Monday, February 13, 2012

கும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.


இந்த மாதம் (ஃபிப்ரவரி-2012), இரண்டாம் சனிக்கிழமை. ஒரு மாறுதலுக்கு எங்கேயாவது, வெளியூர் சென்றுவிட்டு வரலாமா என யோசித்தபொழுது, இந்தியாவில் ‘சுற்றுலா என்பது பெரும்பாலும் ‘கோயில் உலா வாகவே இருக்கவே, நாங்களும் கோயில் நகரமான,  கும்பகோணம் சென்றுவரலாம் என தீர்மானித்தோம்..

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள, ஏராளமான கோயில்களில் பெரும்பாலனவற்றை பார்த்துவிட்டாலும், குடந்தையிலேயே உள்ள கோயில்களைப் பார்த்ததில்லையாதலால், சாரங்கபாணி, சக்ரபாணி, ஸ்ரீராமசுவாமி, ஆதி கும்பேஸ்வரர் ஆகிய கோயில்களைப் பார்த்துவிட்டு வரலாம் என நானும் எனது துணைவியாரும் கிளம்பினோம்.

சாரங்கபாணி கோயில் கோபுரத்தின் சிற்பங்கள் அனைத்தும் அற்புதம். கோயில் அதைவிட! இத்தனை நாள் இந்த பிரம்மாண் டத்தை எப்படி ‘மிஸ் செய்தோம் என்று வியந்த வண்ணம், தரிசனம் செய்தோம். காலை விஸ்வரூப தரிசனம் ஆயிற்று.  கோயிலைப் பற்றி கிலாசித்தவாறு வெளியே வந்து, ஸ்ரீராமசுவாமி கோயிலைப் பார்த்தால், மூச்சு முட்டியது. என்ன அற்புதமான சிற்பங்கள் நிறைந்த தூண்கள்!? ஒவ்வொரு சிற்பமும் பேசுகிறது. . என்ன ஒரு வேலைப்பாடு? இழைத்திருக்கிறார்கள். மூலவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று, பேரழகு!

































பிரகாரத்தின் உட்சுவர்களில் இராமாயன காதையை சித்திரமாகவே வரைந்திருக்கிறார்கள். கண்டு களிக்க, ஒரு முழு நாள் வேண்டும். அதன் பின் பிரசித்தி பெற்ற கும்பேஸ்வரர். ஸ்தம்பிக்க வைக்கும் கோயில். நீண்ட பிரகாரம். நுழை வாயிலில் இருந்தே, மூலவரைப் பார்த்துக் கொண்டே செல்லலாம்.
உபரியாக, சக்ரபாணி திருக்கோயில்.  வருடத்தில் ஆறு மாதம் வடக்குப் புறமாகவும் (உத்ராயணம்), மீதி ஆறு மாதம் தெற்கு புறமாகவும் (தட்சிணாயனம்) மூலவரைக் காணச் செல்ல வேண்டும்.


















குடந்தையில் புராதனமான, தொன்மைமிக்க, நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய மிகப் பெரிய கோயில்கள் திகட்ட திகட்ட, நிறைய இருப்பதால், இந்த அற்புதமான கோயில்களின் அருமை பெருமைகளை நாம் உணரவில்லையோ என கவலையா யிருந்தது! அமெரிக்காவில் 100 வருடம் ஆனாலே அவை புராதனச் சின்னங்களாகி விடுகின்றன! சாரங்கபாணிக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாம்!









கோயில்களும், சிற்பங்களும் மலைக்க வைத்தாலும், நமக்கு காலைப் பொழுதில் பசி யெடுக்காமலா போய்விடும்? பசி நீங்க ஆதி கும்பேஸ்வரார் கோயில் அருகே உள்ள ஒரு ‘கபே யில் நுழைந்தோம்.

ஹோட்டலின் உள்ளே பரிமாறுபவர் ஒரு பெரியவர். உற்சாகமாக வரவேற்றார்.

“சார்வாள் வரணும்! என்ன டிபனா?

பின் வேறெதற்கு இங்கு வருவார்கள்?

“சாருக்கு இலை போடு!ஆணையிட்டார் பரிமாறுபவர்.

‘என்ன சாப்பிடலாம்? இட்லி-வடை தரட்டுமா?

கேள்வியும் கேட்டுவிட்டு, பதிலையும் அவரே தீர்மானித்துவிட்டார்.

“சரி.. மூணு பிளேட் இட்லி-வடை

“அப்ப அவருக்கு என்ன..? டிரைவரைக் கேட்கிறார்.

“அவருக்கும் இட்லிதான்

“அப்ப மாமிக்கு?என் துணைவியாரைச் சொல்கிறார்.

இதென்ன தொல்லை! “அதுதான் முன்பே சொன்னேனே? மூணு பிளேட் இட்லி-வடை

“அப்ப மூணு பேருக்கும் இட்லியா?

“அமாம்

“ஆக மூணு பேருக்கும் அதுவேதான்?

“பெரியவரே, இதில் என்ன பிரச்சினை, என்ன குழப்பம் உங்களுக்கு? மூணு பேருக்கு, மூணு பிளேட் இட்லி.. அவ்வளவுதான்

“சரியாப் போச்சு போங்கோ! யாருக்கும் ஒரு கேள்வியுமில்லை. சங்கடமேயில்லை! மூணு பேருக்கும் இட்லிதான்..

ஏதாவது தப்பான இடத்திற்கு வந்து விட்டோமா?

“சாருக்கு சட்னி போடலாமா?

பின் என்னத்தைத் தொட்டுக் கொள்ள?

“பெரியவரே, மூணு பேருக்கும் சட்னி, சாம்பார் போடுங்க., ஒருத்த ரொத்தருகிட்டயா போய், கேள்வி கேக்காதீங்க.

“அப்படியே செஞ்சுட்டா போச்சு.. “

“ம்ம்..ம்ம்?

பின், செக்கச் செவேல் என ஒரு சட்னியைத் தூக்கிக் கொண்டு வந்தார்.

“என்ன இது?

“காரச் சட்னி..

“வேண்டாம், காரம் ஆகாது!

“சார்வாள் கொஞ்சம் போட்டுத்தான் ஆகணும். காரம் ஜாஸ்தி இல்லை. உடம்புக்கு ஒன்னும் பண்ணாது..!

“வேண்டாம்னா விடுங்களேன் பெரியவரே!

“அப்ப சரி, உங்க இஷ்டப்படியே ஆகட்டுமே..

அடுத்து ஏதேனும் ஒரு ஐட்டம் சாப்பிடலாமென்று யோசனை. மூவருக்கும் பூரி கிழங்கு சொல்லிவிடலாமா? ஆனால் இந்த பெரியவர் கேள்வி கேட்பதை  நினைத்தால், கலக்கமாயிருந்தது. என் சங்கடத்தைப் புரிந்து கொண்டார் டிரைவர்.

‘பெரிசு.. இங்க வா... நல்லா கேட்டுக்க.. மூணு செட் பூரி கிழங்கு கொண்டு வா.. புரிஞ்சுதா?

எனது துணைவியாருக்கு, எனது தீர்மானம் எதிலும் மாறுபட்டே ஆக வேண்டும். அப்படி ஒரு வரம் வாங்கிவந்தவர்.

“இல்லை... எனக்கு தோசை..

அச்சமயம், எனது நாக்கில் சனி வாசம் செய்தான் போலும்!
“தோசைன்னாலும், இட்லின்னாலும் அதே மாவுதானே? மாறுதலுக்கு பூரிதான் சாப்பிட்டுப் பாரேன்எனச் சொல்லிவிட்டேன்.

“என் தலை எழுத்து, 35 வருஷம், உங்ககூட குடித்தனம் நடத்தினப்புறமும், அற்பம், ஒரு தோசை கூட என் இஷ்டத்திற்கு சாப்பிட முடியல..”.  கூடவே ஒரு சொட்டு கண்ணீர் “டுமுக்கென எட்டிப் பார்த்த்து!

ஆஹா.. கொள்கைப் பிரச்சினை ஆரம்பமாகிவிட்டதா? மனைவிமார்கள் கோபித்துக் கொள்ள, காத்திருக்கிறார்கள். அதற்கேற்ற தருணங்களும் ஏராளமாயிருக்கின்றன போலும்.  

அட போங்கடா.. “விதவிதமான ஆர்டரை, இந்த பெரியவருக்கு எப்படி விளங்கவைப்பதுதான் என் கவலை யென்பதை எப்படி இவளுக்கு புரியவைப்பது?

“பெரியவரே, கொஞ்சம் நில்லுங்க.. மூணு செட் பூரி சொன்னோமில்ல.. அது வேண்டாம். ரெண்டு செட் பூரி, ஒரு தோசை

“அப்ப, முதலில் மூணுசெட் பூரி, அப்புறம் மூணு தோசையா?

கடுப்பாகிப் போனார் டிரைவர். பெரியவரை இழுத்துக் கொண்டு, பூரிகள்  அடுக்கி வைத்திருக்கும் இடத்திற்குப் போனார். பூரியைக் காண்பித்து “இதில ரெண்டு செட்”.  தோசையைக் காண்பித்து, ‘இதுல ஒண்ணே ஒண்ணு என்றார்.

“அப்படியே ஆகட்டும்!

ஆயிற்று.

“அப்புறம் சார்வாளுக்கு என்ன? காஃபியா?

குடந்தை டிகிரி காப்பி இஷ்டம் தான் என்றாலும், பெரியவரிடம் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாததால், “அவ்வளவுதான்.. பில் தாருங்கள்” என்றேன். 

மீண்டும் துணைவியாருக்கு என்னோடு உடன்பாடில்லை.

“எனக்கு ஒரு காஃபிஎன்றார்.

“அதை நீயே அந்த பெரியவரிடம் சொல்லிவிடு என்றேன்.

“மாமா.. இதோ பாருங்க! எனக்கு மட்டும், சூடா, ஸ்டிராங்கா, சர்க்கரை கம்மியா, கொஞ்சமா, சீக்கிரமா  ஒரு காஃபி என்றார் மனைவி.

காஃபி பற்றிய எனது துணைவியாரின் வர்ணனைகள் யாவற்றையும் காதில் வாங்கிக் கொண்ட பெரியவர், “உள்ளே ஒரு காஆஆஆஆஅஃபி என்று ஆர்டர் செய்தார், காஃபி போடுபவரிடம் சிம்பிளாக! துணைவியாருக்கு, தனது காஃபி பற்றிய வர்ணனை, இவ்வளவு சிம்பிளாக போனது குறித்து கோபம் வந்து விட்டது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? மனைவி என்னை ஒரு முறைத்தார்.

ஒரு வழியாக போராட்டம் முடிந்தது என நினைத்தேன்.

“சார்வாள் கோயிலுக்கு வந்தீர்களோ?  எந்த ஊர்? என்றார் பெரியவர். அவருக்கு பதில் சொல்லி, வம்பில் மாட்டவிரும்பாமல் கவனிக்காதது போல, வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன். .

எனது விருப்பமில்லாத அனைத்திலும், எனது மனைவிக்கு உடண்பாடே! பெரியவரின் கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்து விட்டார். இனி பிராட்டியாரின் உரையாடல், அப்பெரியவரிடம் தொடர்ந்தது!.

“ஆமாம் மாமா, நாங்க கடலூர். கோயில்களைப் பார்க்க வந்தோம், சாரங்கபாணி, சக்ரபாணி..... “ என அவரிடம் லிஸ்டித்தார்.

“அப்ப நீங்க இன்னும் ‘கரும்பாயிரம் பிள்ளையாரை பாக்கலியா?

“இல்லியே?

“நல்ல கேள்வி கேட்டீங்க போங்கோ! கரும்பாயிரம் பிள்ளையாரைத் தெரியாவதங்க கூட, இருக்காங்களா நாட்டில..?‘ அற்புதமான சக்தி மிக்கவர் கரும்பாயிரம் பிள்ளையார். (சக்தியில்லாத சாமிகூட உண்டா என்ன?)  கேட்டதை கொடுப்பவர். அவசியம் பாத்துட்டுப் போங்க!

எழுந்து நின்று புறப்படத் தயாரான டிரைவர், இந்த உரையாடலைக் கேட்டு, விரோதமாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

“அது என்ன கரும்பாயிரம்?தொடர்ந்தார் மனைவி.

“ஒரு கரும்பு விவசாயி, கரும்பு நன்றாக வந்தால், ஒரே ஒரு கரும்பினை பிள்ளையாருக்குத் தருவதாக வேண்டிக் கொண்டாராம். கரும்பும் மிக நன்றாக வந்தது. ஆனால், வேண்டிக் கொண்டபடி ஒரு கரும்பினை பிள்ளையாருக்கு தர மனம் வரவில்லை. வெட்டிய ஆயிரம் கரும்புகளையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு,  சந்தைக்கு வந்தாராம். இரவாயிற்று. பிள்ளையார் தனக்கு சேரவேண்டிய ஒரு கரும்பினை மாத்திரம் எடுத்துக் கொண்டுவிட்டாராம். காலை எழுந்து பார்த்த அந்த நபர் ஒரு கரும்பு குறைவதைக் கண்டுகொண்டாராம்.  


யார் அந்த திருடன் என வெகுண்டாராம். அவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த ‘பெருமாள் மீதி இருந்த 999 கரும்புகளையும் மறைத்து விட்டாராம். பிறகுதான், தான் செய்த தவறு நினைவுக்கு வர, பிள்ளையாரிடம் போய் மன்னிப்புகேட்டு, மன்றாடினானாம். 

மனமிரங்கிய பிள்ளையார் அவனுக்கு 1000 கரும்புகளையும் மீண்டும் தந்தருளினாராம். அது தான் “கரும்பாயிரம்பிள்ளையார். அந்த கோயிலுக்கு சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் ஆயிற்று! போய்ப் பாருங்கள் என்றார் பெரியவர்.

“என்னங்க, அந்த கோயிலுக்கு போகலாமா? – மனைவி.

“போகலாமே என்று சொல்லுவதைத்தவிர வேறென்ன ‘ஆப்ஷன் இருக்க முடியும்?

"அடுத்து அந்த கோயிலுக்கே போகலாம்" என்றேன்.

“பெரியவரே, பில் தர்ரீங்களா?

“சார்வாளுக்கு ஒரு 116 ரூபாய்க்கு பில் போடு என்றார்.

‘எப்படி 116 ரூபாய் ஆயிற்று என, அந்த பெரியவரிடம் விபரம் கேட்பதற்கு நான் என்ன பைத்தியமா?

அவரிடம் 120 ரூபாயைக் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
துரத்திக் கொண்டு வந்தார் எங்களுக்கு "சர்வ்"  செய்த அந்த பெரியவர்.

“மீதி நாலு ரூபாயை வாங்காமல் போறீங்களே?  அதை நானே வச்சுண்டா பெருமாள் குத்தமாயிடும்

பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிச் சென்றார் அந்த பெரியவர்.

4 comments:

  1. அச்சமயம், எனது நாக்கில் சனி வாசம் செய்தான் போலும்!
    “தோசைன்னாலும், இட்லின்னாலும் அதே மாவுதானே? மாறுதலுக்கு பூரிதான் சாப்பிட்டுப் பாரேன்” எனச் சொல்லிவிட்டேன்.

    “என் தலை எழுத்து, 35 வருஷம், உங்ககூட குடித்தனம் நடத்தினப்புறமும், அல்பம், ஒரு தோசை கூட என் இஷ்டத்திற்கு சாப்பிட முடியல..”. கூடவே ஒரு சொட்டு கண்ணீர் “டுமுக்” கென எட்டிப் பார்த்த்து!
    //

    உலகம் முழுவதும் பெண்கள் இப்படித்தானா? ஆண்கள் நாக்கில் சனி குடியேறுவதும் மாறாது போல

    ReplyDelete
  2. Hello RB !

    Very nice narration of Temples . Nice Photos .

    BT Arasu

    ReplyDelete
  3. கlaiயின் நேர்த்தியைச்சொன்ன கதையும் நேர்த்தி.

    ReplyDelete