Wednesday, April 6, 2016

“ங்கொப்பன் மவனே... சிங்கம் டா...” ( குறுங்கதை)


மதியம் ஒரு மணி இருக்கும். மதிய உணவிற்குப்பின் ஒரு குட்டித்தூக்கம் போடுவது, அரவிந்தனின் வழக்கம். குட்டித் தூக்கம் என்றால் ஒரு 10 நிமிஷம் தான். உண்டது, சாப்பாடோ அல்லது கஞ்சியோ, அது பிரச்சினையில்லை! உணவு, வயிற்றிற்குள் இறங்கியதும் லேசாக கண்ணைச் செருகும். அந்தக் கணம் அரவிந்தனுக்கு கோடிபெரும். மாத்திரை போட்டே தூக்கம் வரவழைத்துக் கொண்டிருப்பவருக்கு, தானே வரும் தூக்கம் அல்ப நேரமேயானாலும், அது தரும் சுகமே தனியல்லவா? தூங்கி எழுந்ததும் கிடைக்கும் சுறுசுறுப்பு அற்புதம்.  அதனால், அக்கணத்தை நழுவவிடாமல், தூங்கிவிடுவார்.

அன்றும் அப்படித்தான். கண்கள் தூக்கத்திற்கு நழுவும் தருணம்.  அப்போது, சடாரென, நேராக மண்டைக்கு மேலிருந்து, கடைவாய்க்கு ஒரு கூரான ஈட்டி கொண்டு செருகினாற்போல ஒரு சுரீர் வலி. அலறி அடித்து எழுந்து உட்கார்ந்தார், அரவிந்தன். அந்த வினாடி நேர வலியே, கண்ணீரை  வரவழைத்துவிடப் போதுமானதாக இருந்தது.  
என்ன ஆச்சு? கீழ்த் தாடை முழுவதும், வலி வந்துவிட்டுப்போன தடயம் தெரிந்தது.

மூன்று தினங்களுக்கு முன் தான், மேல் கடைவாய்ப்பற்களுக்கு ஏதோ, ‘பொட்டானிகல்’ பேர் போலத் தெரியும் “வேர் சிகிச்சை” என்று அறியப்படும் ரூட்கேனால் பற்சிகிச்சை செய்து கொண்டு வந்தார்.   இச்சிகிச்சைக்கு முன்னும் பின்னும் அனுபவித்த இம்சைகளினால் அவதியுற்று மீண்டிருக்கும் அரவிந்தன், இன்னும் ஒரு பல் வலியா என பீதியுற்றுப் போனார்.

ஒருவேளை மனப் பிரமையோ? மீண்டும் சாய்ந்து படுத்துக் கொள்ள பயம். இனி அந்த தூக்கக் கணம் வராது. பரவாயில்லை அந்த வலி வராமலிருந்தால் போதும் என கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கணத்தில், அந்த விருந்தாளி வந்தே விட்டார்.

அந்தக் கால ஓனிடா டி.வி விளம்பரம்போல தலையில் கொம்பு முளைத்த ராட்சதன் வந்தே விட்டான். மின்சார ஷாக் போல சுண்டி இழுத்தது வலி. இம்முறை ‘டீசர்’ காட்டிவிட்டு போக வில்லை. பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு வந்த பெண்போல நன்கு ஆற அமர சௌகரியமாய் கால் நீட்டி உட்கார்ந்து விட்டது பல்வலி. ஒவ்வொரு நொடிக்கும் ஒரு சுரீர். 

வ்வாஆஆஆஆஆ..  தானே கைகளால் வாயை மூடிக் கொண்டார்.

கத்தாதே! நிதானம்... நிதானம்.. பதறாதே!

மருந்துப் பெட்டியை குடைந்தார். ஒரு கையால் வாயைப் பிடித்துக் கொண்டே!

ப்ரூஃபன்? பாராசிட்டாமல்? அட.... ஒரு சாரிடான்? ஒன்றுமே இல்லை. கிராம்புத்தைலம் வைத்தால் நிவாரணம் கிடைக்குமாமே? அதெல்லாம் வீட்டில் இருக்குமா என்ன?

அவசரமவசமாக, பழைய பிரிஸ்கிரிப்ஷனைத் தேடினார். ‘டென்டிஸ்டின்’ கன்சல்டிங் நேரம் மாலை நான்கு முதல் இரவு எட்டு மணி வரை என்றிருந்தது.  வேர் சிகிச்சை செய்து கொண்ட ஆஸ்பத்திரிதான் அது.

மணியைப் பார்த்தார். இப்பதான் மணி இரண்டு. கதவைப் பூட்டக் கூட இல்லாமல், தெரு முனையிலிருந்த ஒரு மெடிக்கலை நோக்கி ஓடினார். ஏதாவது ஒரு பெயின் கில்லர் கொடுங்க... பல்வலி.. தாங்கல.. சீக்கிரம்.

கடைக்காரர் இரு மாத்திரைகளைத் தந்தார்.  மாத்திரை செயல்பட ஒருமணி நேரமாவது ஆகும்... தெரிந்தும் கேட்டார். பல்வலிக்கு, இந்த மாத்திரை எவ்வளவு  நேரத்தில் கேட்கும்?
கூடவே, வென்னீர்.. உப்புத்தண்ணீரில் கொப்பளித்தல் என கைவைத்தியமும்.

வேலையில்லாதவன் பொழுதும், வலி வந்தவன் பொழுதும் செலவழியாது. மணி மூன்றரை ஆயிற்று.. இனியும் பொருக்க இயலாது.. கதவைப் பூட்டிக் கொண்டு கிளினிக்கு விரைந்தார், ஆட்டோவில்.  மாத்திரை எந்த வலியையும் சரியாக்க வில்லை.

கிளினிக்கில்  நோயாளிகள் யாரையும் கணோம்!  

வரவேற்பரையில் இருந்த டி.விக்கு கண்களை அடகு வைத்த ஒரு ரிசப்ஷனிஸ்ட், தமிழ் ஹிந்து பேப்பரில் மடித்து வைத்த வடையை மென்று கொண்டிருந்தார்.

“டாக்டர் எப்ப வருவார்...?”

“வந்திடுவார்..”

“அது எனக்குத் தெரியும்.. எப்ப என்று கேட்டேன்... ஆ.. ஐயோ..”

“.........”

“இங்கே ஒருத்தன் கத்தறது உன் காதில் விழல..., எப்ப வருவார்..?”

“வருவாருங்க...”

“அதான்யா.. எப்ப? கன்சல்டிங்க ஹவர் மாலை நாலுன்னு போட்டிருக்கு... இப்ப மணி நாலு..”

“வரும் நேரம்தான்..” மீதி வடையை மெல்ல ஆரம்பித்தான்.

“ஆ...அம்மா.. ஐயோ...”

இந்த கிளினிக்கில், வலிக்கு ஒரு மரியாதையும் கிடையாது போலிருக்கிறது. அவர்கள் இம்மாதிரியான அலறல்களுக்கு பழகிவிட்டிருந்தனர். டி.வியில் சந்தோஷ் சுப்ரமணியம், ஜெனிலியாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“டி.வி வால்யூமைக் குறை... தலைவலி”

‘........’

“சொல்றேன்ல... டி.வி வால்யூமைக் குறை.. இங்கே என்ன சினிமாவா போடறீங்க.. டீக்கடை மாதிரி அலறவிட்டுக் கொண்டு?”

“உங்களுக்கு பல் வலியா.. தலைவலியா சார்..”

“மயிறுவலி... அந்த டி.வியை அனைத்துத் தொலை..”, 

 “வ்வ்வ்வ்வ்...அம்மா.....”

பத்து  நிமிஷம் ஆகியிருக்கும்..

“எப்பாய்யா  வருவாரு உங்க டாக்டர்...  “

‘இப்ப எதுக்கு கத்தறீங்க.. அவர் வர்ரப்பதான்.. அவுங்க எங்கிட்ட சொல்லிகிட்டு போவறதில்லை.. சொல்லிப்புட்டு வர்ரதில்லை.. வரும்போது பாக்கலாம். நீங்கதான் ஒன்னாம் நெம்பர் டோக்கன்..”

“அந்த டாக்டர்கிட்ட மொபைல்ல பேசு.. இங்க நான் வலியால் துடிக்கிறேன்னு சொல்லு..”

“அதெல்லாம் பேச முடியாது..”

“அப்ப என்னாத்துகுய்யா, விசிட்டிங் நேரம், மாலை நாலு முதல்ன்னு போர்டு போட்டிருக்கீங்க..? “

எரிச்சலாகிப் போன அவன், ரிமோட்டை எறிந்துவிட்டு வெள்யேறினான்.

ஒவ்வொரு நொடியும் கழிவதற்கு யுகம் போல இருந்த்து.
அந்தப் பக்கமாக, ஒரு புடவைகட்டிய நர்ஸ் வந்தாள். பாய்ந்து சென்று, சிஸ்டர்.. வலி உயிர் போகுது.. ஏதாவது பவுர்ஃபுல் பெயின் கில்லர் கொடுங்க... டாக்டர் வர்ரமாதிரி தெரியல..
சீற்றமுற்றஅந்தப் பெண்மணி திட்டுவதற்கு எத்தனித்த பொழுது, அரவிந்தனின் வயதையும் நிலைமையும் பார்த்து, “கொஞ்சம் உக்காருங்க.. இப்ப வந்துடுவார் டாக்டர்..”

"அப்படித்தான் ஒருமணி நேரமா சொல்லிக்கிட்டிருக்கீங்க... டாக்டர் வந்த பாடில்லை..   நாலு மணிக்கே வந்துடுவார்னு, வக்கனமா போர்டு மாத்திரம் வச்சுக்குவீங்க... கூட்டம் சேர்க்க. ஆனால் வரமாட்டீங்க... டாக்டர்னா என்னா, மேலே வானத்திலிருந்து குதிச்சுட்டீங்களா? உங்க தயவு வேணுங்கறதனால நீங்க எப்படி வேணா நடந்துக்குவீங்களா? எதிக்ஸ் வேணாம்?”

‘இப்ப உங்களுக்கு என்ன வேணும்...? அவர் சாயங்காலம் ஆறரை மணிக்குத்தான் வருவார். வெயிட் பண்ணிப் பாக்கறதுன்னா பாருங்க.. இல்லாட்டி வேற கிளினிக்குக்கு போங்க... வீணா சத்தம் போடாதீங்க...”

“அப்ப, போர்டுல விசிட்டிங் அவர் மாலை ஆறரைன்னு மாத்துங்க.. எதுக்காக நாலுன்னு எழுதிவைச்சுருக்கீங்க... “

“போர்டுல எப்படி இருந்தா என்ன... சாயங்காலம்தான்.. நான்தான் வேற டாக்டரிடம் போங்கன்னு சொல்லிட்டேனுல்ல..?”

“இது நீங்க ட்ரீட்மெண்ட் கொடுத்ததுக்கு அப்புறம் வந்த  வலி.. வேற டாக்டரிடம் போகனுமா வேண்டாமான்னு நான் தீர்மாணித்துக் கொள்வேன்.. உங்க அறிவுரை தேவையில்லை..”

“அப்ப பேசாம இருங்க... கத்தக் கூடாது..”

வலிவந்தால், வெட்கம்கூட கொஞ்சம் விலகிவிடும் போல.. மீண்டும் முனக ஆரம்பித்தார். உள்ளேயிருந்து ஒரு ஃபார்மஸிஸ்ட் ஒருத்தர் வந்தார்.

“என்ன பிரச்சினை?”

‘இவருக்கு பல் வலி... இப்பவே டாக்டரை வரச்சொல்லுது...”

“அவர் சாயங்காலம்தான் வருவாரு..”

இனி சீன் போட்டு பலன் இல்லை என உணர்ந்த அரவிந்தன், 
“மதியத்திலிருந்து வலி உயிர் போவுது.. தாங்கல... ஏதாவது பெயின் கில்லர் கொடுங்க.”

“ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாம கொடுக்கக் கூடாதுங்க...”

“வலி என்ன, ப்ரிஸ்கிரிப்ஷனோட வருமா? முடியல.. ப்ளீஸ்...சீக்கிரம் ஒரு பெயின் கில்லர் கொடுங்க...”

இடைமறித்த அந்த நர்ஸ்,  இவுருக்கு வலி முடியல..அதான் கத்தராரு.. ஒரு  ‘............. 500 mg’ கொடுத்துடுங்க.

அந்த நர்ஸ் ஒரு மாத்திரையையும், தண்ணீர் குவளையையும் சேர்த்தே கொண்டுவந்து கொடுத்தார்.

‘தேங்க்ஸ் சிஸ்டர்..”

மணி ஐந்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அனத்தலும் புலம்பலுமாய் கிடந்தார் அரவிந்தன்.

வெளியே சென்ற அந்த ரிசப்ஷனிஸ்ட் உள்ளே வந்தான். முதல் காரியமாய் டி.வியை அலறவிட்டான்.

“இப்ப நீ டி.விய நிறுத்தப் போறியா இல்லியா... இங்க என்ன பொழுது போக்கவா வந்தோம்? நிறுத்து... இல்லாட்டி ம்யூட்ல போடு”

‘யோவ்..அப்பத்திலிருந்து பாத்துக்கிட்டிருக்கேன்.. இன்னாத்துக்கு வம்படிச்சுகிட்டிருக்க? நீதான் அதிசயமா ஆஸ்பத்திருக்கு வந்துட்டியா? இங்க வர்ரவுங்க எல்லாத்துக்கும்தான் வலி.. அதுக்கென்ன செய்யமுடியும்.. பேசாம இரு...”

வெகுண்டெழுந்தார் அரவிந்தன்.
அடுத்த அரைமணி நேரம்.. ரணகள சந்தைக்கடை. “மீண்டும் விசிட்டிங் ஹவர் “ சண்டை.

“நீங்களே எக்ஸ்ரே, நீங்களே பார்மஸி,  நீங்களே க்ளினிக்.. கொள்ளையடிக்கறதுமில்லாம, பேஷண்டை இல்ட்ரீட் வேறு செய்வீங்களா?”

இதற்குள், க்ளினிக்கில் கூட்டம் சேர்ந்துவிட்டது.  “ஆமா சார்... நாமெல்லாம் இவுங்க தயவுல தான் உயிர் பொழைக் கோணுமில்ல... அந்த திமிர் இவுங்களுக்கு... காசு கொடுத்து சீட்டுவாங்கி நம்ம கிட்ட பணம் கறக்குறாங்க.. தொழில்லேயும் ஒரு தெறமை கெடயாது...”

“ஆஸ்பத்திரியில வேல செஞ்சுட்டா.. இவுங்களுக்கு டாக்டரைவிட உசத்தின்னு நினைப்பு:

விதவிதமான கமெண்ட்கள்.

மணி ஆறரையை நெருங்க, டாக்டர் வரும் நேரம் உணர்ந்த ஒரு நர்ஸ், டிவியை ம்யூட்டில் போட்டார்.

டாக்டரின் கார் உள் நுழைந்தது.

முதல் ஆளாக உள் நுழைந்தேன்.

அந்த ரிசப்ஷனிஸ்ட், நர்ஸ் எல்லோரும் உடன் வந்தனர்.

‘டாக்டர் சார்... இந்த பேஷன்ட் உங்ககிட்ட பேசனுமாம். ரொம்ப நேரமா சண்டை போட்டிகிட்டிருக்கார்.”

‘யெஸ்... சொல்லுங்க, என்ன ஃப்ராளம்’ என்றார் டாக்டர்

‘ஒண்ணுமில்லியே... மத்யானத்திலிருந்து கடுமையான வலி.. அதான்..’

‘நோ ஃப்ராளம்.. யூ வில் பி ஆல்ரைட் நௌ... அந்த சேரில் படுங்க..’

அரவிந்தனை விந்தையாகப் பார்த்துவிட்டு விலகினார் ரிசப்ஷனிஸ்ட்.


Sunday, April 3, 2016

ஐம்பது ரூபாய்......

யார் இந்தக் கிழவி? தெரியாது!

பெயர்..ஊர்.? தெரியாது!

வயசு?  70? 80? யாருக்குத் தெரியும்.

கக்கன்  நகரின்,  நான்காவது தெருவின் ஓரத்தில் இருக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் அருகே படுத்துக் கிடப்பாள், அந்தக் கிழட்டுப் பிச்சைக்காரி.  வெயில் ஏறும் பொழுது, எதிர்வீட்டில் இருக்கும் மகிழமரத்தின் நிழலில் படுத்துக் கொள்வாள்.

காலை 11 மணிக்கு, தெருவில், ஒரு குச்சியை ஊன்றிக் கொண்டு, தெருவில் நடக்க ஆரம்பிப்பாள்.  தலை முட்புதர்போல, காடாகஇருக்கும். எண்ணெய் கண்டு மாமாங்கம் ஆகியிருக்கும்.  நடுநடுவே முடி ‘சடை’ தட்டிப் போயிருக்கும். குழிவிழுந்துபோன கண்கள். ஒட்டிப்போயிருக்கும் வாய். கருத்த முகம்.  துருத்திக் கொண்டிருக்கும் தோள்பட்டை எலும்புகள். ஈர்குச்சி போன்ற கைகள்.   என்றைக்கு  கட்டிக் கொண்ட புடவையோ தெரியாது. ஒரே புடவையை, பெயருக்கு சுற்றிக் கொண்டு, தாழ்த்திய பார்வையோடு வருவாள்.  

ஒருகாலத்தில் அந்தப் புடவை சிவப்பாக இருந்திருக்கணும். இப்பொழுது அழுக்கும், சிக்கும், கரையும் நிரம்பி, அந்தப் கிழிந்த புடவையும் அவளது உடலில் ஒரு பகுதி போல, அவளுடன் இணைந்தே விட்டது.

அவளுக்கு பற்கள் இருக்கின்றனவா இல்லையா தெரியாது! ஒடிந்துவிடுவது போல உடல். முதுகு லேசாக கூன் போட்டிருக்கும். வாசல் கேட்டருகே வந்து நிற்பாள். வாயைத் திறந்து எதுவும் கேட்கமாட்டாள். கேட்டைத் தட்டுவதற்கும் உடலில் தெம்பில்லை போல. குரல் உயர்த்தி கூப்பிடவும் மாட்டாள். கையில் ஒரு அலுமினியத் தட்டு இருக்கும். அவள் வருவதற்கு முன்பே அவளிடமிருந்து ஒரு வாடை கிளம்பி வரும்.  தெரு ஓரமாக, காம்புவுன்ட் சுவற்றைப் பிடித்தபடி  மிக மெல்ல வருவாள். ஒரு வீட்டைக் கடக்கவே, வெகு நேரம் ஆகும்.

அந்தத்   தெருவில் முப்பது வீடுகள் இருக்கும்.  ஆரம்பத்தில், இவளைப் பார்த்து அருவருத்தோ அல்லது இந்தக் கிழட்டுப் பிச்சைக்காரி ஏதேனும் கேட்டு, ‘இல்லை’ என்று சொல்வதற்கு அஞ்சியோ கதவைத் தாளிட்டுக்கொள்வார்கள்.  கிழவி ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடமாவது  நிற்பாள். இல்லை என்று சொன்னாலும் நிற்பாள்.  ஏதேனும் ஒரு வீட்டில் ஏதாவது உண்பதற்கு தட்டில் போட்டுவிட்டால், அங்கேயே உட்கார்ந்து தின்பாள்.  சைகையில் தண்ணீர் கேட்பாள். குடித்துவிட்டு மீண்டும் டிரான்ஸ்ஃபார்மருக்கோ, மகிழமரத்துக்கோ சென்றுவிடுவாள். அடுத்த வேளை உணவிற்கு, ஞாபகமாக எந்த வீட்டில் பிச்சை எடுத்தாளோ, அதற்கு அடுத்த வீட்டிலிருந்து தொடருவாள்.

மனிதம் முற்றாக ஒழிந்துவிட வில்லைதானே?  அவளுக்கும் அந்தத் தெருவில் இருவேளை உணவு கிடைத்துக் கொண்டிருந்தது. இரவு பத்து மணியானதும் மெல்ல நடந்து, மெயின் ரோடில், ஓரமாகப் போடப்பட்டிருக்கும் ஒரு குடிசைக்கு செல்வாள். அவளுக்கும் அந்தக் குடிசையில் இருப்பவர்களுக்கும் என்ன உறவு? தெரியாது. காலை எட்டு மணிக்கெல்லாம் கிழவி மகிழமரத்துக்கு ஆஜராகிவிடுவாள்.

கக்கன் நகரின், நான்காவது தெருவின் கடைசியில் இருப்பவர் அரவிந்தன்.  வீட்டில் அவர்மட்டும்தான். அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர். கிழவிக்கு அதைப் பற்றி என்ன தெரியும்? அவர் வீட்டின் முன்பும் வந்து நிற்பாள். பெரும்பாலும் கிழவி வரும் நேரத்தில், போடுவதற்கு ஒன்றும் இருக்காது. அரவிந்தன் மனசு கேட்காமல், காசு கொண்டுவந்து கொடுத்து, “கடையில் ஏதாவது வாங்கித் தின்கிறாயா?” என்றால், 'வேண்டாம்' என்பாள்.  சோறுமட்டுமே வேண்டும் கிழவிக்கு. போகப் போக அந்தக் கிழவிக்கும் சேர்த்தே சோறுவைப்பதை வழக்கமாக்கிக் கொண்டார் அரவிந்தன்.

அன்றும், வழக்கம் போல வெய்யில் ஏறும் மதிய நேரத்தில், குச்சியை ஊன்றியபடி, கேட்டருகே வந்து நின்றுகொண்டாள் கிழவி.

அவள் தட்டில் இரண்டு இட்லிகளைப் போட்டுவிட்டு, வாசலில் ஈஸிச் சேரில் சாய்ந்து கொண்டார் அவர்.

“ஏ.. கிழவி.. உம்பேரென்ன?”

....

“உன்னத்தான் கேக்குறேன். உம்பேரென்ன?”

சோறுமட்டுமே வாங்கி பழக்கப்பட்ட கிழவி, கேள்வியை எதிர்பார்த்திருக்க வில்லை போலும்.

“தனலட்சுமி..”

“தனலட்சுமியா.....? நல்லாத்தான் பெயர்வச்சுருக்காங்க ...”

“எந்த ஊர்?’

“மரக்காணம் பக்கத்துல..”

“என்ன வயசாவுது உனக்கு..”

“தெர்ல சாமி..”

“ராத்திரி ஆனதும், ரோட்டுக்குப் போறியே... அந்த குடிசையில யார் இருக்காங்க..?”

“மவனும், மருமவளும்..”

ஆடிப்போனார் அரவிந்தன். பெற்றோரைத் துரத்திவிடுவதை கதைகளில்தான் படித்திருக்கிறார்.

“நெசமாவா சொல்லுறே கிழவி..?”

“மவன் ஒரு குடிகாரப்பய... இன்னா வேல செய்யுறான்னு தெரியாது.. பாதி நாள் செயிலுக்குப் போவான். இருக்குற நாள்ல, மருமவளை போட்டு அடிப்பான்.”

அவளது மகன் பொறுக்கிக குடிகாரன்  என்பதும், அவன் மனைவி செங்கல் சூளையில், 'கல் அறுக்கும் ' வேலை செய்கிறாள் எனவும், அந்த வேலைக்கு '"அட்வான்ஸ்" வாங்கி அவள் மகன் குடித்து தீர்த்துவிட்டான் என்பதும், சூளையில் கொடுக்கும், மிச்ச கொஞ்ச சம்பளம் அவளது சோற்றிற்கும், அஞ்சாவது படிக்கும் பேரனின் படிப்பிற்கும் செலவாகிப் போகிறது எனவும், யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம் என்பதால், இங்கே பிச்சை எடுப்பதாகவும் ‘மேல் விபரங்களைத்’ தெரிந்து கொண்டார்.

மனித வாழ்க்கை எவ்வளவு சிக்கல் நிறைந்தது! கிழவி பிச்சை எடுக்கத் தீர்மாணிப்பதற்கு எவ்வளவு சித்தரவதை பட்டிருப்பாள். அவள் புருஷனைப் பற்றி கேட்க நினைத்து, வேண்டாம் என விட்டார். அவளது நினைவுகளைத் தோண்டி எடுத்தால், அவளுக்கு மனம் பாரமாகுமோ என்னவோ தெரியாது, அந்த சுமையைத் தன் மனது தாங்காது எனத் தெரியும். கிழவிக்கு என்ன வேலை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் ? விளக்குமாற்றைத் தூக்கக் கூட சக்தியற்ற உடல்.

அவளிடம் பேச்சு கொடுத்தார்.

“தலையை ஏன் இப்படி போட்டு வச்சுருக்கே... நாத்தம் வருதில்ல... கொஞ்சம் எண்ணைய் போட்டு சீவ வேண்டியது தானே?”

“சோத்துக்கே லோல்படுறேன்... சிங்காரத்துக்கு எங்கே போவரது.?”

உள்ளே சென்று, ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து வந்தார். “இந்தா கிழவி.. இந்த ரூபாய வச்சுகிட்டு, ரோட்டுல இருக்கும் கடையில போய் மொட்டை போட்டுகிட்டு வா... நாத்தம் தாங்குல..”

“ஷாப்பு கடையில என்ன வுட மாட்டாங்க சாமி...”

“டவுன் கடைக்கு போவாதே...  மரத்தாண்ட ஒக்காந்திருப்பாங்கள்ள.. அவுங்கிட்ட மொட்ட போட்டுக்க...”

“சரி சாமி..”

“காச வாங்கிகிட்டு, மரத்தாண்ட போய்ப் படுத்துக்கப்படாது... மொட்டை போட்டுகிட்டு வந்து காமிக்கோணும்.. தெரியுதா..?”

ஐம்பது ரூபாய் நோட்டை, பொக்கிஷம் போல, தனது புடவையில் செருகிக் கொண்டாள் கிழவி.

“பத்திரம்.. எங்கேயாவது கீழே போட்டுடப் போற....”

“நான் கீள போட மாட்டேன் சாமி.. எம்மவன் வந்துட்டான்னா, அவன் கண்ணுல படாம வச்சுக்கணும்.. குடிக்கறதுக்கு புடுங்கிகிட்டுப் போயிடுவான்.”

“உங்கிட்ட கூடுவா புடுங்கிக்குவான்..?”

"குடிக்குற மாட்டுக்கு செக்காவது.. சிவலிங்கமாவது சாமி..”

“சரி..சரி.. பத்திரமா வச்சுக்க..”


இரண்டு நாள் கழித்துத்தான் கிழவியைப் பார்த்தான் அரவிந்தன். அதே பரட்டைத் தலை.

“ஏ.. கிளவி, காச கொடுத்து, மொட்ட போட்டுக்கோன்னா, காச செலவு செஞ்சுட்டு, அப்படியே வந்து நிக்குறியா நீ...?”

“ஏமாத்துல சாமி.. இத பாரு... நீ கொடுத்த அம்பது ரூவா..” 

இடுப்பிலிருந்து அவர் கொடுத்த ரூபாயை எடுத்துக் காண்பித்தாள் கிழவி.

“ஏன் மொட்டை போடல?”
“
கலியன், போட மாட்டேனுட்டன் சாமி... நா என்ன செய்யுறது?”

“ஏன் அவன் உனக்கு மொட்டை போட மாட்டானாம்?”

“நாத்தம் பிடிச்சவளாம் நானு... பிச்சைக்காரிக்கு அவன் மொட்டை போடுறத, யாராவது பாத்துட்டாக்க அவங்கிட்ட வேற யாரும் முடிவெட்ட வரமாட்டாங்களாம். துரத்திவிட்டுட்டான் சாமி.. என்னா செய்யச் சொல்ற?”

ஓ.. இப்படி ஒன்று இருக்கிறதா?

சற்று நேரம் யோசித்தார் அரவிந்தன்.

அரைமணி நேரம் கழித்து, கிழவி தன் மொட்டைத்தலையைத் தடவிக் கொண்டு, வேறு ஒரு பழைய புடவையைச் சுற்றிக் கொண்டு கிளம்பிப் போனாள்.


தன்மேல் விழுந்திருந்த முடிகளை கழுவ பாத்ரூமிற்குச் சென்றார் அரவிந்தன்.