Sunday, November 18, 2018

பா(வா)ல் கிண்ணம்



என்னிடம்  ‘இண்டெக்ஷன் ஸ்டவ்’ என்ற ஒரு வஸ்து இருக்கிறது. காஃபி போடுவதற்கு மட்டுமே, அதன் பயன்பாடு.

லோகத்தில் எல்லோரும் என்ன செய்வார்கள்? ‘ஆன்’ பட்டனைத் தொடுவார்கள். அடுப்பு உயிர் பெறும். அவ்வளவுதானே?  ஆனால், என்னுடையது, என்னைப் போலவே அலாதி டைப். ஆன் பட்டனைத் தவிர மற்ற பட்டன்களையெல்லாம் ஒவ்வொன்றாக அமுக்கிக் கொடுக்கணும்.  கொஞ்சம் கிட்ட போய், கொஞ்சணும். கெஞ்சணும்.  சிணுங்கிக் கொண்டு உயிர்பெற்றாலும் பெறும் அல்லது ‘தேமே’ என்று, சும்மா கிடந்தாலும் கிடக்கும். ‘கண்ணே..கலைமானே..’ பாடியபின் சிவப்புவிளக்குகள் எரியும். ‘அப்பாடா..’ என காஃபி போடும் வேலையைத் துவங்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கொஞ்சம் வயசான தம்பதியினரைப் போல சதா சண்டி பண்ணிக் கொண்டிருக்கும்.

‘ஆன்’ செய்யமட்டுமல்ல.. ஆஃப் செய்யவும் அதே போராட்டம். பால் பொங்கிக் கொண்டிருக்கும்... பயந்து, பாய்ந்து ஆஃப் பட்டணைத் தொட்டால் ஆஃப் ஆகாது. பால் யாவும் பொங்கி வழிந்து அடுப்பையும், டேபிளையும் ரணகளப் படுத்திவிட்டுத்தான் ஆஃப் ஆகும்.  அடுப்பையும், டேபிளையும் க்ளீன் செய்ய அடுத்த அரைமணி நேரம் அகும்.

இந்த இம்சைக்கு பயந்து, ‘உலகளந்தப் பெருமாள்’ போல, ஆஃப் பட்டணில் ஒரு கை.. சற்றே தள்ளியிருக்கும் மெயின் ஸ்விட்சில் ஒரு கை வைத்துக் கொண்டு, ஊர்த்துவ தாண்டவ போஸில் நின்று கொண்டு, ஆஃப் செய்யணும்.

ஒரு நாள் எரிச்சலாகிப் போய், இண்டக்ஷணை பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை என ஆவேசமுற்று, சர்வீஸ் ஸ்டேஷணுக்கு எடுத்துப் போனேன்.  அரை மணி நேர காத்திருப்பிற்குப்பின் என்முறை வர, ‘என்ன சார் பிரச்சினை...?

அடுப்பு செய்யும் அழிச்சாட்டியத்தை விலாவாரியாக எடுத்துரைக்க முயல, சட்டசபை சபா நாயகர் போல, ‘போதும்.. உட்கார்.’ என கையமர்த்தினார். மனிதர் நிறைய அனுபவப் பட்டிருப்பார் போல.

பவர் கேபிளைச் செருகி, ஆன் செய்தார். உடனே பளிச்சென உயிர் பெற்றது. திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப செய்த போதும், புதுப் பெண்போல உடனே பிரகாசமுற்றது. மெக்கானிக் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஸ்டவ்வை சுருட்டி உள்ளே வைத்து, ‘போ.. அந்தண்டை..’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

கொஞ்சம் அசிங்கமாக உணர்ந்து, ‘சே... அவசரப்பட்டு விட்டோமோ..?’ மற்ற சாக்கட்டுகளில் செருகி ட்ரை செஞ்சிருக்கலாமோ என எண்ணியபடி  வீட்டிற்குத் திரும்பினேன்.

சாயங்காலக் காபிக்கு முயலும்போது, ‘இண்டெக்ஷன்’ அதே சண்டி. ஒருகையில் ஸ்டவ்... அடுத்த கையில் பவர் கேபிள் என, ‘பவதி பிக்ஷாந்தேகி’ என்பது போல, வீட்டில் உள்ள அனைத்து சாக்கெட்டுகளிலும் முயல, ஏளனமாகப் பார்த்துக் கொண்டு ‘கம்முனு’ கிடந்தது . 

பழைய டெக்னிக்கான கொஞ்சிக் குலாவி, தட்டிக் கொடுத்தபின், ‘ம்ம்ம்... அப்படி வா வழிக்கு’ என்றபடி உயிர் பெற்றது.

ஸ்டவ்தான் அப்படி என்றால், பால் காய்ச்சவும், டிகாக்ஷனுக்கு வென்னீர் தயார் செய்யவும் வால்கிண்ணம் (அதென்ன வால்..?) என்ற ஒரு பாத்திரம் உண்டு. கையச் சுட்டுக் கொள்ளாமலிருக்க உதவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் உற்றி, ஆன் செய்தால், அந்த வால் கிண்ணம், ஏதோ ‘மாய மோகினி’ போல, ஸ்டவ் மேல் வட்டமடிக்கும். ஏதோ கொஞ்சம் ஒரு ‘பெக்’ போட்டவன் போல ஆடி நின்றுவிட்டால் பரவாயில்லை..சுற்றிச்சுற்றி வந்து மொத்த வால்கிண்ணத்தையும் கீழே தள்ளிவிட்டுவிட்டுதான், மறு வேலை பார்க்கும் என் செல்ல ஸ்டவ்.

ஒருவேளை சர்ஃபேஸ் ஈவனாக இல்லாததால் இப்படி வட்டமடிக்கிறது போலும் என நினைத்து, சுத்தியலால், வால் கிண்ணத்தின் அடிப்பாகத்தை நசுக்க முயன்று, நிலைமையை கெடுத்துக் கொண்டேன். அடுப்பின் மேல் வைத்தஉடனே, சர்ரென கீழ்  நோக்கிப் பாய்கிறது, ‘காஜா’ போல..

இந்தப் பீடை பிடித்த காஃபியை நிறுத்திவிடலாம் என்றாலும் அது சாத்தியமாகது போல...

ப்ளீஸ்.. எவராவது ஒரு கப் சூடா ஸ்ட்ராங்கா காஃபி கொடுங்களேன். ஆயாசமா இருக்கே!

Friday, August 3, 2018

ஹீலர்கள்!!

த.நாவில் 'ஹீலர்கள்' எனத் தங்களுக்குத் தாங்களாக  பட்டம் வைத்துக் கொண்டு, விஞ்ஞானத்திற்கு  புறம்பான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டு, பலர் திரிகிறார்கள்.

பத்தாவதோ, +2 வோ படித்துவிட்டு, நவீன மருத்துவர்களுக்கு  சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எங்கேயாவது 'சடாரென' தீர்வு கிடைக்காதா எனப் பரிதவிக்கும், நோயாளி மக்களின் சைக்காலஜி தான், இந்த டுபாக்கூர்களின்  மூலதனம்.

டயபடீஸ் என்று ஒரு நோயே இல்லை;

டெங்கு வந்தால் ட்ரீட்மெண்ட் எடுக்காதே;

BP க்கு மாத்திரை வேண்டாம்;

டேண்ட்ரஃப் (பொடுகு) என்பது கபால எலும்பு உடைந்து மேலே வருவது;

பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது.....

தடுப்பூசிகள்  தேவையில்லை...

இவையெல்லாம் ஹீலர்களின்  அபத்தங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

பிரசவ மரணங்கள் அக்காலத்தில் எவ்வளவு சதவிகிதம்,  இன்று எவ்வளவு என்ற ஸ்டேடிஸ்டிக்ஸ் ஒன்றே போதும்; இம்மாதிரியான பேத்தல்களை  முறியடிக்க! அக்காலத்தில் பத்து பெற்றால் நாலு போய்விடுமே? இன்று துணிந்து ஒன்றோடு நிறுத்திக் கொள்கிறோமே, அந்த நங்பிக்கையையும், துணிவை யும் தந்தது யார்? நவீன மருத்துவம் தானே?

இந்த ஹீலர்  கிறுக்கர்களின்  முன்னோடி ஒருவன் உள்ளான்.

இவன் பேச்சைக் கேட்டு, வீட்டிலேயே இயற்கைப் பிரசவம்  என ஆரம்பித்த ஒருவனின் மனைவி சில நாள் முன்பு இறந்தே போனார். எவ்வளவு பெரிய விஷயம்?

மாற்று மருத்துவம் என்பது வேறு; ஏமாற்றுக்  கோஷ்டிகள் என்பது வேறு; லாட்ஜ் 'டாக்டர்கள்' எல்லாம் மாற்று மருத்துர்கள் அல்ல;

ஹீலர் ஃபிராடுகள்  போல, 'வாலிப வயோதிக அன்பர்களே' கோஷ்டிகள் தனிரகம்.  ஆண்களின் அறியாமையும், வெட்கமும்தான்  இவர்களின் கேபிடல்.

நானும் alternative medical system களில் ஓரளவு நம்பிக்கை உள்ளவனே!
மாற்று மருத்துவம் என்பது அங்கீகரிக்கப்பட்ட வேறு பல மருத்துவ முறைகள்! ஆயுர்வேதம்,சித்தா, யுணாணி போன்றவை!  ஹீலர்களின்  DVD உரைகள் அல்ல!

மாற்று மருத்துவத்திலும், எந்தெந்த முறை,  எது வரை, எந்தெந்த வியாதிக்கு என்பதில் தெளிவான பார்வை வேண்டும்!  உதாரணமாக மூட்டுவலிகளுக்கு  ஆயுர்வேதம் நல்லது! ஓரளவுவரை..ஆனால் மூட்டையே மாற்ற வேண்டுமெனில் அல்லோபதிதான்.

திருப்பூர் பெண் போல, ஹீலர்களின் பேச்சைக்கேட்டு  இன்னும் எத்தனை பேர் உயிரழக்கப் போகிறார்களோ?

நம்மவர்கள், தற்போது பெருவாரியாக உள்ள சில நோய்களுக்கு,  எங்கேயாவது  சுலபமாக, சகாயமாக தீர்வு கிடைக்காதா எனத் தேடுகன்றனர்.  சர்க்கரை நோய்க்கு, BP க்கு மருந்தற்ற தீர்வு இருக்காதா எனஅலைகின்றனர்.

ஒன்று தெரிந்து கொள்வோம்..அப்படி டயபடீஸுக்கு  எளிய  'மந்திர' சிகிச்சை அல்லது மருந்து இருந்தால், அதைக் கண்டுபிடித்தவன் தான் இன்று மிகப்பெரிய பணக்காரனாக  இருப்பான்.

நிரூபிக்கப்பட்ட முறையாக வேறு எதுவும் இல்லாததால்தான் 'மெட்ஃபார்மின்'  வியாபாரம் அத்தனை கோடிகளில்!

தற்போது ஒரு ஹீலரைப்பிடித்து உள்ளே
போட்டுவிட்டனர்  போலீஸார்.

இது போதாது! இவ்வித  போலி மருத்துவர்கள் அனைவரையும் உள்ளே  தள்ளினால்தான், நாட்டிற்கு நல்லது!

அல்லோபதி மட்டுமே, அப்படியே உன்னதம்  என்று கூறவில்லை!நோகாமல்  காசுபிடுங்க அவர்களும் ஏராளமான வழிமுறைகள் வைத்திருக்கின்றனர்.

விஞ்ஞானம் என்பது வேறு; அதை வைத்து காசு பார்ப்பது என்பது வேறு!


ஹீலர்களிடம் விஞ்ஞானம் சற்றும் கிடையாது!  காசு மட்டுமே குறி!

இந்த கோஷ்டிகளில் பலரையும் ஒரு ரவுண்டு வந்தவன் என்ற வகையில் 'எச்சரிக்கும்' உரிமையும்-கடமையும் உள்ளதாக நினைக்கிறேன்.

Life style காரணமாக, நாமே உருவாக்கிக் கொள்ளும் சில ஆரோக்கியச்  சிடுக்குகளுக்கு, நம்முடைய 'நடைமுறைகளை' மாற்றிக் கொண்டாலே போதுமானது என்பது வரைதான் அவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்ளவேண்டும்.

உதாரணமாக,பசித்துப்  புசி  என ஒளவையும, நோயென வேண்டா வென  ஐயன் வள்ளவரும்  சொன்னதுதானே?

பசித்துப்  புசிப்பதும், அகால உணவும், ஃபாஸ்ட் ஃபுட், சோடா வகையறாக்களை  புறந்தள்ளுவதும் நல்ல பழக்கம்.  ஆங்கில மருத்துவம் இவற்றைத் தின்றால்  நல்லது எனச் சொல்லவில்லைதானே?

அதற்காக, BP, uncontrolled diabetes, cancer யாவற்றிற்கும்  மருத்துவம் வேண்டாம் என்பது சமுதாயத்திற்கு தவறான  வழிகாட்டல்.

வீட்டிலேயே பிரசவம் என்பது விஷமம். ஸ்டேடிஸ்டிக்ஸ் ஏராளமாக உள்ளது.

Human evolution ல், நான்கு கால்களிலிருந்து  இரண்டுகால்   ஜீவன்களாக நாம் மாறியதனால் ஏராளமான நன்மைகள். சில சிக்கல்களும் உண்டு. பிரசவ அவசரங்கள், முதுகுவலி, ஹெர்ணியா  போன்றவை!

வீட்டில் பிரசவம், தடுப்பூசிகள்  வேண்டாம் ,
மருந்துகளே  தவறு என்பது கண்டிக்கப்  படவேண்டியவை!

10% உண்மையும், மீதி கைச்சரக்கும் இருந்தால் ஒரு ஹீலர்  தயாரென்பது   சமூக அபாயம்.

Friday, July 20, 2018

Beware of fraudulent tour operators.

Beware of fraudulent tour operators.
       **********************
As you all aware, I like to travel a lot. 

In April 18, I booked a cruise trip ticket to Lakshadweep, through M/s Lakshadweep Holidays, Cochin, who was a authorised tour operator for  Lakshadweep tourism department (SPORTS).

The trip was scheduled on 4/5/18.

The agency informed me two days before the commencement of tour that the trip was cancelled due to rough sea. On my request they postponed the trip to 24th May. That too was cancelled by them citing the same reason.

I doubted the cancellation reasons.

As per the terms and conditions I requested them to refund the full amount of ₹32,000 to me, as I found something fishy.

Hundreds of SMSs, Mails to him.. He preferred to keep silent. He ignored all my calls and didn't answer any of my calls. Two months gone.

On Googling,  I found that many letters / complaints / grievances against this company.

I came to the conclusion that my hard earned pension amount is gone and no scope for refund.

I appealed to the consumer complaints forum, Kerala tourism ministry; SPORTs etc., but no response.

Finally, yesterday,  I registered a complaint to Prime ministers Grievance Cell, against this company with a prayer to refund.

Central Govt tourism ministry  wrote a stern warning  letter to them to refund the amount else face the consequences from the government.

It worked.

Today that company refunded the amount under intimation to the central government.

How many common citizens can pursue the case like me? God only knows how much amount he looted from the innocent public.

BEWARE OF fraudulent operators.

Tuesday, July 3, 2018

பத்ரிநாத் யாத்திரை


இந்துக்களுக்கு சார் தாம் என்று குறிப்பிடப்படும் (நான்கு புன்னியத் தலங்கள்) கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் யாத்திரை என்பது மிக முக்கியமான ஒன்று.  

பொதுவாக தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே பூரிஜெகன்னாதர், மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத் என நான்கு தலங்களை ‘சார் தாம்’ என்று குறிப்பிட்டாலும்  நடைமுறையில் ‘சார் தாம்’ என்பது மேலே சொன்ன நான்கு தலங்களாக கொள்ளப் படுகிறது. 

வாழ்வின் அந்திமக்காலத்தில், அதாவது வயதானபின், இமயமலைத்தொடரின் ஓரத்தில் உள்ள பத்ரி யாத்திரை செல்வது என்பது வழக்கமாகிவிட்டது. இனியும் அப்படித்தான் தொடரும் போல.  இவ்வளவு வசதிகள் இருக்கும் இக்காலத்திலேயே சலித்துக் கொள்ளும்பொழுது, ஒரு வசதியும் இல்லாத அக்காலத்தில், இக்கோயிலைச் நிறுவிய, ஆதி சங்கரர் எப்படித்தான் இங்கு சென்றாரோ?  

அக்காலத்தில்தான் பத்ரி யாத்திரை சவாலான ஒன்று. நவீன வசதிகள் வந்துவிட்டபின், இவ்வித யாத்திரைகள் எளிதாகி விட்டன.  முடிந்தால் பத்ரிக்கு மட்டும் செல்லாமல், ஜோதிர்லிங்கங்கத் தலமான கேதார்நாத்திற்கும் செல்வது உகந்தது. பத்ரியிலிருந்து கேதார்நாத் ஏரியல் டிஸ்டன்ஸ் 41கி.மீ என்றாலும் சாலைவழி 200 கி.மீக்கும் அதிகமாகிறது.

ஹரித்வார்தான்  (ஹரியைத் தரிசிக்க்ச் செல்வதற்கான நுழைவாயில்) சார் தாம்களுக்குச் செல்வதற்கான கேட்வே. எனவே முதலில் ஹரித்வார் சென்றோம்.  

ஹரித்வார்:

கங்கை, சமவெளியில் பாய்வதற்குத் தயாராகும் இடம் இது. கங்கை இங்கே சுத்தமாக இருக்கிறது.   ஆசை தீர,  நினைத்த போதெல்லாம் பன்முறை நீராடும் வாய்ப்பு! சீறிவரும் கங்கையில் நீராட வசதியாக தடுப்புக் கம்பிகள், சங்கிலிகள் வைத்துள்ளனர். தைரியமாகக்   குளிக்கலாம். மாலையில் கங்கைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்.  ஹரிகிபூரி(டி) என்று ஒரு இடம் இருக்கிறது ஹரித்துவாரில். இங்கேயிருந்துதான் யாத்ரீகர்கள், கங்கைத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள்; ஆரத்தியும் இங்கேதான்.  ஹரிகிபூரி என்றால் விஷ்ணுபாதம் என்று பொருள் கொள்ளலாம். கங்கையம்மன்  கோயிலும் இங்குதான்.

பார்ப்பதற்கு ஏகப்பட்ட கோயில்கள் – இடங்கள் இருந்தாலும் சில ஸ்னான கட்டங்கள், ஹரிகிபூரி, மானஸ் மந்திர், ஸ்ராவண மகாதேவ் கோயில், வில்வகேஷவர் கோயில், நீலேஸ்வரர் கோயில், வராக கம்பா கோவில், போலாகிரி கோயில், நவக்ரக கோயில் ஆகியவை தவறவிடக் கூடாத இடங்கள்.  ஏராளமான துறவியர். ஏகாந்தமாக அமர்ந்து தியானிக்க ஏகப்பட்ட இடங்கள். 

கோடையில் வெயில் வாட்டும். குளிக்க கங்கை அருகே ஓடுவதால் சிரம்மில்லை.

மானஸதேவி மந்திர் ஒரு மலைக்கோயில். ரோப் காரிலோ அல்லது நடந்தோ போகலாம்.  ரோப் காருக்கு காத்திருக்க வேண்டும். மேலோ சென்றால் கூட்டம் அம்முகிறது! 

ஹரித்வாரில் பல்வேறு பகுதியினருக்கும் அவரவர்கள் சம்பிரதாயத்திற்கு ஏற்றாற்போல (காசி போன்று)  ஏராளமான மடங்கள் கட்டிவைத்துள்ளனர். பெரும்பாலும் இவை இலவசம். அன்னதானம் பல இடங்களில்  நடைபெறுகிறது. எல்லா ஊர்களுக்கும் போக்குவரத்து வசதி இருக்கிறது. இது தவிர தனியார் லாட்ஜ்கள் ஏராளம்.

ரிஷிகேஷ்:

ஹரித்த்வாரிலிருந்து 30 கி.மீ தொலைவில், மேலே  ரிஷிகேஷ். சிவானந்தா ஆசிரமாம். லக்ஷ்மண் ஜூலா, சக்தி பீடம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.  இங்கும் ஏகக் கூட்டம். இந்தியாவில் பொதுவாக சுற்றுலாவென்றால் கோயில் சுற்றுலா என்றாகி விட்டதால்  எங்கு சென்றாலும் ஜன நெருக்கடி. ரிஷிகேஷும் விதிவிலக்கில்லை. ருத்ராட்சம் வாங்கு, ஸ்படிக மாலை வாங்கு என ஒரு கூட்டம், யாத்ரீகர்களை ஏய்க்க காத்துக் கொண்டிருக்கும். கவனம். 

ப்ரயாக்குகள்.

இதிகாச புராண காலங்களிலேயே இமயமலைச் சாரல் தவத்திற்கும் தியாணத்திற்கும் உகந்த இடமாக அறியப்பட்ட இடம்.   நதிக்கரைகளில் ஏகப்பட்ட கோயில்கள்.  எங்கெல்லாம் உபநதிகள், கங்கையில் கலக்கின்றனவோ அவையெல்லாம் ப்ரயாக்குகள். இந்த வழியில் ஏராளமான சிறுநதிகள் கங்கையில் கலக்கின்றன; எனவே ஏகப்பட்ட ‘ப்ராய்க்’கள்; கோயில்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை.

அல்கனந்தாவும், பாகிரதியும் ‘தேவ்ப்ரயாகில்’ கலக்கும்; ‘ருத்ர பிரயாகில்’ மந்தாகினி. ‘விஷ்னுப்ப்ரயாகில்’ மீண்டும் அல்கனந்தாவும் தவுலி கங்காவும்; ‘கர்ணப்ரயாகில்’ பிந்தரி.  
சுறுக்கமாக எங்கெல்லாம் உப நதிகள் கங்கையில் கலக்கிறதோ அதுவெல்லாம் ப்ரயாக்குகள்.  ஒவ்வொன்றிலும் இறங்குவது சாத்தியமாகாது, ஆனால் சற்று நின்று தரிசிப்பது  நல்லது. இறைஉணர்வுக்காக இல்லாவிடினும், அங்குள்ள கண்கொள்ளா காட்சிக்காகவேணும். நான் தேவ்ப்ரயாகில் மட்டும் குளித்தேன்.

பத்ரிக்கு...

சீறிவரும் நதிகள் கற்பனைக்கும் எட்டாத ஓவியங்களை வரைந்து கொண்டு உடன் வருகையில், பயணம் சலிக்குமா என்ன? யப்பா... என்ன மாதிரியான காட்சிகள்? உயரும் மலைகள்; சரேலெனச் சரியும் சமவெளிகள், சுழன்று-சுற்றி இடுக்குகளில் பாய்ந்து வரும் நதிகள்!  முழுமையாக ரசிக்க வேண்டுமெனில் பறவையாக மாறி, நதிகள் பயணப்படும் மலை இடுக்குகளில் பறந்துதான் பார்க்க வேண்டும் போல. கவிஞர்களாக இருப்பின் எழுதித் தள்ளியிருப்பார்கள்.  அவ்வளவு பேரழகு! அதுவும் விஷ்ணுப் ப்ரயாகிலிருந்து  பத்ரி செல்லும் மலைவழிச் சாலை ஒரு திகில் அழகு!  ‘போங்கப்பா... ஊரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்.. நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்..’ என்று எண்ணவைக்கும் அற்புதக் காட்சிகள்.

எல்லாமே சுகமாகச் சென்றால் எப்படி? இடையூறு வேண்டாமா? வழியில் மிகப்பெரிய நிலச் சரிவு நிகழ்ந்தது! கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் தேங்கின.  வாகனம் நின்ற இடத்தில், மிக அழகான நதியொன்றும் பெரிய மணல் திட்டு ஒன்றும்!   ஆற்றையொட்டி சரேலென பல்லாயிரம் அடி உயரும் மலையொன்று!  உடனே ஒரு சமவெளி!

ஒரு பஞ்சாபிப் பெண் குதூகலம் கொண்டு, ‘ட்ராஃபிக் நின்றுவிட்டாலும், இப்படிப்பட்ட சொர்க்கத்தில்தானே நிறுத்தியிருக்கிறார்.. ஆனுபவிப்போம் வா... ஆண்டவனுக்கு  நன்றி..’ எனத் துள்ளிக் குதித்துக் கொண்டு தன் கணவனை  இழுத்துக் கொண்டு மணல் திட்டிற்கு விரைந்தார். அனுபவிக்கப் பிறந்த பெண்.

ஜெசிபிக்கள் சுழன்று சுழன்று சேற்றையும் கற்களையும் அள்ளி அள்ளி ஓரமாகத் தள்ளின. பாதை சரியாக வெகு நேரம் பிடித்தது.  பின் வழியில் பீப்பள்கட்டில் தங்கிவிட்டு, காலை பத்ரி பயணத் தொடக்கம்.

பத்ரியி என்றால் 'இலந்தை' !   நாலாபுறமும் மலை சூழ் பகுதி! எனவே, சூரியன் மேலேறும்வரை குளிருகிறது. அதே போலவே மாலையானதும். 

வருடம் முழுவதும் கோயில் திறந்திருக்காது!  ஏப்ரல் 30 வாக்கில் திறந்து, பனிக்காலத்தில் மூடப்பட்டுவிடும். மே-ஜூனில் கூட்டம் அதிகம் இருக்கும். கோயிலில் நம்பூதிரிகள்தான் பூஜை செய்கிறார்கள். காலை நான்கரை மணிக்கு திறந்து மதியம் ஒருமணிக்கு நடை அடைக்கப்படும். பிறகு மாலை நான்கு மணிக்கு திறந்து இரவு ஒன்பதுக்கு அடைக்கிறார்கள். 

பனிக்காலத்திற்காக நடை சாத்தப்படும் பொழுது, ஏற்றப்படும் தீபம், மீண்டும் ஆறு மாதம் கழித்து திறக்கப் படும்வரை எரிந்து கொண்டிருக்கும்; அதுவரை நாரத முணி பூஜை செய்து கொண்டிருப்பார் என்று சொல்கிறார்கள். 

பனிக்காலத்தில் கோயில் மூடப்படும்பொழுது, உற்சவர் கீழே இருக்கும் ஜோஷிமட்டிற்கு அழைத்து வரப்பட்டு  அங்கிருக்கும்  வாசுதேவர் கோயிலில் எழுந்தருளச் செய்வர்.
ஜோஷிமட்டில் ஒரு நரசிம்மர் கோயில் இருக்கிறது.  நீங்கள் பேக்கேஜ் டூரில் சென்றால், ஜோஷிமட்டிற்கும், முக்கியமான ப்ரயாக்களுக்கும் அழைத்துச் செல்வார்களா என்பதி உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிடில் நேராக பத்ரியை அரைகுறையாகக் காட்டிவிட்டு திரும்ப அழைத்து வந்துவிடுவர்.  

என்னைக் கேட்டால், ரிஷிகேஷிலிருந்து தனியாக ஒரு வாகனம் அமர்த்திக் கொண்டு, பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியல் இட்டுக்கொண்டு, சாலை திறந்திருக்கும் நேரத்தையும் கணக்கில் கொண்டு, நிரலைத் தயார் செய்து கொள்வது நல்லது.  அவ்வளவு தூரம் சென்றுவிட்டு, எதையும் பார்க்காமல் திரும்ப வருவது வீண்.  அந்த வகையில் ஜோஷிமட் பார்க்க வேண்டிய ஒன்று.

பத்ரிநாதர் கோயிலின் அடியில் கங்கை ‘சில்லென’ ஓடிக் கொண்டிருக்கும்! குளிப்பதற்கு வசதியாகவும் இருக்காது; அந்தச் சில்லிப்பையும் தாங்க முடியாது. ஆனால் கொதிக்க கொதிக்க வெண்ணீர் ஊற்றுக்கள் இருக்கின்றன. நிர்வாகத்தினர் வெண்ணீரையும் தண்ணீரையும் சரிவிகிதத்தில் கலக்குமாறு செய்து, அங்குள்ள சப்த குண்டத்தில் விழுமாறு செய்துள்ளனர். அவ்விதம் மூன்று தொட்டிகள் உள்ளன! ஆனந்தமாக நீராடலாம. எடுத்தவுடன் ‘தடால்’ என தொட்டிக்குள் இறங்கிவிடாமல், கொஞ்சம் உடலை சுடுநீரின் சீதோஷ்ணத்திற்கு சில் நொடிகள் பழக்கப்படுத்திவிட்டு, பின் முழுவதுமாக இறங்க வேண்டும்.

ஆறங்கரையில் மூதாதையர்களுக்கு திதி (சிரார்த்தம்) கொடுக்கலாம். அவரவர்கள் வழக்கப்படி செய்துவைக்க ஆட்கள் இருக்கிறார்கள்.  இடையில்  'ப்ரோக்கர்கள்' அதிகம். சற்றே கவனம்,  அதிகமாக சார்ஜ் செய்வார்கள். நேரிடையாக சம்பந்தப்பட்ட ஆட்களிடம் சென்றுவிட்டால், ஓரளவு கட்டனம் குறையும்.  திதிகொடுத்தபின், பிண்டங்களை அருகிலேயே உள்ள பிரம்ம கபாலத்தில் காண்பித்துவிட்டு, பின் கங்கையில் கரைக்க வேண்டும்.

அந்த சடங்குகளை முடித்தபின்,  உடைமாற்றிக் கொண்டு, பத்ரிநாதரைத் தரிசித்தேன். ஆஹா... இதற்காகவன்றோ காத்திருந்தேன். திவ்ய தரிசனம்.

அவரை, யார் யார் எவ்விதமாகப் பார்க்கிறார்களோ அவ்விதமாகவே தோன்றுவார் என்று சொல்கிறார்கள்.  சிவனாகப் பார்த்தால்-சிவன்; பெருமாளாகப் பார்த்தால் பெருமாள்; காளியாகப் பார்த்தால் காளி.  நான் எவராகவும் பார்க்கவில்லை; எங்கும் உறை பரம்பொருளாக, உங்களுக்குள், எனக்குள், சகல ஜீவராசிகளுக்குள்ளும்,  சகல அண்ட-ப்ருமாண்ட்த்திற்குள்ளும் - அதுவாகவே இருக்கும் யூனிவர்ஸல் சக்தியாகவே பார்த்தேன்; எப்பொழுதும் போல!

பத்ரிநாதரை மிக அருகில் சென்று தரிசிக்கலாம். ‘ஜெருகண்டி’ வெளியே இழுத்துத் தள்ளிவிடுவது ஆகியவை இல்லை; மிக மரியாதையாகவே அடுத்தவருக்கு இடம்விடும்படி கேட்டுக்கொள்கிறார்கள். மறுபடியும்  தரிசிக்க வேண்டுமெனில், வெளியே உள்ள உயராமன மேடையிலிருந்தும் பார்க்கலாம்;  மிக  நல்ல முழு தரிசனம் கிடைக்கும்.எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.

நான் தங்கியிருந்த லாட்ஜின் எதிரே ஒரு விபத்து நிகழ்ந்து, லாரி ஒன்று தலைகுப்புற மண்ணில் புதைந்துவிட்டதால், சாலை சரியாகும்வரை, இருதினங்கள்  பத்ரியிலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. இதை இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு பன்முறை கோயிலுக்குச் சென்றுவந்தேன்.

அனைத்தும் பத்ரிநாதர் அருளால் செம்மையாக நடந்து முடிந்தது.

குறிப்பு:

1.     எந்த இடங்களைப் பார்க்கப் போகிறோம் என்பதை கூகுளித்துவிட்டு செல்வது நல்ல உபாயம்.

2.     பேக்கேஜ் டூராக இருப்பின், எந்த எந்த இடங்களைக் காண்பிப்பார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அனுபவமிக்க டூர் ஆபரேட்டர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

3.     கோடைகாலமாக இருப்பின், இரவில் தங்குவதாக இருந்தால் மட்டும் பத்ரிக்கு குளிருடை அவசியம். அன்று மாலையே திரும்புவதாக இருந்தால் ஒரு குல்லாவே போதும்.

4.     தேவையற்ற ல்க்கேஜ்களை ரிஷிகேஷோ அல்லது ஹரித்வாரோ எங்கிருந்து புறப்படுகிறீர்களோ, அங்கே விட்டுச் செல்லுங்கள்.

5.     மிகவும் டைட் ஷெட்யூல் போட்டுக் கொள்ளாதீர்கள். கைவசம் உபரியாக இரு தினங்களாவது வைத்துக் கொள்ளுங்கள். இயற்கை இடர்கள் அதிகம் நிகழும் இடம்.

6.     ஆதார் அட்டை அவசியம். ‘சார்தாமில்’ எந்த தாமிற்குச் சென்றாலும் ரிஷிகேஷில் கேட்பார்கள்.

7.     மருந்துகள், டார்ச் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

8.     மிக வயதானவர்களை சுமந்து செல்ல ஆட்கள் இருக்கின்றனர். தேயிலைத் தோட்டங்களில் தேயிலை பறித்துப்போட ஒரு கூடை ஒன்றை முதுகில் கட்டியிருப்பார்களே, அது போல ஒரு கூடை ஒன்றை முதுகில் கட்டி, அதனுள் பயணிகளை அமரச் செய்து,  அனாயாசமாக நடக்கிறார்கள்.

9.     ஆக்சிஜன் சற்றே குறைவு என்பதால் (பெரும்பாண்மையினருக்கு பிரச்சினையே இல்லை, வெகுசில நோயாளிகளுக்கு மட்டும்) கவனம் தேவை. வெளியில் மொபைல் எமர்ஜென்ஸி மெடிகல் கேர் வாகனங்கள், அத்தியாவசிய உபகரணங்களுடன் இருக்கின்றன.

10.  வழியெங்கும் தடையில்லா செல்போன் சிக்னல் கிடைக்காது. எனக்குத் தெரிந்து, சற்றே ‘வீக்காக்’ இருந்தாலும் பி.எஸ்.என்.எல் பெரும்பான்மையான இடங்களில் சிக்னல் கிடைக்கிறது.

 புகைப்படங்கள் : சில  படங்கள் நெட்; சில என்னடையது 














Monday, July 2, 2018

முக்திநாத்திற்கு ஒரு பயணம் – இறுதிப் பகுதி.

முதல் பகுதி லிங்க: Click here 

என்ன இந்த ஆள்? நாள் முழுவதும் அலுப்பான பயணத்தை முடித்துவிட்டு, அதி காலையிலேயே எழு என்கிறாரே.. என சலித்துக் கொண்டு உறங்கப் போனேன்.  ஆனால் பயாலஜிகல் க்ளாக் சரியாக மூன்றரைக்கு எழுப்பிவிட்டுவிட்டது!

வெளியே வந்தால், அதிகாலை நான்கிற்கே வானம்  பளீர். எதிரே வெள்ளிக் கவசமிட்டது போல, பனிச் சிகரம். சற்று நேரத்தில் சூரிய ஒளி பட்டு, தங்கம் போல ஜொலிக்கும் பாருங்கள் என்றார் ஒருவர். உண்மைதான். சூரியக் கிரணங்கள் பட்டதும் பனி மூடிய வெள்ளிச் சிகரங்கள், தங்கக் கவசம் பூட்டிக் கொண்டன.

ஜொம்சொம்மிலிருந்து முக்திநாத் கோயிலின் ராணிபாவா கிராமம், 22 கி.மீ தூரம். ஆச்சர்யமென்னவென்றால்,   இந்த இடைப்பட்ட தூரத்திற்கு அருமையான வழு வழு தார்ச்சாலை அமைத்திருக்கிறார்கள்.  தனியாகச் செல்பவர்களுக்கு மோட்டார்பைக் சவாரியும் வாடகைக்குக் கிடைக்கும்.

கோயிலிற்கு இரு கி.மீ தூரத்திற்கு முன் வண்டி நிறுத்தப்படும். அதன் பின் நடந்து செல்ல வேண்டும். முடியாதோர் குதிரையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கிராமத்தில் கடைகள் இருக்கின்றன. பெரும்பாலும் குளிர் உடைகள்தான் விற்பனை! நடக்கக் கூடிய தூரம்தான் என்பதால், குதிரை வேன்டாம். நடுவே பெரிய புத்தர் சிலை. அதைத் தாண்டி உள்ளே சென்றால், முக்திநாத் கோயில். ஆஹா... இதைக் காண்பதற்குத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன். உள்ளம் நெகிழ்ந்தது.  

கோயிலுக்கு பின் புறமாக 108 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றை வரிசையாக குழாய் போல, நந்தி வடிவில் அமைத்திருக்கிறார்கள். நாம் முதல் தீர்த்தத்தில் ஆரம்பித்து 108வது வரை தலையையும் உடலையும் காட்டிக்கொண்டே செல்ல வேண்டும். பின்னர், கோயிலுக்கு முன்புறமாக இருக்கும் பாப குண்டம் – புன்னிய குண்டம் என்ற  இரு சிறிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். அதன் பிறகு முக்தி நாதரை தரிசிக்கலாம்.

குளிர் என்றால் அப்படி ஒரு குளிர். சட்டையைக் கழற்றியதுமே உடல் நடுங்கியது! க்ளேசியரிலிருந்து உருகி, அப்படியே வரும் நீர் போல! அதில் போய் எப்படி நீராடுவது என ஒரு கணம் யோசித்தபோது, ஒரு மூதாட்டி சற்றும் தயக்கமின்றி நாராயணா..நாராயணா என ஜபித்துக் கொண்டே, நீராடிச் சென்றார். அவரின் செயலைப் பார்த்த்தும் சற்றே வெட்கமாகிவிட்டது. 

108 தீர்த்தங்களிலும் நீராடி, பாப-புன்னிய குண்டங்களிலும் நீராடி பின் நாராயணனைத் தரிசித்தேன்.  ஒரு நிமிடத்தில் உடல் இந்த குளிருக்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டுவிட்ட்து.

முக்திநாத்  105வது திவ்ய தேசமாகும்.  எட்டு அதிமுக்கிய கோயில்களில் ஒன்று.  புஷ்கர், ஸ்ரீரங்கம், பத்ரிநாத், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், நாங்குனேரி ஆகியன பிற ஏழு!

கூட்டம் அதிகமில்லை!  நிம்மதியாக ஆர அமர மெய் சிலிர்க்கும் தரிசனம் கிடைத்தது.  பெருமாளைக் கண்ட திருப்தி வெகுநாள் மனதை ஆக்கிரமித்திருக்கும்.

சூரியன் மேலேற, குளிர் குறைந்தது. பசுமையான நினைவுகளோடு, ஜீப்பில் பொக்காரா வந்தடைந்தேன்.

தில்லியிலிருந்தும், பொக்காராவிலிருந்தும் ஏராளமன டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் முக்திநாத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். தனியாகவும் செல்ல்லாம். பயமில்லை. இந்தி தெரிந்தால் போதுமானது.

கவனம்:  எல்லா இடங்களிலும், ருத்ராட்சம் விற்கிறேன், சாலிக்கிராமம் விற்கிறேன் என பலர் சூழ்ந்து கொள்வார்கள். ஒரிஜினல் சாலிக்கிராமம் தேர்ந்தெடுக்கத் தெரிந்தவர்கள் மிகக்குறைவு! சாதாரண கல்லை, ரூ 1000, 2000 எனத் தலையில் கட்டிவிடுவார்கள்.  ஒரிஜினல் போல பிளாஸ்டிக்கிலும் செய்கிறார்கள். அதே போல ருத்ராட்சமும். அவர்கள் வைத்ததுதான் விலை! 

நாராயாணா....





108 தீர்த்தம் (படம் நெட்)

கெண்டகி நதி  (நெட்) 
மூலவர் (நெட்)

பாப குண்டம் 



புண்ணிய குண்டம் 





Sunday, July 1, 2018

முக்திநாத்திற்கு ஒரு பயணம்.



காலன் வருமுன்னே, கண் பஞ்சடையுமுன்னே, பாலுண்கடைவாய்ப் படுமுன்னே, மேல்விழுந்து அழ, உற்றார் எவருமில்லாவிடினும் -  உடலைச் சுடுவதற்குள் சில இடங்களைக் காண வேண்டும் என்ற அவா வலுப்பெற, ‘முக்திநாத்’ சென்று வரத் தீர்மாணித்தேன். தலத்தின் பெயரிலேயே ‘முக்தி’இருக்கிறதே!.

‘முக்திநாத்’ புத்த மதத்தவர்கட்கும்-ஹிந்துக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது! புனிதமானது! புத்தமதத்தில் ‘சுமிக் கியட்சா’ (நூறு தீர்த்தங்கள்) என்று அழைக்கிறார்கள்.

கோயில் ஒன்றும் பிரமாண்டமானது அல்ல! புத்த ‘பக்கோடா’ ஸ்டைலில் அமைந்துள்ள சிறு கோயில்தான். ஆனால், கீர்த்தி அபரிமிதமானது!  இத்தலத்தை அடைய உடல்பலமும், மனோதிடமும் அவசியம். ‘நாராயணனை முன்னிறுத்தி-சௌகரியங்களைப் பின்னிறுத்தினால், எளிமைதான்.
சாத்தியமானால்  முக்திநாத் நாராயணனைத் தரிசிப்பது-வேறெதும் நிகழ்ந்துவிட்டால் வைகுண்டத்தில் நாராயணனைப் பார்த்துவிடுவது என தீர்மாணித்து விட்டதால்,  எல்லாவற்றையும் குதூகலத்துடன் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

சாலைவழியே, இந்தியாவில் உள்ள கோரக்பூர் சென்றடைந்தேன். இவ்விடத்திலிருந்து, நேபாள எல்லைச் சிற்றூரான, ‘சொனாலி’ சென்று, அங்கிருந்து பொக்கரா செல்வது முதல் பாதி திட்டம்.

கோராக்பூர் நெருக்கடியான நகரம். ஊரைத் தாண்டுவதற்குள் மூச்சு முட்டிப் போகிறது. சாலைவிதிகள், அவர்கள் கேள்விப்படாத ஒன்று போல! ஃப்ரீ ஃபார் ஆல்!

திட்டமிட்டபடியே, மாலைப் பொழுதில் சொனாலி சென்றடைதேன்.  சர்வதேச எல்லையாயிற்றே! சிங்கப்பூர்-மலேஷியா எல்லைச் சாவடி போல நேர்த்தியாக இல்லாவிடினும், ஓரளவிற்காவது அழகாக இருக்கும் என நினைத்ததுதான் தவறு! ஆட்டோக்களும், லாரிகளும், ரிக்ஷாக்களும், சுற்றுலாவாகனங்களும், பயணிகளும் நெருக்கியடித்துக் கொண்டு.... உஃப். கள்ளக்குறிச்சி பஸ்ஸ்டாண்ட் போல இருக்கு!  45 டிகிரி வெயில்.. பிசுபிசுப்பு.. ஜன நெருக்கடி! நேபாள பர்மிட் வாங்க முட்டிமோதும் டிரைவர்கள். 

சற்றே  விலகி,  நேபாள ‘சிம் கார்டு’ வாங்கிக் கொள்ளலாம் என சுற்றுமுற்றும் தேடினால், அந்த சந்தைக்கடை நெருக்கடியில், சிறு கூரைக்குள் இருவர் அமர்ந்துகொண்டு, ‘சிம் கார்டு 100 இந்திய ரூபாய்’ என்றனர். வாய்க்குள்  மிக்ஸரை திணித்துக்கொள்வதில் சுவரஸ்யமாய்  இருந்தனரே தவிர,  ‘டேட்டா’ எவ்வளவு என்ற  சந்தேகத்தைத் தீர்க்கவில்லை! அடுத்தவாய் மிக்ஸரை வாயில் கொட்டிக்கொள்வதற்குள், பாய்ந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டு, ‘டேட்டா உண்டா இல்லியா ...  சொல்லித் தொலையுமையா.’ என்றால், 250 எம்.பி என சொல்லிவிட்டு, சடாரென மிக்ஸரை வாயில் கவிழ்த்துக் கொண்டுவிட்டார்.

நேபாளத்திற்குள் நுழைய ‘ஆதார்’ போதும். ஆனால் சிம் கார்டு வாங்க, பாஸ்போர்ட் அல்லது எலக்ஷன் ஐ.டி, மற்றும் புகைப்படம் ஒன்று ஆகியவை தேவை. கவனம்.

ஒரு இந்திய ரூபாய்க்கு, 1.6 நேபாள ரூபாய் கிடைக்கவேண்டும்.  ஆனால் கடைகளிலும்-லாட்ஜ்களிலும் 1.2 முதல் 1.5 வரைதான் தருவார்கள். முன்னதாக நேபாள ரூபாயாக மாற்றிக் கொள்வது நல்லது. 1.2 பரவாயில்லை என்றால், நேபாளத்தின் எந்த இடத்திலும் இந்திய ரூபாயை ஏற்றுக் கொள்வார்கள்.

எல்லைக்கு அப்பாலும் சொனாலிதான். அங்கே ‘மானசரோவர்’ என்ற லாட்ஜில் தங்கினேன். சுமாரான இடம். இரவுத் தங்கல் மட்டுமே என்பதால், இதுவே போதும்.
நேபாளமெங்கிலும், ரொட்டி-சாதம்-சப்ஜி கிடைக்கும். சில மார்வாரி ஹோட்டல்களில், இட்லி தோசை கிடைக்கும்.  நேபாள நேரம் இந்திய நேரத்திற்கு 15 நிமிடம் வித்தியாசம்.

காலை எழுந்து, போக்கரா பயணம்.  அழகிய சீனரிகள் நிறைந்த மலைச் சாலைகளில் ஒன்று சொனாலி-போக்கரா சாலை. திகட்ட திகட்ட காட்சிகள். கம்பீரமாய் நிற்கும் இமயமலைத் தொடர்கள். பசுமை போர்த்திய சிகரங்கள். கற்பனைக்கும் எட்டாத மலைச் சரிவு காட்சிகள். ஆங்காங்கே சலசலக்கும் ஓடைகள். ஆறுகள். நீறுற்றுகள். ஆஹா...  நெடிய-இனிய பயணம்.  



நேபாளத்திற்குச் செல்வோர், விமானப்பயணத்தை ஒன்வேயாக வைத்துக் கொண்டு, சாலைவழிப் பயணத்தை மற்றொருவழியாகக் கொள்வது, அருமையான அனுபவத்தைக் கொடுக்கும்.

பொக்காரா செல்லும் போது மதியத்திற்கு மேலாகிவிட்டது. பொக்காரா நமது ‘ஊட்டி’ போன்ற ஒரு இடம். எப்ப மழைவரும் என கனிக்க இயலாது.  அங்கே ஊர் சுற்றிப் பார்க்க அரை நாள் போதும். ஆனால் அனுபவிக்க இரு நாட்களாவது வேண்டும். அங்கே ஒரு ஏரி (ஃபெவா லேக்) இருக்கிறது பாருங்கள்... என்னே அழகு! மயக்கும் மாலையில், சாரல் மழையில், ஏரிக்கரையில் நடப்பது சுகானுபவம். படகுச் சவாரி உண்டு! மாலை ஐந்துமணி வரைதான். இது தவிர ஏகப்பட்ட கோயில்கள். கடைத்தெருக்கள். தெருவிற்கு பத்து மசாஜ் பார்லர்கள். சைவம்தான். 

டிரெக்கிங் ஆசையுள்ளவர்களுக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள்.

அடுத்த நாள் காலை, பொக்காராவிலிருந்து, ‘ஜொம்சொம்’ என்ற இடத்திற்கு விமான டிக்கட் வாங்கியிருந்தேன். சிறிய 12 சீட்டர் விமானம்.  ஜொம்சொம்மிலிருந்துதான் முக்தியடைய வேண்டும். காத்திருந்தேன். ஆனால் விமானம் செல்லாது எனத் தகவல் வந்தது. வானிலை சரியில்லையாம். 

‘ஏன்... எல்லாமே நன்றாகத்தானே இருக்கிறது..’ என விண்ணைப் பார்த்தால், இங்கேயில்லை, ஜொம்சொம்மில் வானிலை மோசம் எனப் பதில் வந்தது. ஜொம்சொம் என்பது, முக்திநாத் கோயிலுக்குச் செல்லும் அடிவாரத்தில் உள்ள நகரம். அரை மணி நேர விமானப் பயண தூரம். ஆனால், சதா வலுவான காற்றடிக்கும் ஊர். சிறிய ரக விமானங்கள் இதைத்தாக்குப் பிடிக்காது.  எனவே, முக்திநாத் செல்பவர்கள், டைட் ஷெட்யூலில் செல்லக் கூடாது.  உபரியாக இருதினங்களாவது கைவசம் வைத்திருப்பது உசிதம்.  

மாற்று ஏற்பாடாக ஸ்கோர்பியோ ஒன்றை அமர்த்திக் கொண்டேன். எல்லாம் நல்லபடியாக இருந்தால், 12 மணி நேர சாலைப் பயணம். நிலச்சரிவுகள், வெள்ளம், காற்று போன்ற இயற்கை இடர்கள் நேரின்,  பயண நேரம் உத்திரவாதம் அல்ல! இது தவிர அரசியல் பந்த் ஏதும் நடைபெறாமல் இருக்க வேண்டும். அங்கே ‘பந்த்’ என்றால், கொழுக்கட்டை கணக்கு போல 108 மணி நேர பந்த் என்பார்கள். இப்பொழுது பொலிடிகல் ஸ்டெபிலிடி உள்ளதால், பந்த்கள் குறைவு.

ஒரு வழியாக இருதினங்களுக்கு மட்டும் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு, மீதி லக்கேஜ்களை க்ளோக் ரூமில் அடைத்துவிட்டு, முக்தினாத் நோக்கி ஸ்கோர்பியோவில் பயணப்பட்டேன்.  

‘பேணி’ என்ற  இடம் போக்ராவிலிருந்து 80 கி.மி தூரம். அது வரை சாலையென்று ஒன்று இருக்கும்.  தூக்கித் தூக்கிப் போட்டாலும், 30 கி.மீ வேகத்தில் பயணப் படலாம். ஆனால் பேணியிலிருந்து ஜொம்சொம் நகரத்திற்குச் செல்லும் வழி அபாயகரமானது.. பெரும்பாலும் சாலையென்று ஒன்று இருக்காது. கற்கள் துருத்திக் கொண்டிருக்கும், சேறும் சகதியுமான தடத்தில் செல்ல வேண்டும். 15 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல இயலாது. செங்குத்துத் தடம். த்ரில்லிங் அனுபவம். 

சிண்டு வைத்துக் கொண்டு, கடுக்கணும்-ஜீன்ஸும் அணிந்த இளைஞ டிரைவர், இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, பேசாமல் வாருங்கள் என்றார்.

'அட.... இட்ஸ் ஹேப்பனிங்க்... உண்மையாகவே முக்தினாத் சென்றுகொண்டிருக்கிறேன்', என்ற எண்ணம் குதூகலத்தை அளித்தது. கூடவே கெண்டகி நதி, சுழன்று, பருத்து ,சீறி, அமைதியாக உடன் பயணப் பட்டது. இந்த நதியில்தான் ‘சாலிக்கிராம கற்கள்’ கிடைக்கும்.

உலகிலேயே மிக ஆழமான கார்ஜ் காளி கண்டகி நதிதான். இரு மலைச் சிகரங்களுக்கிடையே உள்ள கிடுகிடு பள்ளத்தில் ஓடுகிறது இந்த நதி. 18,000 அடிக்கு மேல் ஆழம். அழகான ராட்சசி கண்டகி.  

அன்னபூர்ணா ரேஞ்ச், காஜா போன்று பல இடங்களில் சுற்றுலா வாகணங்களும், பயணிகளும் அனுமதி பெற்றாக வேண்டும்.  இவற்றை வாகன ஓட்டுனரே கவணித்துக் கொள்வார்.

வழியில் டடோபாணி  என்ற இடத்தில் மலைக்க வைக்கும் அருவி ஒன்று இருக்கிறது. கண் கொள்ளாக் காட்சி! இலங்கையில் உள்ள ராவணன் நீர்வீழ்ச்சியைவிட உயரமானது. அழகானது.

சாலையின் ஓரத்தையொட்டிச் செல்லும் வண்டிச் சக்கரத்திற்கு அப்பால், பல்லாயிரம் அடி ஆழம்.அந்தச் சாலையில் நடனமாடிக்கொண்டே சென்றது வாகணம்.  

திடீரென ஜீப் நின்றுவிட்டது. எங்கோ நிலச் சரிவு ஏற்பட்டுவிட்டதாம். ஜேசிபிக்கள்  தனது இரும்புக்கைகளைக் கொண்டு பாறைகளை அப்புறப்படுத்தியபின் தான் புறப்படஇயலும்.

மூன்று மணி நேர காத்திருப்பிற்குப்பின் ஒருவழியாக மீண்டும் புறப்பட்டோம். நான்கு சக்கரங்களையும் இயக்கும் வாகணமாதலால், புதைச்சேறுகளையும், கற்குவியல்களையும் எளிதாகக் கடக்க முடிந்தது. வழியெங்கும் ஜேசிபிக்கள் தேனீக்கள் போல இயங்கிக் கொண்டே இருக்கின்றன. சாலைக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மன்னராட்சி முடிந்து, மக்களாட்சி வந்ததால் கட்டமைப்புகள் வேகமாக நடைபெறுகிறது என்கிறார்கள்.

இருட்டிவிட்டது! சாலையெது? மலைமுகடு எது? பள்ளம் எது? நதி எது...? மின்சாரம் இல்லை. ஊர்களும் இல்லை. ஒன்றும் புரியவில்லை. டிரைவர் உண்மையிலேயே மிஸ்டர் கூல்தான். அவர்பாட்டிற்கு கீதாச்சார பாவத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென கெண்டகி நதியின் உள்ளேயே வண்டியைச் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ‘கரகரவென’ சரளைக் கற்களுக்கிடையேயும், தண்ணீருக்கிடையேயும் அரைபட்டுக்கொண்டு சென்றது சக்கரம்.  இந்த மனுஷன் எப்படிதான்  வழியைக் கண்டுபிடிக்கிறார் எனக் கேட்க விருப்பம் கொண்டு, பின் வாயை மூடிக் கொண்டேன்.

குளிர்காற்று.. கும்மிருட்டு.  தலைக்கு மேலே வெள்ளம் போனால், ஜானென்ன முழமென்ன?

இரவு மணி பத்து.. ஜொம்சொம் எப்ப வரும்?

பிடித்துக் கொண்டது  நல்ல மழை.

நல்ல வேளை.. கெண்டகி நதியில் சென்றுகொண்டிருக்கும் போது மழை இல்லை! திடீரென ஃபளேஷ் வெள்ளம் வராமலிருக்க வேண்டுமே?

ஒரு வழியாக ஜொம்சொம் ஊரை அடையும்போது மணி 11ஐத் தொட்டது.  அந்த நேரத்தில், ஏற்கனவே புக் செய்திருந்த லாட்ஜ் ஒன்றில், சுடச் சுட சப்பாத்தி-ரசம்-தயிர் கொடுத்தார்கள். தேவாமிர்தம்.

டிரிங்க்ஸும் வைத்திருக்கிறார்கள்.

டிரைவர் அறிவித்தார். ‘நாளை விடியற்காலை நாலு மணிக்கு ரெடியாக வேண்டும். நேராகக் கோயிலுக்குச் சென்று குளித்து, பின் ஸ்வாமி தரிசனம் முடித்துவிட்டு, திரும்ப லாட்ஜுக்கு வந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, போக்காரா செல்ல வேண்டும். லேட் செய்யாதீர்கள்.”

இப்பவே மணி 11... எப்ப தூங்கி, எப்படி நாலு மணிக்கு, இந்த நடுங்கும் குளிரில் தயாராவது?

ஜொம்சொம் அடிவாரத்திலிருந்து, முக்திநாத் 22 கி.மீ தூரம். 

நாலாபுறமும் தௌலகிரி மலையும், சிறிய ரன்வேயும், நில்கிரி மலையும் சூழ்ந்த ஊர் ஜொம்சொம்.

காலை எழுந்து, ராணிபுவா ஊரை அடைந்து, பின் முக்தி நாதரை தரிசித்த  விபரங்கள் அடுத்த பகுதியில்.........