Friday, December 30, 2016

முடிசூட்டு விழா

அரசியலில், தலைமைக்கு வருவது என்பது, இந்தியாவைப் போல உலகில் வேறெங்காவது இப்படி விசித்திரமான முறையில் நடந்தேறுமா என்பது சந்தேகம். 

அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வருதல், எக்ஸ்ம்பளரியான ஆளுமை, திறமை, ஞானம், பொது நலத்தில் நாட்டம், மேடைப் பேச்சுத் திறன் என, எதுவும் நமக்கு வேண்டாம். சாதாரண   நிலையில் உள்ள எவரும், சமுதாய நிகழ்வுகளை-போக்குகளை ஊன்றிக் கவனித்தல், கற்றுக்கொடுத்தல், கற்றுக்கொள்ளுதல், பயிற்சி, பர்செப்ஷன், கள அனுபவம், விவேகம், சாணக்கியத்தனம்  ஆகியவற்றின் மூலமே தலைவராகலாம் என்ற விதிகள் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது.

தலைமைக்கு வருவதற்குத்  தேவையான காரணிகளாக, நமக்கு இங்கே, இரண்டு இருந்தால் போதும். ஒன்று தலைமையில் இருப்பவர் காலமாக வேண்டும். இரண்டாவது காலமானவருக்கு  மணைவியாகவோ, கணவனாகவோ, மகனாகவோ, மகளாகவோ ஏன் மருமகனாகவோ இருந்தால் கூட போதுமானது. உடனடியாக கிரீடம் சூட்டப்பட்டு விடும். தற்போதைய நிலையில், மறைந்தவருக்கு மாத்திரை, மருந்து எடுத்துக் கொடுத்தவராக இருந்தால் கூடப் போதுமானது. முடிசூட்டுதல் இங்கே ஆட்டோமெடிக்.

வியாபார குடும்பங்களைப் பற்றியும், விவசாயக் குடும்பங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் “அரசியல் குடும்பங்கள்” என்பது விசித்திரம்தானே? நேரு குடும்பம் தொட்டு இன்றைய கலைஞர் குடும்பம் வரை “வாரிசு அரசியல்” , வாரிசுகள் தலைமையேற்றுக் கொள்ளுதல் என்ற விஷயம்,  நமக்கு எந்தவித உறுத்தலையும் தரவில்லை.  

அதெப்படி ‘குடியரசு தேசத்தில்’, ‘முடியரசு கலாச்சாரம்’ இவ்வளவு எளிதாயிற்று என்பது இந்தியாவின் பல்வேறு அவிழ்க்கவியலா ‘முடிச்சுகளில்’ ஒன்று. இந்திய அரசியல் ‘குடும்ப அரசியல்வாதிகளால்’ நிரம்பிக் கிடக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

விடுதலைக்கு முன் இருந்த ‘ராஜாக்களின் வாரிசே ராஜா’ என்ற சிண்ட்ரோமிலிருந்து  இந்தியா விடுதலையாகவே இல்லை. அதனால்தான், ‘ராஜீவுக்குப்பின் சோனியா’ என்ற விசித்திரத்தை எந்தத் தயக்கமும் நெருடலும் இன்றி ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

ஓராயிரம் சந்தேகங்கள், மர்மங்கள், குழப்பங்கள் நிரம்பிய ஒரு மரணத்தின் மைய முடிச்சாக இருந்தவரிடமே, தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப் படுவதை, எவ்விதம் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்கிறோம்?  இன்னும் சில தினங்களிலேயே அவரிடம்அரசியல் அதிகாரமும் ஒப்படைக்கப் பட்டுவிடும்!  எந்தவித முணுமுணுப்பும் இன்றி அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தாங்கள் குவித்து வைத்துள்ள சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே! அதற்காக அவர்கள் எவர் காலையும் நாவால் துடைக்கத் தயங்க மாட்டார்கள்!  மக்களுக்குத்தான் ‘நாலரை நாட்டுச் சனி’

கவலை கொள்ளத்தக்க விஷயங்களாக கருதுபவை இரண்டு. ஒன்று மக்களின் மனோ நிலை. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், “ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன “  என உதறிவிட்டுப் போகும் மனோ நிலைமை.  

இரண்டாவதாக, இந்த அஜனனாயக போக்கை கண்டித்துக் கேட்கும் தார்மீக உரிமையற்ற எதிர்க்கட்சிகள். அவர்களிடத்திலும் ‘வாரிசுகள் போக்கே’ நீடித்திருப்பதால் வாய்மூடிக் காத்திருக்கிறார்கள்.

தகுதியான, திறமையான, நேர்மையான, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்கள் ஏன் இந்தியாவில் உருவாகவில்லை? அல்லது உருவாக்க முடியவில்லை? அவ்வித நேர்மையாளர்களை ஏன் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

புத்தியற்றவர்களும், ஊழல் புரிபவர்களும், நேர்மையற்றவர்களும், நாட்டைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்றவர்களும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்துக்களை வாங்கிக் குவிப்பவர்களும், தேசத்தைப் பற்றி ஒரு திட்டமும்-விஷனும் இல்லாதவர்களும் எப்படி சிரமம் இன்றி தலைவர்களாய் நெஞ்சு நிமிர்த்தி உலவ முடிகிறது?  தலை சுற்றுகிறது.

எனக்குத் தோன்றும் காரணம் ‘இந்த அவலத்திற்கு மக்களே காரணம்’ என்பது தான். சிலரைத் தவிர பெரும்பான்மையான மக்களுக்கு,  நாட்டைப் பற்றிச் சிந்திக்க முடிவதில்லை. மக்களாட்சி என்றால் என்னவெனப் புரியவில்லை. அதன் மகத்துவமும் விளங்கவில்லை. மக்களது வாழ்விற்கும், தாழ்விற்கும் அரசியலே காரணம் என்பது எடுபடவில்லை. மக்கள், அரசியலில் ஈடுபடாவிடில், அரசியல் மக்களின் உணவைக் கொண்டுபோய்விடும் என்பது எட்டவில்லை.
அவர்களுக்குத் தெரிந்த்தெல்லாம், தேர்தல் என்றால் “சாராயம், பிரியாணி, இலவசம், பணம்”.. இவை மட்டுமே. தேர்தல் என்பது மக்களின் எதிர்காலம்-நாட்டின் எதிர்காலம் என்பது புரியவே இல்லை. 

போராட்டம் என்றால் அது சாதி சார்ந்ததாகவோ அல்லது வேறு சில உதிரிக் காரணங்களுக்காகவோ தெருவில்  நிற்பதுதான்.

‘அன்னிய துணிகளை வாங்கக் கூடாது’ என்று அறைகூவல் விட்ட காந்தியின் வேண்டுகோளை ஏற்று, வெளிநாட்டுத் துணிகளை ஏற்றிவந்த டிரக்கின் முன்னால் நின்றுகொண்டு நகர மறுத்து, டிரக்கினால் நசுக்கிக் கொல்லப்பட்டவரின் வரலாறெல்லாம் மக்களுக்குப் புரியவில்லை. பகத்சிங்கின் உக்கிரம் நமக்கு ஒரு சுவாரஸ்யமான கதை. விடுதலைக்காக உயிரைவிட்ட லட்சக்கணக்கான தியாகிகளின் சரிதங்களை ஒரு கதையாகப் பார்க்கத் துவங்கிவிட்டோம். 

இன்னமும் சுதந்திரம் காந்தியால் ‘வாங்கிக் கொடுக்கப்பட்டது’ என்றுதானே  நம்புகிறோம்? போராடிப்பெற்றோம் – அந்தப் போராட்டதின் தலைவராக காந்தி போன்றோர் இருந்தனர் என்பது சொல்லப் படவில்லையே?


தன் வயிற்றைத் தாண்டி, தன் மதத்தைத் தாண்டி, தங்கள் சாதியைத் தாண்டி யோசிக்கத் தெரியாமல் ‘மழுங்கடிக்கப்பட்ட’ மக்களால் ஒரு போதும் தகுதியான தலைவர்களை உருவாக்க முடியாது.  

என்றாவது ஒரு நாள் மக்கள் விழித்துக் கொள்வார்கள். அதுவரை Sinனம்மாக்கள் குதூகலித்துக் கொள்ளட்டும்.

4 comments:

  1. அருமையான, ஆழமான அலசல்

    ReplyDelete
  2. 100% True. It is we, the people, who are responsible. People get the leader / govt they deserve - Suresh

    ReplyDelete
  3. தேசப்பற்று இருந்தால் ஒழிய இது போல் ஆதங்கம் மிகுந்த வார்த்தைகள் வந்து விழாது

    ReplyDelete
  4. absolutely correct... our country's status is on the voting day who ever gives money and bririyani and liquor people vote them.. in villages based on the caste..

    ReplyDelete