1970 ஆம் ஆண்டு. வியட்னாம் வீடு
என்ற சிவாஜிகணேசனின் திரைப்படத்தைப் பார்க்கப்போயிருந்தேன். திரையரங்கின் (செங்கற்பட்டு)
வாயிலில் சிலர் குழுவாக நின்று கோஷமிட்டுவிட்டுச் சென்றனர்.
வினவியதில் ‘வியட்நாம் வீடு’ என்ற
திரைப்படத்தின் தலைப்பை எதிர்த்து கோஷமிடுவதாகத் தெரிந்தது. படம் என்னவோ வழக்கமான
சிவாஜி ஸ்டைல் சென்டிமெண்ட் படம்தான். ஒரு சாதாரண குடும்பச்சண்டைப் படத்தை, உயிரைப்
பயணம் வைத்து, நாட்டிற்காக போராடும் யுத்தத்தோடு ஒப்பிடுவதா என்பது இடது சாரிகளின் ஆதங்கம்.
பின்னர் சில தத்துவத்தேடல்களுடன் , விபரம் தேடிப்
பிடித்ததில், அமெரிக்காவின் போர் வெறியும், இருபது
ஆண்டுகள் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் போரில்
சந்தித்த கடுமையான உயிர்-பொருட்சேதங்களும் தெரியவந்தன .
சென்ற 20/09/19 அன்று வியட்நாம் (சுற்றுலாவாகத்தான்)
செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். சைகோன் நகரின் வெளிப்புறத்தில் (தற்போதைய
ஹோசிமின் சிட்டி) இன்றும் அரசு பாதுகாத்துவரும் ஒரு போர்
நடந்த வெளியைக்கண்டேன்.
அதற்குமுன் மிகச்சுருக்கமாக:
தற்போது வியட்னாம் ஒரே நாடு. 1975க்கு முன், தெற்குவியட்னாம்- வடக்குவியட்னாம்
என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தன. அன்றைய சோவியத் யூனியன்,சீனா ஆகியவை வடக்கு வியட்னாமை
ஆதரிக்க, தெற்கு வியட்னாமை அமெரிக்கா ப்ராக்ஸி அரசின்பேரில் ஆண்டது.
அமெரிக்காவை எதிர்த்து வியட்னாமியர்கள் போராடினார்கள். போராட்டம் என்றால்
சாதாரண் போராட்டம் அல்ல. லட்சக்கணக்கில் உயிர்ப்பலி. சர்வ வல்லமை கொண்ட அமெரிக்காவை
வெறும் மூங்கில் குச்சிகளோடும், இரும்புக் கம்பிகளோடும், சாதாரண துப்பாக்கிகளோடும்
சந்தித்தது வியட்நாம். வியட்னாமியர்கள் கைக்கொண்ட
போர்முறைதான் ‘கொரில்லா போர்த் தந்திர முறை’.
இன்றைக்கு உலகில் உள்ள பல வன்முறையாளர்கள்
கும்பல் தேர்ந்தெடுக்கும் தாக்குதல் முறை இதுவே.
வியட்னாம் யுத்தத்தின் தலைமைப் போராளி, ஆலோசகர், வியூகம் வகுத்தவர், நுட்பமான அரசியல்வாதி ‘ஹோசிமின்’.
இவர் தலைமியில்தான் போர் நடந்தது. ஆகப்பெரிய ஜாம்பவான் அமரிக்கா தனது
பல்லாயிரம் வீர்ர்களை இழந்து, தாக்குப்பிடிக்க இயலாமல் வியட்னாமைவிட்டு வெளியேறியது.
வியட்னாமும் ஒன்றுபட்டது.
தற்போதைய, மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக ஒரே ஒரு
‘வார் ஃபீல்டை’ மட்டும் பராமரித்து வைத்துள்ளனர். சும்மா வந்திடாதல்லவா சுதந்திரம்,
எந்த நாட்டிற்கும்?
அன்றைய தினங்களில், ஹோசிமின் எனக்கு அதிசயப்பிறவி. அவரது போர்த் தந்திரங்கள்
எதிரியை நிலைகுலைய வைத்தவை. தேர்ந்த அறிவாளி. டிப்ளமாட். எந்த நிலையிலும் நிலை குலையாதவர். சலனமற்றவர்.
சமரசமற்ற போராளி. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் ஒன்றினைத்து போராடினார்.
“வெற்றியைத் தீர்மானிப்பது ஆயுதங்களல்ல.. வெகு மக்களே”
என்ற உண்மையை உலகுக்குப் பறைசாற்றியவர். “விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளைத் தவிர நம்மிடம் ஒன்றும்
கிடையாது. ஆனால் தத்துவ வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை
மட்டுமல்ல... எதிர்காலத்தையும் பார்க்க முடிகிறது’’. “இன்று
வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டை போடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி
யெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல...
உண்மையில் நடந்தேறியது.
ஹோசிமின் அவர்களை “ஹோமாமா” என வியட்நாம் மக்கள் அன்புடன் அழைத்ததிலிருந்தே அம்மக்கள் அவர் மீது
வைத்திருந்த அளப்பரிய அன்பையும் மதிப்பையும் உணரலாம்.
உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம்
படுதோல்வியைச் சந்தித்தது. 30 லட்சம் மக்களின்
உயிர்த் தியாகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. அமெரிக்காவின் படையில் 58000
பேர் கொல்லப் பட்டனர்.
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றும் பிரிட்டனுக்கும்
பிரான்சுக்குமிடையிலான போட்டியில் வியட்நாம், லாவோஸ்,
கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டன.
எனினும் வியட்நாம் மக்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான போரைத் தீரமுடன் நடத்தினர்.
விடுதலைக்கான சுதந்திரப் போரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து
போராட்டத்தை வீச்சாகக் கொண்டு சென்றனர். அதன் விளைவாக பிரான்ஸ் வெளியேறியது.
வியட்நாம் தெற்கு நோக்கி முன்னேறியது. ஐ.நா.சபை தலையிட்டு வெகுமக்களின்
வாக்கெடுப்பின் மூலம் வியட்நாம் ஒன்றிணைக்கப்பட்டது. ஹனோயைத் தலைநகராகக் கொண்ட
வியட்நாமும் சைக்கோனைத் தலைநகராகக் கொண்டு தென் வியட்நாமும் உருவாகின.
ஐ.நா.சபை
வெகுமக்களின் வாக்கெடுப்பை நடத்தாத நிலையில் தென் வியட்நாம் மீது வட வியட்நாம்
தாக்குதலைத் தொடங்கியது. 1955ல் மீண்டும் போர் ஆரம்பமானது. அமெரிக்கா, தென்வியட்நாம் அரசுக்கு ஆதரவாக 1964ல் வட வியட்நாம்
மீது விமான குண்டுத் தாக்குதல் நடத்தியது, அமெரிக்க -
வியட்நாம் போராகப் பரிணமித்தது.
நச்சு ரசாயன நாபாம் குண்டுகளை ஏவி வீடு,
வயல், நிலங்களை அழித்தது அமெரிக்கா. எத்தகைய
தாக்குதலுக்கும் அஞ்சாமல் வியட்நாம் மக்கள் போராடி 1975ல்
அமெரிக்காவை விரட்டி அடித்தனர். .
அமெரிக்கா ஏவிய நச்சுப்பொருட்கள் மற்றும் நாபாம் குண்டுகளால் வியட்நாம் மக்கள்
மிகப்பெரிய பாதிப்பை அடைந்தனர். நாபாம்
குண்டுகளை வியட்நாம் மீது வீசி வியட்நாமிய மக்களை அடிபணிய முயற்சி செய்த
ஆணவத்திற்கும், அடங்காப்பிடாரி தனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து,
வெறும் முங்கில் கழிகளையும், குச்சிகளையும்
வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும்,
நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஒட வைத்தனர்
வீர வியட்நாம் மக்கள்.
அமெரிக்க
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1975 வரை நடத்திய
கொரில்லா யுத்தத்தின் வீர நினைவுகளை இன்றும் பாதுகாத்து வைத்து வருகின்றனர்.
குச்சி என்ற பகுதியில் ஆண்களும், பெண்களும் 4, 6, 10 மீட்டர் ஆழத்தில் பூமியில் குழிகளையும், பட்டறைகளையும்
உருவாக்கி அதில் பதுங்கி இருந்து போரை நடத்தினார்கள். கையில் வெறும் கட்டைத்
துப்பாக்கியும், மூங்கில் குச்சி களையும் வைத்துக்கொண்டு
நவீன விமானங்களையும், பீரங்கிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு
யுத்தத்தை நடத்திய அமெரிக்காவை மண்ணைக் கவ்வ வைத்தது.
எனது இந்தப் பயணத்தின்போது, வியட்னாமியர்களின் பதுங்கு குழிகளையும், பட்டரைகளையும்
காணும்போது, அவற்றின்மீது கால்வைக்கவே தயங்கினேன். ஒவ்வொரு பதுங்குக் குழிகளிலும் எத்துனை ஆயிரம்பேர்
நாட்டிற்காக உயிரிழந்திருப்பர்? உண்மையில் மெய்சிலிர்த்தது. பகிர்ந்துகொள்ளத்தான் அருகில்
எவருமில்லை. வழிகாட்டியாக வந்தவர் ‘ஹோசிமின்’ பாடலைப் பாடிக்காட்டியபோது, நெக்குருகிப்போனார்.
இத்தனைக்கும் அவர் போரினை நேரில் கண்டதில்லை.
எண்ணற்ற புத்தர்கோயில்களும், மெக்காங் டெல்டா படகுச் சவாரிகளும், நாட்ரடாம்
சர்ச்சுகளும், மார்க்கெட்டுகளும் மனதைக் கொள்ளைகொண்டாலும், ஒரு சரித்திரப் புகழ்மிக்க
ஒரு நாட்டைக் கண்டுற்றேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.
ஃபிஸிகலாக அமெரிக்காவை வியட்னாமியர் வெளியேற்றிவிட்டனர்தான். ஆனால் அந்த
நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் தற்போது மிளிரும் ‘கென்டகி ஃப்ரைடு சிக்கன்’ (கேஃப்சி)கடைகளும்,
ஃபோர்டு கார்களும். பெப்ஸி-கோலாக்களும் உலகின்மீது அமெரிக்கா கொண்டிருக்கும் பிடி இருகித்தான்
இருக்கிறதே தவிர தளரவில்லை என்பதை நுண்ணரசியல் மதிகளால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிகிறதே!
அருமை நண்பரே!
ReplyDeleteநன்கு சொல்லியுள்ளீர்கள்.
யுத்தமின்றி - வேறு வகையில் அமெரிக்க பிடி இறுகியுள்ள நிலை உண்மை தான் என்ற பதம் அருமை.
திருநாவுக்கரசு