Tuesday, May 1, 2012

“ஒரு மத்திம – தொழிலாளி”

“சாயங்காலம், ஆஃபீஸ் முடிஞ்சு வரும்போது, மறக்காம வெண்ணை வாங்கிட்டு வாங்க! பசங்க நெய் இல்லேன்னா சாப்பிட மாட்டேங்கறாங்க! மறந்துட்டு வந்து நிக்கக் கூடாது, புரியுதா?

“சரி.. சரி.. வங்கிட்டு வர்ரேன்..

மனைவி, வத்ஸலா கொடுத்த "லன்ச் பாக்ஸை" ஸ்கூட்டரின் பாக்ஸில் வைத்துவிட்டு, வண்டியை ஆபீஸுக்கு கிளப்பினார், கோபிநாத்.

“மறக்காம வெண்ணை.....

“ரோட்டில கத்தாத, வாங்கிட்டு வர்ரேன்..என்றார் கோபிநாத்.

கோபிநாத், சென்னை அண்ணா சாலை,ஏ.ஜி அலுவலகத்தில் சீனியர் அக்கவுன்டென்ட். மடிப்பாக்கத்தில் சொந்த ஃப்ளாட். இரண்டு குழந்தைகள்.  நாற்பதாயிரத்தைத் தொடும் சம்பளம்.  அடுத்த வருஷம் கார் வாங்குவதாக உத்தேசித்திருக்கிறார்.

டிராஃபிக் பிடுங்கல்களைத் தாண்டி, ஆஃபீஸுக்குச் சென்று, சீட்டில் அமரும் போது மணி பத்தரை. லேட்டாக வரக்கூடாது என, என்னதான் பிளான் செய்தாலும் லேட்டாகிவிடுகிறது. அவர் பார்க்க வேண்டிய ஃபைல்கள் அவரது டேபிளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. பிறகு பார்க்கலாம், முதலில் கேன்டீனுக்குப் போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து, கிளியர் பண்ணலாம்.

கேன்டீன் வாசலில், சிகப்பு,சிகப்பாய் வைக்கப் பட்டிருந்த பெரிய தட்டிகள்,   நாளை முதல் இரண்டு நாட்கள் “அகில இந்திய வேலை நிறுத்தம் என அறிவித்துக் கொண்டிருந்தன.

"ஆமாம்.. இந்த யூனியன்களுக்கு வேற வேலை இல்லை, வருஷத்துக்கு ரெண்டு தடவை, தெவசம் போல, ஆல் இன்டியா ஸ்டிரைக் செஞ்சாகனும், எல்லாம் சடங்கு, அரசியல்" சலிப்புடன் காஃபி சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வந்தார் கோபிநாத்.

கொஞ்ச நேரத்தில் யூனியன் ஆட்கள் கோஷ்டியாக உள்ளே வந்தனர்.

அகில இந்திய அளவில், அக்கவுன்டன்ட்கள் மற்றும் ஆடிட்டர்களுக்கு இரண்டு யூனியன்கள் இருக்கிறது. இந்த ஆபீஸிலும் அவை இருக்கிறது. இரண்டு பேரும், தாங்கள்தான் பெரிய யூனியன் என்று சொல்லிக் கொள்வார்கள். ஒருத்தரை ஒருத்தர் சாடி, போட்டுக் கொள்ளும் நோட்டீஸ்களுக்கு அளவில்லை.  யூனியன்களின் பாதி எனர்ஜி இந்த சண்டை யிலேயே போய்விடும்.

கோபிநாத் இந்த யூனியன் சண்டையில் ஆர்வமற்றவர். ஏன், யூனியன் என்றாலே பிடிக்காது. அனால் யூனியன் ஆட்கள் சந்தா கேட்கும் போது, எதுக்கு பொல்லாப்பு, என ரெண்டு பேருக்குமே சந்தா கொடுத்துவிடுவார்!
வந்த யூனியன் ஆட்களில் சீனியரான ஒருவர், கோபிநாத் கையில் சிகப்பு கலர் நோட்டீஸைத் திணித்தார்.

“தோழர் கோபிநாத் சார்,  நாளைக்கும், நாளின்னிக்கும் ரெண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. எல்லா யூனியனும் சேந்து செய்கிறார்கள். இந்தியா முழுசும்,எல்லா யூனியன் களும் சேந்து செய்யும் போராட்டம் இது. நீங்களும் கலந்துக்கங்க.  சாயங்காலம் வெளியில, போராட்ட விளக்கக் கூட்டம் இருக்கிறது. டெல்லியிலிருந்து தலைவர்கள் வர்ராங்க... மீட்டிங்கில அவசியம் கலந்துக்கங்க.. நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்.

“அதுக்கென்ன வந்துட்டாப் போச்சு...” என்றார் கோபிநாத்.

அவர்கள் ஒவ்வொரு சீட்டாகப் போய் நோட்டீஸைத் தந்துவிட்டு, வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.  சாயங்கால மீட்டிங்கிற்கும் வருமாறு வேண்டுகோள் வைத்தனர்.

“ஆமாம்.. இந்த யூனியன் ஆட்கள், வேண்டாமென்றால் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கொள்வார்கள். தேவைப்படும் போது கூடிக் கொள்வார்கள். இவுங்க “திட்டிக்கோ... என்றால், நாம ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கனும்.. ‘கூடிக்கோ..என்றால் உடனே கூடிக்கனும். என்ன கொள்கை இது? 

உலகத் தொழிலார்களே ஒன்று படுங்கள் என கோஷமிடுவதில் ஒன்றும் குறைச்சலில்லை.. உள்ளூர் தொழிலார்களை மோதிக் கொள்ளவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.  நாமெல்லாம் பைத்தியங்களா என்ன?

சலிப்புடன் அவர்கள் கொடுத்த நோட்டீஸை, படிக்கக்கூட விருப்பமின்றி எடுத்து, தூர வைத்த்தார் கோபிநாத். அதன்பின் அலுவலக தினப்படி வேலைகளில் முழுகிப் போனார்.

சாயங்காலம், ஆபீஸ் முடிந்து, வீட்டுக்கு கிளம்ப வண்டியை எடுக்கும் போது, குறுக்கே வந்தனர் யூனியன் ஆட்கள்.

“என்ன தோழர், கிளம்பிட்டீங்க.. மீட்டிங் இருக்குல்ல.. தலைவருங் கெல்லாம் வந்துட்டாங்க..கேட்டுட்டுப் போங்க

“போச்சுடா.. இவங்க கிட்ட மாட்டிக்கிட்டேனா? எப்ப மீட்டிங் முடியறது?  எப்ப வெண்ணை வாங்கறது? வீட்டுக்குப் போக ரொம்ப லேட்டாகுமே..?”

வேறு வழியின்றி வண்டியை ஓரங்கட்டிவிட்டு, வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்ட்டிக் சேர்களில், தக்க நேரத்தில், மீட்டிங்கிலிருந்து  நழுவிவிட, வசதியான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டார் கோபிநாத்.

உள்ளூர் மேளங்கள் பேசி முடித்தபின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்.

சுவாரஸயமின்றி, மனதில் “வெண்ணை ஞாபகத்துடன் கவனித்தார்.

மெல்ல,  நிதானமாக, ஒரு கட்டிடம் கட்டப்படுவது போல உறுதியான அஸ்திவாரத்துடன் ஆரம்பித்தார், தில்லியிலிருந்து அழைக்கப் பட்டிருந்த தலைவர் முகர்ஜி. "இந்த போராட்டம் நமது சம்பளத்திற்காக அல்ல" என ஆரம்பித்தார். "இது இந்தியாவுக்கானது; சாதாரண இந்திய தொழிலாளர்களுக்காக-பொது ஜனங்களுக்காக" என உரையைத் துவக்கினார்.

பொதுத் துறை நிறுவனங்களை எதற்காக 'நேருஜி' ஆரம்பித்தார் என தனது உரையை துவக்கினார். தாராளமயம், உலகமயம், தனியார்மயம் என்றால் என விவரித்தார். இந்த LPG யினால் ஏழைகள் எப்படி இன்னும் ஏழையாகின் றனர்; பணக்காரர்கள் எப்படி இன்னும் எப்படி பணக்காரர்களாகின்றனர் என புள்ளி விவரத்துடன் விவரித்தார். 

பொருளாதார நெருக்கடிகளை, சாதாரண மக்கள் தலையில் திணித்துவிட்டு, எப்படி பன்னாட்டு நிறுவன்ங்கள் கொள்ளை லாபமீட்டுகின்றன என உணர்ச்சி பொங்க விவரித்தார். 1% பணக்காரர்களுக்காக எப்படி 99% மக்கள் பிழியப்படுகின்றனர் என்றார். “ஆக்குபை வால் ஸ்ட்ரீட்”  போராட்டம் பற்றி கோடி காட்டினார்.

அவர் பேசப் பேச, கோபிநாத்துக்கு தொழிலாள வர்க்கமும், சாதாரண மக்களும் எப்படி நசுக்கப்படுகின்றனர் என விளங்குவது போல இருந்தது. மத்திய அரசால், எப்படி பொதுத்துறை நிறுவனகள் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன என தீர்க்கமாக அலசினார். பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா, கோல் இந்தியா போன்ற நிறுவனங்களை எப்படி மத்திய சர்க்கார் அழிக்கிறது;  அதன் மூலம் எப்படி பன்னாட்டு நிறுவங்கள் கொழுக்கின்றன, கொள்ளையடிக்கின்றன என புள்ளிவிவரத்துடன் ஸ்தாபித்தார்.

"சுதந்திரப் போராட்டத்தில், பெயர் அறியா தியாகிகள் செய்த தியாகங்களை" விவரித்தார். "அவர்கள் எதற்காக தங்களது உயிர்களைத் துறந்தனர்-இப்படி அதிக்க வர்க்கத்தால் நசுக்கப் படுவதற்கா" என வினவினார்.  சென்ற தலைமுறையினர் செய்த நம்பற்கரிய தியாகங்களினிலால்தான் நாம் இவ்வளவு உரிமைகளைப் பெறமுடிந்தது என்றார்.  அடுத்த தலைமுறைக்காக நாம் செய்ய வேண்டிய சமுதாய கடமைகளின் தேவையை நினைவுறுத்தினார். அவ்வாறு செய்யாவிடில், வர்க்கக் எப்படி கடமையிலிருந்து தவறியவர்களாவோம், என நினைவூட்டினார்.

அடுத்து வந்த பேச்சாளர்களும் இந்த வகையிலேயே போராட்ட விளக்க உரைகளை நிகழ்த்தினர்.

கூட்டம் முடிந்த போது மணி ஒன்பதாகி விட்டிருந்தது. கோபிநாத்துக்கு தொழிலார்கள் பக்கம் இருந்த நியாயம் புரிகிறாற்போல இருந்தது.

இத்தனை மணிக்கப்புறம் எப்படி வண்டியில் வீட்டிற்குச் செல்வது? கோபிநாத்துக்கு இரவில் வண்டி ஓட்டுவதில் சிரமம் அதிகம். எனவே வண்டியை ஆபிசில் விட்டுவிட்டு, ஆட்டோவில் போய் வெண்ணை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்லலாம் எனத் தீர்மாணித்தார்.

ஆட்டோவிற்கு காத்திருந்த சமயத்தில் அவருக்கு ஸ்டிரைக்கில் பங்கேற்பது குறித்து இருவிதமான யோசனை தோன்றியது! மீட்டிங்கிற்கு முன்வரை வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என முடிவாயிருந்தார். உரைகளை கேட்டபின் அவருக்கு குழப்பமாயிற்று. யூனியன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் ஸ்டிரைக் செய்து இரண்டு நாள் சம்பளம் இல்லையென்றால், சம்பளத்தில் இரண்டாயிரம் ரூபாய் போய்விடுமே? மாத சம்பளம் குறைவதில் அவருக்கு உடன்பாடில்லை. என்ன செய்யலாம்? 

பேசாமல் மெடிக்கல் லீவ் போட்டு விட்டால் என்ன? ஸ்டிரைக் செய்வது போல ‘பாவ்லா காட்டிவிடலாம். சம்பளமும் குறையாது. எனவே மெடிக்கல் லீவ் போட்டுவிட தீர்மாணித்து விட்டார்.

அதற்குள் ஒரு ஆட்டோ வந்துவிட்டது. அட.. தெரிந்த ஆட்டோ டிரைவர்தான். மணிகண்டன்.

“என்ன சாரே.. இன்னிக்கு லேட்டு? ஆபீஸுல வேலை இருந்திச்சா?

“அதெல்லாம் ஒன்னுமில்லேப்பா.. யூனியன் மீட்டிங்.. முடியரதுக்கு இன்னேரமாச்சு..

“சரி.. இப்போ எங்கே போவனும்?

“முதலில் டாக்டர் நந்தீஸ்வரன் கிளினிக்குக்கு போ.. ஒம்பதரைக்கெல்லாம் போய்விடுவார். அவருகிட்ட மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கனும். அப்புறம் சங்கர் மளிகைக் கடைக்கு போ.. வெண்ணை வாங்கணும்.. அப்புறம் வீட்டிற்கு...

“சர்தான் சார்..

நல்ல வேளை.. டாக்டர் நந்தீஸ்வரன் இன்னும் கிளம்பவில்லை. இரண்டு நாள் மெடிக்கல் லீவுக்கு சர்டிபிகேட் வாங்கிகொண்டார்.  பின்னர் சங்கர் கடையில் வெண்ணை வாங்கிக் கொண்டார்.

வீட்டிற்குப் போய் ஆட்டோவிற்கு பணம் கொடுத்தனுப்புவதற்கு முன்னால், “மணிகண்டன்...., நாளைக்கு காலையில கொஞ்சம் வீட்டிற்கு வர்ரியா? ஆபீஸ் வரைக்கும் போகனும். மெடிக்கல் சர்டிபிகேட் கொடுக்கனும்.. திரும்பி வரும்போது நான் என் வண்டிய எடுத்துக் கிட்டு வந்துடுவேன்.

‘என்ன சாரே.. உனுக்குத் தெரியாதா..?  நாளைக்கும், அதுக்கு மறுநாளும் ஆட்டோ ஓடாது. ஆல் இண்டியா ஸ்டிரைக். யூனியன்ல ஸ்டிரைக் பண்ணோனும் சொல்லிக்கிறாங்க.. அதை நானு மீற முடியாது. சிட்டி பூராவும் ஆட்டோ ஓடாது.. என்ன வர்ட்டா?

நாளைக்கு மெடிக்கல் லீவு அப்ளிகேஷனை எப்படி ஆபீஸுக்கு கொடுத்து அனுப்புவது என யோசித்துக் கொண்டிருந்தார் கோபிநாத்! டிபிகல் மிடில் கிளாஸ்!!
                                    ---

No comments:

Post a Comment