவோட
அம்மாவுக்கும் ஜாடை மாடையாகத் தெரியும். “பகவான் அப்படி எழுதியிருந்தால் என்ன
செய்ய முடியும்? ஏதோ நடக்கட்டும்” என்றாள். அப்படியாவது பையனுக்கு ஒரு பெண்
அமையமாட்டாளா என்ற ஏக்கம் அதில் மறைந்திருந்தது.
ஒரு நாள் தனது ‘டி.வி.எஸ் – ஸ்டாரில்’ அந்த பெண்ணை பில்லியனில் உட்கார
வைத்து அழைத்து வந்து கொண்டிருக்கும் பொழுது, அவளது அப்பா பார்த்து விட்டார்.
வீட்டிற்கு வரவைழத்தார் வெங்கிட்டுவை. நானும் துணைக்குப் போனேன்.
‘த பார் தம்பி.. நீயா
இருக்கக் கண்டி, ஊங்கிட்ட பொறுமையா பேசிக்கிட்டிருக்கேன். இந்த வேலய செஞ்சது வேற
சனமாயிருந்தா.. இன்னேரம் அவன் பொணம் தண்டவாளத்தில் கிடந்திருக்கும்.. ஒழுங்கு
மயிரா கோயில்ல படைச்சமா.. தெவசம் செஞ்சு வச்சோமா, தட்சணை வாங்கினோமா, வூட்டுகுப் போனோமான்னு
இருக்கனும்.. இன்னொருக்கா எம்பொண்ணு பின்னாடி நீ சுத்தரத பாத்தேன்.. மவனே, உன்ன
பலி போட்டுடுவேன்.. ஞாபகத்துல வச்சுக்க.. ‘நான் யாரு… நீ யாரு.? என்னா தெகிரியம் இருந்தா எங்க வூட்டுப் பொண்ணுகிட்டயே
டாவடிப்ப…. சீவிப்புடுவேன்
சீவி…! இத்தியாதி.. இத்தியாதி. எத்தனை தமிழ் சினிமா பார்த்திருப்பீர்கள்?
மீதியை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்.
‘சார்.. உங்க பெண்ணை கடசிவரக்கும் என்னால நல்லபடியா காப்பாத்த
முடியும். வசதியாவும் வச்சுக்க முடியும்.. நாங்க ரெண்டுபேருமே ஒருத்தர ஒருத்தர்
விரும்பரோம்.. நீங்க, ஜாதிய பாக்காம,
எங்களை சேத்து வச்சீங்கன்னா….’
‘அடி செருப்பால.. நாயே… எடுரா அந்த கத்திய…’
‘அப்பா.. நிறுத்துங்க… இனி, நீங்களே கட்டி வச்சாக்கூட அவுரு எனக்கு
வேண்டாம்.. ‘ இது நேரம் வரைக்கும் அழுதபடி நின்றிருந்த அந்த பெண்
சட்டென சீறினாள்.
‘நீங்க போய் உங்க கோயில் வேலய பாருங்க.. நான் என்
வேலய பாக்குறேன்..’ என்றாள் வெங்குடுவைப் பார்த்து.
சற்று
நேரம் திகைத்து நின்றுவிட்டு தலையை தொங்கப்போட்டுக் கொண்டு திரும்பினோம்.
‘அவ ஏண்டா திடீர்னு அப்படிச் சொன்னா?’
அவனை
முறைத்துப் பார்த்தேன்.
‘உன்ன,
சுருக்கமா ‘நீ
ஒரு ஆக்கங்கெட்ட ஆம்பளங்கிறா.. போதுமா?’
‘அவ எதிர்பாக்கறது என்னன்னு புரியுதா? தைரியமா அவங்க அப்பனை
எதித்து நிக்கச் சொல்லுறாள்! கத்திய கத்தியால பேசச் சொல்லுறாள்! அவளோட அப்பனை ஜெயிச்சி
காமிக்கச் சொல்லுறாள். உன் சனத்தோட வந்து அவளை இழுத்துக்கிட்டுப் போய் கட்டிக்
சொல்லுறா. உன் மரமண்டைக்கு ஒன்னும் புரியல.. அன்னியன்
‘விக்ரம்’ மாதிரி அவளோட அப்பாவுக்கு ‘அப்ளிகேஷன் போடற…’ உன்ன மாதிரி பயங்கொள்ளி ஆளுங்களை கட்டிக்கிட்டு அவ எப்படி ஊருல தல நிமிந்து
நிக்க முடியும், சொல்லு? ‘அவ எத எதிர்பாக்கறாங்கறதே உனக்கு புரியல..
அப்புறம் எங்க நீ அவள கட்டிக்கறது? அந்த பொண்ணோட
அப்ரோச்சே வேற.. நீ வேற… ரெண்டும் சரிப்பட்டு
வராது… அதத்தான் அவ சட்டுன்னு புரிஞ்சுகிட்டு, நீ வேண்டாம்னுட்டா.. நீ வெட்டுப்பட்டு சாகக் கூடாதுங்கறதுக்காக…. உனக்கு ஏதாவது புரிஞ்சுச்சா.? இன்னமும் புரியலையா?’
‘இப்ப
என்னடா செய்யலாம்... அவள இழுத்துகிட்டு ஓடிட்டுமா?’
“அவ
வருவா... நிச்சயம் வருவா. அவ கண்ணுல ஆசைய பாத்தேன். ஆனா, உன்னால நிக்க முடியுமா? ஓங்கூட
நிக்கறதுக்கு ஆள் இருக்கா? சனம் இருக்கா? அடியாள் இருக்கா? பணம் இருக்கா? அப்படியே
மீறி கட்டிக்கிட்டா ஒன்னோட பஞ்சாங்க தொழிலை கொஞ்ச நாளைக்கு, மூட்டை கட்டி வைக்க
வேண்டி வரும். கோயில் வேல போயிடும். உன்னை
பயமுறுத்தல.. உன்னை, உன் வேலய பாக்கவுட
மாட்டங்க... கொஞ்சநாள் எல்லாத்தையும் தாங்கிக்கனும்... போராடனும்.. ஆனா...
காலப்போக்கில எல்லாம் நிச்சயம் சரியாயிடும். அது வரைக்கும் நீ தாக்கு பிடிப்பியா? உங்கம்மா
தாக்கு பிடிப்பாளா? யோசிச்சு சொல்லு.. அந்த பெண் நிச்சயம் தைரியமா நிப்பா! உன்னோட
‘அப்ளிகேஷன் புத்திக்கு இதெல்லாம் சரிப்படுமான்னு பார். ஓ..கே ன்னா சொல்லு, ஏற்பாடு
செய்கிறேன் என்றேன்.
வெங்குட்டோட
காதல் காவியம் பாதியில் நின்று போனது. அடுத்த மாசமே அந்த பெண்ணிற்கு திருமணமும்
ஆகிவிட்டது.
அந்த
சம்பவத்திற்குப் பின் வெங்கிட்டு எந்த கல்யாண நிகழ்வுக்கும் செல்வதில்லை. இந்த
முறை எங்கள் இருவருக்குமே தெரிந்த ஒரு உறவு முறைத் திருமணம். மாப்பிள்ளை வீட்டு ஜனங்கள் வீடு தேடி
பத்திரிக்கை கொடுத்துவிட்டுச் சென்றார்கள். திருமணம் சென்னையில். அந்த
நிகழ்ச்சிக்குத்தான் அவனை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அவன் எப்பொழுதும் போல
வரமாட்டேன் என அடம் பிடிக்கிறான்.
அவன் அம்மா அலமேலு உதவிக்கு வந்தாள். “இந்த மாதிரி
ரெண்டு கலயாணத்திற்கு போகும் போதுதான் வரன் அமையும். லோகுதான் (நான் தான்) கூப்பட்டுக்கிட்டே
இருக்கான்ல போய்ட்டு வாயேண்டா..”
எனக்கு கல்யாண கூட்டத்தில் எல்லம், பெண் அமைந்துவிடும்
என்ற நம்பிக்கையில்லை. எங்களது கிராமத்திலிருந்து, அவ்வளவு தூரம் காரில் போகும்
போது, உற்ற பேச்சுத்துணைக்காகத்தான் இவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளை,
அம்மா சொன்னதும், கல்யாணத்திற்கு வர்ரேன்னுட்டான். இல்லாவிடில்
வேறு ஆளைப் பிடிக்கணும்.
திருமணம் அடையாரில். முதல் நாள் மாலை, ஜானவாசத்திற்கு முன்னரே
வந்து விட்டோம். விடியற்காலை முகூர்த்தம் என்பதால், முகூர்த்தம் ஆனதும்
கிளம்பிவந்துவிடுவதாக திட்டம். எனது வெகன்-ஆரை
வசதியான இடத்தில் நிறுத்திவிட்டு, எங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த ரூமிற்கு
வந்தோம். ரெஃப்ரஷ் ஆனபின், ‘வாடா.. வந்த வேலையைப் பார்ப்போம்..’ என்றேன்.
‘என்னது..?
‘வேறு என்ன... டிபன் சாப்பிடத்தான்..’
சாசுவதமாகப்
போடப்படும் மாலை நேர ஸ்பெஷல் போண்டா, வண்ண வண்ண சேவைகள்.
காபி.
மாமிக்கள்
யாவரும் மணிக்கொரு பட்டுப் புடவைகளிலும்,
மாமாக்கள் ஷெர்வாணிகளிலோ அல்லது குர்தாக்களிலோ உலவிக் கொண்டிருந்தனர்.
யாராவது ஆகப்பட்டால், அகப்பட்டவன் தீர்ந்தான்.
மாமாக்கள் தங்களது ‘புலமையைக்’ (பேசியே) காட்டியே கொன்றுவிடுவார்கள். இந்த டேஞ்சர் ஆசாமிகளிடமிருந்து தப்பித்துக் கொண்டிருந்தோம். இந்த
மாமாக்களின் ஜம்பம், மாமிகளிடம் பலிக்காது. ‘உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. பேசாம
ஏதாவது ஒரு ஃபேனுக்கு அடியில உக்காருங்கோ ..’
மாமிகள்
வட்டாரத்தில், எங்கே காதைக் கொடுத்தாலும்,
“என் பையன் ஹூஸ்டனில், உன் பையன் எங்கே என்று சொன்னாய்?
கலிஃபோர் னியாவிலா.. சரி.. சரி.. “என்ன மெட்ராஸ் இது? நாஸ்டி ஃபெல்லோஸ்.. சுத்தமே இல்ல… என்ன வெய்யில் இங்கே.... என்ன இவ்வளவு அசிங்கமா இருக்கு இங்கு டிராஃபிக்!. ‘நம்ம’
ஊர்ல எவ்வளவு டிசிப்ளின்…
நல்ல வேளை, மான்யவார் போனேன்.. தப்பித்தேன்.. இல்லாட்டா சென்னைக் கூட்டத்தில் நசுங்கியே
போயிருப்பேன்.. - இவை போன்ற டிபிக்கல் என்.ஆர்.ஐ வசனங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
‘யார்டா அது.. மன்யவார்?’ வெங்கிட்டு
‘அது ஒரு துணிக்கடை..’
‘அதுக்கா இவ்வளவு அலட்டல்? ஏண்டா, அமெரிக்கா போனால், தமிழ் பேசக்கூடாதா யாரும்?’
‘வந்த வேலயைமட்டும் பார்.. எவன் எந்த லாங்குவேஜைப் பேசினால்
உனக்கென்ன? இதெல்லாம் தமிழ் அப்பர் மிடில் கிளாசின் அடையாளங்கள்.
உனக்கு பிடிக்கலேன்னா காதை மூடிக்கோ..’அவுங்களுக்கு அங்கிலம் பழக்கமாயிடுச்சு..அதுக்கு என்ன பண்ணலாம்கிற?
ஜானவாசம்
முடிந்து, இரவு
பந்தி துவங்கிற்று. பெண் விட்டார், உபசரிப்புக்கும்
கூட காண்ட்ராக்ட் விட்டுவிட்டார்கள் போல.. முகம் தெரியாத ஆட்கள்,
முகம் தெரியாத ஆட்களை மொய்த்துக் கொண்டு உபசரித்துக் கொண்டிருந்தனர்.
வெங்கிட்டு, நொந்து போய், ‘கொஞ்சம் என்னை விட்டீங்கன்னா பரவாயில்லை.. நிம்மதியா
சாப்பிடுவேன்.. இப்படி சுத்தி சுத்தி நின்னுகிட்டே இருந்து,
என்ன வேணும்.. எண்ண வேணும்னு கேட்டுக்கிட்டே இருந்தா,
எப்படிச் சாப்பிடுவது?’ என்று சொல்லிவிட்டான்.
புன்னகையோடு, நகர்ந்தனர் ‘சியர் லீடர்ஸ்’
"இப்பல்லாம் கல்யாணம் செய்யுறது ஒரு பிரச்சினையே இல்லடா.. காசு இருந்தால் போதும். மீதி தானாக இலை? ' என்றான்.
நீ நம்ம ஊர்ல கேட்டரிங் காண்ட்ராக்ட் எடுக்கறியில்ல ? அதுபோலத்தான் இதுவும். இது கொஞ்சம் பெரிய காண்ட்ராக்ட் அவ்வளவுதான். பத்து நாள் லீவுல கல்யாணம் முடிக்கனும்னா காண்ட்ராக்ட் தான் வழி " என்றேன்.
'எல்லாத்துக்கும் ஒரு பதில் சொல்லிடு ' என்றான்.
நாங்கள்
இருந்த ரூமில், ஒரு வயதான தம்பதியரும் இருந்தனர். அவர்களும் இந்த என்.ஆர்.ஐ
களின் அலம்பலும் இம்சையும் தாங்க இயலாத கோஷ்டியைச் சார்ந்தவர்கள் போலும். ‘ரொம்ப
படுத்தராங்க இல்ல... ‘ என்றார்.
‘ஹா...
ஹா.. மாமா.. உங்க பையனோ அல்லது பெண்ணோ அமரிக்காவில் இருந்தால், நீங்களும்
இப்படித்தான் இருப்பீர்கள். எல்லாம் .. சீச்சீ.. இந்த பழம் புளிக்கும் வகைதான்’
என்றேன். உடனே சற்று விரோதமாகப் பார்த்தார்.
‘உங்களுக்கு
தெரிந்த இடத்தில் யாராவது பெண்கள் இருக்காங்களா? வெங்குவிற்கு ரொம்ப நாளா
தேடறோம்.. அமைய மாட்டேங்கிறது..’
பேச்சை
ஆரம்பித்து வைத்தேன். பேச்சு, அங்கே இங்கே சுற்றி, கடைசியில் ஆரம்பித்த இடத்திற்கே
வந்து நின்றது. அந்த மாமி சொன்னார், “கீழே
சமையல் ரூமில், பரிமாறும் வேலை செஞ்சுண்டுருக்கார் ஒருத்தர். பேரு
சுவாமிநாதன். கும்பகோணம் பக்கம். அவருக்கு ஒரு பெண் இருக்கறதா கேள்விப் பட்டோம்.
அவுங்களும் நல்ல வரணா தேடிக்கிட்டிருக்கா.. போய் கேட்டுப் பாருங்களேன். ஆனா நீங்கல்லாம் வேத வித்துக்கள், இந்த பரவாயில்லையா என உங்க அம்மாவிடம் தெரிஞ்சுண்டு போங்கோ” என்றார்.
இதவிட
என்ன வேலை? ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என இருக்கிறோம். சமையல் வேலைன்னா மட்டமா
என்ன?
சட்டையை
மாட்டிக் கொண்டு, சமையல் கட்டிற்கு சென்றேன். கூடவே வெங்கிட்டுவும்.
கல்யாணசத்திர,
சமையற்கட்டுக்கள் தனி உலகம். அங்கே ‘தூய தமிழ்’ விளையாடும். நக்கல், கேலி, கிண்டல், ஏமாற்றல் என படு
சுவாரஸ்யம். உட்கார்ந்து கேட்டால், பத்து தொடர்கதைகளுக்கான ‘நாட்’ கிடைத்துவிடும்.
அப்போது, சீட்டுக் கச்சேரி நடந்து
கொண்டிருந்தது.
இடுப்பில்,
ஒரு அழுக்குத் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு, ‘மூதேவி.. அந்த எட்டு டைமண்டை
போட்டுத் தொலையேண்டா..’ என அடுத்தகையிடம் எச பாடிக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம்
போய், இங்கே ‘சுவாமினாதன்’ அப்படின்னு யாராவது இருக்காங்களா? கும்பகோணத்துக் காரர்’
என்றேன்.
‘நான்
தான் அது.. என்ன விஷயமா பாக்கனும்..’ என்றார் அந்த அழுக்குத்துண்டுக் காரர்.
‘அட..
பரவாயில்லையே.. கும்பிடபோன தெய்வம், குறுக்கே வந்த மாதிரி..’ என்றேன்.
‘அது
இருக்கட்டும்.. என்ன விஷயம்? ஏதும் விஸேஷத்திற்கு வரணுமா..?’
‘உங்க
வீட்ல, கல்யாணத்திற்கு ஒரு பெண் இருக்கறதா கேள்விப் பட்டோம். அதான்
விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்தோம்.’
விசுக்கென
எழுந்து கொண்டார் சுவாமினாதன். பக்கத்திலிருந்த ஆளிடம் கைச் சீட்டுக்களைக்
கொடுத்துவிட்டு, 'பாத்து ஆடுடா..'புல்லுக்கு தாங்காது என இன்ஸ்டரக்ஷனும் கொடுத்துவிட்டு, எங்களை இழுத்துக்
கொண்டு, உக்ராண அறைக்குள் (ஸ்டோர் ரூம்) ஓடினார்.
“அமாம்
சுவாமி. என்னோட பொண்ணுதான். கௌசின்னு பேரு. லட்சணமா, மஹாலட்சுமி மாதிரி இருப்பா..
நாலு வருஷமா தேடறேன். பையன் கெடக்கல.. நீங்களே சொல்லுங்க.. சமையல் காரன்
பொண்ணுண்ணா மட்டமா? இல்ல கேவலமா?
அனியாயத்திற்கு காலம் கெட்டுப் போச்சுண்ணா! இவாளுக்கு காரியம் செஞ்சுவைக்க நான் வேணும். சமையலுக்கு நான் வேணும். பரிமாற நான் வேணும். ஆனா ஜாதக கட்டைத் தூக்க
உடனே, இவங்களுக்கு கௌரவம் வந்திடும். ‘சமையற்காரன் பெண்ணா’ என அசூயயாய் பாக்கறா..”
விட்டால்
மனுஷன் அழுதுவிடுவார் போலிருக்கிறது. மிகவும் நொந்து போயிருக்கிறார்.
‘உணர்ச்சி வசப்பட்டு இல்லை. புரிஞ்சுக்கணும். உலக நடப்பு அப்படித்தான். ஆனால்,நாங்க
அதெல்லாம் பாக்க மாட்டோம். எங்களுக்கு மனிதர்கள் நல்லவர்களா இருந்தா போதும். வயசு ஏறிப் போச்சுண்ணா,
ஜாதகம் பாக்கக் கூட தேவையில்லை என்பதுதான் நாங்க சொல்றது’ என்றேன்.
‘சரியா
சொன்னேள்.. கன்னி கழியாம எத்தனை நாள் அவளை காப்பாத்த முடியும். எவனாவது ஒரு
சட்டைக் காரனை (வெளி நாட்டவருக்கு அப்படி ஒரு பெயர்) இழுத்துக்கிட்டு ஓடிடுவாளோன்னு
பயமா இருக்கு.’
‘அப்படியெல்லாம்
யோசனை செய்ய வேண்டாம்... பகவான் நல்லபடியா நடத்திவைப்பார் (எப்படியெல்லாம் வசனம்
பேச வேண்டியுள்ளது?)” என்றேன்.
‘அது
சரி... உங்க கௌசி, எங்க இருக்கா?’
‘லண்டன்ல
இருக்கா.. ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பனிதான்.. பேர்கூட நினைவுக்கு வரல. வாயிலயும்
நுழையல. சம்பளமா நம்ம ஊர் கணக்குக்கு மாசம் அஞ்சு லட்சம் சம்பாதிக்கறா.. உங்களுக்கு தெரிஞ்ச, வரன், அது அமரிக்காவோ இல்ல
இங்கிலாந்தோ, எதானாலும் பரவாயில்ல.. பையன் வெளிநாட்ல இருக்கனும். கௌசிக்கு நிகரா
இல்லேன்னாலும், கொஞ்சம் மின்னே-பின்னே சம்பளம் இருந்தாலும் பரவாயில்ல.. அட்ஜஸ்ட்
செஞ்சுக்கலாம்.. உங்களுக்கு தெரிஞ்ச வரன் ஏதாவது இருக்கா.. சொல்லுங்கோ...’
பக்கத்தில்
இருந்த அரிசி மூட்டைக்கு ஓங்கி ஒரு உதை கொடுத்துவிட்டு, “போங்கடா.. நீங்களும் உங்க
வரனும்..” கத்திக் கொண்டே மேலே சொல்கிறான் வெங்கிட்டு..’
என்ன செய்யலாம் ?