Sunday, September 6, 2020

விடாக் கண்டன்! கொடாக் கொரோணா!

கொரோணா வைரஸ்,  சீனாவால், சீனாவில் ஊருவாக்கப்பட்டதால் வெகு நாட்களுக்கு நாட்களுக்கு வராது; சீக்கிரமே ரிப்பேர் ஆகிவிடும் என்ற கனவில் மண் விழுந்துவிட்டது.

உருவாக்கிய புண்ணியவான் ஜம்மென கால்மேல் கால் போட்டுக்கொண்டு,  வ்ளாடிவாஸ்டாக் என்னுடையது; லடாக், ஜப்பான், பசிஃபிக் எல்லாம் என்னிது என அழிச்சாட்டியம் செய்து கொண்டு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கன்றுக்குட்டி போல, துள்ளிவிளையாடுகிறான். உலகமே, குறிப்பாக இந்தியா விழிபிதுங்குகிறது. சீன 'ஹிரண்யனை' வதம் செய்ய ஏதாவது ஒரு கடவுள் அருள் புரியட்டும்.

விஞ்ஞாணிகள் எப்போதாவது வாக்ஸின் கண்டுபிடிக்கட்டும்; இல்லை... கண்டுபிடிக்காமலே போகட்டும்;  வாழும் வரை லாபமே; அழப்படாது; எப்படியாயினும் எல்லோருக்கும் முடிவு உறுதி; அது இன்றா நாளையா என்பதுதான் வினா- என்ற கீதாச்சார்யன் மனோபாவத்திற்கு வந்துவிட்டதால் பயம் அற்றுவிட்டது.

இந்த 'பக்குவத்தால்' கோவிட் குறித்த பல்வேறு நபர்களின் எதிர்விணைகளை ரசிக்க முடிகிறது.

 அரசியல்வாதிகள் பாடு நிம்மதி; கோவிட் 19 அல்லது கோவிட்20 ,  எதுவாக இருந்தாலும் , 'ஆக..  பழனிச்சாமி ஊடனே பதவி விலகணும்'  என்று ஒரேமாதிரி ஒப்புவிப்பார் ஒருவர். '

மதச்சார்பு பிஜேபி ஒழிக ' என்பார் பப்பு'. 

கம்மிகளுக்கு பிரச்சினை இல்லை; யாராவது வாய்க்கு வந்த நபரைக் குறித்து 'முர்தாபாத்'  கோஷமிட்டுவிட்டு கலையலாம்.  

பிஜேபிக்கு கைவசம் தயாராக இருக்கு, 'தேச விரோதி' பட்டம். அதை சகட்டுமேனிக்கு வினியோகம் செய்வர். 

எனக்குத் தெரிந்த பலர் பதட்டத்தின் உச்சியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 'பழனிச்சாமி வேஸ்ட்' என்றார்; சரிசார் என்றேன். அப்புறம் 'மோடி , ஒழிக'  என்றார்; சரி சார்.. ஒழிச்சுடலாம். என்ன நினைத்தாரோ 'இந்த விஞ்ஞாணிகள் எல்லாம் தெண்டம்' என சான்றுரைப்பார்.

அப்புறம் இந்த முருகன் எல்லாம் சக்தியில்லாதவர்; இத்தனை நாட்களுக்குள் மருந்து கண்டு பிடிக்கலியே என்றார்.

இவரது ஒவ்வொரு ஐயத்திற்கும் பதில் சொல்லி மாளலை. எனவே, எனது நிம்மதி கருதி, அவர் என்ன சொன்னாலும் 'சரி..சரி ' எனபதோடு சரி.

'இன்னிக்கு ராத்திரிக்குள் வாக்ஸின் ரெடியாயிடுமா... ' என நிஜமாகவே பீதியடைந்து கேட்பார். 'தெர்ல சார்' என மையமாகச் சொல்லி வைப்பேன்.

'அந்த பழனி முருகனின் நவபாஷாணத்தில் கொஞ்சம் சுரண்டி சாப்பிட்டால் சரியாகாது?' 

அதுக்கென்ன அவரது ஒரு விரலை ஒடித்து எடுத்து வந்திடலாம்.

'அப்புறம், அந்த நடராஜர், சிவபெருமான், அம்மன்கள் எல்லாம் என்னதான் பன்றாங்க?'

'அவுங்கெல்லாம் த.நா நியூஸோ அல்லது சீரியலோ பாத்துக்கிட்டிருப்பாங்க போல.. போய் எழுப்பிகிட்டு வரேன்..'

'சார்.. நீங்க தமாஷ் பண்றீங்க; நான் எவ்வளவு சீரியஸா பேசிகிட்டிருக்கேன்..'

'சேச்சே..அப்படியெல்லாம் இல்லை; வாக்ஸின் கண்டுபிடிக்காத சாமி இருந்தால் என்ன .. இல்லாவிட்டால் என்ன?'

'அப்பறம் அந்த வேளாங்கன்னி, நாகூர் சாமி கூட , மருந்தைக் கணாடுபிடிக்கலை பாருங்க..'

ஐயய்யோ.. இப்ப இவரிடமிருந்து தப்பிக்க என்னதான் செய்யறது..?

'எல்லா சாமியும் தெண்டம் எனத் தீர்மாணம் போட்டுடலாம் சார்.. இப்ப குட் நைட் சார்'

வேறோருவர்  உள்ளார்.. எல்லாருமே இறந்துடனும். புதுசா ஒரு நல்ல உலகம் வரட்டும் என்பார். அவருக்கும் 'சரி சார் ' தான் பதில்.

மற்றும் ஒருவர் இருக்கிறார். தன்னைத்தவிர மற்றெல்லோரும் மூடர்கள்; ஊழல்பேர்வழிகள்' என்பார். ஆனால் மறைவாக வேண்டிய எச்சரிக்கைகளைச் செய்து கொள்வார்.

இன்னொருவர், 'கொரோணா என்ற வியாதியே இல்லை; மோடி சதி' எனபார். 'ஆமாம்..ஆமாம் உலகமே பொய் சொல்கிறது' என பதிலுரைக்க வேண்டியதுதான்.

ஒர் உறவு, தொடர்ந்து , 'நீங்க ஏன் வயசான காலத்தில் கஷ்டப்படுறீங்க.. எங்க கூட வந்துடுங்க'  என சொல்லிக் கொண்டே இருந்தார். பொறுத்துப் பொறுத்து சலித்துப்போய், நாளை மறுநாள் அங்கு வந்துவிடட்டுமா?"  என்றேன். திடுக்கிட்ட அவர், 'வீட்டில்  இப்ப அரளிப்பூ நன்றாக பூக்கிறதா?' என டிராக் மாறினார். இனி அவர் 'என் வீட்டிற்கு வரலாமே..' என மறந்தும் சொல்ல மாட்டார்.

பலருக்கும் கோவிட்19 பிரச்சினையில் லோக்கல் கட்சி அரசியலைச் சம்பந்தப் படுத்தாமல் சிந்நிக்கவே இயலவில்லை. 'இது இயற்கைக்கும் மனித இனத்திற்குமிடையேயான போராட்டம்; இப்படித்தான் நிகழும். சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன. அவற்றைச் சமாளித்துதான் வாழணும்; உள்ளூர் அரசியலை இணைப்பது வெட்டி வேலை '  என்றால் அடித்துவிடுவார்கள் போல.

பல இடங்களை; கோயில்களைத் தரிசிக்கணும் என்பது  என் அவா. கோவிட் முடிந்து, அதுவரை நாமும் உயிரோடிருந்து, அதற்குப்பின் விரும்பிய இடங்களுக்குப் போக 'டைம்' இருக்குமா? தெம்பும் ஆரோகயமும் இருக்குமா என ஒரு நப்பாசை.  இதற்கும் வேறொரு நன்பர் பதில் வைத்திருந்தார். 'உங்க வீட்டில் நீங்கள் விரும்பும் சிவன், அமர்ந்திருப்பதாகப் பாவித்துக் கொள்ளுங்கள்' என்றார். . 'சாயங்காலம் கடைக்குப் போகாமல், வீட்டில் சாப்பிடும் பிஸ்கோத்தையே அடை-அவியலாகப் பாவித்துக் கொள்வதுதானே' என சொல்ல விரும்பி மென்று விடுவேன்.

நித்தியப்படியாக  வாங்குவது மறந்து மாஸ்க்குகளையும், சானிடைசர்களையும் வாங்கிக் குவிக்கின்றனர் பலர். கபசுரக் குடிநீர் ஒரு மூட்டை..   மார்க்கெட்டில் இஞ்சியை இல்லாமல்ஸசெய்துவிட்டார்கள். கைகழுவியே கையைக் கரைத்துவிட்ட பலர்.

தெருவிற்கே சானிடைஸர் அடிக்கும் பலர். ஆறுமாதகாலமாக கதவை அடைத்துக் கொண்டு, பதுங்கிக்கிடந்து, கண்களை மட்டும் வெளியே நீட்டும் பலர்.

எனக்கொன்றும் வராது என எகத்தாளமாகச் சொல்லிக்கொண்டே அட்மிட்டாகி  மேலுலக ப்ராப்தி அடைந்தோரும் உண்டு. இத்தகைய மனிதர்களின் செய்கைகளின் கண்டுகொண்டது என்னவென்றால், வெளிப்புற ரியாகக்ஷன்  எப்படியிருந்தாலும், உண்மையில் அவர்களை ஆட்டிப்படைப்பது பீதி. உயிர்ப்பயம்.எந்தவிதமான தைரியமூட்டல்களும் பயன் தருவதில்லை. 

ரிப்வான் விங்கிள் மாதிர், கொஞ்ச வருடம் தூங்கி,  எல்லாம் சரியானபின் எழுந்து வர வாய்ப்புள்ளதா....? 

ஹலோ..ஹலோ நில்லுங்க! ஓடாதீங்க@









No comments:

Post a Comment