Friday, June 13, 2014

இரவு முடிந்துவிடும்...(குறுங்கதை)

இரவு முடிந்துவிடும்...

மாலை நான்கு மணி. ஆட்டோக்களும், வேன்களும் பள்ளியிலிருந்து அள்ளிக் கொண்டுவந்த பிள்ளைகளை ‘அலமேலு அபார்ட்மென்ட்’ வாசலில் உதிர்த்துவிட்டு, அவசரம் அவசரமாக திரும்பிக்  கொண்டிருந்தன.

ஏராளமான கால்களையும், கொம்புகளையும், துதிக்கைகளையும் வைத்துக் கொண்டிருக்கும் ராட்சத விலங்கு போல, மேற்கிலிருந்து, ஒரு பிரம்மாண்டமான மழைமேகம், நகர்ந்து வந்து கொண்டிருந்தது!  அன்று முழுவதும் வறுத்தெடுத்த வெயிலைனைக் கண்டு, மேகங்கள் கடும் கோபமுற்றிருந்தன போலும். அவ்வளவு கரு மேகங்கள் திரண்டு வந்து கொண்டிருந்தன.

திடீரென வானிலை மாறியது. புழுதி பறக்க, அவேசமாக சுழன்றடித்தது. காற்று. சுழலில்  குளுமை ஏறியது.

‘அபார்ட்மென்ட்’ ன் மூன்றாம் மாடியில், படுக்கையறையில், கட்டிலின் நடுவே, முழங்கால்களுக்கிடையே முகத்தை புதைத்து, கைகளால் கால்களை கட்டிக் கொண்டு, வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அனு.

கோடை மழைத் தூரல்கள் அவேசத்துடன், வெக்கையை பழிதீர்த்துக் கொள்ள தீர்மானித்தது போல, வெறி கொண்டு ‘ஓ வென்ற இறைச்சலுடன் இறங்கியது. ஐந்தாவது மாடிக்கு மேல் மொட்டைமாடியில் போட்டிருந்த தகர ஷெட்கள், மழையின் அடி தாங்காது பித்து பிடித்தது போல சப்தமிடுவது, அனுவின் பெட் ரூமில் எதிரொலித்தது. பெரும் ஓசையுடன், நெஞ்சு கிடுகிடுக்க, இடைவிடாது பயமுறுத்தும் இடிகள்.

இந்த களேபரமான மழையை, எங்கோ டி.வி யில் பெய்யும் மழையைப் பார்ப்பது போல, சலனமற்று, எதைப் பார்க்கிறோம் என்ற இலக்கின்றி,, ஜன்னல்னூடே, மழையை ஊடுருவிப் வெறித்துக் கொண்டிருக்கிறாள் அனு. இப்படித்தான் இருக்கிறாள் கொஞ்ச நாட்களாக! பேசுவது, நடப்பது, அலுவலகம் செல்வது எல்லாம் முடுக்கி விடப்பட்ட பொம்மை போல. ஈர்ப்பின்றி, ஈடுபாடின்றி வெறுமைக்கு பிறந்தவள் போல நடந்து கொள்கிறாள்.

எதிர் ஃப்ளாட்டில் இருக்கும் வத்ஸலா சொல்லி சொல்லி மாய்ந்து போவாள். “உனக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் டீ! கடவுளுக்கு கண் இல்லை என்பது, சரிதான் போல. எப்படி இருப்ப டீ நீ!  நீ இருக்கும் இடமே கலகலப்பாகிவிடுமே! இப்படி தனியே,  நடைப் பிணமாக இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போற? பழையபடி கொஞ்சம் பேசு, சிரி டீ! அழுதாவது தீர்த்துவிடு. இப்படியே கல்லு மாதிரி ஏன் இருக்கே?’

மௌனம்தான் அனுவிடமிருந்து பதிலாக வரும்


ஆரம்ப ஆவேசம் தனிந்து இப்பொழுது சீராக,  நின்று நிதானமாக பெய்யத் துவங்கியிருந்தது மழை.

நெட்லானை மீறி, முகத்தில் வந்து விழுந்த மழைத்துளி ஒன்றினை ஒற்றி எடுத்தாள் அனு. விரல் நுனியில் எடுத்த துளியை கண்களில் தெளித்துக் கொண்டாள்.

மழைத்துளி ஒவ்வொன்றும் மேகத்தை விட்டு புறப்படும் பொழுது என்ன நினைத்திருக்கும்? எங்கே, எப்பொழுது, எப்படி விழப்போகிறோம் என்பது அவற்றிற்குத் தெரியுமா? வெளியே கவணித்தாள். வானிலிருந்து ஈர்க்கு ஈர்க்காக கீழே இறங்கும் குச்சிகளாகத் தெரிந்தனவேயன்றி, துளிகள் எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை. மழைத் துளிகளுக்காக பரிதாபப் பட்டாள். எவ்வளவு நிமிட வாழ்க்கை அவற்றிற்கு? மேகத்தை விட்டு விலகி, தரையில் மோதி கரையும் வரைதானே அவற்றின் வாழ்வு? எங்கே விழப்போகிறோம் என்பது தெரியாத கண நேர வாழ்வு! சாக்கடையிலா? ஏரியிலா? குளத்திலா? எங்கு சங்கமம்? தெரியாது. இல்லை கீழே விழும்போதே ஆவியாகிவிடுமா? அதுவும் தெரியாது.

நமது வாழ்க்கை கூட அப்படித்தானே? புறப்பட்ட நொடிதொட்டு மண்ணில் புதையும் வரை   நீடிக்கும் கணங்களே, நமக்கும் - மழைக்கும் வாழ்க்கை! அதற்குப் பின் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? தாயிடமிருந்து புறப்பட்டுவிட்டேன்-எந்தக் கணம் மண்ணில் புதைவேன்? சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.


சென்ற வாரம் வத்ஸலா, கிட்டத்தட்ட, அனுவை மிரட்டி, சைக்காடிரிஸ்டிடம் அழைத்துச் சென்றாள். அங்கே, கேள்வி மேல் கேள்விகள். எதை பேச அஞ்சுகிறாளோ, எதைப் பார்த்தால் பயப்படுகிறாளோ அவற்றைப்பற்றியே  கேட்டார் டாக்டர். பாதி கேள்விகளுக்கு வத்ஸலாவே பதில் சொல்லிவிட்டாள்.  ஒரு கட்டத்தில் வெறி கொண்டு கத்த ஆரம்பித்து விட்டாள் அனு.

“.....வேண்டாம்... எனக்கு எதுவும் வேண்டாம். ஆஸ்பத்திரியைப் பார்த்தாலே பயமாய் இருக்கிறது. ஆம்புலன்ஸ் சப்தத்தைக் கேட்டால் பயமாய் இருக்கிறது. மாத்திரையைப் பார்த்தால் பயமாய் இருக்கிறது... ஆப்பிளைப் பார்த்தால் கூட ஆஸ்பத்திரி நினைவுதான் வருகிறது!  எதுவும் பிடிக்கவில்லை! எனக்கு எதுவும் வேண்டாம்.. எந்த கவுன்ஸிலிங்கும் வேண்டாம்....”

பொறுமையாக கேட்டுக் கொண்டார் சைக்காடிரிஸ்ட். 

“பாருங்கம்மா... உங்களுக்கு இமோஷனல் மைன்ட், லாஜிக்கல் மைன்டை டாமினேட் செய்கிறது. நடந்தவற்றை மீண்டும், மீண்டும் உங்களுக்கு நடந்த டிராஜிடியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அது பற்றி பேசுங்கள். என்னிடம், உங்கள் நெருங்கிய ஃப்ரண்டிடம் – யாரிடமாவது பேசுங்கள். பேசப்பேசத் தான், இமோஷனல் மைண்டிலிருந்து அந்த சம்பவம், விலகி லாஜிக்கல் மைண்டிற்கு வரும். அப்பொழுதான் உலகில் எதுவும் அசாதாரணமானது அல்ல என்பது புரியும்.

‘எல்லாம் எனக்கும் தெரியும்... உங்க பொண்டாட்டி செத்தால் எனக்கு சொல்லியனுப்புங்கள். நீங்கள் சொன்ன லாஜிக்கை உங்களுக்கே திரும்ப சொல்கிறேன்.  நீங்க எப்படி நடந்துக்கறீங்கன்னு பாக்கறேன். சாவு சகஜம்தான் என சிரிச்சுக்கிட்டே பொண்டாட்டிய கொண்டுபோய் மயானத்துல வச்சுட்டு வாங்க பாக்கலாம்....... பேசரது எல்லாத்துக்கும் சுலபம்.. அவுங்க அவுங்களுக்கு வந்தால் தெரியும், வயித்து வலியும் வாய் வலியும்.....”  கத்திவிட்டு, சட்டென டாக்டர் அறையை விட்டு வெளியேறினாள் அனு.

ஐந்தடி வெளியே போனவள், சட்டென திரும்ப உள்ளே வந்து, “ஐ யாம் சாரி... வெரி சாரி டாக்டர்....  நான் இந்த இலவச உபதேங்களைக் கேட்டுக் கேட்டு எரிச்சலாகிக் கிடக்கிறேன்..  என்னவாக இருந்தாலும் உங்களிடம் அப்படி பேசியிருக்க்க் கூடாது... ஆண்டவன் உங்களை நல்லா வச்சிருக்கட்டும்... ஐ யாம் சாரி...”  வெளியேறினாள் அனு.

அதற்கு அப்புறமும், டாக்டரிடம் பத்து நிமிஷம் பேசி விட்டுத்தான் வந்தாள் வத்ஸலா. கையில் மாத்திரைப் பட்டைகளுடன்.

எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். வீட்டில் கதவைத் திறக்கும் பொழுது, ‘மன்னிச்சுக்கோடி வத்ஸலா... உன்னை எம்பாரஸிங் பொஸிஷனில் மாட்டிவிட்டுடேன்..’ என்றாள். “ச்சீ... அப்படிப் பேசாதே.. அப்படியாவது மனசைவிட்டு கொஞ்சம் கத்தினியே... அதுவே போதும்.. இந்தா, இந்த மாத்திரைகளை, லேபிளில் எழுதியபடி சாப்பிடு” என்றாள்.

இரவுக்கானது தூக்க மாத்திரை போலும்.. அன்று நாலு மணி நேரம் நன்றாகத் தூங்கினாள்.


இன்னமும்  மழை விட்டபாடில்லை. வெறித்த பார்வையை விலக்கவில்லை அனு.  

அவள் கணவன், வரதராஜனுக்கு மழை என்றால் கொண்டாட்டம். குழந்தை போல மழையை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு சலிக்காத விஷயம். மொட்டை மாடியில் சேகரிக்கப்படும் நீர் வழியே வேகமாக வெளியே கொட்டி, செம்மண் நிறத்தில் சாலையில் வழிந்தோடுவதைக் கூட ரசிப்பான். வானத்தை அண்ணாந்து பார்த்து, மழை நீரை நேரடியாக கண்களில் வாங்கிக் கொள்வதில் ஆர்வம்.  ‘இதென்ன விளையாட்டு, சின்ன புள்ள மாதிரி... உள்ள வாங்க, ஜலதோஷம் பிடிக்கும்  என்றால், அவள் மேல் மழை நீரை பிடித்துத் தெளிப்பான்.

“ரசி அனு, ரசித்துப் பார், மழை ஆச்சர்யமாக இல்லை உனக்கு, இவ்வளவு நீரும் மேகத்துள் மறைந்திருப்பதும், நீக்கமற, எந்த பேதமும் இன்றி, எல்லா இடத்திலும் பெய்வதெல்லாம் உனக்கு ஆச்சர்யாமாய் இல்லை?”

“இப்படித்தானே காலாகாலமாய் பெய்து கொண்டிருக்கிறது? புதுசா என்னத்தப் பாத்தீங்க இப்ப?  ஒவ்வொரு வாட்டி மழை பெயும் போதெல்லாம், போய் பால்கனியில நின்னுக்கறது! இதுல ரசிச்சுக்கிட்டே இருக்கறதுக்கு என்ன இருக்கு?”

“இயற்கை எல்லாவற்றிலும் முழுமை அனு! அழகு! அதிசயம்! உன்னதம்! குறை செல்ல முடியாத சிருஷ்டி! கொஞ்சம் ஆழ்ந்து பார் தெரியும். மலை, வானம், இந்த பூமி, சூரியன், இந்த பிரபஞ்சம் எல்லாமே உனக்கு ஆச்சர்யமாக இல்லை?”

அவனுக்கு எல்லாவற்றையும் ரசிக்க முடியும்! பெரும் அருவியோ, அல்லது சிறு நீர்த் தாரையோ, எல்லா வற்றிலும் அழகைப் பார்ப்பான்.  நான் தான் அவனுடன் சேர்ந்து அனுபவிக்க தவறிவிட்டோமோ?

ப்ப்ச்ச்... எல்லாம் கனவு போல இருக்கிறது!

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வரதராஜன்  என்னும் மழைத்துளி, சடாரென் தரையில் மோதி, பூமியில் புதைந்து போயிற்று!..

எல்லம் சட்-சட்டென நடந்தது. ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சோர்வாக வந்தான். ஒரு நாள், இரண்டு நாள்.. ஒரு வாரமாயிற்று.  உடல் நிலை பின்னோக்கி செல்வது, தீவீரமாகவும், வேகமாகவும் இருந்தது. ஆரம்பத்தில் உடம்புக்கு வருவது சகஜம்தானே என்று இலேசாக இருந்தாள். நிலைமையின் தீவீரம் உணர்ந்ததும் ஆடிப்போனாள் அனு! லட்சங்கள் கரைந்தன. டாக்ஸியில் போய், ஆட்டோவில் போய், சிட்டி பஸ்ஸில் போய்வந்தாள் ஆஸ்பத்திரிக்கு! மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகளின் லிஸ்ட் ஒன்று தனியாக இருக்கிறது என்பது புரிந்தது!

வீட்டில், நிலைமை தலைகீழானது! பணம் எவ்வளவு வந்தாலும் போதவில்லை! லட்சம் லட்சமாக ஆஸ்பத்திரிக்கு கொட்டித் தீர்த்தாள். மூன்றே மாதம்; வரதராஜன் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டான்.

“வரது தன்னுடன் இல்லை” என்பதை  நம்ப மறுத்தாள் அனு. உண்மை உரைக்கும்போதெல்லாம், துக்கப் பந்து அடிவயிற்றிலிருந்து திரண்டு வரும். அழது புரள்வாள். அவள் சேலை, கண்ணீரால் நனைவதும், மூச்சுக் காற்றால் காய்வதும் தினசரி நிகழ்வுகளாகி  விட்டன.

கடவுள் என்னிடம் ஏன் இரக்கமற்றுப் போனார்? நினைக்க நினைக்க அவளுக்கு, ஆத்திரமும் ஆங்காரமும் மேலிடும். நிராதரவும் தனிமையும் அவளை சுழற்றி எறிந்தன. சுவற்றில் முட்டிக் கொள்வாள். வீட்டை கண்ணீரால் நிரப்புவாள். யாராவது வந்து, “நடந்தது எல்லாம் கனவு.. இதோ வரது வந்து கொண்டிருக்கிறான் என சொல்ல மாட்டார்களா” என சிறு பிள்ளை போல எண்ணுவாள். மணிக் கணக்காக காலில் முகம் புதைத்து நினைவுகளில் மூழ்கிக் கிடப்பாள். வத்ஸலா தான் அவளுக்கு ஒரே ஆதரவு.

நிஜத்தின் நினைவுகளை, மீண்டும்-மீண்டும் நினைவுகளில் வாழ்வது, நிஜத்தைக் காட்டிலும் இன்பமாய் இருக்கிறதா என்ன? அனு அப்படித்தான் சதா நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிறாள்.

சிறு வயதில் இது நடந்திருந்தால்,  நிகழ்வையும் மீறி, வாழ்வில் எஞ்சியிருக்கும் பசுமைத் திட்டுக்கள் அவளை மாற்றியிருக்குமோ என்னமோ? முதுமையில் என்றால் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்ந்திருக்கலாம்.வாழ்ந்து முடித்துவிட்டோம் என்ற திருப்தியாவது இருக்கும்.  இது என்ன இரண்டும் கெட்டான் வயதில், இப்படி ஒரு அல்லல்?

வரது சொல்வான். “இதோ பார்... எல்லா கடமைகளையும் ஐம்பத்தைந்து வயதிற்குள் முடித்து விட வேண்டும். அதற்குப் பின், நமது வாழ்க்கை நமக்கே நமக்காக வாழ வேண்டும். காரை எடுத்துக் கொண்டு எங்கு செல்வதென தீர்மாணிக்காமல், மனம் போகும் இட்த்திற்கெல்லாம் சென்று பார்க்க வேண்டும். உறவுகளை திடீரென விசிட் செய்யனும். அவுங்களுக்கு ஆசை தீர ஏதாவது வாங்கிக் கொடுக்கனும்” என்பான்.

ஆசை விதைகளை அவளுள் தூவிவிட்டு, அவள் கனவு கண்ட ஐம்பது வயது நெருங்கிய உடன், அவன் சென்று விட்டான். கவர்ச்கிகளும், கடமைகளும்  விலகி, தாம்பத்யத்தின், திரண்ட  அனுபவத்தினை ருசிக்கும் காலத்தில், கலையம் உடைந்தது.

சட்டென நினைவுக்கு வந்தாள் அனு. மழை இன்னும் தூரிக் கொண்டுதான் இருந்தது.  அறை இருள் சூழ்ந்திருந்த்து.  மணி ஏழாகிவிட்டதா? சுவாமி விளக்கு கூட ஏற்றவில்லை, என்பது நினைவுக்கு வந்த்து. ‘ஆமாம்... விளக்கு ஏற்றினால் என்ன?  ஏற்றாவிட்டால்தான் என்ன? பூஜை செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? எல்லாமே பொருளற்றதாக இருந்தது அனுவிற்கு.

எல்லாவற்றையும் முறையாகத்தானே கடவுளுக்குச் செய்தோம். அதற்கு பலன் என்ன? வரதுவை கடவுள் அழைத்துக் கொண்டதுதானா?

மெல்ல எழுந்து முகம் கழுவிக் கொண்டு, விளக்கேற்றினாள். பழக்க தோஷத்தில் ஒரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள்.

‘அஸ்மின் பராத்மன் நனு பாத்ம கல்பே
த்வமித்த முத்தா பித பத்ம யோனிகி
அன்ந்த பூமா மம ரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணு....|

தனக்குள் பேச ஆரம்பித்து விட்டாள் அனு...

சட்... என்ன ஸ்லோகம் வேண்டிக் கிடக்கிறது.. அவையெல்லாம் பொருளற்ற உளறல்கள்... கடவுள் இருக்கிறாரா இல்லையா? நம்புவதா வேண்டாமா? இருக்கிறார் என்றால் அவர் கடமைதான் என்ன?

ஏன் இப்படி இலக்கின்றி, தெளிவில்லாம் ஏதாவது யோசித்துக் கொண்டே இருக்கிறேன்... கடவுளை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருப்பதற்கும் பயமாய் இருக்கிறது...

அப்படியெல்லாம் வீண் சிந்தனைகளை வளர்க்காதே! ‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்...’ சமீபத்தில் பியாஸ் நதியில் இருபத்து நாலு சிறு வயது மாணவர்கள், வெள்ளத்தில் சிக்கி இறந்தனரே? அவர்களது பெற்றோர் மனது எப்படித் துடித்திருக்கும்? கடவுளுக்கு ஒவ்வொரு ஜனனத்தையும்-மரணத்தையும் ப்ரொக்ராம் செய்துகொண்டிருப்பதுதான் வேலையா? கடவுள் படைப்பை நன்றாகத்தான் செய்திருக்கிறார். நாம் தான் சூழலைக்கெடுத்து, சாலைகளைக் கெடுத்து, பயிர்களைக் கெடுத்து, பன்றிகளைப்போல கணக்கின்றி பெற்றுத்தள்ளி ஈசல்கள் போல சாகிறோம். கடவுளுக்கு இதில் ஜோலியே இல்லை.

பிறந்த கணம்தொட்டு கல்லறையை நோக்கிய பயணம்தானே? இதில் 50 என்ன, 60 என்ன...

ம்ம்ம்ம்ம்ம்....  இப்படித்தான் ஒவ்வொரு இரவையும் குழப்பமான சிந்தனையுடன் அனு செலவழிக்கிறாள். எல்லாம் தெரிந்தது போல யோசிப்பாள்.. எதுவும் தெரியாதது போலவும் யோசிப்பாள்.

பொழுது விடிந்ததும்,  தினசரி கடமைகளில் மூழ்கி மரத்துப் போவதும்... இரவானதும் சிந்தனைச் சுழலில் சிக்கிக் கொள்வதுமாய் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

இன்றும் அப்படித்தான். மழை அவளுக்கு கடந்த காலத்தை தீவீரமாக நினைவூட்டிவிட்டது. தூக்க மாத்திரை ஒன்றை போட்டுக் கொண்டு படுத்துவிட்டாள்.

காலை எழுந்து முகம் கழுவும் போது, தலைமுடியைக் கோதிக் கொண்டாள். அட... இன்னமும் கருப்பு முடி நிறையத்தான் இருக்கிறது! நரை தன் மனதில் தானா என்பது போல சிரித்துக் கொண்டாள். வாழ்க்கை இன்னமும் முடியவில்லை!

No comments:

Post a Comment