நான் ஒரு ஊர் சுற்றி!, தேசாந்திரம் செல்வதில் விருப்பமும், நாட்டமும்
சுரந்து கொண்டே யிருக்கும். பர்ஸும்-நேரமும் இசைந்து வந்தால் எந்த நேரமும் சுற்றுலா
நேரம்தான். இவ் விஷயத்தில் மனைவிக்கும் எனக்கும் ஒத்த ரசனையிருந்ததால் பல இடங்களைப்
பார்த்திருக்கிறோம். இனி பார்த்தேயாக வேண்டும் என்ற லிஸ்டில் முதலில் இருந்தது ‘அந்தமான்
தீவுகள்’.
காலன், மனைவிக்கு வேறு பயணத்திட்டம் வைத்திருப்பதை அறியாத
நாங்கள், அந்தமான் பயனத்தை ஒத்திவைத்திருந்தோம். இரண்டு வருடங்களாக, மனைவிக்கு
பணிவிடை செய்வதே எனது முதல் இலக்காக இருந்ததால், அந்தமான், மாயமானாகவே இருந்தது. மனைவி
மறைந்துவிட்டாலும், அவர் விரும்பிய தலங்களை நாமே ஏன் சென்று பார்க்கக் கூடாது?
எனது கண்களின் மூலம் அவர் விரும்பிய இடங்களைக்
கண்டுறக் கூடாதா எனத் தோன்றவே, குடும்ப
நண்பர் குடும்பத்துடன் பிப்ரவரி 22, 2014 அன்று, காலை ஐந்து மணிக்கு, ஏர் இந்தியா
விமானத்தில் போர்ட்பிளேர் பயணம்.
அந்தமான் –நிக்கோபர் தீவுகள் என்பது 572
தீவுக்கூட்டங்கள்/தீவுத்திடல் களை உள்ளடக்கியது. என்பது விழுக்காடுக்கு மேற்பட்ட
பரப்பளவு காடுகளே! மக்கள் நிரந்தரமாகக் குடியிருக்கும் தீவுகள் 38 இருக்கும்.
மற்றவை மனித நடமாட்டம் இல்லாதவையே! இத்தீவுகள் நீளவாக்கில் 800 கி.மீ-க்கு மேல்
விரவிக்கிடக்கின்றன.
பெரும்பகுதி பரப்பு, மனிதனால் பாழாக்கப்படாமல், மாசு
படுத்தப்படாமல் இன்னமும் ‘கன்னியாகவே’ நீடிக்கும் ‘பேரழகி’ அந்தமான்.
திகட்ட-திகட்ட பார்க்கலாம்! அனுபவிக்கலாம். சொக்க வைக்கும் ரம்மியம். எங்கும் அழகு!
அழகு! அழகு! அமைதி! அமைதி! அமைதி!
ஹனுமன் என்பது ஹண்டுமன் ஆகி பின் அந்தமானாக மருவியது
என்றும், அந்தமான் என்றால் அதிர்ஷ்டம் என்றும் பல்வேறுவிதமாக பெயர்க்காரணம்
சொல்கிறார்கள். எதுவானால் என்ன? A Rose is a Rose..is a Rose... is a Rose.....
இங்கு வருடம் முழுவதுமே சுற்றுலா சீசன்தான்.
வறுத்தெடுக்கும் வெயிலோ, ஸ்வெட்டர் தேட வைக்கும் குளிரோ எப்போதும் இல்லை! 28
டிகிரி முதல் 35 டிகிரி வரைக்கும்தான் மெர்குரி செல்லும். சில சமயம் பருவ காலங்களிலும்,
புயல் காலங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்படும். இடைஞ்சல் என்றல் இது மட்டுமே!
தமிழ் மக்கள் கனிசமாக இருக்கிறார்கள். நிறைய பேருக்கு தமிழ்
புரிகிறது. (கழகங்களின் புன்னியத்தில் ஹிந்தி தெரியாதது பெரும் சிரமமாய்
இருக்கிறது. ஒவ்வொருமுறை சென்ட்ரலைத் தாண்டும் பொழுதும் இதை உணருகிறேன்.) பல கடைகள்
தமிழரால் நடத்தப்படுகின்றன. தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு ஊர் சுற்றலாம். ‘கட்டபொம்மு’
என்று ஒரு
தமிழரால் நடத்தப்படும் சிறிய உணவகம்
பிரசித்தம். சுவையான உணவு சகாய விலையில் டைக்கிறது. நம் ஊர் சுற்றுலாத்த லங்கள் போலவே
லாட்ஜ்கள்
இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை வாடகை சொல்கிறார்கள். கொஞ்சம் அலைந்தால்
ரூ.ஆயிரத்திற்கும் கிடைக்கும்.
முக்கியமான இடங்களை தவறாமல் பார்க்க வேண்டுமெனில்
ஒருவாரமாவது தங்கவேண்டும். இயலவில்லை
எனில் நான்கு நாட்களாவது! ஒரு நல்ல ‘காமிரா’, சுமாரான தொலை நோக்கி இருந்தால் நல்லது. பின்னாளில் அசைபோட உதவும்.
தோராயமாக அந்தமானின் வரலாறு, சுற்றுலா தலங்களைப் பற்றிய
தகவல்கள் ஆகியவற்றோடு சென்றால் வெகுவாக ரசிக்கலாம்.
நான் சென்றது நான்கு நாட்கள். பார்த்த-ரசித்த இடங்களை
உங்களோடு பகிர்ந்து கொள்ள அவா! இப்பயணக்கட்டுரையினை, பகுதி பகுதிகளாக எழுதிட
உத்தேசம். இது முதல்.
இனி நான் பார்த்த இடங்கள் ஒவ்வொன்றாக உங்கள் பார்வைக்கு!
சத்தம் மரம் அறுக்கும் ஆலை!
இது ஒரு குட்டித்தீவில் அமைந்துள்ளது. ஒரு பாலத்தினால் ‘போர்ட்
ப்ளெயருன்’ இனைத்திருக்கிறார்கள். இந்த ஆலை இது ஆசியாவிலேயே மிகவும் தொன்மையான
ஆலை. மிகப்பெரிய மரங்களை (குறுக்களவு நான்கு அடிமுதல் இருக்கின்றன), கடல் நீரில் மிதக்க
வைத்து - ஊரவைத்து பின் ரகவாரியாக, சைஸ் வாரியாக, டிசைன் வாரியாக-சட்டங்களாக,
பலகைகளாக அறுக்கிறார்கள். இப்பணிக்கென ஏகப்பட்ட
இயந்திரங்களை
நிறுவியிருக்கின்றனர். பல இயந்திரங்கள் ‘MADE IN U.S.A – NEWYORK’ என்று பொறிக்கப் பட்டுள்ளன.
யாவும் 1930 களில் அமைக்கப் பட்டுள்ளன. பெரும்பகுதியான
மரங்கள் ‘படாக்’ வகை மரங்கள். படாக் மரமே அரசு மரமாக அறிவிக்கப் பட்டுள்ளது . நமது ஊர்
மரவாடிகளில் இது மலேசியாவிலிருந்து இறக்குசெய்யப் பட்ட ‘படாக்’ மரங்கள் என்று சொல்லி
நமது தலையில் கட்டும் செந்நிற மரங்களே இவை. மிக உயரமாக, பெரிய சுற்றளவோடு வளர்ந்த மரங்கள்
வீழ்த்தப்பட்டு, சில நிமிடங்களில் பலகைகளாகவும்-சட்டங்களாகவும் துண்டாடப்பட்டு உருமாற்றம்
ஆகிவிடுகின்றன. மரத்துண்டுகள் யாவும் மிகப்பெரிய குடோனில் சேமிக்கப்பட்டு, ‘சத்தம்
ஜெட்டி’ மூலம் கப்பல்களில் ஏற்றப்பட்டு மெயின் லேண்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
மகா கம்பீரமாக ‘அரசன்’ போல வீற்றிருக்கும் மரங்கள் யாவும், கண நேரத்தில் சிதைக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன - ‘நிதமும்’!
மரங்கள் அறுபடுவது ‘இயற்கை ஆர்வலர்களுக்கு’ பார்ப்பதற்கு சிரமமாயிருக்கும். என்ன
செய்வது? மனிதனின் ஓயாத தேவைகளை நிறைவேற்றியாக வேண்டுமே?
அங்கேயே ஒரு மியூஸியம் இருக்கிறது. புராதன, பூர்வீக மரவேலைப்பாடுகளை வைத்திருக்கிறார்கள்.
பிரமாதம் என்று வகைப்படுத்த முடியாவிட்டாலும் ரசிக்கலாம் கேட்டகிரி.
இரண்டாம் உலகப் போரின் பொழுது ‘ஜப்பான்’ போட்ட குண்டு ஒன்றினால் ஏற்பட்ட ஒரு பெரிய
பள்ளத்தை பராமரிக்கிறார்கள். ஒரு சிறிய நடைத் தொங்கு பாலம் மூலம்
இதைக் கடந்து செல்ல வேண்டும்.
- இதன் அடுத்த பகுதி இரண்டு நாட்கள் கழித்து.
கொசுறு:
போர்ட்பிளேயரில் ரூம் வாடகை ரூ. நான்காயிரம் என
பயமுறுத்தவே, ஒரு ஐ.க்யூ ஒன்றில் தஞ்சமடைய முடிவெடுத்தோம். ஏ.ஸி, ஃபேன், Attached
Bath room, டேபிள், சேர், நல்ல படுக்கை வசதி என ஆசை காட்டினார்கள்.
ஆஹா.. என்னே நமது அதிர்ஷ்டம் என வியந்து, ரூமினுள்
நுழைந்து, உட்பக்கம் தாள் போட்டு,ஏ.ஸியினை ஆன் செய்தேன். அது இயங்குவதற்கான்
அறிகுறி ஏதும் தென்படாததால், கிட்டே சென்று ஆராய்ந்தால்,ஏ.ஸியினுள் ஒரு நான்கு
கிலோ குப்பை. ஒரு நாற்பது எட்டுக்கால் பூச்சி!
அது போனால் போகட்டும். பிறக்கும் பொழுதே ஏ.ஸியுடனா
பிறந்தோம் என சமாதானப்படுத்திக் கொண்டு, ஃபேனைப் போட்டால் அது ரிவர்சில் சுழல
ஆரம்பித்தது. மீண்டும் ஃபேனை ஆன் செய்து, ஆஃப் செய்து.... ம்ம்ம்ம...ஒன்றும்
வேலைக்காக வில்லை. அது விடாப்பிடியாக ஆன்டி கிளாக்வைஸில் தான் சுழலுகிறது. ஒரு
சொட்டு, ஒரு துளி காற்று வரவில்லை.
சரி போகட்டும்... என, இயற்கைக் காற்றை சுவாசிக்க விழைந்து, ஜன்னல்
கதவை திறக்க விழை ந்தேன். ஜன்னல் கதவுகள், முதல் நாள் பள்ளிக்குச் செல்ல மறுக்கும்
குழந்தைபோல சண்டி செய்தது. பீமன் ஒரு அசுரனுடன் யுத்தம் செய்தானாமே, அது போல ஜன்னல்
கதவுடன் வெகு நேரம் போராடியபின் ஒரு அரை அடி திறந்து கொண்டது. அவ்வளவுதான். வெளியே
காத்துக் கொண்டிருந்த ஒரு லட்சம் கொசுக்கள் ஆக்ரோஷத்துடன் உள் நுழைந்தன.
பதறிப்போய், மீண்டும் ஒரு ‘பீமப் போராட்டத்தால்’ ஜன்னல்களை மூடினேன். இந்த
பிரயத்தனத்தில் உடல் முழுவதும், வியார்வையால் தொப்பலாய் நனைந்து விட்டது. சரி குளிக்கலாம் என
பாத்ரூமிற்குள் நுழைந்தால் லைட் எரியவில்லை. என்ன எரியவில்லை? பல்பே இல்லை! தட்டுத்தடுமாறி பைப்பினை தேடிப் பிடித்துத்
திறந்தேன். அவ்வளவுதான், நமது மேடைப் பேச்சாளர்கள் போல என்ன செய்தாலும், எப்படி
திருகினாலும் நிற்க மாட்டேன் என்கிறது. தண்ணீர் வந்து கொண்டே இருந்தால் என்ன
செய்வது? வடிகாலும் சரியில்லாததால், பாத் ரூம் நிரம்பி அறைக்குள் வந்து விடும் போல
இருந்தது. விதியை நொந்து கொண்டு வெறும் கையால் வடிகாலை சுத்தம் செய்தபின் வெள்ளம்
வடிந்தது.
எல்லா லாட்ஜ்களைப் போல இங்கும் குளிப்பதற்கும், மற்றொரு
காரியத்திற்கும் ஒரே பிளாஸ்டிக் மக்! இதை மாற்ற வேண்டும் என எவருக்கும் தோன்றவே
தோன்றாதா? ஒரு வழியாக படுக்கையில் படுத்ததுதான் தாமதம். எகிறிக் குதித்து,
வெருண்டோடி வெளியில் வந்து விழுந்தேன். பெட்டில் எவரோ வாந்தி எடுத்த நாற்றம்!
என்ன தவம் செய்தனை?
(இனி அடுத்த பகுதியில் சந்திப்போம்... கொசுறு
உட்பட..)