Thursday, February 20, 2014

ராங் நெம்பர் – ரைட் நெம்பர்

ராங் நெம்பர் – ரைட் நெம்பர்



சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்று. பங்களாக்களும், வில்லாக்களும் நிறைந்த சமுதாயத்தின் உயர்தட்டு மக்கள் வசிக்கும் ஏரியா. 

இரவு பதினொரு மணிக்கு மேல் இருக்கும். தெருவில் எவரும் இல்லை. தெருவோர மின்கம்பங்களின் நியான் விளக்குகள், அனாவசியத்திற்கு ‘வாட்’ களை விழுங்கிக் கொண்டு ஒளித் தூறல் செய்து கொண்டிருந்தன. நாய்கள் கூட உறங்கி விட்டனவா என்ன? அச்ச மூட்டும் நிசப்தம். அந்தத் தெருவில், எல்லா வீடுகளையும் போல,  கிருஷண குமாரின் 33-ஆம் எண் வீடும் இருளில் பதுங்கிக் கொண்டிருந்தது. அறைகளின் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தன. அந்த வீட்டின் படுக்கையறைகள் அனைத்தும் மாடியில்தான் இருக்கிறது.

என்ன, மெல்ல, நாம் மேலே போய்ப் பார்ப்போமா?

அடுத்தவர் படுக்கையறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம்தான். ஆனால் அங்குதானே நமக்கு ஒரு கதை கிடைக்கப் போகிறது? பரவாயில்லை வாருங்கள்.
சினிமாவில் பார்த்திருப்பீர்களே, வீடிற்குள்ளே, ஹாலின் நடுவே ஒரு படிக்கட்டு, பாம்பு போல வளைந்து மேலே சென்று, இரண்டாகப் பிரிந்து இடப்பக்கமாக ஒன்றும், வலப்பக்கமாக  ஒன்றும் செல்லுமே,  அதே போலத்தான் இதுவும் இருக்கிறது. மாடியில், இடது பக்கம், கிருஷ்ணகுமாரின் புத்திரி ஷைலஜாவின் ரூம். கல்யாணமாகதவளின் தனியறையை எட்டிப் பார்ப்பது மிகவும் தப்பு. எனவே நாம் வலது பக்கமாச் செல்வோம். ஷ்...  கொஞ்சம் சப்தம் போடாமல் வருகிறீகளா? ஓரக்கண்ணால் ஷைலஜா அறையை பார்க்கக் கூடாது. அவள் தரிசனம் எல்லாம் கிடைகாது. அவள் தூங்கி அரைமணி நேரமாகி விட்டது.

வலதுபக்கம் தான் கிருஷ்ணகுமாரின் அறை. ஆஹா நல்ல விசாலமாய் இருக்கிறதே. நமது ஹால் கூட இத்தனை பெரிசு இருக்காது என்கிறீகளா? இப்ப நாம வந்தது சர்வேயர் வேலைக்கல்ல. பேசாமல் வாருங்கள். சுவரில் பிகாசோக்களும், ரவி வர்மாக்களும். மேலும் பல பழங்கால ஓவியங்கள். 

ஜன்னல்கள் ரசனையான திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஓரத்தில் ஒரு பூஞ்சாடி.  நவீனமான டிசைனில் தேக்கு மரக் கட்டில்கள் போடப்பட்டிருகின்றன. ஓரத்தில், ஒரு ஸ்டடி டேபிள். ஆனால், விந்தையாக, இரண்டு கட்டில்களும் தனித்தனியாகப்
போடப்பட்டிருக்கின்றன. கட்டிலில், ஸ்பிரிங் மெத்தைகள். வேகமாக உட்கார்ந்தால் பத்து நிமிஷம் மேலும் கீழும் போய்வந்து கொண்டிருக்கலாம். போர்வைகளிலும், படுக்கை விரிப்புகளிலும் செல்வம் தாண்டவமாடுகிறது. இரண்டு கட்டில்களுக்கும் நடுவே ஒரு சைட் டேபிள். அதில் சில புத்தகங்கள் ஒழுங்கில்லாமல் இறைந்து கிடக்கின்றன. நடுவே ஒரு Favreleuoba  டைம்பீஸ். ஏ.ஸியின் சன்னமான  ரீங்காரம். மெல்லிய நீல நிற ஒளி, எங்கிருந்தோ கசிந்து கொண்டிருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பதை அப்புறம் பார்க்கலாம்.

வலதுபுறத்துக் கட்டிலில், கணவன் கிருஷ்ணகுமாருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஒருக்களித்து படுத்துக் கொண்டிருக்கிறார், அவரது மனைவி கௌரி. கழுத்துவரை போர்த்திக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா? அட..... இளமையில் இவள் மிக அழகாக, கவர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அழகின் மிச்ச தேசல்கள் இன்னமும் தென்படுகின்றன. லிப்ஸ்டிக்கை கலைக்காமல் தூங்கிவிட்டாள் போலிருக்கிறது. எச்சில் பட்டு கலைந்துகிடக்கிறது. கண் மை பளிச்சென்று முக அழகை மெருகேற்றிக் கொண்டிருக்கிறது. சற்றே வெளிப்பட்டுக் கொண்டிருந்த அவகளது கைவிரல்களும், கால்களும் அவளது பளீர் வெண்மையை ஃப்ளாஷ் போட்டது. நைட்கவுன் அனிந்திருக்கிறார். ஏனோ, தூக்கத்தில் கூட முகத்தை “கடுகடு” வென வைத்துக் கொண்டிருக்கிறார். மிகச் சன்னமான குறட்டை. சீரான மூச்சிற்கேற்போல நெஞ்சு ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பார்த்தவுடன்  நாற்பத்தைந்து வயதுதான் எனத் தயங்காமல் சொல்லலாம். அவளும் கூட அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். நிஜ வயது 55.

இப்படி வாருங்கள். இந்த கட்டிலில் கிருஷ்ணகுமார் நெஞ்சு வரை போர்த்திக் கொண்டு தூங்குகிறார். நெஞ்சில் Candace_Bushnell –ன் Sex and City புத்தகம், பிரிக்கப்பட்ட நிலையில், நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தது. கம்பீரமான, சதுர வடிவ முகம். டை அடித்து ஒருவாரம் ஆகியிருக்க வேண்டும். காதோரங்களில் முடிகள் வெண்மை பாடின. மீசையில்லாத மழு மழு முகம். சற்றெ வெளிப்பட்ட புஜங்களில், அதன் தசைகளின் வன்மையில், அவரது அத்லெட் உடம்பு தென்பட்டது. சற்று வலுவாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்.

டைப்பீஸ் இப்பொழுது 11.30 என்றது.

ரூமில், யாவும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க, நடுவில் வீற்றிருந்த டெலிஃபோன், சட்டென உயிர் வெற்று ரிங்கியது.

கௌரி லேசாகக் கண்களைத்திறந்தாள். திரும்பி படுத்து டெலிபோனை எடுக்க சோம்பேரித்தனமாக இருந்தது போலும். ஒரக்கண்ணால்மாக பார்த்தாள். கிருஷ்ணகுமார் எடுக்க வேண்டும் என எதிர்பார்கிறாள். . அவர் எழுவதாகத் தெரியவில்லை. டெலிஃபோனும் ஓய்வதாகத் தெரியவில்லை.

இப்பொழுது அவர் கண்களைத்திறக்காமலேயே, தடவித் தடவி, டெலிஃபோனை எடுத்தார். ஸ்லோமோஷனில் காதிற்குச் சென்றார்.

‘ஹலோ....’
‘’
“ஹலோ.....”
..
இவரும் மௌனம்..
..
..
டெலிஃபோனை வைத்துவிட்டு, கைகளை போர்வைக்குள்  நுழைத்துக் கொண்டார்.
மீண்டும் குறட்டை.

‘டெலிஃபோனில் யார்..?” கௌரி.

‘’  .. ‘

“உங்களைத்தான் கேட்கிறேன்.. டெலிஃபோனில் யார்?”

“யாருமில்லை”

"யாருமில்லைன்னா.. எதுக்கு ஃபோன்?

‘அட... ஃபோனில் எந்த ஸ்பீச்சும் இல்லை... வைச்சுட்டேன்.”

“அதான் கேக்கறேன்..? அது யார் இந்த நேரத்தில்..?”

“இதென்ன தொல்லை? அவன் யாரோ தெயரியாது?”

“அவன் கூட பேசினீங்களா?”

“எவன் கூட?”

“அதான் ஃபோனில்..!”

“இல்லையே..”

“பின் எப்படி ‘அவன்’ என்று சொன்னீர்கள்?”

“ஐயோ .. அது சும்மா பொதுவா சொல்றது.. அவன் என்றால் அவன் இல்லை... யாரோ!  ஒரு ராங் நெம்பர்..!”

“இந்த ராங்காலுக்கு நம்ம வீட்டு நெம்பர் தானா கிடச்சது?”

“ஐயையோ இது என்ன ரோதனை? ராங் நெம்பருக்கென்று தனி லிஸ்ட் எல்லாம் கிடையாது. எதோ நெம்பருக்கு பதிலாக, நமது நெம்பரை தப்பா கூப்பிட்டுடான்.. சாரி.. யாரோ கூப்பிட்டுட்டாங்க.. வைச்சுட்டாங்க.. ஆளை விடு... தொல்லை பண்ணாதே..எனக்குத் துக்கம் வருது !”

அவன் திரும்பிப் படுத்துக் கொள்கிறான்.

அவள் “இது ஒரு சிக்னலா..?”

“என்ன சிக்னல்..?”

“ஏதோ ஜாடை... உங்களுக்கு அழைப்பு .. இல்லாவிடில் நினைவூட்டல்...”

“இந்த நேரத்தில் என்ன எழவு சிக்னல்? யாருக்கு சிக்னல்..? ஒரு ராங் நெம்பர் .. இதுக்குப் போய், இந்த நேரத்தல்  ஏன் களேபரம் பண்ணுகிறாய்..?”

“நீங்கள் திரும்ப திரும்ப யாரோ..யாரோ என்று சொல்லும் பொழுது, இப்பொழுது கூப்பிட்டது தேவிகா தான்னு எனக்கு தோனுது!”

“தேவிகாவா.. யாரது?”

“உங்க கேர்ல் ஃப்ரண்ட்..”

“அட சீ... சைத்தானே! உங்கூட பெருந்தொல்லையாப் போச்சு...ராத்திரி சண்டைக்கு ஆரம்பிச்சுட்டியா? எனக்கு தேவிகாவையும் தெரியாது... மோனிகாவையும் தெரியாது..”

“அதை நான்  நம்பனுமா?”

“சனியனே.. நல்ல தூக்கத்தில் எழுப்பிவிட்டு, ஏன் இப்படி ஆட்டம் போடுகிறாய்.. நாளைக்கு போர்டு மீட்டிங்.. பாம்பே போகனும்... இந்த மாதிரி உயிர வாங்கரியே?”

எழுந்து போய், லைட்டைப் போட்டுவிட்டு, ஏ.ஸியை ஆஃப் செய்துவிட்டு சன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு இயற்கைக் காற்றை வாங்கி கொண்டார்..

“இத பார் கௌரி... இன்னிக்கு  நீ, ‘டிப்ரஷனுக்கு’ மாத்திரை போட்டுக் கொண்டாயா? இல்லியா? ஏன் இப்படி ரெஸ்ட்லெஸ் ஆகிறாய்..”

“எனக்கு என்னவோ, நீங்க இப்ப லைட்டைப் போட்டது, ஜன்னல் கதவைத் திறந்து வைத்தது எல்லாமே, ஒரு சிக்னலாக, ஏற்பாடாக இருக்குமோன்னு சந்தேகமாயிருக்கு..”

“எதற்கு சிக்னல்..?”

“தேவிகாவுக்குத்தான்.. நான் கிளம்பிவர்ரேன் என்று சமிக்ஞை:

“வர்ர் ஆத்திரதிற்கு உன்னை ஓங்கி செவிட்டில் அறையலாம் போல இருக்கு.  டிப்ரஷன் பேஷண்டை அடிப்பது கூடாது.. மோர் ஓவர் ஐ லைக் யூ.. ... த பார் கௌரி.. ஐ லவ் யூ.. ஐ லவ் யு மோர் தேன் எனி திங் இன் திஸ்  வோர்ல்ட். மனசை அலைபாய விடாதே.. கொஞ்சம் அமைதியா தூங்கு... உனக்காக, நீ சரியாக வேண்டும் என்பதற்காகத்தானே இவ்வளவு பாடு படுகிறேன். இன்னும் ஒரு ஆறு மாசம். மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடு. எல்லாம் சரியாயிடும். இப்படி வீணாக கற்பனையை வளர்த்துக் கொண்டே போனால், உன்னோட பிரச்சினை முற்றுமே தவிர, குணமாகாது.  பேசாம சமத்தா தூங்கு... சமத்தா தூங்கு...” 

அவளுக்கு நன்றாக போர்த்திவிட்டு, நெற்றியில் முத்தமிட்டு, ‘ஐ ல்வ் யு ஹணி...’ சொல்லிவிட்டு, தனது கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டார்.

“ஐ சம் சாரி.. வெரி சாரி.. எனக்கு என்னமோ எதுக்கெடுத்தாலும் சந்தேகம் வருது” என்றாள்.

“அதனால் என்ன கௌரி.. பரவாயில்லை... இதுக்கெல்லாம் சாரி சொல்லாதே! நீ வேணுமின்னேவா செய்யறே? ஏதோ டிப்ரஷன்.. அப்படியெல்லாம் தோணுது! அடுத்த தடவை இப்படி தோனும்போது, ஒரு செகண்ட், ஒரே ஒரு செகண்ட் யோசனை செய்.. இது சரியா.. தப்பா.. இப்படி செல்லலாமா என. பின் உனக்கே தெரியும், உன் கற்பனைகளெல்லாம் எவ்வளவு அபத்தம் என”

“அகய்ன் சாரிங்க.. குட்   நைட்..”

மீண்டும் அந்த அறையில் மௌனம் ஆக்கிரமித்தது.

பத்து நிமிடம் சென்றிருக்கும்.  கௌரியிடமிருந்து சன்னமான குறட்டை ஆரம்பித்தது.. அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார், கௌரியிடமிருந்து குறட்டை சப்தம் வந்ததும், சப்தமிடாமல் பூனை போல எழுந்து, சட சடவென டிரஸ் மாற்றிக் கொண்டார். தலைவாரிக் கொண்டார். பிரத்யேக பாடிஸ்ப்ரேயை உடம்போடு அழுத்திப் போட்டுக் கொண்டார். ஷூக்களை கையில் எடுத்துக் கொண்டார். மெல்ல, இருட்டில், அடியடிமேல் அடியெடுத்து கதவினருகே சென்று, தாழை விலக்கினார்.

சட்டென்று, அறை பளீரென ஒளி கொண்டது. கௌரி ஏதோ ஒன்றை கையில் மறைத்து வைத்து கொண்டு, உட்கார்ந்துகொண்டிருந்தாள்.

“உங்க நடிப்பும், வேஷமும் எனக்குத் தெரியாதா? திருட்டுப் பயலே.. இத்தனை நாள் பொறுத்தேன்.. இனி சகிக்கமுடியாது. அந்த தேவிகா வீட்டுக்கு போகும்பொழுது இதையும் வாங்கிட்டுப்போ..”  கையில் மறைத்து வைத்திருந்த பொருள் வெளிப்பட்டது...

அடுத்த நாள் காலை செய்தித்தாளில் “பிரபல தொழிலதிபர் கிருஷ்ண குமார் துப்பாக்கி குண்டுபட்டு மரணம்.. கொலையா? தற்கொலையா” போலீஸ் விசாரணை!!
                                        -0-


(ஒரு ஆங்கில காமெடியின் தாக்கம் இது)

1 comment:

  1. நல்ல கதை . நன்கு எழுதி இருக்கிறிர்கள்.

    BT அரசு

    ReplyDelete