Friday, May 27, 2011

'சமச்சீர் கல்வி'

பதவிக்கு வந்திருக்கும் புதிய அரசு 'சமச்சீர் கல்வி' திட்டத்தினை கிடப்பில் போட்டுள்ளது. இது குறித்து வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டுள்ளன. ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி திட்டத்தைப் பரிசீலிப்போம் என்று ஜெயலலிதா முன்பே சொல்லியிருக்க வேண்டும். இதன் மூலம் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களை ஓரளவாவது தவிர்த்திருக்கலாம்.  தனியார் நிறுவனங்கள் புதிய பாடத்திட்டத்தின் படி அமைந்த நூல்களுக்கு உரை தயார் செய்து, அவற்றை மாணவர்கள் பலரும் வாங்கிவிட்டனர். அரசு, 200 கோடி செலவழித்து, புதிய பாடத்திட்டத்தின் படி, பாடப் புத்தகங்களையும் அச்சடித்து விட்டது.   வினியோகம் மட்டும் தான் பாக்கி. இந்த கட்டத்தில், திட்டத்தினை நிறுத்துவதால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு?


மெட்ரிக் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்திருக்கும் பெற்றோர்களுக்கு இது பற்றிய சரியான புரிதல் உள்ளதா என்பது சந்தேகம்.  அவர்கள், மேம்போக்காக, படிப்பின் தரத்தை அரசு குறைத்து விட்டதாகத் தான் எண்ணுகிறார்கள். இவர்களுக்கு matric,  ஸ்டேட் போர்ட்  படிப்பின் குறைகளும் தெரியாது, சமச்சீரில் அந்தக் குறை நீக்கப்பட்டிருக்குமா, இருக்காதா எனவும் தெரியாது. பொதுப்படையாக அது கல்வியின் தரத்தைக் குறைத்து விட்டனர் எனவும், இதன் மூலம், அரசுப் பள்ளி களையும் தனியார் பள்ளிகளையும் ஒரே பாடத் திட்டத்தில் இணைக்கிறது என்று மட்டுமே தெரியும். அரசு பெற்றோர்களுக்கு சமச்சீர் கல்வி குறித்த எந்த விழிப்புணர்வையும் தரவே இல்லை. அதனால் அதை அமுல்படுத்தாமை குறித்த கவலை அவர்களுக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. 

ஓரளவு பணம் செலவழிக்கத்  தயாரான எல்லா பெற்றோர்களும் மெட்ரிக் பள்ளிகளையே நாடிச் செல்கின்றனர். இதனால் நகரங்களில் உள்ள ஸ்டேட் போர்ட் பள்ளிகளில் இயல்பாகவே , ஓரளவு வசதி இல்லாத வர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது உண்மையா, இல்லையா என்பதை பள்ளிகளை, நேரில் போய்ப் பார்த்தாலோ அல்லது ஆசிரிய நண்பர்களிடம் பேசினாலோ தெரிந்து கொள்ளலாம்.


விஷயத்திற்கு வருவோம்.  ஸ்டேட்போர்ட்,மெட்ரிக்குலேஷன் .... என பல்வேறு பாடத்திட்டங்கள், நம் மாநிலத்தில் இருக்கிறது.  நம்மவர்களுக்கு அனைத்தையும் அரசியலாக்கி, சார்புடன் (அல்லது) எதிர்த்துப் பேசியாகவேண்டும். இல்லையெனில் "பிழைப்பு" நடக்காது.  இது என்ன நோக்கு என புரியவில்லை.  உண்மை என்பது மக்களிடமிருந்து ஒளித்தே வைக்கப்படுகிறது. மக்களை உசுப்பேற்றி,  மொழி வெறி கொள்ளச் செய்வது நம் அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை. (உ-ம் 1967 இந்தி எதிர்ப்பு போராட்டம். இதனால் மாணவ குலம் அடைந்த நட்டத்தினை யாராவது எண்ணிப் பார்த்தார்களா? ஆனால் அனைத்து அரசியல்வாதி களின் குழந்தைகளும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஹிந்தி படித்துக் கொண்டுள்ளர்). எனவே, நாம் பாசாங்குகளையும், உள்ளூர் அரசியலையும் விட்டுவிட்டு நேர்மையாக இவ்விஷயத்தை பார்ப்போம். 

குறைந்தபட்சமாக, ஒரே மாநிலத்தில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே சீரான பாடத்திட்டத்தினை உறுதி செய்வதில் என்ன தவறு?  மாணவர்களிடையே கற்றுக் கொள்ளும் திறன் மாறுபடலாம்.  ஆணால் கற்றுக் கொடுப்பதில் 'பாரபட்சம்' இருப்பதை சகிப்பது எப்படி? சமச்சீர்க் கல்விமுறை என்பது சமுதாய மாற்ற முறைகளில் ஒன்று அல்லவா? சமச்சீர் கல்வி ஒரு முழுமையான தீர்வல்ல, எனினும், ஒரு நல்ல துவக்கம். 


ஸ்டேட்போர்டை விட 'மெட்ரிக்' பாடத்திட்டங்கள் சற்று தரம் கூடியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஸ்டேட் போர்ட் சிலபஸில் பயிலும் மாணவர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதை சமூக உணர்வுள்ள எவரும் எற்றுக் கொள்ள மாட்டார்கள்.  எனவே இது சரி செய்யப்பட வேண்டிய விஷயம்தான் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது.


இக் கோளாறினை சரி செய்வது என்பது,  எப்படி இருக்க வேண்டும்?  இதனை அணுகும் போது இரண்டு விஷயங்களைக்  கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ( 1   )         பொதுவான சிலபஸ் - சமச்சீர் பாடத்திட்டம்.

(2) பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் தகுதி, பள்ளிகளில் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள், அரசின் கண்காணிப்பு, கல்விக் கட்டணம் பற்றியது.

ஆனால் நடந்தது என்ன? 

தற்போது பிரச்சினையில் இருக்கும் முதலாவதை பார்ப்போம். புதிய பாடத்திட்டத்தினை உருவாக்கும் போது, இக்கால மாணவர்கள், போட்டி நிறைந்த உலகத்தை சந்திக்கப் போகிறார்கள் என்பதனையும், சம கால கல்விப் போக்கினயும் (குறைந்த பட்சமாக மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தினை) கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக  சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களை.   10+2 புத்தகங்களைவிட சி.பி.எஸ்.இ 10+2 புத்தகங்களில் விஷயம் தெளிவாகவும், நல்ல நடையிலும் விளக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. எல்லாவிதமான நுழைவுத் தேர்வுகளும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தங்களின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்க்கப்படுகின்றன.  சமச்சீர் கல்வியாளர்கள் புதிய பாடத்திட்டத்தினை வகுக்கும்போது சி.பி.எஸ்.இ சிலபஸை கவனத்திற் கொண்டாற்போல தெரியவில்லை. மாறாக மெட்ரிக் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, ஸ்டேட்போர்ட் அதிகப்படுத்தப் பட்டதாகச் சொல்கிறார்கள்.

 (அடிப்படையில் ஸ்டேட் போர்ட் சிலபஸ் மனப்பாடம் செய்யும் முறையினையும்,  சி.பி.எஸ்.இ சிலபஸ் மானவர்களை புரிந்து கொள்ளச் செய்யும் முறையினையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என விபரமறிந்த ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்)

எனவே புதிய பாடத்திட்டம் எந்த அளவிற்கு கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது என தெளிவாக்கப்படவில்லை. எப்படியாயினும் மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்க்கத்தான் செய்யும். ஏனெனில் அது அவர்களது 'தொழிலை' பாதிக்கும்.  நாங்கள் 'மற்றவர்களை விட ஒசத்தி' என்பது தானே அவர்களது தொழிலின் அடி நாதம்?

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஆகியவை ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தையும், தனியார் மெட்ரிக் பள்ளிகள் மெட்ரிக் என்ற பாடத்திட்டமும் (இதுவும் அரசால் உருவாக்கப்பட்டதே) பின்பற்றிவந்தன. மெட்ரிக் பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தைவிட தரத்தில் சற்று உயர்ந்ததாக இருந்தது.  ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தைத் உயர்த்துவதை விட்டு,  இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கும்போது, மெட்ரிக் பாடத்திட்டம் முன்பு இருந்ததைவிட தரம் குறைவாக ஆக்கும் முயற்சி நடைபெற்றதாக மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கருதினர். இதுதான் பிரச்னைக்கு ஒரு காரணம்.  மெட்ரிக் பள்ளிகளை முந்தய அரசு கட்டணக் கட்டுப்பாடு என ஆரம்பித்து, சிலபஸில் கை வைத்தது. அதாவது சற்றேரக் குறைய மிரட்டியது. புதிய சிலபஸை முடிவெடுக்கு முன் கல்வியில் பெரும்பான்மை பங்கு வகிக்கும் matric பள்ளிகளிடம் முறையாக கலந்தாலோசிக்காமல் செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இது உண்மையாயின்,  அரசு செயலாற்றியது பெரும் தவறு. முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம், சமசீர் கல்வியில் KG க்கான பாடத் திட்டங்கள் இல்லை. சமசீர் யின் கல்விபடி KG,  அரசு அங்கீகாரம் பெறாது.  இந்த கால சூழ் நிலையில் KG என்பது புறக்கணிக்கக் கூடிய ஒன்றா?


மேலும், புதிய பாடப் புத்தகங்கள் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டது போன்றுதானே இருந்தது. பலர் பாடதிட்டங்களை பார்த்துவிட்டு அதில் இருக்கும் பிழைகள், தரத்தினப் பற்றி எழுதியிருந்தனர். அதைப்பார்த்தால் பாடங்கள் மிகவும் மோசமாக இருப்பது போல் இருந்ததே. மேலும், இதில் அரசியலைப் புகுத்தி, கலைஞர் போற்றி புராணங்களும் இருந்ததாகச் சொல்கிறார்கள். 

எனவே "சமச்சீர்கல்வி" உறுதி செய்யப்படும்போதே, பாடத்திட்டங்கள், கல்வியாளர்களயும், சமூக இயலாளர்களையும் கலந்து ஆலோசித்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இனி இரண்டாவது விஷயத்தைப் பார்போம்:

நல்ல தரத்தோடு பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருந்தாலும் பெரும்பாலும் நகரின் சந்துபொந்துகளில் எல்லாம் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளே அதிகம்.  விந்தை என்னவெனில் இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில், மிகக் குறைவான திறனோடுதான் கற்றுக் கொடுக்கின்றனர். பிற வசதிகள் எனப் பார்த்தால், மைதானம் கூட இல்லாத, மிகக் குறைவான இடத்தில், காற்றோட்டம் கூட இல்லாத வகுப்புகளை வைத்துக்கொண்டு, "தொழில்" நடத்துகின்றனர். மெட்ரிக் பள்ளிகளில் படிக்கவைப்பது தான் பெருமைக்குரிய விஷயம் என்னும் நம் மக்களின் மணப்போக்கு ஒரு பிரதான காரணம்.  ஆணால் பெரும்பாலும் மெட்ரிக் பள்ளிகள் 90% பாஸ் ரிசல்ட் கொடுக்கின்றனர். 

இதற்கு மாறாக அரசுப் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் 'சம்பளம்' என்ன?  அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைகள் இருந்தாலும், பெருவாரியான பள்ளிகள் மைதானத்துடனும், நல்ல காற்றோத்துடனும், ஓரளவு வசதியாகத்தான்இருக்கின்றன.  இப்பள்ளிகளின் பாஸ் பர்ஸெண்டேஜ் என்ன?  30%க்கும் 70% க்கும் இடையேதானே உள்ளது! 

இந்த முரண் ஆச்சரியமளிக்கிறது!  அற்ப சம்பள அசிரியர்கள் 90% பாஸ் காண்பிக்க, கனத்த சம்பளம் பெறும் ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் பாஸ் பர்ஸெண்டேஜ் என்ன?

கோளாறு அரசு பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பவர்களிடையேதான்  அல்லவா?

என்ன செய்யலாம்?

(1) கோடிக் கணக்கில் புத்தகங்களை அடித்துவிட்டு, திடீரென சமச்சீர் திட்டத்தினை, மாற்று ஏற்பாடு ஏதும் இன்றி நிறுத்துவது சரியாகப் படவில்லை.  மாறாக, அரசியல் உள் நோக்கத்துடன் உள்ள அல்லது தேவையற்ற பாடங்களை நீக்கி விட்டு, இப்புத்தகங்களையே உபயோகிக்கலாம்.  அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், அனைத்து தரப்பும் (உள்ளூர் அரசியல் சார்பு அற்ற) கொண்ட, சமூக உணர்வு கொண்ட ஒரு கமிட்டி மூலம் புதிய பாடத்திட்டத்தினை,தற்போதுள்ள பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளைப் போக்கிவிட்டு,சி.பி.எஸ்.இ சிலபஸினை ஒட்டி தயாரிக்கலாம். 

(2) இது தவிர தனியார் பள்ளிகள் குறித்து சரியான வழிகாட்டுதல் நெறிகள் உருவாக்கப்பட்டு (லேப், மைதானம், ஆசிரியர்களின் தரம், பாதுகாப்பு போன்றவை), அவை முறையாக பின்பற்றப் படுகிறதா என ஒரு நேர்மையான கண்காணிப்பு இருக்க வேண்டும். 

(3) அரசு பள்ளிகளில் இருக்கும் வேகன்ஸிகளை நிரப்பவும், சரியான ரிசல்ட் கொடுக்க வில்லையெனில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயங்கக் கூடாது


  அரசியல்வாதிகளுக்கிடையே மாணவர்கள் சிக்கிக் கொள்வது பரிதாபம்!


1 comment:

  1. அரசுப் பள்ளி ஆசிரியர்களை ரிவிட் எடுக்க வேண்டும். இல்லை என்றால் சம்பளத்தைக் குறைப்போம் என்றால்தான் பயப்படுவார்கள்.

    ReplyDelete