Saturday, March 11, 2017

‘விருஞ்சிபுரம் – மார்க்க பந்தீஸ்வரர்’

ஒரு குடும்ப விழாவிற்கான அழைப்பிதழ் வந்தது. அனுப்பியவர் பெங்களூரில் வசிக்கிறார். விழா நடைபெறும் இடமாக அவர் குறிப்பிட்டிருந்தது ‘விருஞ்சிபுரம்’. சொந்த ஊரிலும் இல்லாமல், வாழும் இடத்திலும் இல்லாமல், இதென்ன ‘விருஞ்சிபுரம்?’

விழா நடைபெறும் விருஞ்சிபுரத்திற்குச் சென்றபொழுதுதான், அந்த தலத்தில், 'மார்க்கபந்தீஸ்வரர் -  மரகதவல்லி  திருக்கோயில் இருப்பதே தெரிந்த்து.  

தமிழ்நாட்டில் தான் எவ்வளவு கலைநயம் மிளிரும் கோயில்கள்? எந்தப் பெருமைமிகு பெரிய கோயில்களுக்கும் சளைத்ததல்ல, இத்தலம். கோயில் கோபுரமும், மூலவர் மார்க்க பந்தீஸ்வரரும், பரிவாரங்களும், மரகதவல்லியம்மனும் எவ்வளவு அழகு? இவ்வளவு நாட்களாக தரிசிக்காமல் இருந்துவிட்டாயே என என்னை நானே திட்டிக்கொள்ளும் அளவிற்கு பேரழில்.

இது  ஒரு வைப்புத் தலம்.  வேலூரிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில், 13வது கிலோ மீட்டரில் இருக்கிறது. பாலாற்றிலிருந்து சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது.  இவ்வாற்றை க்ஷீரநதி என்கிறார் கோயிலில் இருந்த ஒரு பெரியவர். (வடமொழியில் க்ஷீரம் என்றால் பால்) இறைப்பணிக்காக பாலாகவே ஓடிய நதி இது என்றார் அவர்.  பாலை விடுங்கள், தண்ணீரே இல்லை. அட...  தண்ணீர் கூட வேண்டாம். மணல் கூட இல்லை. கட்டாந்தரையாக புதர்கள் மண்டிக்கிடக்கிறது நதி.

சிவபெருமானின் தலைமுடியினைக் கண்டதாகப் பொய்யுரைத்த பிரம்மன் தண்டனை பெற்றதனால் , இவ்வூரில் சிவநாதன்-நயினா நந்தினி தம்பதிக்கு மகனாகப் பிறந்து இறைவனைப் பூஜித்தாராம். இவனுக்கு பிரம்மோபதேசம் செய்விப்பதற்கு முன்னரே தந்தை இறந்துவிட, சிவபெருமானே முதியவர் தோற்றத்தில் வந்து, தீட்சையும் உபதேசமும் செய்வித்தாராம்.பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயருண்டு. எனவே விரிஞ்சிபுரம்.  எனவேதான் , விழா நடத்த இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தத்தின் இரகசியம் புரிந்தது. 

தலவிருட்சம் ‘பெண் பனைமரம்’. ஆச்சர்யமாக இருந்தது. கோயிலின் உள்ளேயே  பிரகாரத்தில் உள்ளது இப்பனைமரம். மூலவர் சுயம்பு மூர்த்தி. பிரம்மனுக்கு (அந்த சிறுவனுக்கு) பூஜை செய்ய ஏதுவாக தலை சாய்த்து இருக்கிறாராம். பங்குனி மாதத்தில் மூலவர் மீது, சூரிய கிரணங்கள் விழும். 800 முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையான பழமையான கோயில்.

குழந்தைப்பேறு வேண்டியும், திருமண தடை நீக்கக்கோரியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

கோயில் உள்ளே, மூலவர் சன்னதிக்கு (வெளிப் பிரகாரத்தில்) நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. தூண்கள் யாவற்றிலும் கலை நயம். கும்பகோனம் ராமஸ்வாமி கோயில் தூண் சிற்பங்களை நினைவுபடுத்துகிறது. மாக்கல் போன்ற மென்மையான கற்கள் அல்ல; கடினக் கற்கள்! இதில் எப்படித்தான் இவ்வளவு நுட்பமான, நேர்த்தியான சிற்பங்களை வடித்தார்களோ? 

உண்மையில் விரிஞ்சிபுர மார்க்கபந்தீஸ்வர்ர் (வழித்துணை) கோயில் எதிர்பாரா ஆச்சர்யத்தைத் தந்த திருத்தலம். அருகில் ‘பள்ளி கொண்டா’ என்ற ஊரிலும், இரத்தினகிரி மலையிலும் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன.

வேலூர் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள். இக்கோயிலின் மதிலழகு.


 
முன் வாயில் - ராஜ கோபுரம்.

துவஜஸ்தம்பம் 




கற்பக்கிரஹத்தின் பின்புறம், கெஜப்ருஷ்ட வடிவில் 


தல விருட்சம் 

எத்தனை பேரின் பிரார்த்தனைகளோ 

சிம்ம தீர்த்த நுழைவாயில் 

மதிலழகு 

1 comment:

  1. ஆற்றங்கரை நாகரீகம் எனும் வார்த்தைகளுக்கு பொருள் மாறிக் கொண்டிருக்கிறது. மிக வேகமாய் பாலாறு களங்க படுத்தப்படுகிறது. உடன் வரலாறும் திரிக்கப்படுகிறது. வேதனை.

    ReplyDelete