Wednesday, February 25, 2026

நல்லகண்ணு!!

ஒரு இயக்கமாகவே வாழந்து காண்பித்த ,  சரித்திர நாயகனின்  சகாப்தம் இது! 

மாபெரும் தலைவர்!  தோழர் !! இப்படி ஒரு,  தவப்புதல்வனை  இந்த நாடு, இனி காண இயலுமா  என்ற ஏக்கப் பெருமூச்சை தவிர்க்க இயலவில்லை! 

எளிய மக்களின் தோழன்! 

எப்பொழுதும் சமரசமில்லாத  நேர்மையின் அடையாளமாக வாழ்ந்து  காட்டிய மகான்! 

எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக, பொதுவுடைமைத் தத்துவத்தின் மீதும் கட்சியின் மீதும் அவர் கொண்டிருந்த விசுவாசம் துளியும் அசையாதது.

ஆடம்பரங்கள் நிறைந்த அரசியல் சூழலில், தன் கிழிந்த சட்டையைத் தானே தைத்து உடுத்திக் கொண்டும், வாடகை வீட்டிலேயே தன் வாழ்நாளைக் கழித்தும் அவர் காட்டிய எளிமை நம்மை நெகிழச் செய்கிறது.

அவருக்குக் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் நிதியையும், விருதுத் தொகைகளையும் ஒரு கணம் கூட யோசிக்காமல் மக்கள் நலனுக்காகவே திருப்பிக் கொடுத்த அந்தத் தியாகம், இன்றுள்ள தலை முறையினருக்கு ஒரு பெரும் பாடம்.

விவசாயிகளுக்காகவும், இயற்கை வளங்களைக் காக்கவும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை! 

வெறும் அரசியல்  களம் மட்டுமல்ல; இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த ஆழமான காதல் அளப்பரியது.

சிகப்பு கொடியைத் தன் உயிர்மூச்சாகக் கருதிய அந்த உன்னத மனிதர்! 

ஒரு நேர்மையான தலைவர், தொண்டர்,  மனிதர்,  எப்படி வாழ வேண்டும்/ முடியும்  என்பதை பாடமாக நடத்திக் காட்டியவர்.

அவர் ஏற்ற  தழும்புகளும் தியாகங்களும்  அழிக்கவியலா சாட்சியங்கள்! 

அவரைச் சந்தித்த தலைவர்கள், அருமைத் தலைவர் நல்லகண்ணுவின் எளிமையும், நேர்மையும் குறித்து அத்தியாயம் அத்தியாயமாக எடுத்துரைத்தாலும், அட்சய பாத்திரம் போல எடுக்க எடுக்க வற்றாத உதாரணங்கள் வந்து கொண்டே இருக்கும்.  ஏனெனில், அவர் வாழ்ந்து முடித்த ஒவ்வொரு கணமும் 'சத்திய நிரூபணங்கள்'

தோழர் ரகு தனது பணி நிறைநிறைவுப் பாராட்டு விழாவில் சொன்னார்;  இந்த தவப்புதல்வனின் கால் படுமென்றால் , இன்னும் பலமுறை பணி ஓய்வு பெறுவேன் என.

நமது  ஒவ்வொரு அன்றாட செயலில் நேர்மையையும், அர்பணிப்பையும், தன்னல மறுப்பையும்  மிகச் சிறிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் தீப் பொறியினை,  அவரை  சாதரண  வழிப் போக்கன் அளவில் பார்த்த எவருக்கும் கூட தோன்றுவது இயல்பு.  

அதுதான்  நேர்மையின் 

ஈர்ப்பு! 

வாழ்க நீ எம்மான்!

ஒரு ஆட்சி–மாதிரியாக, அவர் ஏற்ற கட்சிக் கொள்கைகள் உலகளவில்,  தோல்வியடைந்திருக்கலாம். ஒரு பொருளாதாரத் தீர்வாக பல இடங்களில் செயல்படாமல் போயிருக்கலாம்.

ஆனால்,

நேர்மையாக வாழ்வதற்கான கோட்பாடாக அது தோல்வியடையவில்லை.

அதைத்தான் நல்லகண்ணு போன்றவர்கள் வாழ்ந்து நிரூபித்தார்கள்.

அமைப்பு தோற்றது;

ஆனால் மனிதன் தோற்கவில்லை.

அரசியல் கணக்குகள் சரியில்லை;

ஆனால் நெஞ்சுக் கணக்குகள் தவறவில்லை.

இன்றைய அரசியல் சூழலில் பெரும்பாலானோர்

“ideology வேலை செய்யல என்று சொல்லிஅநாகரிகத்துக்கும், ஊழலுக்கும் அனுமதி வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் நல்லகண்ணு, சொல்லாமல் சொன்னது இதுதான்:

“கோட்பாடு ஆட்சி செய்ய முடியாவிட்டாலும்,

அது என் வாழ்க்கையை ஆளலாம்.”

அதுதான் அவரை பெரிய தலைவராக அல்ல

பெரிய மனிதராக நிறுத்துகிறது.

சிவப்பு கொடி அரசியல் தோல்வியடைந்திருக்கலாம்.

ஆனால்

நேர்மையாக இருப்பதற்கான தடையாக அது ஒருபோதும் இருந்ததில்லை.

இந்த வாக்கியம் மட்டும் இன்று பேசப்பட்டால் போதும் —

பலர் அசௌகரியப்படுவார்கள்.

அதே தான் சத்தியத்தின் power

No comments:

Post a Comment