Friday, October 4, 2019

நினைவுகள் பேசினால்...


எனது இல்லத்தில் தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்து இரு வருடங்களாகின்றன. காரணம் சற்று விந்தையானது. கொலை. தமிழ்க்கொலை. ஒரு அறிவிப்பாளருக்கும் ண-ன, ள-ல சரியாக உச்சரிக்க வராது. ழ-வரவே வராது. வாக்கி யங்களை தன்மையில் ஆரம்பித்து படர்க்கையில் முடிப்பார்கள். ‘தளைவர் அவர்கல்... , மளை பெய்யும் ..இன்ன பிற.

சற்றே ஒதுங்கி பாடல்களை ஒளிபரப்பும் அலைவரிசைக்கு மாறினால், தீர்ந்தது கதை. அவர்கள் பாடுவது தமிழில்தானா அல்லது வேறு ஏதாவது மொழியா என ஆராய வேண்டியி ருக்கும். ‘நம்ம புல்லீங்க, எள்ளாம் பயங்கறோம்..’

கண்ணதாசன், வாலி போன்றோரின் கொஞ்சு தமிழைக்கேட்டு பழகியபின், இவற்றை எங்கே கேட்பது? விஜய் தொலைக் காட்சி மாதிரியான பொழுதுபோக்கு சானல் ஸ்டேஜ் ஷோக்களில், அறிவிப்பாளர்கள் அடிக்கும் கொட்டம் தாங்காது. தமிழை ரணகளப் படுத்திவிடுவர்.

பள்ளிப்பருவத்தில் எனது தமிழாசிரியர், தவறுதலாக ‘எளுமிச்சை’ என நான் உச்சரித்ததற்காக, ஒரு பீரியட் பூராவும் வெயிலில் நிற்கவைத்தார்.  அவர் நமது தொலைக்காட்சி அறிவிப்பாளர்களைக் கண்டால் என்ன செய்வாரோ? டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, அரிதாகவே பிழையற்ற தமிழைக் காண முடிகிறது.

விந்தையாக, தமிழ்-தமிழ் என அக்காலத்தைவிட, தற்போது தான் அதிகமாக கூவப்படுகிறது;  தமிழின்பேச்சுத்தரம்-எழுத்துத்தரமும் இப்போதுதான் அதளபாதாளத்தில். வேறெந்த மானிலத்திலாவது, அவரவர்கள் தாய்மொழியினை இவ்வளவு சிதைக்கிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.

பெரும்பகுதியான நகர்ப்புர பள்ளிச் சிறுவர்-சிறுமியர்களுக்கு சரளமாக தமிழ் வருவதில்லை. ஆங்கிலம்தான். ஆங்கிலமோ அல்லது ஹிந்தியோ, அதிகப்படியான மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறேயில்லை. ஒவ்வொரு மொழியும் இன்னும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது; ஆனால் நிச்சயமாக தாய்மொழியினைப் புறக்கணித்து அல்ல. தற்போது நிலவும் இருமொழி-மும்மொழிப் போராட்டங்கள் யாவும் ‘தமிழ்’ என்ற பதாகை தாங்கி நிற்கின்றனவே தவிர, ஆங்கிலத்திற்கு வால்பிடிக்கும் இயக்கங்களாகவே நடமுறையில் மாறியுள்ளன. நமது பிள்ளைகள் தமிழின்மீது இயல்பாகக் கொண்டிருக்கவேண்டிய உறவு, மெல்ல-மெல்ல மறைந்துகொண்டிருக்கிறதோ என அஞ்ச வேண்டியுள்ளது. சிறார்களது வார்த்தை வீச்சு (வெகாப்லரி),  நூறைத்தாண்டுமா என்பதே சந்தேகம்.

தமிழ் ஆசிரியர்கள் தங்களது தமிழ் ஞானம், உச்சரிப்பு குறித்து அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மானவர்களது தமிழ் ஆர்வம் தமிழாசிரியர்கள் மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு செலுத்தப் படவேண்டும். ஏனெனில் பெற்றோர்கள் தொலைக்காட்சித் தமிழில் மூழ்கிக் கிடக்கின் றனர்.  சேக்கிழார், திருமூலர், சங்க இலக்கியகர்த்தாக்கள், காளமேகம் போன்றோர்களது பெயர்களையாவது பெற்றோர் அறிந்திருப்பார்களா எனச் சந்தேகம். 

என்காலத்தில், பெரியவர்கள் வீட்டிற்கு வந்தால், ‘எங்கே, இரண்டு தேவாரம் சொல்லு, செய்யுள் சொல்லு  என குழந்தைகளைப் பாடச்சொல்லிக்கேட்பர். தவறிருந்தால் திருத்துவர். அந்த அளவிற்கு ‘இயல்பாகவே  தமிழ் நம்மிடையே கலந்திருந்த்து.

தற்போது, தங்களது குழந்தைகள் பெயரைக் கூட, தமிழில் வைக்க மறுக்கும் காலம். காளையன் என்றால் மட்டம்- ரிஷப் என்றால் ஆஹா! கருத்தம்மா என்றால் தூ... ஷியாமளா என்றால் பிரமாதம்; வெள்ளையம்மா என்றால் அபத்தம்- ஸ்வேதா என்றால் ஃபேஷன்.

பள்ளி, பட்டப் படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் என்ற அதிவேகச் சுழலில் தாய்மொழி-கலாச்சாரம் போன்றவை தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாழ்வின் வேகம் குறைந்து,  நமது மொழி எங்கே எனத் தேடத் துவங்கும் போது,   பின்னாலிருந்து காலம் கடந்துவிட்டது...போஎன்று சொல்லி தமிழ் நகைக்கும்.

உண்மையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை தமிழ் மட்டுமே எனக்குத் தெரிந்த மொழியாக இருந்தது.  எனக்கு மட்டுமல்ல, பல மானிலத்தவர்க்கும் அவரவர்கள் தாய்மொழி மட்டுமே அறிந்தவர்களாக இருந்தனர்.  பின்னாட்களில்தான் பல மொழிகள் வாழ்வில் இடம் பிடித்தன. 

இன்று பல மத்தியதர, உயர்மத்திய தர குடும்பங்களில் ஆங்கிலம் குடும்ப பேச்சு மொழியாக மாறிவருகிறது. அவர்களது நித்தியப்படி வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக தமிழ் வெளியேறுகிறது.

தாங்கள் ஆங்கிலத்திற்குப் பழகிவிட்டது குறித்து பலரும் பலரும் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் நம்முடைய தாய்மொழியோடு எந்தவிதமான உறவு இருக்கிறது என்பதைப் பற்றியும், அந்த உறவு முறியும்போது அது எந்தவிதமான சமுதாய தாக்கங்களையும், வலிகளையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி பலரும் கவலைகொள்வதில்லை.   நவீன, தாராளமய யுகத்தில் நமது வாரிசுகள் முகமிழந்த மனைதர் களாக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். நமது அடையாளங்களான மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவுமுறை ஆகியவற்றைத் தொலைத்து,   உலக மயமாகி விடும் அபாயம் சடுதியில் வாய்க்கும்.  நமது மண்ணோடு நம்மை அடையாளப்படுத்தும் முக்கியமான அம்சம் நமது தாய்மொழி. திரும்பவும் நமது மொழியோடு நம்மை இணைத்துக்கொள்ள இயலாத சூழலுக்கு ஆட்படுகிறோமோ என அச்சமாகவே உள்ளது.
வேலை, படிப்பு முக்கியம்தான்! கூடவே  நம்முடைய வேர்களிலும்  கவனத்தைச் செலுத்துங்கள் என்கிறேன்.  
நான் ஹிந்திக்கோ-ஆங்கிலத்திற்கோ எதிரானவன் அல்லன். ஆனால் நம்மீது ஆதிக்கம் செலுத்தும்  மொழியைக் கற்பதில்தான்  பிரச்சனை இருக்கிறது.  புதிய மொழி நமது தாய்மொழியை விரட்டிவிட யத்தினிக்கும்போதுதான் பதைப்பு உண்ணாகிறது.  பல மொழிகள் ‘கோஎக்ஸிஸ்ட்’ செய்ய முடியாது  என்று சொல்லவில்லை. ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள் என்கிறேன். கொஞ்சம் நேர்மையாக சிந்தித்தால், ஆங்கிலம் எவ்வாறேல்லாம் நமது வீட்டின் உள்ளிலும்-புறத்திலும் ஆதிக்கம் செலுத்தி, நமது வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது எனப் புரியும். 
புறக்கணிக்கப்படும் தாய்மொழி போட்டியிடுவதற்கு வழியே இல்லாமல் மெல்ல மெல்ல நம்மிடமிருந்து நம்மையும் அறியாமல் அப்புறப்படுத்தப்படுகிறது. எனக்கு நேரடியாகவும் சற்று சுற்றிவளைத்தும் 20க்கும் மேற்பட்ட பேரன்கள்-பேத்திகள். பெரும்பாலோருக்கு தமிழ் படிக்கத் தெரியாது!   
அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் பெற்றோரின் குடியேற்றத்திற்குப் பின், தாய்மொழியினை, அது தமிழோ-ஃப்ரஞ்சோ-போர்ச்சுக்கீஸோ, எதுவானாலும் தாய்மொழியினை நன்கறிந்த குழந்தைகளின் சதமானம் குறைந்து கொண்டேவருகிறதாம். விதிவிலக்குகள் இருக்கலாம்.
தாய்மொழியினை மறக்கும்பொழுது,  தங்களது வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும்  தேய்வுறுகிறது. மொழிக்கு நினைவுகளையும், வாசனைகளையும் மீட்டெடுக்கும்  சக்தி உண்டு.  மொழி, நம்முடைய அனுபவங்களோடு பின்னிப்  பிணைந்திருக்கும்.  தாய்மொழியினைப் பேசும்பொழுது, அது நம்மை நமது பழைய நினைவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் இட்டுச்செல்லும்.  ‘....மோர் என்று பேர்படைத்தாய், மும்பேரும் பெற்றாயே.....’ என்ற காளமேகப் புலவரின் சிலேடையை அசைபோடும் பொழுது, ஆனையாம் பட்டியையும், ஆத்தூரையும், அங்கே மோர் விற்ற கவுண்ட மூதாட்டியும் நினைவில் வந்து போகிறாரே? ‘பாபா ப்ளாக்ஷிப்’ பாடினால் அல்லது ‘ரெயின் ரெயின் கோ அவே’ பாடும்பொழுதோ எது நினைவிற்கு வரும்?
இளவயது துள்ளல்களையும், அல்லல்களையும் நினைவிற்கு கொண்டுவருவது மொழிதானே?  மொழி அனைவரது சிறுவயது நினைவுகளோடு பின்னிப் பிணைந்திருக் குமல்லவா?பின்னர் பிற மொழிகளில் புலமை அடைந்தாலும், தாய் மொழியின் சிறப்பு தனிதான். நினைவுகள் பேசினால், அது  தாய்மொழியி மூலமே பேசும்.

ஜூலி ஷெடிவி சொல்கிறார்: (அவரது வார்த்தைகளிலேயே-தமிழாக்கம்: திரு கிருஷ்ணன் சுப்ரமணியன்) “இயற்கையான மொழியிலிருந்து விலகும்போது உங்களை உருவாக்கிய ஒட்டுமொத்தக் கலாச்சாரத்திலிருந்து நீங்கள் விலக நேரிடுகிறது. நீங்கள் உள்வாங்கிய அறங்களையும், விதிகளையும் வெளிக்காட்டிய புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள், பாடல்கள் ஆகியவற்றை நீங்கள் நெருங்க இயலாமல் போகிறது. உங்கள் குடும்பத்தை தங்களோடு அரவணைத்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை அல்லது ஒரு தேசத்தை நீங்கள் இழக்க நேரிடுகிறது. உங்கள் அடையாளத்தை நீங்கள் இழக்கிறீர்கள். இந்தத் துண்டிப்பு கடுமையானது. 2007ல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடிகளினிடையே டார்சி ஹாலட் என்ற ஆய்வாளர் நடத்திய ஆய்வு ஒன்றில், தங்களது மொழியைப் பேச இயலாதவர்களில் (பாதிக்கு மேற்பட்டவர்கள்) இளவயதில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை தங்களது மொழியைப் பேசும் சமூகங்களில் இருந்ததை விட ஆறு மடங்கு அதிகமாக இருந்தது என்று கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் தெரசா லாஃப்ரம்பாய்ஸ் என்ற மனவியலாளர், அமெரிக்க-இந்திய பதின்ம வயதினரிடையே தங்களது மொழியைப் பேசுபவர்களும் மரபைப் பின்பற்றுபவர்களும் அப்படிச் செய்யாதவர்களை விட  பள்ளியில் நல்ல முறையில் செயலாற்றினர் என்று கூறினார். இது போன்ற நிகழ்வுகள் கண்டங்களைக் கடந்து நடந்துகொண்டிருக்கின்றன. 2011ல் ஆஸ்திரேலியா புள்ளிவிவரக் கணக்கு ஒன்று அந்நாட்டுப் பழங்குடியினரிடையே தங்கள் தாய்மொழியைப் பேசியவர்கள் குடிக்கும் போதைக்கும் அடிமையாகும் வாய்ப்புக் குறைவு என்று தெரிவிக்கிறது.”
“தற்கொலைகளைப் பற்றி ஆய்வு செய்த மைக்கேல் சாண்ட்லர், கலாச்சாரத் தொடர்ச்சி ஒருவரை வலுப்படுத்தி தங்களுடைய அடையாளத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது என்று குறிப்பிடுகிறதார். இந்தத் தொடர்ச்சி இல்லாவிடில், பழங்குடிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது என்றும் எச்சரிக்கிறார். கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைக்கும் சங்கிலியை அவர்கள் இழக்கும் அபாயத்திற்கு உள்ளாகிறார்கள் என்கிறார் அவர்.”
‘அம்மா-அப்பா’, மம்மி, டாடி யாக மாறி, பிற்பாடு மாம், டாட் என்று மாறி அந்த ‘அம்மா’ வின் உணர்ச்சிகளையெல்லம் அடியோடு அழித்துவிட்டன.
மரபு சார்ந்த விஷயங்களை, மதசம்பந்தமான நெறிகளை குடும்ப உறவுகளை,  கர்னாடக இசையை, நாட்டுப் புறப்பாடல்களை,  பெரியவர்களுக்குச் செலுத்தும் மரியாதை முறைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த முகமிழந்த மனிதர்களால் முடியாது.  நம்புங்கள். மொழியின் நினைவுகள் நமது ஜீன்களில் பொதிந்துள்ளன். மீட்டெடுக்க சந்தர்ப்பம் மட்டும் தாருங்கள்.  
ஆழ்மனதோடு உரையாட, வார்த்தைகளின் ஜீவனை உணர தாய்மொழியால் மட்டுமே இயலும்.

Tuesday, October 1, 2019

வெட்டுக்கிளிகள்

1970 ஆம் ஆண்டு. வியட்னாம் வீடு என்ற சிவாஜிகணேசனின் திரைப்படத்தைப் பார்க்கப்போயிருந்தேன். திரையரங்கின் (செங்கற்பட்டு) வாயிலில் சிலர் குழுவாக நின்று கோஷமிட்டுவிட்டுச் சென்றனர்.
வினவியதில் ‘வியட்நாம் வீடு’ என்ற திரைப்படத்தின் தலைப்பை எதிர்த்து கோஷமிடுவதாகத் தெரிந்தது. படம் என்னவோ வழக்கமான சிவாஜி ஸ்டைல் சென்டிமெண்ட் படம்தான். ஒரு சாதாரண குடும்பச்சண்டைப் படத்தை, உயிரைப் பயணம் வைத்து, நாட்டிற்காக போராடும் யுத்தத்தோடு ஒப்பிடுவதா என்பது  இடது சாரிகளின் ஆதங்கம்.
பின்னர் சில தத்துவத்தேடல்களுடன் ,  விபரம் தேடிப் பிடித்ததில், அமெரிக்காவின் போர் வெறியும், இருபது ஆண்டுகள் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் போரில் சந்தித்த கடுமையான உயிர்-பொருட்சேதங்களும்  தெரியவந்தன .
சென்ற 20/09/19 அன்று வியட்நாம் (சுற்றுலாவாகத்தான்) செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.  சைகோன் நகரின் வெளிப்புறத்தில் (தற்போதைய ஹோசிமின் சிட்டி) இன்றும் அரசு பாதுகாத்துவரும் ஒரு போர் நடந்த வெளியைக்கண்டேன்.
அதற்குமுன் மிகச்சுருக்கமாக:  தற்போது வியட்னாம் ஒரே நாடு. 1975க்கு முன், தெற்குவியட்னாம்- வடக்குவியட்னாம் என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தன. அன்றைய சோவியத் யூனியன்,சீனா ஆகியவை வடக்கு வியட்னாமை ஆதரிக்க, தெற்கு வியட்னாமை அமெரிக்கா ப்ராக்ஸி அரசின்பேரில் ஆண்டது.
அமெரிக்காவை எதிர்த்து வியட்னாமியர்கள் போராடினார்கள். போராட்டம் என்றால் சாதாரண் போராட்டம் அல்ல. லட்சக்கணக்கில் உயிர்ப்பலி. சர்வ வல்லமை கொண்ட அமெரிக்காவை வெறும் மூங்கில் குச்சிகளோடும், இரும்புக் கம்பிகளோடும், சாதாரண துப்பாக்கிகளோடும் சந்தித்தது வியட்நாம்.  வியட்னாமியர்கள் கைக்கொண்ட போர்முறைதான் ‘கொரில்லா போர்த் தந்திர முறை’.
இன்றைக்கு உலகில் உள்ள  பல வன்முறையாளர்கள் கும்பல் தேர்ந்தெடுக்கும் தாக்குதல் முறை இதுவே. 
வியட்னாம் யுத்தத்தின் தலைமைப் போராளி, ஆலோசகர், வியூகம் வகுத்தவர்,  நுட்பமான அரசியல்வாதி ‘ஹோசிமின்’.
இவர் தலைமியில்தான் போர் நடந்தது. ஆகப்பெரிய ஜாம்பவான் அமரிக்கா தனது பல்லாயிரம் வீர்ர்களை இழந்து, தாக்குப்பிடிக்க இயலாமல் வியட்னாமைவிட்டு வெளியேறியது. வியட்னாமும் ஒன்றுபட்டது.
தற்போதைய, மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக ஒரே ஒரு ‘வார் ஃபீல்டை’ மட்டும் பராமரித்து வைத்துள்ளனர். சும்மா வந்திடாதல்லவா சுதந்திரம், எந்த நாட்டிற்கும்?
அன்றைய தினங்களில், ஹோசிமின் எனக்கு அதிசயப்பிறவி. அவரது போர்த் தந்திரங்கள் எதிரியை நிலைகுலைய வைத்தவை. தேர்ந்த அறிவாளி. டிப்ளமாட். எந்த நிலையிலும் நிலை குலையாதவர்.  சலனமற்றவர்.  சமரசமற்ற போராளி. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் ஒன்றினைத்து போராடினார்.
வெற்றியைத் தீர்மானிப்பது ஆயுதங்களல்ல.. வெகு மக்களேஎன்ற உண்மையை உலகுக்குப் பறைசாற்றியவர்.   விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளைத் தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் தத்துவ வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல... எதிர்காலத்தையும் பார்க்க முடிகிறது’’. “இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டை போடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி யெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல... உண்மையில் நடந்தேறியது.
ஹோசிமின் அவர்களை ஹோமாமாஎன வியட்நாம் மக்கள் அன்புடன் அழைத்ததிலிருந்தே அம்மக்கள் அவர் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் மதிப்பையும் உணரலாம்.
உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்தது. 30 லட்சம் மக்களின் உயிர்த் தியாகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. அமெரிக்காவின் படையில் 58000 பேர் கொல்லப் பட்டனர்.
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றும் பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையிலான போட்டியில் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் வியட்நாம் மக்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான போரைத் தீரமுடன் நடத்தினர். விடுதலைக்கான சுதந்திரப் போரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து போராட்டத்தை வீச்சாகக் கொண்டு சென்றனர். அதன் விளைவாக பிரான்ஸ் வெளியேறியது. வியட்நாம் தெற்கு நோக்கி முன்னேறியது. ஐ.நா.சபை தலையிட்டு வெகுமக்களின் வாக்கெடுப்பின் மூலம் வியட்நாம் ஒன்றிணைக்கப்பட்டது. ஹனோயைத் தலைநகராகக் கொண்ட வியட்நாமும் சைக்கோனைத் தலைநகராகக் கொண்டு தென் வியட்நாமும் உருவாகின.
ஐ.நா.சபை வெகுமக்களின் வாக்கெடுப்பை நடத்தாத நிலையில் தென் வியட்நாம் மீது வட வியட்நாம் தாக்குதலைத் தொடங்கியது. 1955ல் மீண்டும் போர் ஆரம்பமானது. அமெரிக்கா, தென்வியட்நாம் அரசுக்கு ஆதரவாக 1964ல் வட வியட்நாம் மீது விமான குண்டுத் தாக்குதல் நடத்தியது, அமெரிக்க - வியட்நாம் போராகப் பரிணமித்தது.
நச்சு ரசாயன நாபாம் குண்டுகளை ஏவி வீடு, வயல், நிலங்களை அழித்தது அமெரிக்கா. எத்தகைய தாக்குதலுக்கும் அஞ்சாமல் வியட்நாம் மக்கள் போராடி 1975ல் அமெரிக்காவை விரட்டி அடித்தனர்.  .
அமெரிக்கா ஏவிய நச்சுப்பொருட்கள் மற்றும் நாபாம் குண்டுகளால் வியட்நாம் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தனர்.  நாபாம் குண்டுகளை வியட்நாம் மீது வீசி வியட்நாமிய மக்களை அடிபணிய முயற்சி செய்த ஆணவத்திற்கும், அடங்காப்பிடாரி தனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து, வெறும் முங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும், நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஒட வைத்தனர் வீர வியட்நாம் மக்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1975 வரை நடத்திய கொரில்லா யுத்தத்தின் வீர நினைவுகளை இன்றும் பாதுகாத்து வைத்து வருகின்றனர். குச்சி என்ற பகுதியில் ஆண்களும், பெண்களும் 4, 6, 10 மீட்டர் ஆழத்தில் பூமியில் குழிகளையும், பட்டறைகளையும் உருவாக்கி அதில் பதுங்கி இருந்து போரை நடத்தினார்கள். கையில் வெறும் கட்டைத் துப்பாக்கியும், மூங்கில் குச்சி களையும் வைத்துக்கொண்டு நவீன விமானங்களையும், பீரங்கிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய அமெரிக்காவை மண்ணைக் கவ்வ வைத்தது.
எனது இந்தப் பயணத்தின்போது, வியட்னாமியர்களின் பதுங்கு குழிகளையும், பட்டரைகளையும் காணும்போது, அவற்றின்மீது கால்வைக்கவே தயங்கினேன்.  ஒவ்வொரு பதுங்குக் குழிகளிலும் எத்துனை ஆயிரம்பேர் நாட்டிற்காக உயிரிழந்திருப்பர்? உண்மையில் மெய்சிலிர்த்தது. பகிர்ந்துகொள்ளத்தான் அருகில் எவருமில்லை. வழிகாட்டியாக வந்தவர் ‘ஹோசிமின்’ பாடலைப் பாடிக்காட்டியபோது, நெக்குருகிப்போனார். இத்தனைக்கும் அவர் போரினை நேரில் கண்டதில்லை.
எண்ணற்ற புத்தர்கோயில்களும், மெக்காங் டெல்டா படகுச் சவாரிகளும், நாட்ரடாம் சர்ச்சுகளும், மார்க்கெட்டுகளும் மனதைக் கொள்ளைகொண்டாலும், ஒரு சரித்திரப் புகழ்மிக்க ஒரு நாட்டைக் கண்டுற்றேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.
ஃபிஸிகலாக அமெரிக்காவை வியட்னாமியர் வெளியேற்றிவிட்டனர்தான். ஆனால் அந்த நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் தற்போது மிளிரும் ‘கென்டகி ஃப்ரைடு சிக்கன்’ (கேஃப்சி)கடைகளும், ஃபோர்டு கார்களும். பெப்ஸி-கோலாக்களும் உலகின்மீது அமெரிக்கா கொண்டிருக்கும் பிடி இருகித்தான் இருக்கிறதே தவிர தளரவில்லை என்பதை நுண்ணரசியல் மதிகளால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிகிறதே!
இனி சில புகைப் படங்கள்: 













பழைய சர்ச்  

Add caption

உலகப் புகழ் பெற்ற புகைப்படம்