Sunday, November 18, 2018

பா(வா)ல் கிண்ணம்



என்னிடம்  ‘இண்டெக்ஷன் ஸ்டவ்’ என்ற ஒரு வஸ்து இருக்கிறது. காஃபி போடுவதற்கு மட்டுமே, அதன் பயன்பாடு.

லோகத்தில் எல்லோரும் என்ன செய்வார்கள்? ‘ஆன்’ பட்டனைத் தொடுவார்கள். அடுப்பு உயிர் பெறும். அவ்வளவுதானே?  ஆனால், என்னுடையது, என்னைப் போலவே அலாதி டைப். ஆன் பட்டனைத் தவிர மற்ற பட்டன்களையெல்லாம் ஒவ்வொன்றாக அமுக்கிக் கொடுக்கணும்.  கொஞ்சம் கிட்ட போய், கொஞ்சணும். கெஞ்சணும்.  சிணுங்கிக் கொண்டு உயிர்பெற்றாலும் பெறும் அல்லது ‘தேமே’ என்று, சும்மா கிடந்தாலும் கிடக்கும். ‘கண்ணே..கலைமானே..’ பாடியபின் சிவப்புவிளக்குகள் எரியும். ‘அப்பாடா..’ என காஃபி போடும் வேலையைத் துவங்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கொஞ்சம் வயசான தம்பதியினரைப் போல சதா சண்டி பண்ணிக் கொண்டிருக்கும்.

‘ஆன்’ செய்யமட்டுமல்ல.. ஆஃப் செய்யவும் அதே போராட்டம். பால் பொங்கிக் கொண்டிருக்கும்... பயந்து, பாய்ந்து ஆஃப் பட்டணைத் தொட்டால் ஆஃப் ஆகாது. பால் யாவும் பொங்கி வழிந்து அடுப்பையும், டேபிளையும் ரணகளப் படுத்திவிட்டுத்தான் ஆஃப் ஆகும்.  அடுப்பையும், டேபிளையும் க்ளீன் செய்ய அடுத்த அரைமணி நேரம் அகும்.

இந்த இம்சைக்கு பயந்து, ‘உலகளந்தப் பெருமாள்’ போல, ஆஃப் பட்டணில் ஒரு கை.. சற்றே தள்ளியிருக்கும் மெயின் ஸ்விட்சில் ஒரு கை வைத்துக் கொண்டு, ஊர்த்துவ தாண்டவ போஸில் நின்று கொண்டு, ஆஃப் செய்யணும்.

ஒரு நாள் எரிச்சலாகிப் போய், இண்டக்ஷணை பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை என ஆவேசமுற்று, சர்வீஸ் ஸ்டேஷணுக்கு எடுத்துப் போனேன்.  அரை மணி நேர காத்திருப்பிற்குப்பின் என்முறை வர, ‘என்ன சார் பிரச்சினை...?

அடுப்பு செய்யும் அழிச்சாட்டியத்தை விலாவாரியாக எடுத்துரைக்க முயல, சட்டசபை சபா நாயகர் போல, ‘போதும்.. உட்கார்.’ என கையமர்த்தினார். மனிதர் நிறைய அனுபவப் பட்டிருப்பார் போல.

பவர் கேபிளைச் செருகி, ஆன் செய்தார். உடனே பளிச்சென உயிர் பெற்றது. திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப செய்த போதும், புதுப் பெண்போல உடனே பிரகாசமுற்றது. மெக்கானிக் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஸ்டவ்வை சுருட்டி உள்ளே வைத்து, ‘போ.. அந்தண்டை..’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

கொஞ்சம் அசிங்கமாக உணர்ந்து, ‘சே... அவசரப்பட்டு விட்டோமோ..?’ மற்ற சாக்கட்டுகளில் செருகி ட்ரை செஞ்சிருக்கலாமோ என எண்ணியபடி  வீட்டிற்குத் திரும்பினேன்.

சாயங்காலக் காபிக்கு முயலும்போது, ‘இண்டெக்ஷன்’ அதே சண்டி. ஒருகையில் ஸ்டவ்... அடுத்த கையில் பவர் கேபிள் என, ‘பவதி பிக்ஷாந்தேகி’ என்பது போல, வீட்டில் உள்ள அனைத்து சாக்கெட்டுகளிலும் முயல, ஏளனமாகப் பார்த்துக் கொண்டு ‘கம்முனு’ கிடந்தது . 

பழைய டெக்னிக்கான கொஞ்சிக் குலாவி, தட்டிக் கொடுத்தபின், ‘ம்ம்ம்... அப்படி வா வழிக்கு’ என்றபடி உயிர் பெற்றது.

ஸ்டவ்தான் அப்படி என்றால், பால் காய்ச்சவும், டிகாக்ஷனுக்கு வென்னீர் தயார் செய்யவும் வால்கிண்ணம் (அதென்ன வால்..?) என்ற ஒரு பாத்திரம் உண்டு. கையச் சுட்டுக் கொள்ளாமலிருக்க உதவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் உற்றி, ஆன் செய்தால், அந்த வால் கிண்ணம், ஏதோ ‘மாய மோகினி’ போல, ஸ்டவ் மேல் வட்டமடிக்கும். ஏதோ கொஞ்சம் ஒரு ‘பெக்’ போட்டவன் போல ஆடி நின்றுவிட்டால் பரவாயில்லை..சுற்றிச்சுற்றி வந்து மொத்த வால்கிண்ணத்தையும் கீழே தள்ளிவிட்டுவிட்டுதான், மறு வேலை பார்க்கும் என் செல்ல ஸ்டவ்.

ஒருவேளை சர்ஃபேஸ் ஈவனாக இல்லாததால் இப்படி வட்டமடிக்கிறது போலும் என நினைத்து, சுத்தியலால், வால் கிண்ணத்தின் அடிப்பாகத்தை நசுக்க முயன்று, நிலைமையை கெடுத்துக் கொண்டேன். அடுப்பின் மேல் வைத்தஉடனே, சர்ரென கீழ்  நோக்கிப் பாய்கிறது, ‘காஜா’ போல..

இந்தப் பீடை பிடித்த காஃபியை நிறுத்திவிடலாம் என்றாலும் அது சாத்தியமாகது போல...

ப்ளீஸ்.. எவராவது ஒரு கப் சூடா ஸ்ட்ராங்கா காஃபி கொடுங்களேன். ஆயாசமா இருக்கே!