Thursday, June 21, 2012

செத்தும் கெடுத்தாள்.......


மனைவியின் சிகிச்சைக்காக, நாளை (22/06/12), சென்னை செல்ல, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மன நிம்மதி வேண்டி, “சுகி சிவம் அவர்களது புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.  அவருடைய புத்தகங்களின் விசிறி நான். பொதுவாக மனம் அதைரியப்படும் போதெல்லாம்,  பாரதியையும், சுகி சிவத்தினையும் புரட்டுவது வழக்கம்.

அவ்வாறு நான் புரட்டிய, ஒரு சுகி சிவத்தின் புத்தகத்தின், ஒரு கட்டுரையில் நமது பெரும்பாலான மனத் துயர்களுக்கு, நமது “மனம்தான் காரணம் என்று சொல்லி, ஒரு சிறிய கதை ஒன்றையும் சொல்லியிருந்தார்.
கதைகளைச் சொல்லி, தத்துவங்களை விளங்க வைப்பதில், பரமஹம்சருக்கு இணை அவரே;  என்றாலும் திரு.சுகி சிவம் சொல்லிய இக்கதையில், வரிகளுக்கிடையே புரிந்து கொள்ள வேண்டியது, விளங்கிக் கொள்ளவேண்டியது நிறைய இருப்பதாகத் தெரிந்தது.  எனவே அக் கதையினை கீழே கொடுத்துள்ளேன்.

-------------------------------------------------------------------------


அவன் மனைவி இறந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் மிகவும் பயந்தபடி உட்கார்ந்திருந்தான் கணவன். பயத்திற்குக் காரணம், மனைவியின் மரணம் அல்ல! அவனை “எல்லாவற்றிற்கும் தன்னிடம் பயப்படுமாறுபழக்கி வைத்திருந்தாள் அவள்.

இறுதித்தருவாயில், கண்ணைத் திறந்து விழிகளை உருட்டி, கை விரலை உயர்த்தி மேலும்-கீழும் ஆட்டி, ‘நான் இறந்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம் என கனவு காண வேண்டாம்.  நடக்காது! நடக்க விட மாட்டேன்.  இறந்தாலும் பேயாக வந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன்; என்னிடம் எதையும் மறைக்க முடியாது! ஜாக்கிரதை! என மிரட்டிவிட்டு மாண்டுபோனாள்.

கொஞ்ச நாள் வீட்டிலேயே அடைந்து கிடந்த அவன், பின் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அலுவலகம் போனான். மாலை, அவனது விருப்பப்படியே சற்று மது அருந்தி, சுதந்திரத்தை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்தான்.  வீடு திரும்பிய அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது! சோஃபாவின் மேல், கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டிருந்தாள் அவன் மனைவி! சப்த நாடியும் ஒடுங்கியது! வியர்த்துக் கொட்டியது!

“ஓஹோ... நான் போய்விட்டேன் என்று துணிச்சல் வந்து விட்டதா?  தண்ணி அடித்துவிட்டு வந்தாயா? இனி நான் அடிக்கடி இப்படி வருவேன்.  உன்னை ஒவ்வொரு வினாடியும் கண்காணித்துக் கொண்டிருப்பேன். நினைவிருக்கட்டும்! நீ என்னிடம் எந்த தவறையும் மறைக்க முடியாது! இது உனக்கு எச்சரிக்கை என்று சொல்லி மறைந்து போனாள்.

இந்த கணம் முதல், இவன் நிம்மதி இழந்தான். சாப்பிட முடியவில்லை! தூங்க முடியவில்லை! யாரோடும் பேச முடியவில்லை!  அடுத்தடுத்து, ஒவ்வொரு நாளும், அவள் வருவது தொடர்ந்தது!

அவன் மனதில் நினைத்த எல்லாவற்றையும் சொன்னாள்! இன்று எதற்காக, ரோடில் போகும் பெண்ணைப் பார்த்து ‘ஜொள் விட்டாய்? என மிரட்டினாள். அவன் மனதில் தோன்றிய அனைத்து சபலங்களையும் குத்திக்காட்டினாள்.  “என்னிடமிருந்து விடுதலை அடைந்து விட்டதாக  நினைப்பா? நான் எப்போதும் இங்குதான் இருக்கிறேன். உன் விடுதலை பற்றி கனவு கூட காணாதே  என்றாள். அது மாத்திரமல்ல! அவனுக்கு எல்லாவிதமான யோசனைகளையும் சொல்ல ஆரம்பித்து விட்டாள். இவளை என்ன செய்வது எனக் குழம்பிப் போனான். அவள் இவனை அடிக்கவில்லை, கடிக்கவில்லை, சினிமா பேய் போல ஆர்ப்பரிக்க வில்லை! ஆனால் அவனது சுதந்திரம், சுத்தமாக பறிபோயிற்று!

இறுதியில், ஒரு ஜென் குருவிடம் சரண் அடைந்தான். ‘இருக்கும் போதும், என்னை பாடாய் படுத்தினாள்; இறந்த பின்னும் சித்தரவதை செய்கிறாள் ஏதாவது வழி செய்யுங்கள் என காலில் விழுந்தான்.

குரு சிரித்துக் கொண்டே, கூழாங்கற்கள்  நிரம்பிய சிறிய பை ஒன்றைக் கொடுத்தார். இதைப் பிரித்துப் பார்க்காதே! இன்று இரவு உன் மனைவி வந்ததும், இதில் எத்தனை கூழாங்கற்கள் இருக்கிறது என்று கேள். அவள்  ஒரு எண்ணைச் சொன்னதும், பையைத்திறந்து கற்களை எண்ணிப்பார். சரியாக இருந்தால் வந்து என்னைப் பார். ஆனால் கவனம்...  நீ என்னைப் பார்த்த்தைக் கூட சொல்லுவாள். அதைப் பொருட்படுத்தாதேபையில் எத்தனை கற்கள் இருக்கின்றன என அதட்டிக் கேள்என்றார்.

வீடு திரும்பியதும் வழக்கம் போல, அவன் மனைவி வீற்றிருந்தாள். “என்ன, அந்த மடையன் குருவினைப் பார்த்து விட்டு வருகிறாயா? என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கருவினாள். ஆனால், குரு சொல்லிக் கொடுத்தபடி, “அதிகம் பேசாதே.. வாயை மூடிக்கொள்.. இந்தப் பையில் எத்தனை கற்கள் இருக்கின்றன என்று மட்டும் சொல் என மிரட்டினான்.  என்ன ஆச்சரியம்? அடுத்த கணம் அவள் மறைந்து விட்டாள்.  அது முதல், அவள் அங்கே இல்லை; வருவதும் நின்று விட்டது.

வியந்து போய், மீண்டும் ஜென் குருவிடம் சென்றான். “என்ன மந்திரம் செய்தீர்கள்? அவள் வருவதை நிறுத்தி விட்டாள் என்றான்.


குரு பையைத் திறந்து, கீழே கொட்டினார். அவர் சொல்லியபடி வெறும் கூழாங்கற்கள்தான் கீழே கொட்டியது!

பின் சொன்னார். ‘உன் மனைவியின் வரவு உன் மனதின் தினிப்பு. மன மாயை. மனதின் சேட்டை. அவளை தினித்ததும், வரவழைத்த்தும்  நீ தான். உன் மனது தான்.  உன் எண்ணத்தை, உன் சிந்தனைகளை அவள் மீது திணித்துக் கொண்டு நீயே கஷ்டப்பட்டாய். பையில் எத்தனை கற்கள் இருக்கின்றன என்று உனக்கே தெரியாது! எனவே அவளுக்கும் தெரியாது!

“உனக்கு என்ன தெரியுமோ, அவை மட்டுமே அவளுக்குத் தெரியும். உனக்கே தெரியாதது அவளுக்கும் தெரியாது!  காரணம், அவள் உன் உருவாக்கம்... உன் மனதின் திணிப்பு.  அந்த மாயை உடைந்துவிட்டது.  இனி நீ நிம்மதியாக இரு போ.. ஆன்ந்தமாய் தூங்கு என்றார் குரு!


பெருவாரியான மனிதர்கள் துன்பப்படுவதற்குக் காரணம் அவர்களது மனமே!. மனதின் கற்பனை, உருவாக்கம், திணிப்பு, ஆழ்மனத்தின் சேட்டையே பலரது துயரங்களுக்குக் காரணம். துன்பத்தினை வெல்ல, மனத்திலிருந்து, நமது திணிப்புக்களை நம்மால் வெளியேற்ற முடியும்.
-----------------------------------------------------------------


Friday, June 15, 2012

கவலை தரும் போக்கு!




எனது ‘செல்ஃபோனை  பேசுவதற்கும், தேவைப்படும்போது இன்டர்நெட்டிற்கும், சில சமயம் ‘மேப்பிற்கும் பயன்படுத்துவேன். அவ்வளவுதான். கொஞ்சநாள் முன்பு, எனது உறவினர் ஒருவரது பையன், என் வீட்டிற்கு வந்திருந்தான். வயது நான்கு! அடுத்த கனமே, எனது செல்ஃபோனைக் கேட்டான். சில நொடிகளில் ஃபோனை நோண்டி, அதில் இருக்கும் கேம்களை விளையாட ஆரம்பித்து விட்டான். இத்தனை வருடத்தில், அந்த ‘கேம் பக்கமே நான் போனதில்லை! பையனின் திறமை கண்டு பெருமையாகக்கூட இருந்தது!

சில மாதங்களில், அச்சிறுவன், தனது பெற்றோரை நச்சரித்து ஒரு ‘பிளே ஸ்டேஷன் வாங்கிக் கொண்டான். அவனுக்கு இதை வாங்கிக் கொடுத்தது அதிகப்படியாகத் தோன்றினாலும், அதில் தலையிடுவது ‘வரம்பு மீறிய செயலாகக் கருதப்படும் அபாயமிருந்ததால் வாளாவிருந்தேன்.

இல்லை.. இல்லை..சிறுவர்களிடையே வரம்பின்றி வளர்ந்துவரும் வீடியோ கேம் மோகம்,  
கவலை கொள்ளத்தக்கதுதான் என்பதை, சில நாள் முன்பு வெளியான ஒரு ‘குரூர நிகழ்ச்சி நிரூபித்துவிட்டது.

‘பிளேஸ்டேஷன்’ (விலை ரூபாய் எட்டாயிரம்) ஒன்று வாங்குவதற்காக, சிறுவன் ஒருவன்,  சென்னையில், சிலரின் துணையோடு, பக்கத்து வீட்டு ‘மூதாட்டியை கொலையே செய்துவிட்டானாம். சொத்திற்காக, பணத்திற்காக, பெண்ணிற்காக, பெரிசுகள் அடித்துக் கொள்வதையும், வெட்டிக் கொள்வதையுமே சகித்துக் கொள்ள இயலாத நிலையில், சிறுவன் ஒருவனின் இந்த ‘மகா பாதகச் செயல்’  உண்மையிலேயே மிரளச் செய்துவிட்டது!

அப்படியானால், சிறுவனின் மனதிலும், மூளையிலும் ‘வீடியோ கேம் மோகம்’, எந்த அளவு ‘வெறி கொண்டிருக்க வேண்டும்? இத்தனைக்கும் அந்த சிறுவனின், தகப்பனார் சாதாரண ‘செக்யூரிட்டி வேலையில்தான் இருக்கிறாராம். ‘வீடியோ கேம்கள் சிறார்களின் புத்தியையும், மனதையும் தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றது போலும். அந்த அளவிற்கு இவ்வகை கேம்கள் சிறுவர்களின் மனதில் வன்முறையினை விதைக்கின்றன. வழியில் பார்க்கிறவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்திக்கொண்டும், அடித்து நொறுக்கிக் கொண்டும் போகும், இந்த வகை ‘அரக்க விளையாட்டுகள், குழந்தைகள் மனதில் வன்முறையன்றி வேறதை விதைக்கக் கூடும்? அடிதடியும், கொலைகளும், கொள்ளைகளும் சாதாரண விஷயம்தான் என்னும் அளவிற்கு, சிறுவர்களின் மனதை பாழ்படுத்தி விடுகின்றன.

மிக, மிக அபாயன போக்கு இது!

இந்த கேம்களின் பெயரைப் பாருங்கள்!  நமக்கே அச்சமாக இருக்கும்! ‘அடித்து நொறுக்கு, ‘எரித்துத் தள்ளு, ‘ரோட் ரேஷ். என்ன ஒரு சாந்தமான பெயர்கள்!

பள்ளியில், வாரம் ஒரு பீரியட் ‘மாரல் சயின்ஸ் போதித்துக் கொண்டு, மற்ற நேரம் முழுவது இந்த வன்முறை விளையாட்டுகளில் ஈடுபட்டால், இவ்வாறான சொற்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடாதா? மாரல் சயின்ஸால் என்ன பயன் விளையும்? இவர்களுக்கு, குற்றங்களின் பால், குற்றமற்ற உணர்வு, இயல்பாகவே வந்துவிடும். ‘வன்முறை குறித்து, இவர்களுக்கு அச்சமேதும் இருப்பதில்லை! பெற்றொர்களில் சிலர், தங்களது விடுமுறை தினங்களை சிறுவர்கள் பறித்துவிடாமலிருக்க, 'பொது பிளே ஸ்டேஷன் செண்டர்களுக்கோ' அல்லது வீட்டிலேயே வீடியோ கேம்களையோ வாங்கிப் போட்டு விடுகின்றனர். அடுத்த முறை தேர்வில் நல்ல மதிப்பெண்கள்  எடுத்தால் ‘பிளேஸ்டேஷன் வாங்கித்தருவதாக, வாக்குறுதி வேறு அளித்து விடுகின்றனர். இது ஆரோக்கியமான போக்கே அல்ல!

வீடியோ கேம் விளயாடும் சிறார்களை சற்று உற்று நோக்குங்கள்! அவர்களது உடலும், மூளையும் ‘பர-பர வென்றிருக்கும். மூளையின் இந்த தேவையற்ற, நெகட்டிவான ‘ஹைபர் ஆக்டிவ்னஸ் தீங்கையே விளைவிக்கும். விளையாட்டு மைதானங்களில், நிஜமான விளையாட்டுக்களை விளையாடி, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக்கிக் கொள்வதை விடுத்து, வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து ‘உடலையும், மனதையும் பாழ்படுதிக் கொள்கின்றனர். இதனால்தான் சின்னஞ்சிறு வயதிலேயே ‘பருத்த உடல் வாய்த்துவிடுகிறது!

வீடியோ கேம்களில் மூழ்கிப் போன சிறுவர்களிடம், ‘இனிமேல் வீடியோ கேம்கள் விளையாடக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள். அவர்கள் எவ்வளவு ‘வயலன்டாக ரியாக்ட் செய்கிறார்கள் என்பது புரியும்!

வியாபார நிறுவனங்கள் யாவும், ‘பிளே-ஸ்டேஷன்கள், சைபர் கஃபே, கம்யூட்டர்கள், ‘ஸ்மார்ட் ஃபோன்கள் என எல்லாவற்றிலும் வீடியோ கேம்களை நிறைத்து விடுகின்றனர். 

அவர்களுக்கு காசு ஒன்றே குறி!

இது குறித்து எவரேனும் கவலைப் படவேண்டாமா?

பெற்றோர்கள் இந்த பாதக சூழ்நிலையினை, எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்பது கவலைக்குரியதாக இருக்கிறது! பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன் நேரத்தை தாராளமாக செலவிட தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, தந்தைமார்கள் தங்களது குழந்தைகளோடு விளையாட வேண்டும். அவர்கள் தங்களது உபரி நேரத்தை எவ்விதம் செலவழிக்கிறார்கள், அவர்களது சேர்மானம் எப்படி இருக்கிறது (நண்பர் வட்டாரம்) என தெரிந்து கொள்ள வேண்டும்!

வீடியோ கேம்களுக்கு அடிமையாக்க் கூடிய ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தாலே (தனது ரூமிற்குள்ளேயே அடைந்து கிடப்பது - நன்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உணவு, குளிப்பது எவையும் வேண்டாம்), அதற்கான, தீர்வு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கவனிக்காது விட்டால் psychiatric disorder-ல் தான் முடியும்! 

காலத்தே எச்சரிக்கை மணி ஒலித்து விட்டது! பெரியவர்கள் கவனிப்பார்களா?  

Wednesday, June 13, 2012

தேவதைகள்!!




உலகத்தரத்தில், கட்டுப்படியாகும் கட்டணத்தில். சாதாரணர்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதே தனது லட்சியமென, விளம்பரித்துக் கொள்ளும், சென்னையில் உள்ள, ஒரு மருத்துவமணை அது.

அந்த மருத்துவமணையில்தான், எனது மனைவி, கேன்ஸருக்காக ‘கீமோ சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இது நான்காவது கீமோ தெரபி. யூஷுவலாக, எனது துணைவியாருக்கு கொடுக்கப்படும் ‘கீமோ ஆறு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். கீமோ சிகிச்சையளிப் பதற்கான ‘பெட் சார்ஜ், மற்றும் ‘நர்ஸிங் சார்ஜ்ஆகியவற்றை முதலிலேயே வசூலித்துக் கொண்டுவிடுவார்கள். காலை 7.30 சிகிச்சை மணிக்கு துவங்கிற்று. மதியம் 1.30 க்கு முடிய வேண்டும். இரண்டு விதமான கீமோ மருந்துகள் உடலில் ஏற்றப்பட வேண்டும். ஒன்று மூன்று மணி நேரமும், மற்றொன்று ஒரு மணி நேரமும் உடலில் ஏறும். அன்று எனக்கு சற்று அதிர்ஷ்டமில்லாத தினம் போலும். மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து ஏறுவதற்கு முக்கால் மணி நேரம் கூடுதலாகிவிட்டது.

பொறுமையிழந்த வார்டு நர்ஸ், அதிகமாய் செலவழித்த முக்கால் மணி நேரத்தினை ஈடுகட்ட, இரண்டாவதாக செலுத்தப்பட வேண்டிய ‘கீமோ மருந்தினை ‘சொட்டு-சொட்டாக ஒரு மணி நேரத்தில் ஏற்றுவதற்கு பதிலாக, ‘சற்று வேகமாக வைத்து விட்டார். நர்ஸில் இந்த செயலால், முக்கால் மணி நேரத்திலேயே மருந்து உடலில் ஏறிவிட்டது.(இதனால், அடுத்த பேஷன்டுக்கு, இந்த ‘படுக்கையை விரைவில் ஒதுக்க முடியுமல்லவா?)  இந்த அவசரத்தினாலோ என்னவோ என்னவோ, கடைசி பதினைந்து நிமிடம் இருக்கும் போது மனைவிக்கு, தலை சுற்றலும்-பட படப்பும் ஏற்பட்டு விட்டது. அந்த நர்ஸிடம் போய்ச் சொன்னேன்!

அவரது பதில் தான் மனிதநேயத்தின் உச்ச கட்டம்! “உங்களுக்கான ‘படுக்கை நேரம் முடிந்து விட்டது! எனவே நீங்கள் உங்களது மனைவயை அழைத்துக் கொண்டுபோய், ஒரு ஓரமாக, ஒரு பிளாஸ்டிக் நாற்காலில் உட்காரவைத்துக் கொள்ளுங்கள்!

நானும் பொறுமையாக, “‘சிஸ்டர், தயவு செய்து பெஷன்டின் பல்ஸ் மற்றும் BP செக் செய்யுங்கள். தலை சுற்றுகிறது என்கிறார் என்றேன்.

அந்த சிஸ்டர், பெரிய மனது வைத்து ஒரு ‘போர்டபிள் யூனிட்டை கொண்டு வந்தார். எனது  நேரம், அது வேலை செய்யவில்லை! “பேட்டரி போயிருக்கும் என்று யூனிட்டை டயக்னஸ் செய்தார். பின் ஒருவாறு அந்த கருவியை நோண்டி உயிர்ப்பிக்க, அது பல்ஸ் 120 எனவும், BP 150/110 எனவும் காண்பித்தது.

சிஸ்டர், இந்த அப்சர்வேஷனை எனது டாக்டரிடம், இன்டர்காமில் சொல்லிவிடுங்கள் என்றேன். 

“சொல்கிறேன், முதலில் உங்களது பெட்டை காலி செய்யுங்கள். அடுத்த பேஷண்டுக்கு தேவைப்படுகிறதுஎன மறுதலித்தார்.

“இன்னும்கூட உங்களுக்கு பணம் கட்டுகிறேன். பேஷண்டால் உட்கார முடியவில்லை. ஒரு மணி நேரம் பெட்டை ஒதுக்குங்கள் என்றேன்.

எனது கோரிக்கை உடனடியாக மறுக்கப்பட்டு விட்டது!

வேறு வழி? ஒரு தூணின் ஓரமாக, நாற்காலியில், மனைவியை உட்கார வைத்தேன். அவர் அமர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ‘கேஸ் ஷீட்டைட்’ பார்த்தேன். அதில் பல்ஸ் / BP  யாவும் நார்மல் என எழுதியிருந்தார். இந்த ரீடிங் ‘கீமோ கொடுக்கப் படுவதற்கு முன்னால் எடுக்கப்பட்டு, ரெக்கார்டு செய்யப்பட்டது.   இந்த ரீடிங்கை எடுத்தவரும் ஒரு நர்ஸ்தான். அவர் எடுக்கும்போதே BP 130/100 இருப்பதாகச் சொன்னார். ஆனால் எழுதும் போது ‘நார்மல் என எழுயுள்ளார்.

‘என்ன சிஸ்டர் இது? காலையில் எடுத்த ரீடிங்குக்கும், எழுதியதற்கும் சம்பந்தமே இல்லையே? உங்களது ரிப்போர்ட்டைப் படித்துத் தானே டாக்டர் முடிவெடுப்பார்?

“அப்படியா? மாற்றி எழுதிவிடுகிறேன்.

அட.. கடவுளே!

அதற்குள் எனது துணைவியார், தனக்கு மீண்டும் தலை சுற்றுவதாகச் சொல்லவே, நர்ஸினை விளித்து, “சிஸ்டர், தயவு செய்து டாக்டரிடம் சொல்லிவிடுங்கள். கீமோவுக்குப் பின் தான் இந்த மாதிரி இருக்கிறது. அவர் ஏதாவது சிகிச்சை அளிக்கக்கூடும்"


பேசினார்! டாக்டர் என்ன சொன்னாரோ தெரியவில்லை!

‘வார்டின் உள்ளே, கன்ஜஷனாக இருக்கும். எனவே நீங்கள் வெளியே போய் விடுங்கள். இன்னும் ஒரு மணி  நேரம் கழித்து வாருங்கள். அப்போது BP பார்க்கலாம். அப்போதும் அதிகமாக இருந்தால், நீங்களே போய் ‘எமர்ஜென்ஸியில் போய் அட்மிட் ஆகிக் கொள்ளுங்கள்

“என்ன சிஸ்டர் இது? மனசாட்சியே இல்லையா?  நீங்கள் சிகிச்சையளிக்கும் போதுதானே, பிரச்சினை ஏற்பட்டது? எதற்காக வெளியே போகச் சொல்கிறீர்கள். எங்கு போவது?கொஞ்ச நேரம் ‘பெட்டையூஸ் செய்துகொள்கிறோமே?

‘சாரி.. பெட் காலி இல்லை.. நீங்கள் ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள். அப்போதும் தலை சுற்றல் இருந்தால், எமர்ஜென்ஸியில் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள்

அந்த மருத்துவ மணையில் ‘எமர்ஜென்ஸி அட்மிஷன் என்றால் என்று எனக்குத் தெரியும்.  முதலில் ஒரு கனிசமான தொகையைக் கட்டினால்தான், பேஷன்டையே தொடுவார்கள்.

மனைவியை வெளியே அழைத்துக் கொண்டு வந்தேன். ஒரு ஓரமாக அமரவைத்துவிட்டு, ‘சீராக மூச்சு விட்டுக் கொண்டு, மனதிற்குள் ‘ஓம்..சாந்தி... ஓம் சாந்தி என சொல்லிக் கொண்டு, மனதை அமைதியாக வைத்துக்கொள் என்றேன்.

ஒரு மணி நேர தியானம் முடிந்து, உள்ளே அழைத்துச் சென்று BP பார்த்தபோது 130/100 என இருந்தது!

‘போதும்டா சாமி.. என கடலூர் வந்து சேர்ந்தோம்.

எனது கேள்விகளெல்லாம்:

-உங்களது மருத்துவ மணையில், உங்கள் பார்மஸியிலேயே வாங்கிய மருந்தினை, உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதானே, பணம் செலுத்தி சிகிச்சை பெறுகிறோம்? ஏதாவது காம்ளிகேஷன் ஏற்பட்டால் நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பில்லையா? அன்று ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் கூட உங்களுக்கு ஏதும் பொறுப்பு இல்லை, அப்படித்தானே?

-மிக முக்கியமான, எதிர்விளைவுகள் நடக்கக் கூடிய ‘கீமோ வார்டில் கூட ஒரு ‘பொறுப்பு (In-charge)  டாக்டர் போட மாட்டீர்களா?

-பேஷண்டின் நிலைமை தடுமாறுகிறது எனத் தெரிந்தும், அவரை வெளியேற்றிவிட துடியாய்த் துடிக்கிறீகளே ஏன்?

-சேவை, கனிவு, உலகத்தரம் என விளம்பரிப்பதெல்லாம் பேனரில் எழுதிக்கொள்ள மட்டும் தானா? நடைமுறையில் ‘காசு பார்பதுமட்டும் தான் குறிக்கோளா?

-நீங்கள் ஆஸ்பத்திரி என்ற பெயரில் நடத்துவது, நல்ல இலாபம் தரும் ஒரு தொழில்தான். நடத்துங்கள்! அதில் கடுகளவாவது ‘கருணையும் ‘மனிதமும் கொண்டு செயல்படுங்கள்!

Sunday, June 10, 2012

ஆக்கிரமிப்பு




மனித இனம் தோன்றியதிலிருந்து, தனது வாழ்வினை சுகமாக்கிக் கொள்ளவும், எளிதாக்கிக் கொள்ளவும், தொடர்ந்து, புதிது புதிதாக, கருவிகளை, மனிதன் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

சில கண்டுபிடிப்புகள், காலாவதியாகிவிடுகின்றன. சில கண்டுபிடிப்புகள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடுகின்றன. இவ்வகையில் பல்வேறு கருவிகளைச் சொல்லலாம். ஆனால் மனித இனத்தையே தனது காலடியில் கட்டிப் போட்டுவிடும் அளவிற்கு, தனது கண்டுபிடிப்பிற்கே தான் அடிமையாகிவிடும் அளவிற்கு, வலுவானதொரு கருவியினை மனிதன் கண்டுபிடித்துவிட்டான்!

அதுதான், கைபேசி என்றழைக்கப் படும் 'செல்போன்'.

இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டி விட்டதாம். இன்னமும் செல்போன் வாங்காத அந்த 30 கோடிப்பேர்கள் யார் என்று புரியவில்லை! அடுத்த தேர்தல் அறிக்கையில், நமது அரசியல்வாதிகள், தங்களது ‘இலவச லிஸ்ட்டில் “செல்போனையும் சேர்த்துக் கொள்வார்கள் என  நம்புவோம். ஓட்டு உறுதியாகிவிடும்.

பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் கூட ‘ஓ.ஒய்.டி கேட்டகிரியில் லேண்ட்லைனுக்கு அப்ளைசெய்து, வருடக்கணக்கில் காத்திருந்த காலம் இருந்தது! அப்போது அரசாங்கம் மட்டுமே (DOT), தொலைபேசி சர்வீஸினைக் கொடுத்துக் கொண்டிருந்தது.  இப்போது கிட்டத்தட்ட எல்லா ‘கம்பெனிகளும் சிம் கார்டுகளை இலவசமாக வழங்குகின்றன.

பூ விற்பவள், டாய்லெட் கிளீன் செய்பவர், துணி அயர்ண் செய்பவர், பழைய பேப்பர் வாங்குவோ, அர்ச்சகர் என எல்லோரது சர்வீஸும் ஒரு ஃபோன் காலில் முடிவடைந்து விடுகின்றன.  இன்று காலை, சமையலுக்கு ‘முளைக் கீரை வேண்டியிருந்தது; மனைவி, வாடிக்கையாக கீரைவிற்வளை ஃபோனில் கூப்பிட, “அடுத்த தெருவில் தான் இருக்கிறேன். இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து விடுவேன். உனக்கு ஒரு கீரைக் கட்டு எடுத்து வைத்துவிடுகிறேன்என பதில் கிடைத்து விட்டது. துணி அயர்ன் செய்பவர் ‘துணி இருக்கிறதா?என SMS –ல் வினவுகிறார்.

இது தவிர,  எண்ணற்ற அப்ளிகேஷன்கள், ஆன்லைன் பேமென்டுகள், ஆன்லைன் பர்சேஸ்கள், மொபைல் பேங்கிங், மேப்கள் போன்றவை, செல்ஃபோன்களை நமது உடலின் தவிர்க்க இயலாத ‘உறுப்பாகவே மாற்றிவிட்டன.

இந்த பயன்களை அனுபவிக்காவிடினும், இருக்கவே இருக்கிறது ‘FM!

எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.

எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறதல்லவா?

நம்மவர்களுக்கு, ஒரு நாள் செல்ஃபோனை, வீட்டில் மறந்து வைத்துவிட்டு அபீஸுக்கு வந்து விட்டால், ‘குடிகாரனுக்கு சாராயம் கிடைக்க வில்லையெனில்ஏற்படும் அவஸ்தையைப் போல உடம்பு நடுங்க ஆரம்பித்து விடுகிறது. மனம் பரிதவிக்கிறது! பர்மிஷன் போட்டு, ஆட்டோ பிடித்தாவது வீட்டிற்குப் போய் ஃபோனைக் கவர்ந்து கொண்டு வந்தால்தான் பதற்றம் நிற்கிறது.

ஏதேனும் அழைப்போ, அல்லது SMS –ஓ வரவில்லை என உறுதியாகத் தெரிந்தாலும் கூட, நிமிஷத்திற்கு ஒருதடவையாவது, தனது செல்ஃபோனை, பாக்கட்டிலிருந்தோ, அதற்கான உறையிலிருந்தோ எடுத்து, ஒருதடவை ‘கிரீன் பட்டனை அழுத்திப் பார்த்தால்தான் நிம்மதி. நிம்மதி என்ன? இது அனிச்சைச் செயலாகவே மாறிவிட்டது!

பள்ளிக் குழந்தைகளும், கல்லூரி மாணவ/மாணவிகளும்  காலை எழுந்ததும், பேஸ்ட் பிரஷை எடுக்கிறார்களோ இல்லையோ, செல்ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படி என்னதான் அதில் இருக்கிறதோ? இவர்கள் கையிலிருந்து செல்ஃபோனையும், மாரியம்மன் கோவிலிலிருந்து எல்.ஆர்.ஈஸ்வரி சி.டி க்களையும் பிடிங்கிவிட்டால், அவர்கள் என்ன ஆவார்கள் என யோசித்தால் ஆச்சர்யமாய்த்தான் இருக்கும்!

சாலையில் செல்லும் அனைவரின் கையிலும், அவர்கள் டூவீலர், திரீ வீலர், கார், லாரி, பஸ் என எந்த வாகனத்தில் போனாலும் சரி, ஒருகையால், ஹான்டில்பாரையோ, அல்லது ஸ்டியரிங்கையோ பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் செல்ஃபோனை இடுக்கிக் கொண்டு பேசியாக வேண்டும். (ஒரு டிரயின் டிரைவர், செல்ஃபோனில் பேசிக் கொண்டே, ஒரு ரயிலை ஆக்ஸிடென்ட் செய்த்து நினைவிருக்கிறதா?) சாலையில் நடந்து போனாலும் சரி, மஹாவிஷ்ணு போல ஒருகையில் செல்ஃபோன் (சங்கு-சக்கரத்திற்கு பதிலாக) இருந்தே ஆக வேண்டும். ரோடை கிராஸ் செய்யவேண்டும் என மகாஜனம் தீர்மானித்து விட்டாரெனில், ரோடின் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் எதையும் பார்க்க வேண்டாம்! செல்ஃபோனில் பேசிக்கொண்டே கிராஸ் செய்துவிடுவார்.

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர், செல்ஃபோன் வந்த பின், சாலை விபத்துகள் அதிகமாகிவிட்டன என்கிறார். கவனமின்றி, செலபோனில் பேசிக்கொண்டே, டிராக்கை கவனிக்காமல் டிரெயினில்  அடிபட்டு சாகின்றனர். டூ வீலர் ஓட்டுபவர்கள் கையில் செல்ஃபோனுடன் ஓயாமல் பேசிக்கொண்டே வந்து விபத்து ஏற்படுத்துகின்றனர். கார் டிரைவர்களும், பஸ்-லாரி போன்ற கனரக வாகன டிரைவர்கள் கூட செல்ஃபோனை வைப்பதேயில்லை. தோளுக்கும் காதுக்கும் இடையே பர்மெனெட்டாய் ஒட்டவைத்துக் கொள்வார்களோ என்னவோ?

சிலர் ‘டாய்லெட் டுக்குள் செல்லும் போது கூட இதை விட்டுவிட்டு செல்வதில்லை!

விடாமல் செல்ஃபோன் பேசினால் ரேடியேஷன் காரணமாக, ‘மூளையில் கட்டி வரக்கூடும் என்று கூட சிலர் சொல்லுகிறார்கள்.

ஏற்கனவே நாம், நமது பூச்சி கொல்லி மருந்துகள், ஜங்க் ஃபுட்ஸ், ஒஸோன் ஓட்டை, புதிய லைஃப் ஸ்டைல் காரணமாக மன அழுத்தம், சுற்றுப்புறச் சூழல் கேடு போன்றவற்றின் காரணமாக புற்று நோயை வரவழைத்துக் கொண்டுளோம். இந்த லிஸ்டில் செல்ஃபோனும் சேரப் போகிறதா இல்லையா எனத் தெரியவில்லை!  இது குறித்து நேர்மையான ஆராய்ச்சி நடக்குமா? செல்ஃபோன் நிறுவனங்கள் நடக்க விடுவார்களா? புரியவில்லை!

எப்படியாயினும், தேவைக்கு ஏற்ப மட்டுமே செல்ஃபோனைப் பயன்படுத்தினால், இக்கருவியினை நமக்கு சேவகனாய் வைத்துக் கொள்ளலாம்! இல்லாவிடில் அதற்கு நாம் அடிமையாக வேண்டியது தான். 

Wednesday, May 30, 2012

பிளந்து கட்டுகிறார் திரு.ஆமீர்கான் அவர்கள்!  


தொலைக்காட்சியில், திரு ஆமீர்கான் (ஹிந்தி நடிகர்), இந்திய மருத்துவத் துறை சமீப காலங்களில், சேவைத்துறை என்பதிலிருந்து மாறி,  ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாகி விட்டது குறித்து  கடுமையாகாச் சாடுகிறார்.  


தொலைக்காட்சி மட்டுமின்றி, 28/05/2012 தேதியிட்ட ‘தி ஹிண்டு நாளிதழில், திரு ஆமீர்கான் அவர்கள் ‘பிராண்டெட் மருந்துகள் என்ற பெயரில், நாம் மருந்துக் கம்பெனிகளால், களவாடப்படு வதை விவரமாகத் தொகுத்துள்ளார்.

உதாரணமாக ரூ.1.20 க்கு கிடைக்க்க் கூடிய  ஜலதோஷ மாத்திரைகளை, பிரான்ட் பெயரில் ரூ.35/-க்கும், ரூ.1000-க்கு கிடைக்கக் கூடிய ஹார்ட் அட்டாக்கிற்கான மருந்துகள் ரூ.5000/- விற்கப்டுவதையும், ரூபாய் 25/- விற்கக் கூடிய மலேரியா மருந்தினை ரூ.400/-க்கு விற்கும் அவலத்தையும் தீவீரமாக அலசியுள்ளார்.

சரியாகத்தான் சொன்னீர்கள் திரு.ஆமீர்கான்! இவை யாவும் விளம்பர யுக்திகளாகவோ அல்லது டி.ஆர்.பி ரேட்டிங்களை மனதில் கொண்டோ சொல்லப் பட்டவை அல்ல என உண்மையாகவே நம்புகிறோம்.


அநியாயமாக வசூலிக்கப் படும் மருந்துக் கட்டணங்கள் குறித்தும், ‘கிளினிகலாக டயக்னஸ் செய்யக்கூடிய நோய்களைக் கூட, ‘எவிடன்ஸ் பேஸ்டு மெடிசின் என்று சொல்லி, பல்லாயிரம் ரூபாய்களை ‘டெஸ்ட் என்ற பெயரில் கறந்து (கவர்ந்து) கொள்ளும் உத்திகளையும், சம்பாதிப் பதற்கு வசதியாக, ஒவ்வொரு டாக்டரும், தனக்கென தனியாக ‘லேபரட்டரிகள்’, ‘எக்ஸ்ரே யூனிட்கள், ‘ஸ்கேன் மெஷின்கள், ‘மருந்துக் கடைகள் வைத்துக் கொண்டிருப்பதையும்  பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?


உண்மையிலேயே சுருக்கமாக சொல்வதானால், சர்வ சாதாரணமாக 300%, 400% இலாபம் வைத்து, மருந்துகளை, பன்னாட்டு மருந்துக் கம்பணிகள் விற்கின்றன.

இவர்களின் ஆதார காரணம், நோயாளிகள் எந்த விலை கொடுத்தேனும், இந்த மருந்துக்ளை வாங்கிச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தான்.


இது கார்பொரேட் ‘ஆஸ்பத்திரிகளின் காலம். மக்கள் உடல் நலனுக்காக இந்த மருத்துவமணைகளில் மந்தைகள் போல, அடைபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள், ஆஸ்பத்திரிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், டாக்டர்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பவர்கள், என யாவரும் ‘களவாணிக் கூட்டணி வைத்து மக்களை கொள்ளையடிக்கின்றனர் என்பது தான். (கொள்ளை என்பதைவிட கடுமையான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை). இந்த விஷயம் ஒன்றும் ரகசியமானதல்ல!

நோயாளிகளுக்கு, இவர்களை விட்டால் வேறு ஏதும் ‘ஆப்ஷன் இருப்பதாகத் தெரியவில்லை!

ஒரு தத்துவ மேதை சொன்னார். “20% இலாபம் கிடைப்பதாக  இருந்தால், எங்கு வேண்டுமானாலும், பெரு முதலாளிகள் மூலதனம் செய்வார்கள்! 50% இலாபம் கிடைப்பதாக இருந்தால், மூலதனம் திமிர் கொண்டு, மமதையுடன் செயல்படும். 300% இலாபம் கிடைப்பதாக இருந்தால், மூலதனம் (முதலாளிகள்) எந்தவிதமான கொலை பாதகச் செயல்களையும், எந்தவிதமான குற்ற உணர்வின்றி செயலாக்க துணியும்” !

கொள்ளை லாபம் கொழிக்கும் மருந்துத் தொழில், இப்படித்தான் மானுடம் அற்றுப்போய், இலாப வெறி கொண்டு அலைகிறது!

நீங்கள் படித்திருப்பீர்கள்! 1970 முதல், கல்லீரல், கிட்னி ஆகிய இடங்களில் வரும் ஒரு புற்று நோய்க்கு Sorafenis Tosylate என்னும் மருந்தினை 'பாயர்' நிறுவனம், Nexavar  என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது! எந்த விலைக்கு தெரியுமா? ரூபாய்.2,80,000/- க்கு! இதே மருந்தினை இந்திய நிறுவனம் NATCO PHARMA  ரூ.8000/- உற்பத்தி செய்ய இப்போது தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது! அப்படியென்றால், இந்த மருந்துக் கம்பனி இதுவரை, எத்தனை கோடிகள் சுருட்டியிருப்பார்கள்!

இது ஒரு சாம்பிள்தான். அப்படி யென்றால், இந்த களவாணிக் கூட்டணி, இன்னும் எந்த-எந்த விதத்தில் எல்லாம், நம்மை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது!

இவர்களை “மருத்துவ பயங்கரவாதிகள் என்று அழைத்தால் என்ன தவறு?

இதற்கு தீர்வுதான் என்ன? பணக்காரர்களும் ஏழைகளும் ஒரே தரத்திலான மருத்துவ சிகிச்சை பெறவே முடியாதா? தீவீரமான வியாதிகள் உடையவர்கள், இவர்களின் கொள்ளைக்கு ஈடுகொடுக்க முடியாது, சாவதைத் தவிர வழி இல்லையா?

திரு ஆமீர்கான் அவர்கள், பிராண்ட் பெயரில் மருந்துகளை எழுதாதீர்கள், ஜெனரிக் பயரில் மருந்துகளை எழுதுங்கள என்கிறார். இது மருந்துகளின் விலையை பெருமளவில் சரியவைத்துவிடும் என்கிறார்.  அனைத்து தர மக்களும், கட்டுபடியாகும் விலையில் மருந்துகளைப் பெறமுடியும் என்கிறார்.

ஆனால், திரு. ஆமீர்கான் அவர்களே! மருத்துவர்களிடமும், ஆஸ்பத்திரிகளிடமும் மனித நேயத்தோடு நடந்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைப்பதாலோ அல்லது கெஞ்சிக் கேட்பதாலோ ஒரு பொழுதும் பணிய மாட்டார்கள்.

கணக்கில் அடங்காத அளவில் கூட்டுக் கொள்ளை, காட்டு தர்பார் நடத்தும் இந்த பன்னாட்டு மருந்துக் கம்பனிகளும், கார்பொரேட் ஆஸ்பத்திரிகளும், இவர்களுக்கு “இசைவாக நடந்து கொள்ளப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கும் டாக்டர்களும் – கோரிக்கைகளுக்கு இசைவார்கள் என நம்புவது பேதமை.

இந்த கொள்ளைக் கூட்டத்தை அடித்து நொறுக்கி (பிஸிக்கலாக அல்ல, அமைப்புகளை மாற்றி/சீர்திருத்தி!), அனைத்து தரப்பு மக்களும், தரமான மருத்துவமும், சுகாதாரமும், சிகிச்சைகளும் பெறவைக்க, அரசாங்கம் நினைத்தால் மட்டுமே முடியும்.

யதார்த்தமும், சோகமும் என்னவெனில், நமது அரசாங்கங்களும், அரசியல் வாதிகளும் இந்த “களவாணிக் கூட்டதின் ஒரு அங்கமாக மாறிப் போய் விட்டனர் என்பதுதான்!

அப்படியானால், நிலைமைகளை மாற்றவே முடியாதா?

முடியும். 'நமக்கு எந்த வகையான அரசு வேண்டும்' எனத் தீர்மாணிக்கும் சக்தியும், தெளிவும் நமது மக்களுக்கு வேண்டும்! அரசாங்கம் என்பது   நமக்காகத்தான் என்பது புரிய வேண்டும்! 'அத்தகைய அரசினை யாரால் அளிக்க முடியும்' என்ற தெளிவு வேண்டும். அரசியல் விழிப்புணர்வு வரவேண்டும்!

அதுவரை?

நமக்காக யாராவது, எங்கிருந்தாவது போராடுவார்கள் நம்பிக் கொண்டு நாம், சாராயக் கடைகளிலும், இலவசங்களிலும், சினிமாவிலும் தாராளமாக மூழ்கிக் கொண்டிருக்கலாம்.

ஜெய் ஹிந்த்!