Saturday, January 24, 2015

உணவே விஷம்.

நமது நாட்டில் மக்களின் வாழ்வு, தொழில் நுட்பத்தினால் மேன்மை அடைந்துள்ளது எனப் பெருமிதம் கொள்கிறேம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த மக்களைவிட உடல் வலிமையிலும், நோய் எதிர்ப்ப சக்தியிலும் பின் தங்கியிருக்கிறோமா அல்லது வலுவாகியிருக்கிறோமா என்பது ஆராயப்பட வேண்டிய வினா.

மனிதனின் சராசரி ஆயுள் அதிகமாகி உள்ளது! உண்மை.. ஆனால் முற்காலத்தில் இறுதிவரை தெம்புடன் இருந்து வந்தனர். இப்பொழுது அதிக நாள் வாழ்கிறோம். உபகரணங்கள், மற்றும் மருந்துகள் மூலமாக – நடைப் பிணம் போல.  சாலை முக்குக் கடையில் ‘டீ’ போடுபவர் கூட கேட்கிறார்! சர்க்கரை நார்மலா? ஆஃபா?

நமது தேகம் வலுவிழந்து போனதற்கு நாம் நமது பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கத்தை கைவிட்டது தான் காரணம்.

நமது உணவுப் பழக்கம் ‘உணவே மருந்து’ அடிப்படையில் அமைந்தது. தற்போதைய உணவுப் பழக்கத்தால் ‘உணவே எமன்’ என்ற  நிலைக்கு  தள்ளப்பட்டிருக்கிற்றோம்.

நமது உணவான இட்லி-சாம்பார், அவியல், ரசம், சிறுதானியங்கள் , எள், சிகப்பரிசி, பெருங்காயம், கசகசா போன்றவை உடலை வலுவாக்கின.

கீழ்க்கண்ட பத்து விதிகளை கடைப்பிடித்தாலே, பெரும்பாலான வியாதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்?

1. பிராஸஸ்டு (பதப்படுத்திய) உணவுப் பக்கம் போக வேண்டாம்.  ரெடிமேட் சப்பாத்தி, நூடுல்ஸ், டப்பா பால்-தயிர், சிப்ஸ் போன்றவை. ‘சுருக்கமாக ரெடி டு ஈட்’ வேண்டவே வேண்டாம்.

2. இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு என வற்புறுத்தும் டி.வி விளம்பரங்களின் வரும் உணவு-போஷாக்கு பாணங்களைத் தவிருங்கள்.

3. சிப்ஸ், கணக்கின்றி கிடைக்கும் நொறுக்குத் தீனி வகைகளைத் தவிர்க்கலாம். பதிலாக கொட்டைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் உன்னதம்.

4. இயந்திரங்களால் தயாரிக்கப்படும் உணவுகள். மனிதர்களின் கைபட்ட உணவே உத்தமம். குறிப்பாக, தாய்-மனைவி.

5. பருவ கால உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். வருஷம் முழுவதும் மாம்பழம் என்பது தப்பாட்டம்.

6. காய்கறிகள் முதலிடம். பறவைகள் இறைச்சி / மீன்கள் இரண்டாம் இடம். நான்கு கால் பிராணிகளின் இறைச்சி குறைவாக.

7. இயற்கையான முறையில், இரசாயனக் கலப்பின்றி விளையும் தானியங்கள் / காய்கறிகளை தெரிவு செய்யுங்கள்.

8. உப்பும் சர்க்கரையும் மிதமாக.

9. செயற்கை குளிர் பாணங்கள் (கோலா வகைகள்) பக்கம் போக வேண்டாம்.

10. மருத்துவருக்கு கொடுப்பதைவிட, பலசரக்கு கடைக் கார்ருக்கு கொடுங்கள். தரம் அறிந்து தேடிப் பார்த்து வாங்கவும்.

பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கத்திற்கு திரும்பினாலே பாதி பிரச்சினைகள் இல்லை.
                                                                                            -சுதேசி செய்தி (ஜனவரி-15)

Wednesday, January 21, 2015

அல்ப ஆசை...

வயசான காலத்தில், வாயை மூடிக் கொண்டு ‘கம்மென..’ இருந்திருக் கலாம். அல்லது கிடைக்கும் இடத்திற்குப் போய் விட்டிருக்கலாம். சபலம் யாரை விட்டது? வாயைக் கட்ட முடியாமல் அப்படி என்ன அல்ப ஆசை? 

மதியம் மூணு மணி. தூக்கம் கண்களை சுழற்றும் நேரம். ஒரு மயக்கத்தில் கிடந்த சமயம்.  யாருடைய போதாத காலமோ, எனது நன்பருக்கு என்னை சீண்டிப் பார்க்க வேண்டும் என தோன்றிவிட்டது. 

வேலைமெனக்கெட்டு, அந்த நேரத்தில், என்னைக் கூப்பிட்டு, கண காரியமாக, இன்று ஐந்து வடை சாப்பிட்டேன் என சொல்லிவைத்தார். 

ஏற்கனவே, எனக்கு, அந்த வட்ட வடிவ, பொன்னிற அமிர்தத்தின் மேல் மையல் அதிகம். ஆசை காட்டிவிட்டார்.

இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு, மேலே கிரிஸ்பியாக, உள்ளே சாஃப்டாக, மணமணக்கும் சூடான மெதுவடைகள் மனதில் ஓடியது. ஆஹா..

“இதை ஏன், இந்த நேரத்தில் என்னிடம் சொல்லி, ஆசையை கிளப்பிவிட்டீர்?  வடை சாப்பிடும் ஆசை வந்து விட்டது.  நானே செய்யப் போகிறேன்!”

‘கேளும், உமக்கு வடை வேண்டுமெனில், ஆனந்த பவனுக்கோ, ஆனந்தமில்லா பவனுக்கோ சென்று சாப்பிட்டுவிட்டு வாரும்! நானே செய்கிறேன் என கிளம்பினீர்... விளைவுக்கு நான் பொறுப்பல்ல...’


“வடை செய்வதில் என்னங்கானும் பொல்லாத சாமர்த்தியம் வேண்டிக் கிடக்கு? நான் செய்யப் போகிறேன்.. உமக்கும் கொண்டு வந்து தருகிறேன்”

‘இந்த வேலையே வேண்டாம்... நீரே செய்து, நீரே சாப்பிட்டுக் கொள்ளும்.. என்னிடம் கொண்டுவந்து கொடுக்கும் எண்ணம் ஏதாவது இருந்தால், அதை உடனடியாக ரத்து செய்து விடும்.. புரிகிறதா? நான் என்ன பரிசோதனைச் சாலை எலியா?’

‘உமக்கு சாப்பிடும் கொடுப்பினை இல்லைங்கானும்... செஞ்சு காமிக்கிறேன் பாரும்...’

‘மனுஷனுக்கு சாமர்த்தியம் இல்லாட்டியும் பரவாயில்லை! ஆனால் தனக்கு சாமர்த்தியம் இல்லைன்னு தெரிஞ்சுக்கற சாமர்த்தியமாவது வேணும்... நமக்கு வடை சுட வராதுன்னு அனுபவப்பட்டு சொல்றேன்... கேட்க மாட்டேங்கிறீர்.. அனுபவியும்...’

வைத்து விட்டார்.

உடனடியாக களத்தில் இறங்கினேன். உளுந்தை ஊர வைப்பதற்கு முன்னால், திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டிக் கொள்ளலாமா என உத்தேசித்து, வேண்டாம்.., அவர் ராஜபக்ஷேவை கவிழ்த்து விட்ட (ஆ)சாமி யாச்சே என பயந்து, வடைப் பிரியரான ஆஞ்சனேயரிடமே,  ‘உளுந்தும், இஞ்சியும், பச்சை மிளகாயும், வெங்காயமும் நான் உனக்குத் தருவேன், செம்முகத்துத் தூமணியே நீ எனக்கு மெதுவடை தா’ வென பிரார்த்தனை. 

அரைத்த மாவு விழுதிலிருந்து கொஞ்சம் விண்டு, பிளாஸ்டிக் பேப்பரில் ‘சொத்’ தென மெல்ல அறைந்து, வட்ட மாக்கி, நடுவில் ஓட்டை போட்டால்,  விரலைவிட்டு மாவு விலகாமல் கூடவே வந்தது. இது என்ன ‘உடன் பிறப்பு’ மாவா? ‘கையை’ விட்டு விலக மாட்டேன் என்கிறதே என வியந்து, மீண்டும் வழித்து ஒரு அறை. ஹி..ஹி.. குறி தவறி, பிளாஸ்டிக் பேப்பரைவிட்டு விலகி, மேடையில் விழுந்தது மாவு. 

ரோஷக்கார மாவு போலும் – டைகோ போல.. கூட்டணியிலிருந்து விலகிவிட்டதே எனத் தவித்து, இந்த முறை, நிதானமாக முயல, வட்ட வடிவில் மாவும், நடுவில் பெரும் குழியும்.

அப்படியே எடுத்து, எண்ணெய் சட்டியில் போட முயல, மாவு அப்படியே ஒன்று சேர்ந்து கொண்டு, ‘ஸ்ரீலங்கா’ மேப் போல நீள் உருண்டையாக எண்ணையில் விழுந்தது. சே.... அப சகுனமாயிற்று.. அதை எடுத்து, டஸ்ட் பின்னில் போட்டு, மீண்டும் முயல, இம்முறை மாவு கையைவிட்டு விலகாமல் ‘ஜாமீன் வாங்க’ மறுத்தது.  லேசாக உதறி என்ணையில் போட யத்தனிக்க, வடைமாவுக்கு பதிலாக, விரல் நுணி எண்ணைசட்டியில்! ஆ.. வென அலறி, தண்ணீர் மக்கில் கையை நனைத்து ஆசுவாசம். ஆனால், அதற்குள், வடை பழைய ‘சோவியத் யூனியன்’ சைசில் சட்டி முழுவதும் ஒரே வடையாக..  அதை எடுக்க முயல, அது பழகிரி போல, இன்னமும் நான் சட்டியில்தான் இருப்பேன் என அடியில் ஒட்டிக் கொண்டது.. அதுவும் டஸ்ட்பின்னுக்கு அர்ப்பணம்

விரல் எரிச்சலுக்காக தண்ணீரில் கையை நனைத்ததால், அடுத்த வடை ஒழுங்காக வந்தது. (தண்ணீரில் கையை லேசாக தொட்டுக் கொள்வதுதான் சூட்சமமா?) ஆனால் வட்ட வடிவமும், மெதுவடைக்கே உரித்தான அந்த ‘கவர்ச்சி’ தொப்பூழும், மிஸ்ஸிங்.. ஓட்டை இல்லாத வடையா? 

சரி..சரி.. ஷேப் எப்படி இருந்தால் என்ன? சுவைதான் முக்கியம் என சமாதானம். 

இனியும் டஸ்ட்பின்னுக்கு அர்ப்பனம் செய்ய, மாவு இல்லாததினால், வந்த வரைக்கும் லாபம் என செய்தாயிற்று.  

எடுத்துப் பார்த்தால், முற்போக்கில் அது போண்டா போலவும், பிற்போக்கில் பக்கோடா போலவும் தெரிந்தது. எந்தப் போக்கிலும் வடை போலத் தெரியவில்லை. 

பெயரில் என்ன இருக்கிறது? சகலமும் பரமாத்வே (உளுந்துமாவே) அல்லவா? போண்டா,வடை, பக்கோடா நாமகரணம் சொல்லிக்கொள்வதெலாம் நமது வசதிக்காகத்தான் என ‘பலராமானந்தா’ தத்துவம்.

தேறியது.. பத்து உளுந்து உருண்டைகள் என வைத்துக் கொள்ளலாம்.

பத்து ‘அனாமிகாவையும்’ நானே விழுங்குவது சாத்தியமில்லாத காரணத்தால், காஷ்மீர் கூட்டணிக்கு ஆள் தேடுவது போல, இதை யாரிடம் பகிர்ந்து கொள்ளலாம் தேடினேன். கீழே குடியிருக்கும் பாட்டியிடம் கொண்டுபோய் கொடுத்தேன். இந்த கூட்டணியின் தர்ம்ம் என்னவென்றால் , ‘அந்த பாட்டிக்கு சரியாக கண் தெரியாது’ என்பது தான். 

அவர் இந்த வஸ்துவை உருட்டிப் பார்த்துவிட்டு ‘இது என்ன?’ என்றார்! வாயில் போட்டுக் கொண்டு, ‘இது என்ன போன மாசம் செய்த களியின் மீதியா?’  என்று கேட்கக் கூடிய அபாயம் கண்ணுக்கு தென்படவே, பாட்டியிடமிருந்து வடைகளை ‘பறித்துக் கொண்டு’ வந்துவிட்டேன்.

ஒரு சந்தேகம் சொல்லுங்கள்! இந்த ‘வடை மாகத்மியத்தை’ என்னை கிளப்பிவிட்ட அந்த நன்பருக்கு சொல்லலாமா, வேண்டாமா?இப்பவே, அவருடைய வீரப்பா வில்லன் சிரிப்பு காதில் ஒலிக்கிறதே?

(சமயலறையை சுத்தம் செய்ய 'ஸ்வச் பாரத் ஆட்கள் யாராவது இருக்காங்களா? மோடியிடம் கேட்டுப் பார்க்கனும்)
                                                                 -0-

Tuesday, January 20, 2015

கங்கை நதிக் கரையினிலே ...

ஜன்னல் கதவை மெல்லத் திறந்தேன். வெளியே கடுமையான பனி மூட்டம். எதிரில் ஐந்தடிக்குமேல் பார்க்க முடியவில்லை. குளிர் முழுத்தீவிரத்தோடு எதிர்ப்படும் எல்லாவற்றையும் ஊடுருவிக் கொண்டிருந்தது. எனக்கு தாடைகள் நடுங்கத் துவங்கிவிட்டன.  நான் தங்கியிருந்த அறை, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்தது. அது ஒரு மொட்டை மாடி. மொட்டைமாடியின் இருபக்கத்திலும் அறைகளைக் கட்டி விட்டிருந்தனர். எனவே வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மணி காலை ஐந்தரைதான். எனது ஊர்பழக்கம், இங்கும் விழிப்பு வந்துவிட்டது. விடுதியில் எவரேனும் விழித்திருக்கும் சுவடே காணோம்.  நிசப்தத்தில் அனைத்தும் உறைந்து கிடந்தது. சூடாக ‘டீ’ சாப்பிடத் தோன்றியது! எனக்கு அதிகாலையில் டீ சாப்பிடும் வழக்கம் இருந்ததில்லை! குளிர், பழக்க வழக்கங்களைக் கூட மாற்றிவிடுகிறது. மனைவி இருந்திருந்தால், இந்த குளிருக்கு என்ன சொல்லுவாள்? அவள் குளிரை குதூகலமாக அனுபவிப்பாள். மலைகளையும் அருவிகளையும் காணும் போதெல்லாம் உற்சாக ஊற்றுதான்.  அவளுக்கு ‘டீ’ எப்பொழுதுமே விருப்பமான ஒன்று. விரக்தியான ஒரு சிரிப்புதான் வந்தது. அவள் இருந்திருந்தால், இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமென்ன?
 அறையைப் பூட்டிக் கொண்டு, கீழே இறங்கினேன். மாடிப் படிகளில் சில நாய்களும், பிச்சைக் காரர்களும் சுருண்டபடி. வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. காவலாளியை, போராட்டத்திற்குப் பின்  தான் எழுப்ப முடிந்தது. தூக்கத்தில் முணகியபடி கதவைத்திறந்து விட்டான். ‘சை.. இந்த லாட்ஜில் வாட்ச்மேனாக இருப்பதைவிட கக்கூஸ்களில் இரண்டு ரூபாய் டிக்கட் விக்கலாம்!’.  இது என்ன லாஜிக் எனப் புரியவில்லை. காலை நேரத்தில் அவனை வம்பிழுக்கும் உத்தேசமும் இல்லை. அந்த அளவிற்கு இந்தியும் எனக்குத் தெரியாது. காசி,பனாரஸ், வாரணாசி என பல பெயரில் அழைத்தாலும், நமக்கு ‘காசி’ மட்டுமே பழகிவிட்டிருந்தது. வெளியே காசி நகரம், விழித்து வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது போலும். நாலு நாட்களாக இந்த தெருவில் போய் வந்து கொண்டிருந்த படியால், ஆளைக் குழப்பும் சந்துகள் பிடிபட்டுவிட்டிருந்தன.

கடும் பனியிலும், பண்டாக்களும் புரோகிதர்களும், சற்று தூரத்திலேயே ஓடும் கங்கையை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், யாத்ரீகர்கள் பூஜைச் சாமான்களோடு ஓடிக் கொண்டி ருந்தனர்.
 இந்த மூடுபனியிலும் காய்கறி தள்ளு வண்டிகள். 

 பருத்த மாடுகள்,  நகர சந்துகளெங்கும் சானமிட்டபடி அசைந்து சென்று கொண்டிருந்தன. ஆடுகளுக்கு சட்டை போட்டு விட்டிருந்தனர்.

 சற்று தள்ளி, தெருமுனையொன்றில் டீக்கடை.  அருகில் சென்றதும் சாய்வாலா என்னை அடையாளம் கண்டுகொண்டார். புன்னகையுடன் ‘ஆவோ சாப்.. சாய் சாஹியே?’  கைகள் குளிரால் நடுங்குவதைக் கண்டதும், குமுட்டியில் வைத்திருந்த கெட்டிலை அகற்றி, கைகளை வாட்டிக் கொள்ளச் சொன்னார், சைகையில். எனக்கு இந்தி வராது என்பது அந்த தெருவுக்கே தெரியும் போலுள்ளது. சூடான இஞ்சி டீ இதமாகத்தான் இருக்கிறது. அந்த டீக்கடைக் காரருக்கு ஏதேனும் கொஞ்சம் கூடுதாலக செய்ய வேண்டும் எனத் தோன்றியது. குடித்து முடித்த பிளாஸ்டிக் கப்பை  நீட்டி, ‘அவுர் ஏக் சாய்...’ திரும்ப அறைக்கு திரும்பும் போது, யாத்ரீகர்கள், அந்த கடும் குளிரிலும், கங்கையில் குளித்துவிட்டு, ஈரமான உடைகளுடன் சென்று கொண்டிருந்தனர். எனக்கு கங்கையை பார்க்க வேண்டும் போல் தோன்றவே, எதிர் சந்துவழியே சென்றேன். மெல்லிய வெளிச்சத்தில், இந்தியாவின் அந்த மகத்தான நதியில், விளக்குகள் மினுங்கியபடி மிதந்து கொண்டிருந்தன.  நதியின் அக்கரை தெரியவில்லை. படிகள் எங்கும், யாத்திரை வந்தவர்களுக்கு, எதோ ஒரு பூஜை செய்வித்துக் கொண்டிருந்தனர் பண்டாக்கள். பக்தர்கள் ‘ஹே.. மாதா’ என்றோ, ‘சம்போ மகாதேவ்’ என்றோ முழங்கியபடி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தனர். கங்கை என்னவோ எந்த சலனமும் இன்றி, நிசப்தாக ஓடிக் கொண்டிருந்தாள்.
 அறைக்கு வந்து, குளித்து, வேட்டி அணிந்து, வெற்று உடம்பில் துண்டு ஒன்றை போர்த்திக் கொண்டு, எனக்கான ஒரு ‘சாஸ்திரிகள்’ இடத்தை  நோக்கி நடந்தேன். எனக்கு என்ன வேண்டும் என,  இந்த காசியில் வந்து சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன்? சட்டென மனிதில் வெறுமையும், தனிமையும், விரக்தியும் அப்பிக் கொண்டது. சாஸ்திரி, விஸ்தாரமாக, சர்வ நிதானமாக, மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார். அவற்றை திரும்பச் சொல்ல வில்லையெனில், அடித்து விடுவார் போல. அவ்வளவு திருத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். பள்ளி மாணவன் போல, அவர் சொன்னவற்றை, திரும்பச் சொல்லி, சடங்குகளை செய்து கொண்டிருந்தேன். பெயர் சொல்லுங்க... ‘விஜி..’ ;
கோத்திரம்....? சொன்னேன்..
 மந்திர கோஷங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. புரோகிதர்களுக்கு தானம் அளிக்கும் முறை வந்தது. ஒரு புரோகிதருக்கு வெள்ளியினால் ஆன ‘பசுவின்’ உருவம் பதித்த காயின் ஒன்று. நெருப்பாற்றை கடக்க இது உதவுமாம். ‘ஏங்க... நாம ஒரு பசுமாட்டிற்கு, ஒருவருஷத்திற்காகும் தீவனச் செலவை ஏற்றுக் கொண்டால் என்ன? கோவிந்தபுரத்தில் அந்த வசதி இருக்கிற தாமே?’ ‘அது கோவிந்தபுரமோ அல்லது வேறு எந்தபுரமோ, உனக்கு விருப்பம் எனில் எதுவேண்டுமானலும் செய்யலாம். இந்த வாரமே போகலாம் வா..’ அவள் உயிருடன் இருக்கும் பொழுது, செய்த அந்த புன்னியத்தைவிடவா, இந்த ‘வெள்ளிக் காசு’ செய்துவிடும்? பிறருக்கு உதவுவது என்றால் கண்களில் பிரகாசம் வந்துவிடும் அவளுக்கு. செய்யும் உதவிகளை ஆர்பாட்டமில்லாது, அமைதியாக மறுபேருக்கு தெரியாமல் செய்ய வேண்டும் அவளுக்கு... ‘என்ன மாமா என்ன யோசனை...? இந்த பஞ்சபாத்திர உத்தரிணிகளை அவருக்கு கொடுங்கோ!’ ‘நமக்கு தேவையில்லாத்தை கொடுப்பதில் என்ன பெருமை இருக்கு? அவர்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதில்தான் திருப்தி!’ ‘சரி..’ ‘நம்மிடம் ஒரு தையல் மிஷின் இருக்கு, அதை அவளுக்கு கொடுத்துவிடலாம். அதை வைத்துக் கொண்டு, பிழைத்துக் கொள்வாள். அவளுக்குத்தான் டைலரிங் தெரியுமே?’ ‘உன் விருப்பம் விஜி..’ தான காரியங்கள் நடந்து கொண்டே இருந்தது... அவளது ஈகைக் குணங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. புரோகிதர்களுக்கு உணவு படைத்து, சன்மானம் அளித்து, அனைத்தும் நிறைவடைந்தது. ‘உங்க பத்தினிக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும், நாலு நாளா சிரத்தையோடு பிரமாதமா நடத்திட்டீங்க... ஒரு வருஷமா நீங்க செய்து கொண்டிருந்த, பல பித்ரு காரியங்கள் இன்றோடு பூர்த்தி யாகிறது. இனிமே வருஷாந்திரம் வரும் திதி தான்.   நீங்க ஷேமமா இருப்பீங்க...  உங்க வாரிசுகளும் நல்லா இருப்பாங்க.... ’  வாழ்த்தினார் சாஸ்திரி. எதை எதிர்பார்த்து இந்த காரியங்களைச் செய்கிறேன்? இங்கு செய்வது நிஜமாகவே அந்த ஆன்மாவுக்கு போய்ச்சேரும் என நம்புகிறேனா? அவள் நற்கதியடைய இந்த கர்மாக்கள் உதவுமா? தெரியவில்லை!
 தடங்கல்கள் இடையூறுகள் எல்லாவற்றிற்கும் இடையே, காசியில்தான் மனைவியின் முதல்  வருஷ காரியங்களை செய்தாக வேண்டும் என, ஏன் பிடிவாதமாய் இருந்தேன்? இந்த  நிகழ்வுக்காக ஏன் எனது தோலை தடித்ததாக மாற்றிக் கொண்டேன்? இயல்புக்கு மாறாக மௌனத்தையே ஏன் மொழியாகக் கொண்டேன்?
 இத்துடன் விஜியுடனான அனைத்தும் முடிந்துவிட்டதா? ஒருவருட காலம் காத்திருந்தது இக்கணத்திற்காகவா? மனைவியை இறைவன் காலடியில் சேர்ப்பித்தாகிவிட்டது என்ற நிறைவா? அது சாத்தியம் தானா?
 மனதில் தோன்றும் உணர்வுகளை விவரிக்க முடியவில்லை.  நிறைவா அல்லது கடமை முடித்த பெரு மூச்சா? இல்லை...
 அவள் மறைந்தாலும் நான் அவளுக்கான என் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறேன். எனக்கு பிடிக்கிறதோ அல்லது இல்லையோ – நம்புகிறேனோ அல்லது இல்லையோ – அது பற்றி கவலையில்லை. உன்னை நான் இன்னமும் நேசிக்கிறேன். இப்பொழுதும் உனக்கு உதவிடவே விரும்பிகிறேன் என்பதை வேறு எப்படி அவளுக்குப் புரியவைக்க முடியும்!
 உனக்கு நன்றி சொல்கிறேன். தடங்கல் இன்றி உனக்கு செய்ய வேண்டியவற்றை செய்ய அனுமதித்ததற்கு.. வெறுமையா அல்லது நிறைவா அல்லது மீண்டும் தனிமையா எனப் புரியாத ஒரு மன நிலையில், கர்மாக்களை முடித்தவுடன், கங்கைக் கரையை நோக்கி நடந்தேன். நான் தங்கியிருந்த இடம், ‘அனுமன் கட்’.  சில நாட்களாக இங்கே தங்கியிருந்தாலும், இன்றுதான் சுற்றுமுற்றும் ஆழ்ந்து பார்க்கத் தோன்றியது. ‘சுமோ’ மாதிரியான வாகனங்கள் ஏழெட்டு நின்று கொண்டிருந்தன. அனைத்து வாகனங்களின் முதுகிலும் மரக் கட்டைகள்!  மரக்கட்டைகளின் மேல் மனித உடல்கள். ஆணா... பெண்ணா? உடல் முழுதும் வெள்ளைத் துணியால் கட்டப் பட்டிருந்தது. வண்டிகள் வந்ததும், உடல் மேல் போர்த்தப் படும் ஒருவகை ‘பள.. பள..’ துணிகளை விற்கவும், எரிப்பதற்கான மரக்கட்டைகளை விற்கவும், பறையொலிக்கவும் பேரம் நடைபெறுகிறது. இரவோ, பகலோ எந்த நேரமும் இந்த துறையில் பிணங்கள் எரிந்து கொண்டே யிருக்கின்றன. மார்வாடி போல ஒருவர். அவரைச் சூழ்ந்து கொண்டு, பலர் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். இறந்தது யார் எனத் தெரியவில்லை. அவர் விடாக் கொண்டன் போல.. தலையை ஆட்டிக் கொண்டு, ‘நஹி.. நஹி.. ‘ என சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குடும்பத்தில் யார் தலையிட்டரோ தெரியவில்லை.. பேரம் முடிந்தது  போலும். சட்டென உடல் கீழே இறக்கப் பட்டது. மூங்கில் பாடையில் வைக்கப்பட்டு கட்டப்பட்டது. உடலை பாடையோடு எடுத்துச் சென்று கங்கையில் முக்கி எடுத்தனர். உடலிலோ அல்லது பாடையிலோ ஆங்காங்கே செருகப் பட்டிருந்த பத்து ரூபாய் நோட்டுக்கள் கங்கையில் மிதந்தன. சட்டென பாய்ந்த சென்ற சிறுவர்கள், மீன்களை தனது நீண்ட அலகுகளால் கொக்கு ஒன்று கொத்திப் பிடிக்கும் லாகவத்தோடு, பணத்தை கவர்ந்து கொண்டனர். சிதையில் அடுக்கப் பட்டது  உடல். சுருக்கமாக சடங்குகள் அரங்கேறு கின்றன. பக்கத்தில் இரண்டு சிதைகளை எரியூட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். உடலிலிருந்து கபாலம் முதலில் தீயினால் துண்டாகி கீழே விழுகிறது. பிறகு கால்களும் தொடைகளும். மிஞ்சி யிருப்பது, கழுத்தெலும்பு முதல் இடுப்பு வரையிலான பகுதிதான். அவற்றை யெல்லாம், லாவகமாக ஒரு சுழற்று சுழற்றி எரியும் மரக்கட்டைகளிடையே தள்ளுகிறார். மண்டையோடு அவருக்கும் தப்பி, உருண்டு  கீழே விழுகிறது! கபாலம் சிரிக்கிறதா? அழுகிறதா? பற்கள் மேலிட தாவாங்கட்டை சிதறிக் கிடக்க, அவை நம்மைப் பார்த்து சிரிப்பது போலத்தான் இருந்தது. குச்சியினால் கெந்தி, அதையும் தீயில் இடுகிறார் வெட்டியான். இப்பொழுது அந்த மார்வாரி, சடங்குகள் முடிந்து சிதைக்கு தீ மூட்டினார். திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்த அவர், மேல் படிக்கட்டுக்கு வந்தபின், புகை கணியத்துவங்கிய சிதையினை பார்த்தார். சற்றுமுன் பேரம் பேசிய அவர், ஜிப்பாவில் கையைவிட்டு, ஒரு கத்தை ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்துவிட்டு, நடக்க ஆரம்பித்தார். சிறுவர்களும் இளைஞர்களும் ‘ஹோ...’இறைச்சலுடன் ரூபாய் நோட்டுக்களை அள்ளிக்கொண்டனர். என்னைச் சுற்றிலும் எட்டு உடல்களாவது எரிந்து கொண்டிருக்கும் பொழுது ஏன் காற்றில் நாற்றமில்லை?
 




பார்வையை வேறு பக்கம் நகர்த்திய பொழுது, காலையில் தானம் பெற்றுக் கொண்ட ஒரு புரோகிதர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். ‘இங்கே அவ்வளவாக நாற்றம் இல்லை.. ஏன்?’ ‘உங்களுக்கு தெரியாதா சுவாமி...? காசியில் பிணங்கள் நாறுவதில்லை!காகம் கரைவதில்லை!பூ மணப்பதில்லை!மாடு முட்டுவதில்லை! உண்மைதானோ? பூவைத் தவிர மற்றெல்லாம் நிஜம் போலத்தான் தெரிந்தது. ‘இங்கு வருபவர்கள், அழுவது கூட இல்லையே, ஏன்?’ ‘சுவாமி.. இது பிரேத பூமி... இங்கே இறப்பவர்கள் புன்னியம் செய்தவர்கள். அவர்களுக்கு மறு பிறப்பு இல்லை...’ ‘அதெல்லாம் சரி.. எல்லாம் சொல்லலாம் தான். நிஜத்தில் சோகத்தை அவ்வளவு எளிதாகக் கொள்ளமுடியாமா? இங்கே ஒருவர் கூட அழுது பார்க்கவில்லையே’ ‘எதுக்கு அழனும்? மரணம் என்பது தானே உலக தர்மம்! பிறந்தவர் எல்லாம் போய்த்தானே ஆகனும்?  நாம மட்டும் சாசுவதமா என்ன? இன்னிக்கு அவர்.. நாளைக்கு நான்.. அப்புறம் நீங்க... அவ்வளவுதானே வித்தியாசம்..?’ ‘இங்கே, பழைய துணிகளை கங்கையில் வீசியெறிவதை பார்த்திருபீங்களே? அது போலத்தான் சுவாமி மரணமும்.
 உயிருக்கு, இந்த உடல் ஒத்து வரல... பழசாப் போச்சு அல்லது உயிரைத் தாங்கும் அளவுக்கு உடலுக்கு வலுவில்ல.. அல்லது உடலை நாமே உடச்சுப் போட்டுடுவோம்.. ஆக்ஸிடென்ட், தற்கொலை ... இது போல...
 அந்த உயிர் என்ன பண்ணும்..? சர்தான் போடான்னு, அந்த உடலை துறந்து, வேறு ஒரு உடலை எடுத்துக்கும்...’ அழிவெல்லாம் உடம்புக்குத்தான் - ஆன்மாவுக்கு அழிவே இல்லை சாமி...!
 ‘அம்மா,அப்பா, மனைவி, மகன் , புருஷன்-பொண்டாட்டி இதெல்லாம் மனுஷ உடம்புக்குத்தான்.. எப்ப உடம்பைவிட்டு உயிர் போயிடுச்சோ, அப்பவே அவுங்களுக்கு உறவு போயிடுச்சு... அவர்கள் பிதுர்க்கள்.. இதுக்கு போய் அழுது என்னத்த சாதிக்க முடியும்?’ படு இயல்பாகச் சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார் அந்த புரோகிதர். காசியில் என் கடமைகளை முடித்துக் கொண்டு, ஊர்  வந்து சேர்ந்து விட்டேன். மனோ நிலையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? சோகத்தை சுமந்துகொண்டு, மீண்டும்  பைத்தியம் போல திரிவேனா?
 தெரியவில்லை.. அனால் அந்த புரோகிதர் சொன்னது போல, துயரத்தையும் அழுகையையும் என்னால் தள்ளி வைக்க முடிந்திருக் கிறது! உதாசீனப்படுத்தப்படுவதும், அவமானப்படுத்தப் படுவதும் இனி என்னைப் பாதிக்காது என நம்புகிறேன்.
 பாதிக்காமலிருப்பது மட்டுமல்ல... அவற்றைப் புன்னகையோடு சகித்துக் கொள்வதையும் கங்கை எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டாள். பேரரசர்கள் முதல் பிச்சைக்காரர்கள் வரை,ஆனவத்தின் உச்சத்திலிருந்தவர் முதல்அடங்கிக் கிடக்கும் சாதுக்கள் வரை,பேரழகால் உலகை வளைத்துப் போட்டசௌந்தர்யவதிகள் முதல் குரூபிகள் வரை,தனவான் முதல் லோபி வரை... இன்னும் எத்தனை எத்தனையோ விதவிதமான மனிதர்கள் அனைவருமே இந்த கங்கைக் கரையில் சாம்பலாகி இருக்கிறார்கள்! யுகம் யுகமாய்,கோடானு கோடி ஜனனங்களையும் மரணங்களையும் பார்த்துவிட்டு, இன்னமும் மாறா அமைதியோடு,
சாட்சி பூதமாய்,மர்மம் புன்னகையோடு பயணித்துக் கொண்டே இங்கே என்முன்னே ஓடிக் கொண்டிருக்கும் கங்கையே! உனக்குள் அமிழ்ந்து கிடக்கும் யுகங்கள் எத்தனை?சாம்பலாகிப் போன சாம்ராஜ்யங்கள் எத்தனை?எத்துனை கோடி தேவர்களையும் மனிதர்களையும் கண்டிருப்பாய்?அந்த துயரம் உன்னைப் பாதிக்கவே இலையா?


மாகாபாரத யுத்தத்தில், உயிர் நீத்த பாண்டவ-கௌரவர்களுக்கும் கூடஇங்குதானே நீர்ப்பலி நடந்தது?உனக்கு எதுவும் நினைவில்லையா?உன்னை எதுவுமே பாதிக்காதா? கங்கைத் தாயே!நீ கற்றுத்தந்த பாடத்தை, நான் பெற்றுக் கொண்டேன்...
-0-

Tuesday, January 13, 2015

சகியாமை:


சமீப நாட்களில், நாம் மிகவும் உணர்ச்சி வயப்படுபவர்களாகவும், தங்களுக்கு உதிப்பது மட்டுமே சரி என்பது போலவும் சிந்திக்க ஆரம்பித்து விட்டோமோ என கவலையாக இருக்கிறது. சாதிய பிடிப்பு அதிகம் உள்ள சமுதாயத்தில், எதை எழுதினாலும் எவராவது கோபித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது!

அந்த புத்தகம் சரியா அல்லது தவறா என்பது பற்றி வினா எழுப்பப் போவதில்லை. அத்தகைய கேள்விக்கு தீர்மாணமான முடிவு இல்லை. அவர் எழுதியது சரித்திரமும் இல்லை. அவர் எழுதியது மட்டுமில்லை. எவர் எழுதும் புதினங்களும் வரலாறு இல்லை. (வரலாறே கூட ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமாக எழுதப்படுவது நடக்கிறது அல்லவா?) ஆவனமும் இல்லை.

அவர் எழுதியதில் உள்நோக்கம்  இருப்பதாகவே வைத்துக் கொள்ளலாம். அதற்கு எதிர்வினையாற்றுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. புதினத்தை எதிர்த்து, அவரது நாவல் பிழையானது என எத்துனை முறை வேண்டுமானாலும் கட்டுரைகள் எழுதலாம். ஆய்வுகள் நடத்தலாம்.  புதினம் தவறு என நிரூபிக்கவும் செய்யலாம். அதைவிடுத்து, போராட்டங்களும் மிரட்டல்களும் சரியெனத் தோன்றவில்லை. பாரதி ஒரு குறிப்பிட்ட சாதியினை (பெயரைச் சொல்லியே), மிகக் கடுமையாக விமரிசித்ததை நாடறியும். இன்னும் பல எழுத்தாளர்களும் இவரைப்போலவே எழுதியிருப்பார்கள்.

இது குறிப்பிட்ட எழுத்தாளருக்கெதிரான போராட்டமாகப் பார்ப்பதைவிட, எவரும் தங்களுக்கெதிராக எழுதிவிடக் கூடாது என்ற மனோபாவமாகத்தான் பார்க்கிறேன். இதனால் அவர் எழுதியது சரியென்று பொருளில்லை. சிந்தனைத்தளத்தின் மேல் தாக்குதல் தொடுக்கலாமா என்பதுதான் என் சந்தேகம். எல்லோரிடமும் சம்மதம் பெற்றுத்தான் எழுதியாக வேண்டும் என்றால், இனி புத்தகங்களே தேவையில்லை. சமுதாயத்தின் அறிவியலியக்கத்தை நிறுத்தி விடலாம். தர்க்கம் இல்லால் அறிவுத்தளம் இயங்கமுடியாது. தர்க்கத்தில் முடிவு எட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவரவர் வாதத்தை வைப்பதுதான் முதல் நோக்கம்.

இலக்கியம் எப்பொழுதும் முழு உண்மையைத்தான் பேசுகின்றன என்பது பொய். அது ஒரு பார்வை அவ்வளவே!

ஆளாளுக்கு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டால், முதல் பலி, கருத்துக்கள்தான். அவ்விதம் நிகழ அனுமதித்துவிட்டால், அராஜகம் மட்டுமே நிலைக்கும்.

உங்களது கருத்துக்களை முற்றாக எதிர்க்கிறேன். அதைப் போன்றதொரு முட்டாள்தனமா, அபத்தமான, தீங்கான கருத்தினைக் கேட்டதேயில்லை. ஆனால் அம்மாதிரியான கருத்தினை சொல்லும் சுதந்திரம் உங்களுக்கு மறுக்கப்பட்டால், அச்சுதந்திரத்தைப் பெறுவதற்காக உங்களுடன் இனைந்து போராட நான் தயார் என ஒரு தொழிற்சங்கத் தலைவர் சொல்லுவார். அதுதான் சரி.

நான் சொல்லுவதை நீ ஏற்றுக்கொள். மீறினால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பது சரியா? ஒரு எழுத்தாளன் என்பவர் தனிமனிதன். அவனுக்குப் பின்னால் சாதிய அமைப்புகள் அல்லது பிற அமைப்புகள் அணிதிரளும் சாத்தியக் கூறுகள் குறைவு.

இன்று அவர் சரண்டர் ஆகிவிட்டார். வென்றது யார்?  தோற்றது யார்?