செப்டம்பர் 1: ‘உலகக் கடிதங்கள் எழுதும் தினம்’ என்று கூகுள் சொன்னது.
தபால் என்பது கூரியராகவும் பார்சலாகவும் மாறிவிட்ட இன்றைய சூழலில், "நாம் கடிதம் எழுதினோம்" என்பதே ஏதோ சங்க காலச் சிந்தனை போலாகிவிட்டது.
அந்தக் காலத்துக் கடிதங்களுக்கு என்று ஒரு புரோட்டோகால் இருந்தது. கடிதத்தின் தலையில் பிள்ளையார் சுழி (௳) இருக்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும் அல்லது ஆசீர்வதிக்க வேண்டும். ‘நலமறிய ஆவல்’ என்று எழுத வேண்டும். எவ்வளவு கெட்ட செய்தியாக இருந்தாலும், "இங்கு அனைவரும் க்ஷேமம்" என்றுதான் தொடங்குவோம்.
அக்காலத்தில் குடும்பங்களுக்கு இடையேயான ஒரே தொடர்பாடலே (Communication) தபால்தான்.
தபால் கார்டுகளில் இண்டு இடுக்கு விடாமல், போஸ்ட் ஆபீஸ் சீல் அடிக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு, மீதி எல்லா இடங்களிலும் எழுதுவோம். பி.கு செருகல் தனிக்கதை.இப்போது Font size என்கிறார்களே... எங்கள் எழுத்தின் அளவிற்கு முன் அதெல்லாம் ஒன்றுமே இல்லை! கடிதம் முடிய முடிய எழுத்தின் அளவும் சுருங்கி கொண்டே வரும்.
கடிதம் முடியும் போது "வேலும் மயிலும் துணை" என்றே முடியும். சில புரட்சியாளர்கள் "கடவுள் துணை" என்பார்கள்.
இந்த முறை அநேகமாகக் எல்லாச் சாதாரணக் கடிதங்களிலும் பின்பற்றப்படும்.
அன்றைக்குத் தபால்காரர் ஒரு காவல் தெய்வம் மாதிரி. தபால்காரர் அன்று ஊருக்குள் வரவில்லை என்றால், ஊரே பதற்றமாகிவிடும். ஆசிரியர்களும் தபால் நிலைய ஊழியர்களும் ஊருக்கே சொந்தக்காரர்கள் போல இருந்த காலம் அது.
கார்டு ஒரு அணா; இன்லேண்ட் (Inland letter) 15 காசு. வசதி உள்ளவர்கள் இன்லேண்டில் எழுத, நாங்கள் கார்டு பக்கமே நிற்போம். பள்ளிக்கூட தேர்வு முடிவுகள் கூடக் கார்டில்தான் வரும். மாணவன் பாஸா, ஃபெயிலா என்பது ஊருக்கே தெரிந்துவிடும்!
பழைய கடிதங்கள் ஒரு கம்பியில் செருகப்பட்டு, பல ஆண்டுகள் கூடத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கும். Trash என்ற பேச்சே கிடையாது.
கண் முன்னே இந்த மாற்றம் எவ்வளவு வேகமாக நடந்துவிட்டது!
வரலாற்றில் புகழ்பெற்ற பல கடிதங்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள், அண்ணாதுரையின் கடிதங்கள், கருணாநிதியின் கடிதங்கள், அரவிந்தரின் கடிதங்கள், கு.ப.ரா.வின் கடிதங்கள் எனப் பலவற்றை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.
நான் எழுதிய முதல் கடிதம் எதுவென்று எனக்கு நினைவில் இல்லை. "As I am suffering from fever, I request you to grant me one day leave..." என்று வகுப்பு ஆசிரியருக்கு எழுதியதுதான் மங்கலாக நினைவிருக்கிறது. அதைப் புத்தகமாக்க முடியாது.
இந்தக் காலக் கடிதம் (மெசேஜ்) ஒன்று:
"Hi da, I gt apntd in infos. 26lpa. TBH, in Tldr I dint expd dis. Les clbrte in a prty. Ayavnt tld yet 2mi gf."
என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா?"
Hi da, I got appointed in Infosys. 26 Lakhs per annum. To be honest, in TL;DR (Too Long; Didn't Read / சுருக்கமாகச் சொன்னால்), I didn't expect this. Let's celebrate in a party. I haven't told yet to my girlfriend."
தமிழில் இதன் பொருள்:
"ஹாய் டா! எனக்கு இன்ஃபோசிஸில் வேலை கிடைச்சிருச்சு ஆண்டுக்கு 26 லட்சம் சம்பளம்! உண்மையச் சொல்லணும்னா, சுருக்கமாச் சொன்னா நான் இத எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பார்ட்டி வச்சு கொண்டாடுவோம்! இதப்பத்தி நான் இன்னும் என் கேர்ள்ஃபிரண்டிட்ட (காதலியிடம்) கூடச் சொல்லல."
No comments:
Post a Comment