Monday, March 30, 2015

திருவாடுதுறை...

காலங்கள் தோறும், வேதாகமங்கள் முதலாக, இன்று ஜக்கி வாசுதேவ் வரை ஆன்மீக விளக்கங்கள் பலரால் அளிக்கப்பட்டு வந்துள்ளன. 

நமது அதிர்ஷ்டம் என்னவென்றால், ஆன்மீக சிந்தனைகள் யாவற்றையும் ரத்தினச் சுருக்கமாக, தெளிவாக, ஆணித்தரமாக, சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வண்ணமாக, இதைவிட வேறு எவராலும் இவ்வவளவு ஆழமாக கூறிவிட இயலாத வண்ணம், தெள்ளிய தமிழில், துல்லியமாக, நயமாக, நெருக்கமான பொருளுடன் கூடிய நூல் ஒன்றினை  நாம் தமிழில் பெற்றிருப்பதுதான்.

துரதிர்ஷடம் என்னவென்றால், நமது கையில் இருப்பது என்ன வென்றே தெரியாத குருடர்களாக இருப்பது தான்.

திருமூலர் யாத்த “திருமந்திரம்” தான் அது.

இப்புத்தகத்தின் வீச்சு எந்த அளவிற்கு மக்களிடம் போய்ச் சேரவேண்டுமோ அந்த அளவிற்கு சென்றடையாத, அபாக்கியம் பிடித்தவர்கள் நாம்.
ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு திண்டாடி வருகிறோம்.

திராவிடக் கட்சிகள் செல்வாக்கு துவங்கிய காலம் தொட்டு, தமிழின் சிறப்பான சமய இலக்கியங்கள் யாவும் இருளிலேயே வைக்கப்பட்டன. 
அப்படிப்பட்ட ஒரு நூல்தான் இங்கே குறிப்பிடும் “திருமந்திரம்”.

திருமந்திரத்தையும், திவ்விய பிரபந்தத்தையும், பெரிய புராணத்தையும் புறம் தள்ளிவிட்டு எப்படி தமிழைக் கொண்டாடுகிறோம் எனப் புரியவில்லை. அதை விடுங்கள்.. அதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.

எனது பெருவிருப்ப நூலான திருமந்திரம், திருமூலர் அவர்களால், வருடத்திற்கு ஒன்றாக மூவாயிரம் வருடத்தில் எழுதிய முவாயிரம் பாடல்களைக் கொண்டது. “மூவாயிரம் வருடமா?” என கேள்வி கேட்பதைவிட மூவாயிரம் மந்திரங்களில் ஒரு நூறு மந்திரங்களப் புரிந்து கொண்டால் கூட போதுமானது எனக் கருதுகிறேன். காலம் அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

அந்த மகான் ஜீவ சமாதி அடைந்த இடம், மயிலாடுதுறையிலிருந்து (மாயூரம்) மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாடுதுறை. 

இங்குள்ள திருக்கோயிலையும், திருவாடுதுறை ஆதீனத்தையும் பிரித்துப் பார்க்க இயலாதபடி பின்னிப் பிணைந்துள்ளது வரலாறு.

இக்கோயில் கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது.

ஈசன் “ஸ்ரீ கோமுக்தீஸ்வரர்”. ஈஸ்வரி “ஸ்ரீ அதுல்ய குஜாம்பிகை”.

இங்குள்ள மகா நந்தி 14’-9” உயரமும், 11’ -3” அகலமும் கொண்ட தமிழகத்தின் மிகப் பெரிய கல் நதி நந்தி. ஸ்ரீ அணைத்தெழுந்த நாயகர், மாசிலாமணிஸ்வரர், ஸ்ரீ புத்திரத்தியாகேசர், சுப்ரமணியர், வினாயகர் சன்னதிகளும் உள்ளன.

அனைத்துச் சிற்பங்களும் பேரழகு! உற்சவ மூர்த்தங்கள் யாவரையும் ஒரு சேரப் பார்க்கலாம். ஒவ்வொன்றும் பேரழகு!

மாயவரத்திற்குப் பக்கத்தில் தானே! ஒரு முறை சென்று வாருங்களேன்.

திருமூலரின் சன்னதியில் நின்று மெய்சிலிர்ப்பதை உணருங்கள்!!

சில படங்கள் கீழே...

பெரிய கோபுரம் 


உட்கோபுரம் செல்லும் வழி 

ஸ்ரீ கோமுக்தீஸ்வரர் சன்னதி அருகே ஒரு சிற்பம்,


உட்கோபுரம் - இன்னொரு படம் 

உட்கோபுரம் 

மகா நந்தி 


திருமூலர்  சன்னதி அருகே 

திருமூலர் சன்னதி.


கோயில் அருகே ஒரு குளம் 

கோவிந்தபுரம் பண்டரிஸ்வரர் கோயில் முகப்பு 

101 நாட்கள் நடக்கும் புருஷ சுத்தி ஹோமம் 

கோபுரம் 

கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானம் 

Wednesday, March 18, 2015

பெங்களூரில்....


நேற்று, பெங்களூரில் ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நிகழ்ந்த 

கொடுமை பற்றி நண்பர் Viswanathan Managalam வருத்தப் பட்டு 

எழுதியிருந்தார். பின் வரும் கொட்டேஷனையும் குறிப்பிட்டிருந்தார்..

As far back as 1979, Justice V.R. Krishna Iyer observed in a judgment in his inimitable style: “Fearless investigation is a ‘sine qua non' of exposure of delinquent ‘greats' and if the investigative agencies tremble to probe or make public the felonies of high office, white-collar offenders in the peaks may be unruffled by the law. An independent investigative agency to be set in motion by any responsible citizen is a desideratum.”   Now, What has happened to the honest IAS officer at Bengaluru ? People of India expect an impartial probe to find out the culprits behind this death.

இந்த அவலத்திற்கு என்ன காரணம் எனவும் வினவினார்.
நமது சமுதாயமே ‘சில பண்புகளை இழந்துவிட்டது’ தான் காரணம்   (Society, as a whole, lost many morals)” எனச் சொல்லியிருந்தேன்.
நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதை எண்ணிப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.

கலாச்சாரத்தை இழந்தோம்! கலைகளை இழந்தோம்! பண்புகளை இழந்தோம்! மானுடத்தை இழந்தோம்! அதி முக்கியமாக நமது தேசப் பண்புகளை இழந்தோம். கூட்டுக் குடும்பங்களை இழந்தோம்.

இன்னும்.. இன்னும்.. எவையெல்லாம நமது தேசத்திற்கே உரித்தானவையாக இருந்ததோ, அவற்றையெல்லாம் இழந்தோம்.
200 வருட இஸ்லாமியர்கள் ஆட்சியில் கூட இவ்வளவு இழப்பு இல்லை.. ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும், அதன்  பின் வந்த ‘காங்கிரஸ்’ ஆட்சியிலும் தான் இழப்பு பிரமாண்டம்.

தற்போதைய நிலையை நினைத்தால், மூத்த தலைமுறையினருக்கு மனம் கசியும் தான். சமூக சிந்தனையற்றுப் போய், சுய நலப் பிண்டங்களாக மாறி, என் வயிறு, என் மனைவி, என் சுகம் என்று மாறிவிட்டோம்.
இப்படி கேடுகெட்ட ஜென்மங்களாக இருப்பது குறித்து நமக்கு வருத்த மேதும் இல்லை. வெட்கமும் இல்லை. இது ஒரு இழி நிலை என்ற பிரக்ஞை கூட இல்லை.

எவ்வளவு கொலைகள்?  எவ்வளவு கொள்ளைகள்? எவ்வளவு கற்பழிப்புகள்? எவ்வளவு அட்டூழியங்கள்? அனுதினமும்!
கொள்ளை எனில், முகமூடி அனிந்து கத்தியைக் காட்டி அடிப்பது மட்டும் அல்ல! ராஜாக்களும், ‘மணி’ களும், லாலுக்களும் தான். தமிழ் நாட்டில் கேட்கவே வேண்டாம்.. கொள்ளை என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியலாகி விட்டது. எவருக்கும், இந்த அவல நிலை குறித்து கோபமும் இல்லை.. போராட வேண்டும், மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. வெள்ளைக்காலர் கொள்ளைகள் சட்டத்தினால் தண்டிக்கப் படுவது அபூர்வமாகிவிட்டது.

மக்களோ, அன்றைய சாராயத்திற்கு காசு கிடைத்தால் போதும் என்ற அளவில் திருப்திப் பட்டுக் கொள்ளும் அவலம். சாரயத்திற்கான காசு எப்படி வேண்டுமானலும் வரலாம்; திருடலாம்-கொள்ளையடிக்கலாம்-ஏமாற்றலாம்-லஞ்சம் வாங்கலாம்- தன் வீட்டிலேயே தானே திருடலாம் -பஞ்சமா பாதங்கள் எதையும் செய்யலாம்.

முழுச் சமுதாயமும், இளைஞர்கள்-மாணவர்கள் உட்பட மதுவின் பிடியில்  அமுங்கிக் கிடந்தால், அவர்களிடம் என்னத்தைப் பேசுவீர்கள்?

அரசு அலுவலகங்களில் தண்டவமாடும் ‘லஞ்சம்’  ஒரு parallel அரசு போல செயல்படுகிறது.

இது தவிற ஜாதி வெறி, மதவெறி, இன வெறி, மொழி வெறி, மது வெறி, காம வெறி, பண வெறி.. என சகல வெறிகளும் நம்மை ஆட்கொண்டு விட்டன. சிந்திக்கும் திறனை முற்றாக இழந்து, மூடர்களைக் கொண்ட சமூகமாக மாறி விட்டோம்.

இது ஏதோ எதிர்மறை சிந்தனை என எண்ண வேண்டாம். நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த காலத்திலும் கெட்ட மனிதர் இருந்த எண்ணிக் கையைப் போல. இவர்கள் சக்தியின்றி ஒரு ஓரமாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தி பூத்தாற்போல், சில அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், சமூக நலத் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள், கொள்ளையர்களை ரொம்பவும் இம்சிக்காமல், “ஒரு ஓரமாக    நின்று கத்திக் கொண்டிருக்கும் வரை” நமது ‘அரசியல் தாதாக்கள்’ பொறுத்துக் கொள்வார்கள். கொஞ்சம் மீறினால்... போட்டுத் தள்ளு...

எத்தனை தாசீல்தார்கள் மீது லாரி ஏற்றப்பட்டிருக்கிறது? எத்தனை அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்? நமக்கு அவர்களைப் பற்றி கவலையேதும் உண்டா?

அதுதான் தற்போது பெங்களூரிலும்...

இவற்றை, நாமும் வெறும் செய்தியாகப் படித்துவிட்டு, அன்றாடக் கவலையான நமீதாவின் மார்பை வேடிக்கை பார்க்க கிளம்பிவிடுவோம்.. 

நமக்கு பெண்கள் என்றாலே வெறும் உடல்தானே? சை...

இவற்றையெல்லாம் கொஞ்சமும் மாற்ற முடியாதா?
எங்கே தவறிழைத்தோம்?

நாம் நமது பாரம்பர்ய கல்வி முறையினை இழந்ததில் ஆரம்பித்தது கோளாறு. பாரம்பர்ய கல்வி எனில், திண்ணைப் பள்ளிகளைச் சொல்லவில்லை. நமது கலாச்சாரத்தினை கற்றுக் கொடுக்கும் கல்வியினை.

ஆங்கிலேயர்கள், பியூன் வேலைக்கும், கிளார்க் வேலைக்கும் கொண்டுவந்த கல்வியைத்தானே இன்னமும் கடைப்பிடிக்கிறோம்? மனிதப் பண்புகள், குடும்ப மேன்மைகள் (Values of family) குறித்து எங்கே கற்கிறோம்?

நம் நாட்டைப் போல வெகு வேகமாக அடையாளங்களை இழந்து, கன்ஸ்யூமரித்திலும் - புலன் இன்பத்திலும் திளைக்கும் நாடு வேறு எங்கும் பார்க்க முடியாது. இத்தனைக்கும் மிகப் பெரிய பாரம்பர்யம் கொண்ட நாடு நமது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் சில வெள்ளைக்காரர்கள் எழுதிய சில புத்தகங்களைப் படித்துப் பாருங்கள். நமது உணவு-குடும்பக்-கலாச்சாரம்-கலைகள் குறித்து வியந்து எழுதியிருக்கிறார்கள். இவை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன.

புரிந்து கொள்ள வேன்டும்...சமூகத்தில் சில செக்ஷன்கள், என்றென்றும் மாற்ற முடியாத பண்புகளைக் கொண்டதாக இருப்பது சமுதாய தேவை.. ஆசிரியர்கள்-நீதிபதிகள்-வக்கீல்கள் - மத குருமார்கள்-வியாபாரிகள்-ஆட்சி அதிகாரம் உடையோர் ஆகியோர்களே அவர்கள்.

நமது தர்மம், மேலே குறிப்பிட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் குறித்து விரிவாகவும்-கண்டிப்புடனும் பேசியுள்ளன. ஏனெனில் இவர்கள்தான் நாட்டை உருவாக்குபவர்கள்.

ஆனால், இந்த பிரிவினரின் தரம் தற்போது எப்படி இருக்கிறது என்பதை விளக்கவும் வேண்டுமா? தேசத்திற்கு வழிகாட்டி, தலைமுறையினை உருவாக்கும் நபர்களே கேவலமாக இருக்கும் பொழுது, நாடு எப்படி உருப்படும்?

இனி, நாம் நமது பாதைக்கு திரும்புவது, மிக..மிக அசாத்தியமான காரியம்.
அவ்வளவு தூரம் பின் நோக்கி சென்றுவிட்டோம்.

கொஞ்சம் சரியாகப் பேசக்கூடிய சில அமைப்புகளும் கூட செக்டேரியன் போக்கில் மாட்டிக் கொண்டுவிட்டன..

காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஒரு வேளை நமது பேராசையின் விளைவுகளைப் பொறுக்காமல், இயற்கையோ கடவுளோ சீறியெழுந்து மனித குலத்தையே அழித்தால்தான் திருந்துவோம் போல...



Tuesday, March 17, 2015

கோட்டக்கல் வைத்தியம் – 2


சென்ற கட்டுரையில்,  கோட்டக்கல் ஊரைப்பற்றி க் குறிப்பிட்டுவிட்டு, வைத்திய முறைகளை பிறகு எழுதுவதாகச் சொல்லியிருந்தேன்.

அல்லோபதி (ஆங்கில மருத்துவம்), பெரும்பாலும், எங்கு நோய் இருக்கிறதோ, அந்த பகுதியை நோண்டும். கழுத்து வலி என்றால், கழுத்தை ஸ்கேன் செய். தோலில் நோய் என்றால் தோலுக்கான மருந்து. ஆனால் ஆயுர்வேதா அப்படி அல்ல! ஜீரண மண்டலத்தில் கோளாறு இருந்தால் தோல்வியாதி வரும் என்கிறது.

ஆயுர்வேதத்தின் அடிப்படை என்னவெனில், நோய்கள் அனைத்தும், வாத-பித்த-கப தோஷங்களினால் வருவதுதான். இவை கூடினாலோ, குறைந்தாலோ அதன் தன்மைக்கு ஏற்ப வியாதிகள் வரும். பஞ்ச பூதங்கள் யாவும் உடலில், மூன்று தோஷங்கள், ஏழு தாதுக்கள், மூன்று மலங்கள் என வெளிப்படுகின்றன  எனச் சொல்லுகிறது.

கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலை என்பது, ஆயுர்வேதத்தின் அடிப்படையில் இயங்கும் மருத்துவ மணை. 1902 –ஆம் ஆண்டு திரு. பி.எஸ் வாரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. நூறு ஆண்டுகளையும் தாண்டி நல்ல முறையில் இயங்கிவருகிறது இம்மருத்துவ மணைஇங்கே, நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தாலும், 2000 பேர் பணி புரிந்தாலும், ‘அப்பாயின்மென்ட்’ பெறவே மாதங்கள் ஆகும். வெளி நாட்டினர் கனிசமாக வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து. வட நாட்டவரும் அதிகம். தமிழர்கள் மிகக் குறைந்த அளவில் வருகிறார்கள்.

இந்த மருத்துவ மனைக்கென தனியாக மருந்து ஃபேக்டரியே இருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட மருந்துகளை இவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். தேவையான மூலிகைகளை, அவர்களுக்கு உரிமையான பல மூலிகைப் பண்ணைகளில் பயிர் செய்து கொள்கிறார்கள். தரத்தினை உத்தரவாதப் படுத்திக் கொள்கிறார்கள். தேவைப்படின், வெளிநாட்டிலிருந்தும் மூலிகைகளை இறக்குமதி செய்து கொள்கிறார்கள்.

புற நோயாளிகள், உள் நோயாளிகள் என இருபிரிவினருக்கும் வைத்தியம் உண்டு.

புற நோயாளிகளுக்கு, எல்லாவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளித்த போதிலும், உள் நோயாளிகளாக வருபவர்களில், கை கால் இயக்கம் குறைந்தவர்கள் அல்லது இயக்கம் இல்லாதவர்கள், பார்கின்ஸன் டிசீஸினால் பாதிக்கப்பட்டோர், இடுப்புவலி – கழுத்துவலி மிகுந்தவர்கள், பக்கவாத நோயால் இயக்கம் இழந்தவர்கள் ஆகியோர்தான் அதிகம்.

மிச்ச விவரங்களை விக்கிபீடியாவிலோ அல்லது அவர்களது வலைப் பக்கத்திலோ படித்துக் கொள்ளலாம்.

இங்கே, உடலின் வெளிப்புற சிகிச்சையாக பிழிச்சல், சிரோதாரா, கிழி, நஸ்யம், நவரகிழி போன்ற ஏராள வகை முறைகளும், உள்ளுக்கு சாப்பிட பல் வேறு வகைப்பட்ட மருந்துகளும் தரப்படுகின்றன. இதுதவிர, ஃபிஸியோதெரப்பி, யோகா வகுப்புகளும் உண்டு.

நான் இங்கு உள்நோயாளியாக வந்து சேர்ந்து கொண்டதன் நோக்கம், எனது வெகுவருட சினேகிதர்களான கழுத்துவலி, முதுகுவலி ஆகியவற்றிற்கும், திடீர்-திடீர் மயக்கம் மற்றும் கை-கால் விரல்களில் மாளாத எரிச்சல் ஆகியவற்றிற்குமாகத்தான்.

நான் மேற்கொண்ட சிகிச்சைகளைப் பார்ப்போம்.

முதல் சிகிச்சை கழுத்து வலிக்காக (இது மற்ற நோய்களையும் குணப் படுத்தும்):

சிரோ தாரா.

சிரோ எனில் தலை. தாரா எனில் ஒழுக்கு.

வட நாட்டில், சிவலிங்கத்தில் மேலே  ஒரு பாத்திரத்தைக் கட்டி, அதிலிருந்து, பாலோ அல்லது நீரோ லிங்கத்தின் மேல், சதா விழும்படி செய்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள் தானே? அதே போல, நோயாளியை மல்லாக்க படுக்க வைத்து, நெற்றிக்கு நேர் மேலாக ஒரு கலயத்தைக் கட்டி, அதில் மூலிகை எண்ணெய் ஒன்றைக் கொட்டி, ஒரே சீராக எண்ணெய் நெற்றியில் விழும்படி செய்கிறார்கள். ஒருவர் கலயத்தில் எண்ணெய் தீரத் தீர கொட்டிக் கொண்டே இருக்கிறார். மற்றொருவர் நெற்றியின் கிழக்காகவும் மேற்காகவும் எண்ணெய் படும்படி கலயத்தை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். நோயைப் பொறுத்து எண்ணெய் மாறுபடும். 

இந்த சிகிச்சை, அரை மணி முதல் முக்கால் மணி வரை செய்யப் படுகிறது. இது செர்வைகல் ஸ்பாண்டிலெடிஸுக்கு ஏற்ற மருத்துவம்.
நெற்றியில் எண்ணெய் கொட்டினால், கழுத்து வலி எப்படித் தீரும் என்ற என் பாமரத்தனமான சந்தேகத்தைக் கேட்டே விட்டேன்.

அவர்கள் சிரித்துக் கொண்டே, ‘உடலில், பித்த-வாத-கப தோஷங்களால் ஏற்பட்ட கழிவுகளை, எங்களது இந்த எண்ணெய் சிகிச்சை, ஜீரண மண்டலத்திற்கு கடத்திவிடும். அந்த கழிவுகள், இயற்கையான முறையிலோ அல்லது எனீமா மூலமாகவோ வெளியேறிவிடும். நச்சு வெளியேறிவிட்டால் நோய் தானாக குணமாகும்” என்றனர்.

இந்த சிகிச்சை 7 நாட்கள் நடை பெற்றது.

பிழிச்சல்:
                                                                                                  
சிரோ தாரா நடக்கும் பொழுதே, உடல் முழுவதும் சூடான எண்ணெய்

ஒன்றினை, கையில் ஒரு சிறு துணியை வைத்துக் கொண்டு இரண்டு நபர்கள் உடலின் முன்புறமும் பின்புறமும் தேய்த்து விடுகின்றனர். (இந்த எண்ணையும் வியாதிக்குத்  தகுந்த மாதிரி  தேர்ந்தெடுக்கப்படும்) இந்த பிழிச்சல் சிகிச்சை 

ஒருமணி நேரம் வரை நீடிக்கும். இந்த சிகிச்சை முறை ஏழு நாட்கள் நடந்தது.

கிழி

கிழி என்றால் ‘பொட்டலம்’ அல்லது முடிச்சு என்று வைத்துக் கொள்ளுங்கள் (பொற்கிழி கேள்விப்பட்டிருக்கிறீகளா?)

உடல் முழுவதும் ஒரு சூடான மூலிகை எண்ணை ஒன்றினைத் தடவிவிட்டு, பின் மூலிகை இலைகளை பொட்டலமாக துணி முடிச்சில் கட்டி, இந்த மூலிகைக் கிழியையும் சூடாக எண்ணையில் வாட்டி-வாட்டி, உடலின் முன்னும் பின்னும் மஸாஜ் செய்து கொண்டே இருக்கிறார்கள். இதுவும் ஒரு மணி நேரம் நீடிக்கிறது. இது நடக்கும் பொழுதே, தலையில் அரேபிய ஷேக் மாதிரி ஒரு துணியைக் கட்டி, அதைச் சுற்றி, டையிங் யூனிட்டில் ரிங் அடிப்பது போல, துணியால் ஒரு கட்டு கட்டி, ஒரு எண்ணையை கொட்டி தடவிவிடுகிறார்கள். உடலில் செய்யப்படும் ‘இலைக்கிழி’ மஸாஜ் ஒருமணி நேரம் முடியும்வரை, இந்த அரபு ஷேக் வேஷமும் இருக்கும்.

இந்த சிகிச்சை 14 நாட்கள் நடந்தது.

நஸ்யம்:

இதில் பல வகை உண்டு. இதன் பலன் அபாரம். இதனால் தீரும் வியாதிகளின் பட்டியலைக் கேட்டால் தலை சுற்றும். அவ்வளவு தீவீரமான முறை இது. அது இருக்கட்டும்.

எனக்கு பரிந்துரைக்கப்பட்ட நஸ்யத்தின் படி, முகத்தை, நல்ல சூடான வென்னீரில் முக்கி எடுத்த துண்டால் பலமுறை துடைத்தபின் (உடல் சூடாக இருக்கும் பொழுது தான் நஸ்யம் மேற்கொள்ள வேண்டும்), ஒவ்வொரு மூக்குத் துவாரத்தினுள்ளும், எண்ணெய் அல்லது நெய்யின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, மூலிகை கலந்த திரவத்தினை சில துளிகள் விடுவது.

இந்த முறை ஏழு நாள் நடந்தது.

சினேகவஸ்தி-கஷாய வஸ்தி:

முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா? உடலில் டி-டாக்ஸ் செய்யப்பட்ட கழுவுகள் யாவும் ஜீரண மண்டலத்திற்கு அனுப்பப்படும் என்று. அவ்விதம் அனுப்பப்பட்ட கழிவுகளை வெளியேற்ற செய்யப்படும் ‘எனிமா’ வுக்குத் தான் சினேகவஸ்தி மற்றும் கஷாய வஸ்தி என்று பெயர்.

எண்ணெய் அல்லது நெய்யினை அடிப்படையாகக் கொண்ட எனிமாவுக்கு சினேகவஸ்தி என்றும், மூலிகைக் கஷாயத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப் படுவது கஷாய வஸ்தி என்றும் பெயர் பெறும். சுருக்கமாகச் சொன்னால், பெருங்குடல் மற்றும் மற்றும் மலக்குடலை சுத்திகரிக்கின்றனர்.

எனக்கு சினேக வஸ்தி நான்கு நாட்களும், கஷாய வஸ்தி மூன்று நாட்களும் செய்யப்பட்டன.

பிரஷ்டோவ(ர்)த்தி:

ஏதோ ஊதுவர்த்தி வியாபாரம் போல இருக்கிறதல்லவா?
அந்த காலத்தில், அப்பளத்திற்கு மாவு பிசைந்திருப்பதைப் பார்த்திருக் கிறீர்களா? அதே

அரைக்கிலோ உளத்தமாவை பிசைகிறார்கள்.

பிசைந்த மாவை (வடை செய்யும் ரெசிபி என எண்ணிவிடாதீர்கள்), மண்ணுளிப் பாம்பு கனத்திற்கு உருட்டி, மண்ணுளிப்பாம்பு சுருண்டு கிடப்பது போலவே, இடுப்பிலோ, கழுத்திலோ அல்லது எங்கு வலிக்கிறதோ அங்கு, சுழற்றி வைக்கிறார்கள். இந்த உளுந்து மாவு அணைக்குள்ளாக, கையோடு கொண்டு வந்திருக்கும் ஹீட்டரில் ஒரு ஸ்பெஷல் மூலிகை எண்ணையை சூடுபடுத்தி-சூடுபடுத்தி உளுந்து அணை நிரம்பும் அளவிற்கு கொட்டுகிறார்கள்! சூடு ஆற-ஆற மீண்டும் சூடுபடுத்தி கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு கழுத்து-இடுப்பு என இரு இடங்களிலும் எண்ணெய் அணை.

தலையை கிலையை ஆட்டி வைத்தீர்களானால் எண்ணெய் அபிஷேகம் ஆகிவிடும். எச்சரிக்கை.

பேசாமல் கையை காலை ஆட்டாமல் இரு என்றாலே, அப்பொழுதான் எங்கேயாவது அரிக்கும், மரத்துப் போகும், மூக்கு நுனியில் ஈ உட்காரும். காலை ஆட்ட வேண்டும் போல இருக்கும்.

குப்புறவும் படுத்துக் கொண்டு, தலையையும் தாங்கிப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, இடுப்பிலும் கழுத்திலும் உளுந்து அணைகளைக் கட்டி, அதில் சூடான எண்ணையையும் விட்டு, ஆட்டினாயோ தெரியும் சேதி என்று மிரட்டினால்.... ஆஹா.. என்னே பிராண சங்கடம்!

இது முக்கால் மணி நேரம் நீடிக்கும்.

நவர கிழி:

ஆஹா.. நவரத்தினங்களைக் கொண்டு ஏதோ கிழிக்கப் போகிறார்கள் என ஆசைப்பட வேண்டாம்.நவரை என்று ஒரு ஸ்பெஷல் அரிசி. அதைப் பால் மற்றும் சில மூலிகைகளில் சேர்த்து வேகவைத்து, கிட்டத்தட்ட கூழாக்கி, அதை ஒருகிழியில் போட்டு கட்டி, உடல் முழுவதும் முன்னும் பின்னுமாக நான்கு பேர்கள் தேயோ தேய் என்று தேய்க்கிறார்கள். சூடு ஆற..ஆற, ஐந்தாம் நபர், கிழிகளை பாலில் சூடு செய்து கொடுத்துக் *கொண்டே இருபார் – தேய்ப்பதற்காக! இந்த சிகிச்சை ஒரு மணி நேரம்.

கூடவே, முன்பு சொன்ன, தலையில் அரபு ஷேக் அலங்காரத்தில் எண்ணெய்க் காப்பும் உண்டு.

இந்த நவர காப்பு முடிந்ததும் வரும் பாருங்கள் ஒரு தூக்கம்.. அடாடா.. சொக்கும்!

இந்த சிகிச்சை உற்சவம் ஒரு ஐந்து நாள் அரங்கேறியது.

ஒரு வழியாக இருபத்தைந்து நாள் உற்சவம் (சிகிச்சை) முடியப்போகிறது. இந்த வார இறுதியில் கடலூர் வந்து சேர்ந்துவிடலாம் எனத் திட்டம்.

வீடு திரும்பும் போதுகட்டுசாதக் கூடைபோல மருந்துக் கூடை (follow up treatment) ஒன்று தருவார்கள். ஒரு மாதத்திற்கான மருந்து. மேலும் தேவைப்படின்ஆன்லைனில், கன்ஸல்டேஷன் பேரில், கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

அதெல்லாம் சரி.... எவ்வளவு செலவாகும் என்கிறீர்களா? அது நாள் ஒன்றுக்கு 2000-முதல் ரூ4000 வரை, நீங்கள் தங்கியிருக்கும் அறையினைப் பொறுத்து அமையும். எந்த ரூமில் தங்கினாலும் சிகிச்சையின் தரத்தில் வேறுபாடு இல்லை.

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மருத்துவமணையின் மருத்துவ ஊழியர்கள் (Doctors as well as Para Medical Staff) அனைவரும், மிகவும் தன்மையாக, அனுசரிப்பாக, நிதானமாக, மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள்.  நான் நிர்வாக அலுவலர்களைச் செல்லவில்லை.

எல்லாம் சரிதான்.. வியாதி குணமாகிவிட்டதா என்பது தானே ஆதாரமான கேள்வி?

குணமாகும் அறிகுறிகள் தெரிந்தாலும், முழுவதும் தெரிய ஒருமாதமாவது ஆகும் என்கிறார்கள்.   நேரமும்-பணமும் செலவழித்தாகி விட்டது. நல்லதே நடக்கும் என நம்புவோம்.

(என்போன்ற சங்கோஜிகளுக்கு, மஸாஜின் பொழுது, முதல் ஒரு வாரம் மிகவும் லஜ்ஜையாக இருக்கும். என்ன செய்வது? கண்களை இருக்க மூடிக்கொள்ள வெண்டியது தான். பிறகு பழகிவிடும்.)

(புகைப்படங்கள் உதவி  நெட்.)

Saturday, March 7, 2015

முதியோர்....


பொருளாதார ரீதியில் பல்வகைப்பட்ட நபர்களுக்கு ஏற்றாற் போலசமீபகாலங்களில், முதியோர்களுக்காக, நாட்டில் பல்வேறு இடங்களிலும்,  முதியோர் / அனாதை இல்லங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இலவசம் முதல் ஸ்டார் அந்துஸ்துள்ள ஹோம் வரை கிடைக்கின்றன.

சில தலைமுறைகளுக்கு முன்னர் கூட, முதியவர்கள் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. மாறாக வரமாகவே இருந்தனர். குழந்தைகளுக்கு வரும் பிணிகளுக்கான நிவாரணம் முதல், பயிர்களுக்கு வரும் நோய்வரை அவர்களிடம் ஒரு தீர்வு இருக்கும். குடும்ப-மத சடங்குகளிலும் கூட, வழிகாட்டிக் கொண்டிருந்தனர். கூட்டுக் குடும்ப முறை சிதைந்தபின், முதியோர்கள், அடுத்த தலைமுறையினருகு பாராமாக மாறிவிட்டனர்.

இந்த பிரச்சினை
, பொருளாதாரத்தில் உயர்தரத்தவர்களிடமும், தாழ்ந்தவர்களிடமும் இல்லை. காரணம் உங்களுக்கே தெரியும். அதிகம் பாதிக்கப்படுபவர், மத்திய தர வர்க்கத்தினர் தான். சென்டிமென்ட்களில் சிக்கிக் கொள்கின்றனர்.

இந்த தலைமுறையின் போக்கில் பார்த்தால்
, மத்திய வர்க்க பெரியவர்கள், இவர்களுக்கு ஒரு இம்சை. இவர்கள் சீக்கிரம் இறந்து போய்விட வேண்டும் அல்லது எங்கேயாவது கண்காணாமல் சென்றுவிட வேண்டும் என விரும்புகிறார்கள்.

நகரத்தின்
இண்டு-இடுக்கு அபார்ட்மென்ட்களில், ஒரு அல்லது இரு அறைகள் கொண்ட வீடுகளில் அவர்களே, குழந்தைகளோடு நெருக்கியடித்து வாழ்ந்து கொண்டு, கன்ஸ்யூமரிஸம் வழங்கும் பல்வேறுவகையான பொருட்களால்  வீட்டை நிரப்பிக்கொள்ளும் பொழுது, பெரியவர்களுக்கும், உறவுகளுக்கும் இடம் இல்லாமல் போய்விடுகிறது.

இக்காலத்தில் எந்தப் பொருளை வேண்டாம் என ஒதுக்குவீர்கள்?
குழந்தைகளுக்கு தனியறை என்பது பல்வேறு காரணங்களை உத்தேசித்து, அவசியமாகிறது.


இரண்டாவது முக்கியமான இடர், தலைமுறை இடைவெளி. முன்பெல்லாம் கூட, தலைமுறைகள் ஒரே இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர் தான். ஆனால் இந்த அளவு தலை முறை இடைவெளி எந்தக் காலத்திலும் இல்லை. காலை எழுந்து முதல் - காஃபி அருந்துவதில் துவங்கி இரவு படுக்கும் வரை, குடும்பத்தில் எத்தனையோ நிகழ்ச்சி நிரல்கள்... அத்தனையிலும் இரு தலைமுறையினருக்கும் தீராத முரண்பாடுகள். இதுவே சரி... இல்லை அதுவே சரி... எவரும் விட்டுக்கொடுப்பதாகக்  காணோம். இருவருக்கும் ஈகோ .

உணவு முதல்
, டி.வி வரை அனைத்துமே, சண்டைக்கான களமாகி விடுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில், டி.வியின் சப்தம் குறித்தே அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை தினசரி

டுக்கு வீடுகளில், சம்பந்தமே இல்லாத ஒரு அணுகுமுறையோடு, இரு தலைமுறைகளே சேர்ந்து வாழ இயலாத நிலையில், மூன்று தலைமுறைகள் (தாத்தா பாட்டி - மகன் - பேர பேத்திகள் ) சேர்ந்து வாழ்வது மிகக் கடினம். இதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இது குறித்து, பெரியவர்கள் இனியும் புலம்ப வேண்டியது இல்லை; சுய இரக்கம் கொள்ளவும் தேவையில்லை!  இத்தகைய அணுகுமுறை சரியா அல்லது தவறா என்று விவாதிக்க வேண்டாம். எப்படி இருந்தாலும் இதுதான் எதார்த்தம். விவாதம் சூழலை மாற்றாது; எனவே நிலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள். பின்னர் மனது தானாக சமாதானம் ஆகிவிடும்.

அரவணைக்க வேண்டியவர்களே, முதியோர்களை, அக - புறக் காரணிகளால், வெறுப்புடன் நோக்கும் பொழுது, முதியோர் இல்லங்களை நாடுவதில் தவறில்லை என்றுதான் கருதுகிறேன். துரத்தப் படுவதைக் காட்டிலும் வெளியேறுவது கௌரவம் அல்லவா?
அங்கே (இல்லங்களில்), உங்கள் வயதுக்கேற்ற நன்பர்கள் கிடைக்கக் கூடும்.. ஏதோ ஒரு சாப்பாடு கிடைத்துவிடும். நல்ல ஹோம்களாக இருந்தால், மருத்துவ வசதியும் இருக்கக் கூடும். புத்தகங்கள் இருக்கும். அங்கே தம்பதியாரகக் கூட தங்கிக் கொள்ளலாம். 

என்போன்ற தனியாளருக்கும் அங்கே இடம் இருக்கிறது. உங்களுக்கான ‘ஸ்பேஸ்’ கிடைக்கிறது என்பது முக்கியம் அல்லவா?

குடும்பத்தில்,  உங்களை அனுமதித்தால் இருந்து கொள்ளுங்கள். இல்லாவிடில்  உங்கள் குழந்தைகள் உங்களைத் துரத்துவதற்கு முன்னரே, அவர்கள் நிலை உணர்ந்து, காலத்தினைக் கருத்தில் கொண்டு, கௌரவமாக ஒரு நல்ல ஹோமாகத் தேடிக் கொள்வது உத்தமம்.

என்ன? அவ்வப்பொழுது உங்கள் குழந்தைகளை / பேர-பேத்திகளைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றலாம்.

யாதும் ஊரே .. யாவரும் கேளிர் – இதைக் கைக்கொள்ள வேண்டியதுதான்.

       (சமீபத்ய நிகழ்வு ஒன்று இவ்விதம் யோசிக்கத் தூண்டியது)