Friday, February 24, 2012

சென்னை உபச்சாரம்!

அறுபதுகளின் பள்ளிவிடுமுறை  தினங்களுக்கு, மனம் விரும்பிச் செல்கிறது. அப்பொழுது பள்ளிகளுக்கு, ‘கால் பரீட்சை, ‘அரைப் பரீட்சை, ‘முழுப் பரீட்சை முடிந்ததும் கிடைக்கும் லீவில், உறவினர்களின் வீடுகள் யாவும், உறவுகளால் நிறையும். ‘காலுக்கு நாம் அங்கே சென்றால் ‘அரைக்கு அவர்கள் இங்கே! வீடுகளில் சிறுவ-சிறுமிகளின் கும்மாளமும், குதூகலமும், சந்தோஷமும் வீட்டின் அனைத்து கதவுகளின் வழியாகவும் வழிந்தோடும்.

உறவுகளுக்க்காகவென்று சிறப்பான விருந்துஎதுவும் இருக்காது; தினசரிச்  சமையல் ‘மெனுவே அப்போழுதும் தொடரும். ஆயினும் என்ன? மாலை முழுதும் விளையாடித் தீர்த்துவிட்டு, இரவில், வீட்டின் முற்றத்தில், குழந்தைகள் அனைவரும் முக்கால் வட்டமாக அமர்ந்து கொள்ள, நடுவில் அம்மாவோ, பாட்டியோ இருந்து  கொண்டு,  ஒரு பெரிய பாத்திரத்தில் சோறு பிசைந்து வைத்துக் கொண்டு, ரம்மியமான நிலவொளியில், ஆளுக்கொரு உருண்டையாக பரிமாறினால், இரண்டுபடி அரிசி போட்டு சாதம் செய்திருந்தாலும் நிமிஷத்தில் காலியாகிவிடாதா?  அந்த இரவின் மங்கிய வெளிச்சத்தில், குழந்தைகளின் கூச்சலும், இரைச்சலும், குதியாட்டமுமாக, அவர்கள் உண்ட ருசி, நிலாச் சோற்றினாலா, பாட்டியின் அன்பினாலா அல்லது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்ட, சந்தோஷ  தருணத்தாலா என்பது விளங்காத ஒன்று!

 அப்போதெல்லாம், ஆறுகளில் கொஞ்சமேனும், மெல்லிய பட்டையாக  தண்ணீர் ஒடிக் கொண்டிருக்கும், பரந்த மார்பினில் யக்ஞோபவீதம் போல.  காலையில் எழுந்து பழைய சாதமோ, கேப்பங்கூழோ குடித்துவிட்டு, பத்து மணிக்கு “குளிப்பதற்காகஆற்றிற்கோ, குளத்திற்கோ சென்றால், உங்களை யெல்லாம் அம்மா சாப்பிடக் கூப்பி டறாங்க என்று ஆள் வந்து சேதி சொல்லும்வரை, தண்ணிரில்  வாண்டுகளின் கும்மாளம் தொடரும். நடுவில், பக்கத்து வயல்களில், மாங்காய், நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை திருடித் தின்பதும்  நடக்கும். மாட்டிக் கொள்வோமென்ற பயமெல்லாம் இருக்காது.

மதிய உணவு முடிந்ததும், தாயக்கட்டையோ அல்லது பரமபதமோ ஆடுவார்கள். சிறுமிகளுக்கு பல்லாங்குழி, ஐந்தாம் கல், ஏழாம்கல் விளையாட்டு உண்டு. இவ்விளையாட்டுகளில், வீட்டின் பெரிய வர்களும், குழந்தைகளாகக் கலந்து கொள்வார்கள். ஐந்தாம் கல்-ஏழாம் கல் விளையாட்டிற்கெல்லாம், ‘ரெட்டைக்கு சிட்டு – ரெவணத்து முட்டை,-கோழிக்குஞ்சு சப்பட்டை “ என வினோத பாட்டெல்லாம் உண்டு

சூரியனின் உக்கிரம் குறைந்ததுமே, சுவற்றில் சாக்கட்டி அல்லது கரிக்கட்டி ‘ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட், அடிபட்டால் உயிர் போகும் படியாக வலிக்கும் ‘எறிபந்து, ‘ரிங்பால்’, ‘டென்னிஸ்எல்லாம் உண்டு. சிறுமிகளுக்கு பாண்டி. விளையாடி, விளையாடி மாளாத நாட்கள் அவை.




வீட்டில் பொருளாதார நிலை கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கூட இத்தகைய உறவுகளின் வருகைக்கு யாரும் சலித்துக் கொள்ள மாட்டார்கள். சொல்லப் போனால் வரவில்லையென்றால் தான்  கோபித்துக் கொள்வார்கள். பிள்ளைகளும், வந்த இடத்தில் ‘டிமாண்ட் எல்லாம் வைப்பதில்லை! மூன்றுவேளை, ஏதேனும் ஒரு உணவு இருந்தால் போதுமானது! நடுவில் ஒரு நாள் ‘டெண்ட் கொட்டகையில் சினிமா உண்டு! ‘டெண்ட் கொட்டகை என்பது, கூரை வேய்ந்த திரையரங்கம். அத்தகைய திரையரங்கிற்கு ஒரு வருஷம் லைசென்ஸ் உண்டு.  திரையரங்கில் மொத்தம் மூன்று ‘கிளாஸ் இருக்கும். தரை டிக்கட் (13 பைசா) என்பது, திரையின் அருகே, ஆற்று மணல் பரப்பி இருக்கும். உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ சினிமா பார்க்கலாம். அதன் பின் இருக்கும் “பெஞ்ச்கிளாஸ் (30 பைசா) கொஞ்சம் நாசூக்கு ஆசாமிகளுக்கு! முதல் வகுப்பு (75 பைசா) என்பது “ஃபோல்டிங் சேர்”.  சினிமா சப்தத்தோடு புரொஜெக்டர் போடும் ‘கொட..கொட சப்தத்தையும், பின்னாலிருந்து கேட்கலாம். பெஞ்சுகளும்-சேர்களும் சாதாரணர்களுக்கானதல்ல.

'லீவு' முடிந்து அழைத்துச் செல்ல வரும் பெற்றோரிடம், ‘நீங்க அடுத்த லீவுக்கு அங்கே வாங்க என்பதோ அல்லது “அடுத்த லீவுக்கும் மறக்காம பிள்ளைகளை இங்கே அனுப்பி வையுங்க என்ற உபசரிப்போ தவறாது நடக்கும்!

அந்த பழங்கதையை, இப்போது எதற்குச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா? காரணம் உள்ளது!

“செல்விருந்தோம்பி, வருவிருந்து காத்திருப்பதெல்லம்" அந்த காலம். தற்போதெல்லாம் ‘விருந்தினர் என்றாலே திகிலோடு எதிர்பார்ப்பது தான் 'நடைமுறை' என்றாகிவிட்டது.

பக்கத்து வீட்டுக்கு போவதென்றாலும் கூட ‘அப்பாயின்மென்ட் (தகவல் சொல்லிவிட்டு செல்வது) இல்லாமல் போவது, “நாகரீகமற்ற செயல் என்னும் மோஸ்தர்,  சிறு நகரங்களில் கூட சாதாரணமாகி விட்டது. பின் சென்னைக்கு கேட்பானேன்! 

மாலை, அலுவலகத்திலிருந்து  வீட்டிற்கு வந்ததும் ‘சட்டென கதவைத்திறந்து, உள் நுழைந்து, பின் ‘பட்டென சாத்திக் கொள்கின்றனர். பின் அடுத்த நாள் காலை அலுவலகம் செல்லும் போதுதான் கதவு திறக்கப்படும்.

கண்ணுக்கு முன்னால் ‘இரத்தமும் சதையுமாக இருக்கும் உறவுகளையும் நட்புக்களையும் புறக்கணித்து ‘ஃபேஸ்புக்கின் மாய நண்பர்களோடு ‘சேட்டிப்பதும், ‘லைக்கிப்ப தும் ’, புதிராகத்தான் உள்ளது.

சில நாட்களுக்கு முன்னால், எனது நண்பர் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு உறவுக்காரர், ‘விரும்பிக் கேட்டுக் கொண்டதால் சென்றுவிட்டு வந்தார்.  அதன் பின்விளைவாக, "சென்னை உபச்சாரம்" (விருந்தோம்புதல்) குறித்து, சில ஆலோசனைகளைத் தந்துள்ளார். அவை உங்களது பரிசீலனைக்கு:  


அ. “அடுத்த முறை அவசியம் வீட்டிற்கு வாங்க” என்று 'சென்னை உறவுகள்' சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு, அவர்கள் வீட்டிற்குப்போய் நிற்கக் கூடாது. அந்த உபசாரங்கள் யாவும் ‘சும்மா, ஒரு பேச்சுக்காகக்’ கூட இருக்கலாம்.


ஆ. இந்தெந்த வேளை, வீட்டிற்கு சாப்பிட வருவேன் அல்லது வரமாட்டேன் என்று தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது.  அது அவர்கள் திட்டமிட(!) ஏதுவாக இருக்கும். எனினும் சாப்பிட வரமாட்டேன் என்ற பதிலே, அவர்களால் பெரிதும் விரும்பப் படும்.

இ. காஃபி அல்லது டீ வேண்டுமெனில், சப்தம் காட்டாமல் தெருமுனையில் உள்ள காபிக்கடைக்குச் செல்வதுதான் உத்தமம

. எப்போது கிளம்பப் போகிறீர்கள் என்பதை, அவர்களது  ‘ஐயம் தீர’ சொல்லி விடுவது நல்லது.  சொன்னபடி நடப்பது அதனினும் நல்லது. கூடுமானவரை இரவுத்தங்கலை தவிர்ப்பது நலம்.     

. அப்படியே, மீறித் தங்கவேண்டி வந்துவிட்டால், மாலை ஆறு முதல் இரவு ஒன்பது மணிவரை ‘வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்'. ஏனெனில் அந்த நேரம், டி.வி யில் ‘பீக்’ அவர்.  அவர்கள் உங்களுக்காக தொலைக்காட்சித் தொடரைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.

. தவறிப்போய் கூட, முகம் துடைக்க துண்டு, சோப்பு போன்ற வற்றை கேட்காதீர்கள். அவை ‘கண்ணியமற்ற-ஊரான்கள்’ செய்யும் வேலை. 

. வீட்டின் எந்த பொருளையும் ‘நன்றாக உள்ளது (அ) நன்றாக இல்லை’ போன்ற விழையா விமரிசனங்களைத் தவிர்க்கவும்.

ஏ. அவர்கள் வீட்டுக் குழந்தை, உங்கள் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, உங்கள் ‘செல்போனைக்’ கவர்ந்து சென்று "நான்-ஸ்டாப்பாக" கேம்ஸ் விளையாடினாலோ அல்லது 'தொம்மென்று' கீழே போட்டுவிட்டாலோ, ஒரு அசட்டுச் சிரிப்புடன், பதற்றத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் செல்போன் உடைந்ததைப்ப்றி கண்டுகொள்ளாமல், "எங்க குழந்தை எப்போதுமே ரொம்ப 
சூட்டிகை, அவனுக்கு எல்லாம் அத்துப்படி" என்ற அவர்களது புகழ்ச்சிக்கு சிரித்து வைப்பது நல்லது. 

. ‘யாருப்பா இந்த அங்கிள்? ஊரிலிருந்து ஒரு உபத்திரவம் வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, அது தானா இது” என்ற ஏவுகணைத் தாக்குதல்களை எந்த நேரமும் எதிர்பாருங்கள்.   

. “உங்க வீட்டு ஜனங்களுக்கு மேனர்ஸே கிடையாது! வந்தோமா, பார்த்தோமா, கிளம்பினோமா என்றில்லாமல், நாள் பூராவுமா தங்கியிருப்பார்கள்?” என வீட்டுத் தலைவனோ (அ) தலைவியோ உங்கள் காதுபட கமெண்ட் பாஸ் பண்ணும் வரை புறப்படக்  காத்திருக்காதீர்கள். 

. மேற்சொன்ன ஆலோசனைகள் யாவும், நீங்கள் அவர் வீட்டிற்கு சென்ற உடனேயே, அவர்களுக்காக நீங்கள் வாங்கி வந்திருக்கும் பழ,பலகார வகைகள் (வகைக்கு அரை கிலோவாவது முக்கியம்; இல்லாவிடில் 'கஞ்சுஸ்' பட்டம் வரும்)  மற்றும் ஊரிலிருந்து ‘ஸ்பெஷலாக’   ஏதேனும் வாங்கி வந்திருந்தால் அவற்றையும் கொடுத்துவிட்டால், 
அனுசரிக்க வேண்டிய விதி முறைகள்தான் இவை!

. வெறுங்கையை வீசிக்கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போய் விட்டால், “சென்னை உபசரணை” பன்மடங்காக இருக்கும். அதன்பின் உங்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! 



நண்பர், எடாகூடமாக ஒருத்தர் வீட்டில் அனுபவப்பட்டு விட்டார் போலிருக்கிறது! அதன் விளைவாகத்தான் இந்த 'ஆலோசனை' களைத் தந்திருக்கிறார் போலும்!   இது "நண்பரின் தனிப்பட்ட அனுபவமா" இல்லை "சென்னைக்கே உரித்தான இயல்பா" என விளங்கவில்லை! ஏனெனில் சென்னையில் உறவுகளின் வீடுகளில் நான் தங்குவதில்லை.

6 comments:

  1. Padikkave manasukku romba kashtamaaga irukkiradhu. Nam paarambariya virundhombalukkum indraiya vaazhkkai muraikkum eththanai Vidhyaasam!!!!!!!!

    ReplyDelete
  2. அதென்ன சென்னை மட்டும் ஸ்பெஷல்? எல்லா ஊர்லயும் அதே கதிதான், அதே விதிதான்.

    எல்லா ஊர்லயும் எத்தனை ஓட்டல் கட்டி வச்சிருக்காங்க. அதெல்லாம் யாருக்காக, நம்ம மாதிரி ஆளுங்க தங்கத்தானே?

    ஓட்டலில் தங்கி உறவினர் வீட்டுக்கு ஒரு அரை மணி நேரம் விசிட் செய்தால் மரியாதையாக இருக்கும். அரை கிலோ ஸ்வீட், அரை கிலோ காரம், ஒரு கிலோ ஆப்பிள் இவைகளோட போனாத்தான் மரியாதை.

    இதுக்கெல்லாம் காசு இல்லைன்னா, உனக்கெல்லாம் எதுக்கு சொந்த பந்தம்? பேசாம வீட்டிலேயே படுத்துக் கெடக்க வேண்டியதுதானே?

    ReplyDelete
  3. Excellent writing and sharing of past and present practices regarding treatment of guests. In those days there were no formalities. Relatives visit, stay, eat whatever we eat . No special preparations . Feel one among the family. Really Chennai people however good they are, when guests come, face shrinks like 'Kadugu'. Very beatiful writing . Brought out the reality very nicely. Kumar

    ReplyDelete
  4. என் உறவினர் ஒருவர், தேசிய வங்கியில் பெரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர். பெங்களூரில் வசித்து வருகிறார். முப்பத்தேழு வருடங்களுக்கு முன் ஒரு பிராமணப் பெண்மணியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மணம் புரிந்து கொண்டவர். அவர் மனைவி ஒரு மருத்துவர். திருமணமான நாளிலிருந்து இன்று வரை தனது சொந்தங்கள் ஒருவரையும், பெற்றோர் உள்பட தன் வீட்டில் அனுமதித்தது கிடையாது. வீட்டு விசேஷங்களுக்கு நேரில் அழைக்க செல்பவர்கள் நல்ல தரமான லாட்ஜில் தங்க வைக்கப் படுவார்கள். விழாக்களுக்கு வரும் போது மனைவியை அழைத்துக் கொண்டு வருவார். ஆனால் லாட்ஜில் தான் தங்குவார்கள். அவருடைய மகன், மகள்கள் என்ன செய்கிறார்கள், எங்கு உள்ளார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

    ReplyDelete
  5. sir really nice!! my mom used to share her childhood memories with me. similar story. chennai pathi sonnathu 100 percent correct. i too dont know much about hospitality. but my parents thought me not to hurt anybody. aana vaeli seyya kashtapattu relatives vara koodathunnu vaendikiraen. if relatives are ready to share my burden they are always welcome!!!

    ReplyDelete
  6. Smt Isaki Maha, Shri Malarvannan, Shri Kumar, Shri pazhani Kandhaswamy,Smt Srividhyamohan!

    Thanks for your appreciating words.
    Balaraman R

    ReplyDelete