Saturday, February 8, 2014

"கொஞ்சம் நடங்கண்ணே"

மனைவி மறைந்தபின், ஆரோக்கியம் குறித்த அச்சம் ஏற்பட்டுவிட்டது. இந்த விழிப்புணர்வு ஒருபக்கம் என்றாலும், ஏதேனும் உடல் நிலை கெட்டுவிட்டால், உதவிகோர, முறையிட எவருமில்லை என்ற கவலை பிரதானமாயிருந்தது. உடல்  நலன் காக்க சிறந்த வழி விளையாட்டுதான் என்பதில் சந்தேகமில்லை. 

எந்தவகையான விளையாட்டை தேர்ந்தெடுப்பது?

கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில், கிழவர்களை எவரும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். மேலும் இவ்விளையாட்டுகள் 'போட்டி' என்ற மோஸ்தரில் ஆடப்படுகின்றன. வாழ் நாள் முழுவது போட்டியின் அழுத்தம் ஏதுமின்றி விளையாட்டாய் விளையாட ஏதுவான பயிற்சி எது? 

யுள்  முழுவதும் செய்யக்கூடிய எளிதான ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சி நடைதான். இறுதிவரை நடப்பதற்கான வகையில் நமது  உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன. எனவே  நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம். 

எனவே, நடுவில் இரண்டு வருடகாலமாக விட்டுப்போயிருந்த "நடைப் பயிற்சி" யினை தொடர விழைந்தேன்.  மேலும் மாலையில் ஒரு மணி நேரம், நேரத்தைக் கொல்லுவதற்கு இது நல்ல வழியாகத் தெரிந்தது. எனவே இந்தவயதில், இந்த அளவு நடைப்பயிற்சி என்ற உடற்பயிற்சியே போதுமானது, சாத்தியமானது என்பதால், இதனைத் தொடர உத்தேசம்.

நல்லவேளை! கடலூரில் "ககன்சிங் பேடி" (கலெக்டர்) யின் புண்ணியத்தில், விளையாட்டு மைதானத்தினுள்ளே ஒரு நல்ல "நடை பாதை"  இருக்கிறது. இல்லாவிடில், தெரு நாய்களின் உறுமல்களுக்கிடையேயும், டூவீலர்களின் பயமுறுத்தல்களுக்கிடையேயும், சந்திரமண்டலத்தின் நிலப்பரப்புபோல இருக்கும் கடலூர் நகர சாலைளில்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

ஒரு சுபயோக சுபதினத்தில்  "நடை" பழக துவங்கினேன்.

நடைப்பயிற்சியின் போது, கண்களை மேயவிட்டதில் பல சுவாரஸ்மான மனிதர்களை கவணிக்க நேர்ந்தது.

சிலர், யாரோ தங்களைத் துரத்திவருவதுபோல 'தபதப' என நடைப்பர். இவர்கள் புதிதாக பயிற்சி மேற்கொள்ளும்  'ஆர்வக்கோளாறு' மிக்கவர்கள். இப்பேர்வழிகளுக்கு யாரையாவது முந்திச்சென்றாக வேண்டும். இன்னும் சிலர், கவச குண்டலம் போல புத்தம் புதிய "வாக்கிங் ஷூ" மற்றும் 'டிராக் ஷூட்' சகிதம் வருவர். இவர்களின் ஆர்வம் சில நாட்கள் அல்லது வாரங்கள் வரைக்குமே என்பது உத்திரவாதம்.

மாலை நேர வாக்கிங் வரும் சில பெரியவர்கள் கோஷ்டி சேர்ந்து கொள்வர். மகன், மகள், மருமகள்(ன்) பற்றி புலம்பித் தீர்க்க இது சரியான நேரமாகக் கொள்கின்றனர். ஒருவர் புலம்பித் தீர்த்ததும் சக புலம்பர் ஒருவர் தயாராக ஒரு கதை வைத்திருப்பார்.

சில மல்டிடாஸ்க் மானேஜர்கள் இருக்கிறார்கள். நடந்து கொண்டிருக்கும் பொழுதே "ஸ்பாண்டிலைடிஸ்க்கான" பயிற்சியையும் சேர்ந்து செய்துகொண்டே செல்வர். இன்னும் கொஞ்சம் மேலேபோய் மூச்சும்பயிற்சியையும் சேர்த்து செய்பவர்களும் உண்டு.

சில நடுவயதுக்காரர்கள், கொஞ்சம் பார்க்கிறமாதிரி
பெண்களைப் பார்த்துவிட்டதும், வேகம் குறைந்து அவர்கள் பின்னாலேயே கண்களால் வாக்கிங் செல்வர்.

மகளிர் கோஷ்டியாக சென்றால் அவர்களுக்கு பின்னால் வருபவர்களைப் பற்றி கவலையேதும் இல்லை. உலகத்தை மறந்து 'ஹை டெசிபலில்' பேசிக்கொண்டு (வம்படித்துக் கொண்டு என்றால் சரியான பதமாக இருக்குமோ?), முழு டிராக்கிற்கும் சொந்தம் கொண்டாடி, எவருக்கும் வழிவிட மாட்டார்கள். பின்னால் வருபவர்கள் உருண்டு பிரண்டு, சைடில் விழுந்து வாரி, ஓவர்டேக் செய்தால்தான் உண்டு.

தனியாக நடைபழகும் சில பெண்மணிகள் பக்கத்தில் யாரையாவது பார்த்துவிட்டால், தங்களை எதோ செய்யப்போகிறார்களோ என்ற அச்ச உணர்வோடு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவர்.


சில கனபாடிகள் சரீரத்தின்  முன்/பின்  துவாரங்களின்  வழியாக 'காற்றை' சப்தமாக 
வெளியேற்றிக் கொண்டு, அது பற்றிய பிரக்ஞை மற்றும்  சங்கோஜம் ஏதுமின்றி சென்றவண்ணம் இருப்பர். நாம் கொஞ்சம் மூக்கினைப் பொத்திக் கொண்டு சென்றாக வேண்டும். இவர்கள் கடைசி ரவுண்டில் 'வேர்க்கடலை சுண்டல்' இரண்டு சுருள் வாங்கிவிடுவர். சுண்டல்காரர்கள் 'சைக்காலஜி' படித்தவர்கள் போலும்; எவர் வாங்குவர்-எவ்வளவு வாங்குவர் என்பதை சரியாக கணித்துவிடுகின்றனர்.

சில விபரீதகரணிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிர்பக்கத்தில் வாக்கிங் வந்தால்தான் ஜென்ம சாபல்யம். எல்லோரும் பிரதட்சணம் என்றால் இவர்களுக்கு 'அப்பிரதட்சணம்' . 

நெடுநாளைய நடையாளிகளை பார்த்தவுடனே தெரிந்துவிடும். ஏதேனும் ஒரு பக்கமாக, சீராண வேகத்துடன், நடையில்மட்டும் கவணத்தில் கொண்டு செல்வர். தேவையற்ற பேச்சு இராது. 

ஆனாலும் நடைப்பயிற்சி கொஞ்சம் மோசம்தான்.  ஏனெனில் தினமும் நாலு கிலோமீட்டர் நடைமேற்கொண்டதால் பாதங்களில் காயமேற்பட்டுவிட்டதாக பாண்டேஜ் போட்டு 'பிலிம் காட்டலாம்' என்றால், ஏமாந்து போக வேண்டும்; கால்கள் வலுவாகித்தான் வருகின்றன.

அலுப்பும் களைப்பும் ஏற்பட்டுவிட்டதாக பாவித்துக் கொண்டு, மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வழியில்லை; நன்றாக தெம்பாக, உற்சாகமாகத்தான் இருக்கிறது. 

எனக்கு வயிறு சரியில்லை; பசிக்கவில்லை என எதாவது சொல்லி அனுதாபம் பெறலாம் என்றால் அதுவும் இயலவில்லை. நன்றாக பசிக்கிறது. ஜீரணம் ஆகிவிடுகிறது.

வீட்டில் ஏதேனும் பெரியவேலை வரும் பொழுது, எனக்கு வயதாகிவிட்டது, முடியவில்லை என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லி தப்பித்துக் கொள்ள இயலவில்லை; உடல் உற்சாகமும், தெம்பும், நல்ல இரத்த ஓட்டமும் முகத்திலேயே தெரிந்துவிடுகிறது. 

இரவில் தூக்கம் வரவில்லை என புலம்பலாம் என்றால் அந்த வழியும் அடைபட்டுப் போகிறது.

எனக்கு எதிலும் பிரியமில்லை.. போரடிக்கிறது என 'டபாய்க்கலாம்' என்றால்,  உடலில் சுறுசுறுப்பும்-சந்தோஷமும் தானாகவே வருகிறது!

என்ன, நான் சொல்வது சரிதானே? நடைப்பயிற்சி கொஞ்சம் மோசம்தானே?

3 comments:

 1. Good Keep It Up

  BT

  ReplyDelete
 2. மாலை நடைபயிற்சியைவிட காலை நேரம் நன்றாக இருக்கும் , அந்த .....நன்றாக இல்லை . சில பல சொன்னீர்களே அது குறைவு .
  எனவே காலை வாருங்கள் . நாங்கள் இருப்போம் . 6 மணி எண்கள் நேரம் .
  வாருங்களேன் நண்பா !

  ReplyDelete
 3. செமையா எழுதி இருக்கீங்க :-)

  ReplyDelete