Sunday, May 13, 2012

பெண்ணே!!


அந்த ஃப்ளாட், எல்லா வீடுகளையும் போல, காலை நேர களேபரத்தில் சமையல், பூஜை, குழந்தையின் படிப்பு, வேலைக்காரியிடம் அதட்டல் என அரண்டு மிரண்டு கொண்டிருந்தது. 

ராமானுஜன், எப்போதும் போல பூஜையில் மூழ்கிவிட்டார். ராமானுஜத்திற்கு, காலையில் அம்பாள் பூஜை செய்ய வில்லையென்றால், அன்று முழுவதும் எதையோ பறி கொடுத்தாற்போல இருப்பார். ராமானுஜத்தின் அறுபத்தைந்து வருட வாழ்க்கையில், விபரம் தெரிந்து அம்பாள் பூஜையை நிறுத்தியது மிகச் சொற்பமான நாட்களில் தான். அவ்வளவு ஏன்? அம்பாள் உத்தரவு வரவில்லையென்றால் முக்கியமான விஷயம் ஏதும் செய்ய மாட்டார். வீடு வாங்குவது, பையனுக்கு கல்யாணம், நகை வாங்குவது என, எது வானாலும் சரி, அம்பாள் படத்தின் முன், பூவோ அல்லது திருவுளச்சீட்டு போட்டோ தான் முடிவெடுப்பார்.

அவரது ஒரே வாரிசு 'சீனிவாசனும்' அம்பாள் தாசன்தான். சரியான அம்பா-அப்பா கோண்டு. சுருக்கமாகச் சொன்னால், சினிமாவிற்குப் போகலாமா வேண்டாமா என்பது தான், அம்பாளின் உத்தரவில்லாமல் செய்வது. சீனிவாசனின் மனைவி ‘காயத்ரிக்கு’, திருமணமாகி வந்த புதிதில் இந்த பழக்கம் புதிதாகவும், வினோதமாகவும் இருந்தாலும், இந்திய கலாச்சாரத்தை ஒட்டி, தானும் அவ்வாறே வாழப் பழகிவிட்டாள்.

சீனுவாசன்-காயத்ரி தம்பதியருக்கு, ஆறு வயதில் ஒரு குழந்தை. சியாமளா!

காயத்ரியின் ‘மாமியார், சீதாம்மா அசப்பில் அந்தகால கே.ஆர் விஜயா போல இருப்பாள். அக்கால டிபிக்கல் சினிமா மனைவி போல, புருஷன் மேல்அபாரபக்தி கொண்டவர். சோமவாரம், சனிக்கிழமை, ஏகாதசி என அனைத்து விரதங்களும் அனுசரிப்பார். உச்ச கட்டமாக, ஆடி அமாவாசை போன்ற, சில விசேஷ விரத தினங்களில், மாமியார் மேலே ‘அம்பாள் வந்துவிடுவாள்.அச்சமயங்களில், சில சிக்கலான குடும்ப விஷயங்களுக்கு, 'அம்பாள்' (சீதாம்மா),தீர்வு சொல்லிவிடுவாள்.


மாமனார் ராமானுஜம், கணவன் சீனுவாசன் இருவரையும் அந்த நேரங்களில் பார்க்க வேண்டுமே? 'விஸ்வரூப தரிசனம்' பெற்ற அர்ச்சுனன் போல பவ்யமாகி விடுவர். கொஞ்ச நேரம் கழித்து ‘கற்பூரம் ஏற்றி அம்பாள் மலையேறியதும், அனைவரும் சகஜமாகிவிடுவர்.

காயத்ரிக்கு, இதில் எல்லாம் நம்பிக்கை உண்டா, விருப்பம் உண்டா அல்லது இல்லையா எனச் சொல்லத் தெரியாது! மெஷின்களை யாரும் அபிப்ராயம் கேட்பதில்லை அல்லவா?

காயத்ரி, காலை எழுந்ததும், தினசரி கடமையாக பூஜை ரூமை சுத்தம் செய்து, பூக்களை எடுத்து வைத்து, விளக்குகளை சுத்தம் செய்து, அம்பாள் படங்களை துடைத்து வைத்து, மாமனாரின் பூஜைக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வைத்து விடுவாள். இல்லாவிடில் மாமனாரும்-மாமியாரும் ரௌத்ரதாரிகளாகி விடுவர்.

சீனுவாசன் ஒரு மண். கொஞ்சவும் தெரியாது, ஆத்திரப்படவும் தெரியாது. அவனது அம்மாவோ அப்பாவோ கோபப்பட்டால் இவனுக்கும் கோபம் வரும். இல்லையென்றால் அதுவும் வராது.

பூஜை முடிந்து, ராமானுஜன் வெளியே வந்தார். அம்பாள் பிரசாதம் என்று சொல்லி ஆளுக்கு ஒரு ஸ்பூன் தீர்த்தம் அளித்தார். மகனும், மனைவியும் பவ்யமாக வாங்கிக் கொண்டனர்.

“ஏண்டா, சீனு.. இன்னிக்கு லீவு போடச்சொல்லியிருந்தேனே.. போட்டு விட்டாயா?

“போட்டு விட்டேன் அப்பா... “

‘எத்தனை மணிக்குடா, அப்பாயின்மென்ட் கொடுத்திருக்காங்க? இது சீனுவாசனின் அம்மா

“பத்தரைக்கு போனா போதும் அம்மா..

‘அடியே, காயத்ரி... ‘மச மசன்னு நிக்காம நீயும் சீக்கிரமா ரெடியாகு.. “ என்றாள் மாமியார்.

‘சரிம்மா...

“எல்லாம் அந்த அம்பாள் மனசு வைக்கனும்..என பொத்தாம் பொதுவாக சொல்லிவைத்தாள் சீதாம்மா.

அனைவருக்கும் சாப்பாட்டு போட்டு, இடத்தை சுத்தம் செய்வதற்கும் சீனுவாசன் ‘டிரஸ் பண்ணிக்கொண்டு தயாராவதற்கும் சரியாக இருந்தது.

‘போலாமா, காயத்ரி...?

‘ம்ம்ம்ம்..

“சாப்டாச்சா..?

எப்படி சாப்பிட்டிருக்க முடியும்? இப்பத்தானே எல்லோருக்கும் சாப்பாடு போட்டு, இடத்தை ஒழித்து வைத்தாள்..?இது கூடவா யூகம் பண்ணத் தெரியாது?

‘ம்ம்.. ஆச்சு....

ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து கொண்டாள் காயத்ரி..

‘உனக்கு இஷ்டம் தானே

’..”

“வரும்போது டாக்ஸியில் வந்துவிடலாம்..

‘சரி..

ஸ்கூட்டரை கே.எஸ்.ஜி மருத்துவ மணையில் நிறுத்திவிட்டு, காயத்ரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் சீனு.

"டைம் இருக்கு, டாக்டர் பத்தரை மணிக்குத்தானே டி.ஜி.ஓ அப்பாயின் மெண்ட் கொடுத்திருக்கார்"என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்  சீனு!

“என்ன சீனுவாசன், நல்லா யோசிச்சு முடிவெடுத்திட்டீங்களா.. மாசம் அதிகமாயிடிச்சு. ரிஸ்க் தான், செஞ்சுடலாமா?” என்றார் டாக்டர் சுலோசனா, டி.ஜி.ஓ

நகரில் இந்த மாதிரியான காரியங்களுக்காகவே இருக்கும் ஆஸ்பத்திரி இது.

“ரெண்டு பேருமே பெசி முடிவெடுத்துட்டோம் டாக்டர்.. ரெண்டாவதும் பெண்ணாயிடுச்சே, என்ன செய்வது டாக்டர்? ரெண்டு பெண்களை கரையேத்ததுவது மிகுந்த சிரமம் இல்லியா?"

“எந்த ரெண்டுபேர் பேசி முடிவேடுத்தீங்க?"  கணவனை நோக்கினாள் காயத்ரி!

“அப்ப சரி.. உங்க இஷ்டம்..”  காயத்ரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் டி.ஜி.ஓ.

“குளிச்சுட்டீங்களா காயத்ரி..?என்றார் டி.ஜி.ஓ.

‘தலை குளிச்சுட்டுத்தான் வந்தேன் டாக்டர்”.

டாக்டர் ‘கலைப்பதற்கு தயாராக காயத்ரியுன் உள்ளே போக, வெளியே சீனுவாசன், எல்லாம் நல்லபடியாமுடியனும் என்று வேண்டிக்கொண்டு கழுத்தில் போட்டி ருக்கும் ‘அம்பாள் டாலரை கண்ணில் ஒத்திக் கொண்டார்.

உள்ளே ஒரு ‘அம்பாள் ஜன்னமின்றி மரணத்தை தழுவினாள்.

                              -0-
(13/05/2012 அன்னையர் தினம)

4 comments:

 1. kulantai aana pennanu teriyave nangu matam aagum.

  ReplyDelete
 2. பித்தலாட்டங்களை அம்பலபடுத்திறால் போல உள்ளது. ;-) சூப்பர்.

  ReplyDelete
 3. // எப்படி சாப்பிட்டிருக்க முடியும்? இப்பத்தானே எல்லோருக்கும் சாப்பாடு போட்டு, இடத்தை ஒழித்து வைத்தாள்..?இது கூடவா யூகம் பண்ணத் தெரியாது?//

  இது மாதிரி நிறைய பேர் இருக்காங்க.. :-)

  கதை அருமை.

  ReplyDelete