Thursday, May 19, 2011

நோயுற்றவனின் தினங்கள்

இரு திணங்களாக உட்கார்ந்துவிட்டால் எழவும், எழுந்துவிட்டால் உட்காரவும் இயலாமல் - யாரோ முதுகுத்தண்டில் கத்தியால் குத்துவது போல இம்சை. இதற்காக ஆஸ்பத்திரி விஜயம்.
நோயுற்று படுக்கையில் விழுந்துகிடந்த அனுபவத்தினை பெறாதவர் யார்? நோயாளியின் பகல் பொழுதுகள் மிக நீளமானவை. ராப்பொழுதுகள் கொடுமை யானவை.


நோயாளிகளின் தினங்கள் டாக்டரின் கன்ஸல்டிங் ரூமில் துவங்குகிறது. நாம் விரும்பும் டாக்டரின் 'அப்பாயின்மெண்ட்' கிடைப்பது லாட்டரி போல.  
கிளினிக்கில் டோக்கன் வழங்குபவர், அனேகமாக ஒரு பெண்மணி யாகத்தான் இருப்பர். 


"பாருங்கம்மா.. என்னால் நிற்க முடியவில்லை.. தலை சுற்றுகிறாற்போல இருக்கிறது... கொஞ்சம் சீக்கிரம்......" 


நமது புராணம் எதுவும் அவள் காதில் விழாது. 


"டோக்கன் நெம்பர் 32... போய் உட்காருங்க...கன்ஸல்ட்டிங்க ஃபீஸை இப்பவே கட்டிடுங்க..."


வேறு வழியில்லை.. உள்ளே போய்விட்டு வரும் 31 பேரையும் எண்ணிக் கொண்டு பொறுமையற்று கிடக்க வேண்டியது தான். உங்களது 'டர்ன்' வரும்போது, வேறு யாராவது வி.ஐ.பி பேஷண்டோ அல்லது ஒரு மெடிக்கல் 'ரெப்' போ வராமலிருந்தால் அன்றைய தினம் அதிர்ஷ்ட தினம்.


டாக்டரின் தரிசனம் கிடைத்ததும், இவர் எதோ மாயம் செய்து வியாதியை குணமாக்கப் போகிறார் என்ற நம்பிக்கையுடன் வியாதியை சொல்ல ஆரம்பித்த உடண், அவர் பேடை எடுத்து எழுதுவார். சொன்னதை காதில் வாங்கினாரா சந்தேகம் வரும். ஆனால் அவர் எழுதுவது மருந்து பட்டியல்  அல்ல...   ஒரு பெரிய நாம் எடுக்க வேண்டிய 'டெஸ்ட்கள்' களின் பட்டியல். இதில் நமக்கு 'ஆப்ஷன்' ஏதுமில்லை. 


எக்ஸ்ரே, இரத்தம்,யூரின்,ஈ.ஸி.ஜி யூனிட்கள், ஸ்கேன் ரூம் -  யாவும் மருத்துவ மணையில் பல்வேறு இடங்களில் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும். ஒருவழியாக அங்கும் இங்கும் ஓடி, டெஸ்ட் ரிஸல்ட்களை எடுத்து கொண்டு வந்தால், டாக்டரை பார்க்க மீண்டும் ஒரு கியூ.


ஒருகணம்... ஒரே ஒரு கணம்தான் அந்த ரிஸல்ட்களை பார்ப்பார்.  விறு விறு வென மருந்து பட்டியல் எழுத ஆரம்பிப்பார். 


"சார்... எனக்கு என்ன பிரச்சினை?"  ஏன் இப்படி வலிக்கிறது?


"பார்ப்போம்..." இந்த மருந்தை ஒருவாரம் சாப்பிடுங்க...பெட் ரஸ்ட் எடுங்க..மறுபடியும் வந்து பாருங்க..!"


இது என்ன பதில்?


"ஏதும் சீரியஸான பிரச்சினையா?.. மருந்தில் சரியாகிவிடுமா?"


"அதான் மருந்து கொடுத்திருக்கேன் இல்ல... ஒரு வாரம் கழித்து பாப்போம்..."


"நெக்ஸ்ட்"


முடிந்தது கன்ஸல்டேஷன்.


வீட்டிற்கு திரும்பி வந்து, பகல் முழுதும், அம்மியின் அடியின் சுருண்டு கிடக்கும் பூரான் போல நாளெல்லாம் கட்டிலில் விழுந்து கிடப்பது நோயைவிட கொடுமையானது. நம்மை சுற்றி ஆரோக்கியர்கள் யாவரும் உண்டு, ஓடியாடிக் கொண்டிருக்க,  நாம் தாவரம் போல படுத்துக் கிடக்க வேண்டும். 


"ஹாட்பேக்கில் சாப்பாடு இருக்கு, தண்ணி பாட்டில், மருந்து வகையராக்கள் பக்கத்தில் இருக்கு. சாப்பிட்டு தூங்குங்கள்" -  மணைவி தன் 'கடைமைகளை' ஆற்றிவிட்டு புறப்பட்டுவிடுவாள்.  தொல்லை பண்ணாதே, பேசாமல் கிட என்று இதற்கு பொருள். 


தவழ்ந்து-தவழந்து போய் மெல்ல டி.வி யினைப் போட்டால் அனைத்து சேனல்களிலும் நீக்கமற வலிப்பு நடனங்கள் அல்லது விந்தை மனிதர்கள் உலவும் வினோத சீரியல்கள். இவற்றையா மக்கள் சலிப்பின்றி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்?


கடிகாரத்தை அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் ஐந்து நிமிடம் நகர்ந்திருக்காது.  பொழுதைப் போக்குவது என்பது இவ்வளவு சிரமமான காரியமா?


ஒருவாரம் கழித்து,  மீண்டும் டோக்கன், கியூ யாவற்றையும் கடந்து,  டாக்டரின் தரிசனம் பெற்று "சார்..முழுசும் சரியாகவில்லை...இன்னமும் வலி இருக்கத்தான் செய்கிறது....."


"அப்படியா..?" 


மேலும் சில டெஸ்ட்டுகளை எடுக்கச் சொல்லி லிஸ்ட் தயாராக, மிரண்டு போய,  இந்த வலியோடேயே காலத்தை தள்ளிவிட தீர்மாணித்து வீட்டிற்கு வந்து விட்டேன்.  


Health is Wealth  என்று சிறு வயதிலிருந்தே படித்தாலும் வயதாகும் போதுதான் இதன் முழுப் பொருள் விளங்குகிறது.


"ஆரோக்கியத்தின் அருமை - நோய்க்காலங்களில்"
==============================================================
(குறிப்பு:  10 நாள் கழித்து தானாகவே வலி குணமாகிவிட்டது)

No comments:

Post a Comment