Thursday, August 11, 2011

வரலட்சுமி விரத - பூஜை


இந்துக்களில் பலரும் செய்யும் வரமஹாலக்ஷ்மி பூஜை 12/08/2011 அன்று வருகிறது. இப்பூஜைக்கு, மற்ற எல்லா பண்டிகைகளையும் போலவும், ஒரு புராணக் கதை இருக்கிறது.


பார்வதியின் சாபத்துக்கு ஆளான, சித்ரநேமி என்ற தேவதை, வரலட்சுமி விரதத்தைக் அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.


சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வத்தின் அகங்காரத்தால், மகாலட்சுமியை அவமதிக்க,  செல்வங்களையும் இழந்தாள்.  அவள் மகள் சாருமதி,  வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, இப்பூஜையை செய்ய, பல நலன் களையும் பெற்றாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் இருந்து , இழந்த செல்வத்தை பெற்றாள்.


வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் சுமங்கலிப் பெண்கள்! கணவன் ஆயுள், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காக இந்த விரதத்தை மேற்கொள் கின்றனர். 


திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். தவிர்க்க இயலாத் நிலையில் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். பூஜை செய்யாவிட்டாலும் சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். அடுத்த நாள் மஹாலக்ஷ்மிக்கு ஹாரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.


மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.  நிவேதன பொருட்களை மற்றவர்களுக்கு வினியோகித்து , தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.


விரிவாக் செய்யும் முறை: 


பூஜைக்கான இடம்: 


வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலை


முன்னேற்பாடுகள்: 


பூஜைக்கான இடத்தை சுத்தம் செய்து,  கோலமிட்டு, மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தின் கீழ், தலை வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். கலச சொம்பினை அரிசி, தங்கம் ஆகிய வற்றால் நிரப்பவும். மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும். புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் முகத்தினை வைக்கவேண்டும்.  கலசத்தில் காதோலை, கருமணி ஆகியவயும் வைக்கப் படுகிறது. பின் பூக்களால் அலங்கரிக்கவும்.


வசதிப்படின், பூஜை அறையினை ஒட்டிய சுவரில், வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை வரைந்து ஆவாஹணம் செய்யலாம். 


பூஜை முறை: 


முதலில் விக்னேஸ்வர பூஜை, பின் சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ர திஷ்டை,   ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, கடைசியில் ஹாரத்தி. 


பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். .  விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும். அஷ்ட லட்சுமிகளுடன், வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட மஞ்சள் நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து, பூஜையின் முடிவில் இச் சரட்டினை கட்டிக் கொள்கிறார்கள். 


விரதம் ஆரம்பிக்கும் முன்னரோ, அல்லது முதல் நாள் மாலையிலோ, அவரவர்கள் குடும்ப வழக்கப்படி ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, சிறிய நிவேதனம் செய்து,  வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று, கற்பூரம்-ஆரத்தி எடுத்து மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்து,  (பாவனையாக) அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் 
வைத்து , விரத பூஜையை ஏற்குமாறு மகாலட்சுமியை வேண்டி ஆவாஹணம் செய்ய வேண்டும். தெரிந்தால் 'வரலக்ஷ்மியை அழைக்கும் பாடல்களைப் பாடலாம். (வரலக்ஷ்மி ராவே மா இண்டிகி)


நிவேதனப் பொருள்கள்: 


பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, பொங்கல்,தயிர், பசும்பால், நெய்,தேன்.


அடுத்தநாள் காலை புனர்ஜை செய்தபின் கலசத்தை எடுத்து அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்


-ஓம்- 

No comments:

Post a Comment