Sunday, July 1, 2018

முக்திநாத்திற்கு ஒரு பயணம்.காலன் வருமுன்னே, கண் பஞ்சடையுமுன்னே, பாலுண்கடைவாய்ப் படுமுன்னே, மேல்விழுந்து அழ, உற்றார் எவருமில்லாவிடினும் -  உடலைச் சுடுவதற்குள் சில இடங்களைக் காண வேண்டும் என்ற அவா வலுப்பெற, ‘முக்திநாத்’ சென்று வரத் தீர்மாணித்தேன். தலத்தின் பெயரிலேயே ‘முக்தி’இருக்கிறதே!.

‘முக்திநாத்’ புத்த மதத்தவர்கட்கும்-ஹிந்துக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது! புனிதமானது! புத்தமதத்தில் ‘சுமிக் கியட்சா’ (நூறு தீர்த்தங்கள்) என்று அழைக்கிறார்கள்.

கோயில் ஒன்றும் பிரமாண்டமானது அல்ல! புத்த ‘பக்கோடா’ ஸ்டைலில் அமைந்துள்ள சிறு கோயில்தான். ஆனால், கீர்த்தி அபரிமிதமானது!  இத்தலத்தை அடைய உடல்பலமும், மனோதிடமும் அவசியம். ‘நாராயணனை முன்னிறுத்தி-சௌகரியங்களைப் பின்னிறுத்தினால், எளிமைதான்.
சாத்தியமானால்  முக்திநாத் நாராயணனைத் தரிசிப்பது-வேறெதும் நிகழ்ந்துவிட்டால் வைகுண்டத்தில் நாராயணனைப் பார்த்துவிடுவது என தீர்மாணித்து விட்டதால்,  எல்லாவற்றையும் குதூகலத்துடன் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

சாலைவழியே, இந்தியாவில் உள்ள கோரக்பூர் சென்றடைந்தேன். இவ்விடத்திலிருந்து, நேபாள எல்லைச் சிற்றூரான, ‘சொனாலி’ சென்று, அங்கிருந்து பொக்கரா செல்வது முதல் பாதி திட்டம்.

கோராக்பூர் நெருக்கடியான நகரம். ஊரைத் தாண்டுவதற்குள் மூச்சு முட்டிப் போகிறது. சாலைவிதிகள், அவர்கள் கேள்விப்படாத ஒன்று போல! ஃப்ரீ ஃபார் ஆல்!

திட்டமிட்டபடியே, மாலைப் பொழுதில் சொனாலி சென்றடைதேன்.  சர்வதேச எல்லையாயிற்றே! சிங்கப்பூர்-மலேஷியா எல்லைச் சாவடி போல நேர்த்தியாக இல்லாவிடினும், ஓரளவிற்காவது அழகாக இருக்கும் என நினைத்ததுதான் தவறு! ஆட்டோக்களும், லாரிகளும், ரிக்ஷாக்களும், சுற்றுலாவாகனங்களும், பயணிகளும் நெருக்கியடித்துக் கொண்டு.... உஃப். கள்ளக்குறிச்சி பஸ்ஸ்டாண்ட் போல இருக்கு!  45 டிகிரி வெயில்.. பிசுபிசுப்பு.. ஜன நெருக்கடி! நேபாள பர்மிட் வாங்க முட்டிமோதும் டிரைவர்கள். 

சற்றே  விலகி,  நேபாள ‘சிம் கார்டு’ வாங்கிக் கொள்ளலாம் என சுற்றுமுற்றும் தேடினால், அந்த சந்தைக்கடை நெருக்கடியில், சிறு கூரைக்குள் இருவர் அமர்ந்துகொண்டு, ‘சிம் கார்டு 100 இந்திய ரூபாய்’ என்றனர். வாய்க்குள்  மிக்ஸரை திணித்துக்கொள்வதில் சுவரஸ்யமாய்  இருந்தனரே தவிர,  ‘டேட்டா’ எவ்வளவு என்ற  சந்தேகத்தைத் தீர்க்கவில்லை! அடுத்தவாய் மிக்ஸரை வாயில் கொட்டிக்கொள்வதற்குள், பாய்ந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டு, ‘டேட்டா உண்டா இல்லியா ...  சொல்லித் தொலையுமையா.’ என்றால், 250 எம்.பி என சொல்லிவிட்டு, சடாரென மிக்ஸரை வாயில் கவிழ்த்துக் கொண்டுவிட்டார்.

நேபாளத்திற்குள் நுழைய ‘ஆதார்’ போதும். ஆனால் சிம் கார்டு வாங்க, பாஸ்போர்ட் அல்லது எலக்ஷன் ஐ.டி, மற்றும் புகைப்படம் ஒன்று ஆகியவை தேவை. கவனம்.

ஒரு இந்திய ரூபாய்க்கு, 1.6 நேபாள ரூபாய் கிடைக்கவேண்டும்.  ஆனால் கடைகளிலும்-லாட்ஜ்களிலும் 1.2 முதல் 1.5 வரைதான் தருவார்கள். முன்னதாக நேபாள ரூபாயாக மாற்றிக் கொள்வது நல்லது. 1.2 பரவாயில்லை என்றால், நேபாளத்தின் எந்த இடத்திலும் இந்திய ரூபாயை ஏற்றுக் கொள்வார்கள்.

எல்லைக்கு அப்பாலும் சொனாலிதான். அங்கே ‘மானசரோவர்’ என்ற லாட்ஜில் தங்கினேன். சுமாரான இடம். இரவுத் தங்கல் மட்டுமே என்பதால், இதுவே போதும்.
நேபாளமெங்கிலும், ரொட்டி-சாதம்-சப்ஜி கிடைக்கும். சில மார்வாரி ஹோட்டல்களில், இட்லி தோசை கிடைக்கும்.  நேபாள நேரம் இந்திய நேரத்திற்கு 15 நிமிடம் வித்தியாசம்.

காலை எழுந்து, போக்கரா பயணம்.  அழகிய சீனரிகள் நிறைந்த மலைச் சாலைகளில் ஒன்று சொனாலி-போக்கரா சாலை. திகட்ட திகட்ட காட்சிகள். கம்பீரமாய் நிற்கும் இமயமலைத் தொடர்கள். பசுமை போர்த்திய சிகரங்கள். கற்பனைக்கும் எட்டாத மலைச் சரிவு காட்சிகள். ஆங்காங்கே சலசலக்கும் ஓடைகள். ஆறுகள். நீறுற்றுகள். ஆஹா...  நெடிய-இனிய பயணம்.  நேபாளத்திற்குச் செல்வோர், விமானப்பயணத்தை ஒன்வேயாக வைத்துக் கொண்டு, சாலைவழிப் பயணத்தை மற்றொருவழியாகக் கொள்வது, அருமையான அனுபவத்தைக் கொடுக்கும்.

பொக்காரா செல்லும் போது மதியத்திற்கு மேலாகிவிட்டது. பொக்காரா நமது ‘ஊட்டி’ போன்ற ஒரு இடம். எப்ப மழைவரும் என கனிக்க இயலாது.  அங்கே ஊர் சுற்றிப் பார்க்க அரை நாள் போதும். ஆனால் அனுபவிக்க இரு நாட்களாவது வேண்டும். அங்கே ஒரு ஏரி (ஃபெவா லேக்) இருக்கிறது பாருங்கள்... என்னே அழகு! மயக்கும் மாலையில், சாரல் மழையில், ஏரிக்கரையில் நடப்பது சுகானுபவம். படகுச் சவாரி உண்டு! மாலை ஐந்துமணி வரைதான். இது தவிர ஏகப்பட்ட கோயில்கள். கடைத்தெருக்கள். தெருவிற்கு பத்து மசாஜ் பார்லர்கள். சைவம்தான். 

டிரெக்கிங் ஆசையுள்ளவர்களுக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள்.

அடுத்த நாள் காலை, பொக்காராவிலிருந்து, ‘ஜொம்சொம்’ என்ற இடத்திற்கு விமான டிக்கட் வாங்கியிருந்தேன். சிறிய 12 சீட்டர் விமானம்.  ஜொம்சொம்மிலிருந்துதான் முக்தியடைய வேண்டும். காத்திருந்தேன். ஆனால் விமானம் செல்லாது எனத் தகவல் வந்தது. வானிலை சரியில்லையாம். 

‘ஏன்... எல்லாமே நன்றாகத்தானே இருக்கிறது..’ என விண்ணைப் பார்த்தால், இங்கேயில்லை, ஜொம்சொம்மில் வானிலை மோசம் எனப் பதில் வந்தது. ஜொம்சொம் என்பது, முக்திநாத் கோயிலுக்குச் செல்லும் அடிவாரத்தில் உள்ள நகரம். அரை மணி நேர விமானப் பயண தூரம். ஆனால், சதா வலுவான காற்றடிக்கும் ஊர். சிறிய ரக விமானங்கள் இதைத்தாக்குப் பிடிக்காது.  எனவே, முக்திநாத் செல்பவர்கள், டைட் ஷெட்யூலில் செல்லக் கூடாது.  உபரியாக இருதினங்களாவது கைவசம் வைத்திருப்பது உசிதம்.  

மாற்று ஏற்பாடாக ஸ்கோர்பியோ ஒன்றை அமர்த்திக் கொண்டேன். எல்லாம் நல்லபடியாக இருந்தால், 12 மணி நேர சாலைப் பயணம். நிலச்சரிவுகள், வெள்ளம், காற்று போன்ற இயற்கை இடர்கள் நேரின்,  பயண நேரம் உத்திரவாதம் அல்ல! இது தவிர அரசியல் பந்த் ஏதும் நடைபெறாமல் இருக்க வேண்டும். அங்கே ‘பந்த்’ என்றால், கொழுக்கட்டை கணக்கு போல 108 மணி நேர பந்த் என்பார்கள். இப்பொழுது பொலிடிகல் ஸ்டெபிலிடி உள்ளதால், பந்த்கள் குறைவு.

ஒரு வழியாக இருதினங்களுக்கு மட்டும் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு, மீதி லக்கேஜ்களை க்ளோக் ரூமில் அடைத்துவிட்டு, முக்தினாத் நோக்கி ஸ்கோர்பியோவில் பயணப்பட்டேன்.  

‘பேணி’ என்ற  இடம் போக்ராவிலிருந்து 80 கி.மி தூரம். அது வரை சாலையென்று ஒன்று இருக்கும்.  தூக்கித் தூக்கிப் போட்டாலும், 30 கி.மீ வேகத்தில் பயணப் படலாம். ஆனால் பேணியிலிருந்து ஜொம்சொம் நகரத்திற்குச் செல்லும் வழி அபாயகரமானது.. பெரும்பாலும் சாலையென்று ஒன்று இருக்காது. கற்கள் துருத்திக் கொண்டிருக்கும், சேறும் சகதியுமான தடத்தில் செல்ல வேண்டும். 15 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல இயலாது. செங்குத்துத் தடம். த்ரில்லிங் அனுபவம். 

சிண்டு வைத்துக் கொண்டு, கடுக்கணும்-ஜீன்ஸும் அணிந்த இளைஞ டிரைவர், இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, பேசாமல் வாருங்கள் என்றார்.

'அட.... இட்ஸ் ஹேப்பனிங்க்... உண்மையாகவே முக்தினாத் சென்றுகொண்டிருக்கிறேன்', என்ற எண்ணம் குதூகலத்தை அளித்தது. கூடவே கெண்டகி நதி, சுழன்று, பருத்து ,சீறி, அமைதியாக உடன் பயணப் பட்டது. இந்த நதியில்தான் ‘சாலிக்கிராம கற்கள்’ கிடைக்கும்.

உலகிலேயே மிக ஆழமான கார்ஜ் காளி கண்டகி நதிதான். இரு மலைச் சிகரங்களுக்கிடையே உள்ள கிடுகிடு பள்ளத்தில் ஓடுகிறது இந்த நதி. 18,000 அடிக்கு மேல் ஆழம். அழகான ராட்சசி கண்டகி.  

அன்னபூர்ணா ரேஞ்ச், காஜா போன்று பல இடங்களில் சுற்றுலா வாகணங்களும், பயணிகளும் அனுமதி பெற்றாக வேண்டும்.  இவற்றை வாகன ஓட்டுனரே கவணித்துக் கொள்வார்.

வழியில் டடோபாணி  என்ற இடத்தில் மலைக்க வைக்கும் அருவி ஒன்று இருக்கிறது. கண் கொள்ளாக் காட்சி! இலங்கையில் உள்ள ராவணன் நீர்வீழ்ச்சியைவிட உயரமானது. அழகானது.

சாலையின் ஓரத்தையொட்டிச் செல்லும் வண்டிச் சக்கரத்திற்கு அப்பால், பல்லாயிரம் அடி ஆழம்.அந்தச் சாலையில் நடனமாடிக்கொண்டே சென்றது வாகணம்.  

திடீரென ஜீப் நின்றுவிட்டது. எங்கோ நிலச் சரிவு ஏற்பட்டுவிட்டதாம். ஜேசிபிக்கள்  தனது இரும்புக்கைகளைக் கொண்டு பாறைகளை அப்புறப்படுத்தியபின் தான் புறப்படஇயலும்.

மூன்று மணி நேர காத்திருப்பிற்குப்பின் ஒருவழியாக மீண்டும் புறப்பட்டோம். நான்கு சக்கரங்களையும் இயக்கும் வாகணமாதலால், புதைச்சேறுகளையும், கற்குவியல்களையும் எளிதாகக் கடக்க முடிந்தது. வழியெங்கும் ஜேசிபிக்கள் தேனீக்கள் போல இயங்கிக் கொண்டே இருக்கின்றன. சாலைக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மன்னராட்சி முடிந்து, மக்களாட்சி வந்ததால் கட்டமைப்புகள் வேகமாக நடைபெறுகிறது என்கிறார்கள்.

இருட்டிவிட்டது! சாலையெது? மலைமுகடு எது? பள்ளம் எது? நதி எது...? மின்சாரம் இல்லை. ஊர்களும் இல்லை. ஒன்றும் புரியவில்லை. டிரைவர் உண்மையிலேயே மிஸ்டர் கூல்தான். அவர்பாட்டிற்கு கீதாச்சார பாவத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென கெண்டகி நதியின் உள்ளேயே வண்டியைச் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ‘கரகரவென’ சரளைக் கற்களுக்கிடையேயும், தண்ணீருக்கிடையேயும் அரைபட்டுக்கொண்டு சென்றது சக்கரம்.  இந்த மனுஷன் எப்படிதான்  வழியைக் கண்டுபிடிக்கிறார் எனக் கேட்க விருப்பம் கொண்டு, பின் வாயை மூடிக் கொண்டேன்.

குளிர்காற்று.. கும்மிருட்டு.  தலைக்கு மேலே வெள்ளம் போனால், ஜானென்ன முழமென்ன?

இரவு மணி பத்து.. ஜொம்சொம் எப்ப வரும்?

பிடித்துக் கொண்டது  நல்ல மழை.

நல்ல வேளை.. கெண்டகி நதியில் சென்றுகொண்டிருக்கும் போது மழை இல்லை! திடீரென ஃபளேஷ் வெள்ளம் வராமலிருக்க வேண்டுமே?

ஒரு வழியாக ஜொம்சொம் ஊரை அடையும்போது மணி 11ஐத் தொட்டது.  அந்த நேரத்தில், ஏற்கனவே புக் செய்திருந்த லாட்ஜ் ஒன்றில், சுடச் சுட சப்பாத்தி-ரசம்-தயிர் கொடுத்தார்கள். தேவாமிர்தம்.

டிரிங்க்ஸும் வைத்திருக்கிறார்கள்.

டிரைவர் அறிவித்தார். ‘நாளை விடியற்காலை நாலு மணிக்கு ரெடியாக வேண்டும். நேராகக் கோயிலுக்குச் சென்று குளித்து, பின் ஸ்வாமி தரிசனம் முடித்துவிட்டு, திரும்ப லாட்ஜுக்கு வந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, போக்காரா செல்ல வேண்டும். லேட் செய்யாதீர்கள்.”

இப்பவே மணி 11... எப்ப தூங்கி, எப்படி நாலு மணிக்கு, இந்த நடுங்கும் குளிரில் தயாராவது?

ஜொம்சொம் அடிவாரத்திலிருந்து, முக்திநாத் 22 கி.மீ தூரம். 

நாலாபுறமும் தௌலகிரி மலையும், சிறிய ரன்வேயும், நில்கிரி மலையும் சூழ்ந்த ஊர் ஜொம்சொம்.

காலை எழுந்து, ராணிபுவா ஊரை அடைந்து, பின் முக்தி நாதரை தரிசித்த  விபரங்கள் அடுத்த பகுதியில்.........
9 comments:

 1. இன்றுதான் இத்தளத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. முக்திநாதரை தரிசிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. முக்திநாத்செல்லும் நம்டைய டீம் இருந்தால்ொல்லுங்கள் எங்ளையும்
  கூட்டிசெல்லமுடியுமா

  ReplyDelete
 3. முக்தி நாதனை தரிசிக்க
  சக்தி நாதனின்
  அருள் வேண்டும் !!

  ReplyDelete
 4. Arputhamana katturai. Adutha paguthikku kathirukeren.

  ReplyDelete
 5. உங்களுடைய பயண அனுபவம் சுவாரசியமாக இருந்தது, இயற்கை மட்டுமல்ல உங்கள் எழுத்து நடையும் காரணம்.

  இங்கே செல்ல முடியும் என்று தோன்றவில்லை, சென்றால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தை இக்கட்டுரை கொடுத்தது.

  தனியாக இல்லாமல் உடன் ஒத்த எண்ண அலைவரிசையில் உள்ளவர் இருந்தால், பயணம் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 6. Smooth progressive fluent blog on Mukthinath visit. Keep writing. A map atracattacwill be a feather in the crown.

  ReplyDelete