சில வாரங்களுக்குகுன் எனது நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன்.
உரையாடல் நடுவே, பாஸ்போர்ட் குறித்து பேச்சு வந்தது. என்னிடம் பாஸ்போர்டே இல்லை என்றேன். ஏதோ
ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்த்தார் அவர். ....ஏன்?
“எனக்கு இந்த அரசாங்க ஃபாரம்கள், அவர்களது
நடைமுறைகள், கையூட்டுகள், போலீஸ் வெரிஃபிகேஷன்கள் எல்லாமே அலர்ஜி. ஏதாவது
ஆன்லைனில் இருந்தால் பார்க்கலாம்”
என்றேன்.
“அதெல்லாம் அந்தக் காலம். இப்ப ஆன்லைனில்
எல்லாமே முடிந்துவிடும்” என்றார்அவர். வீட்டிற்குவந்து, பாஸ்போர்ட் வலைமனைக்குச்
சென்று, அவர்கள் கேட்ட தகவல்களையும், கட்டணத்தையும் செலுத்தினால்,அடுத்த மூன்றாவது
நாளில் (நாமே தேர்வு செய்யும் நாள்தான்) சென்னை-தாம்பரத்திற்கு வரச் சொன்னார்கள். ஏற்கனவே ஃப்ர்ஸ்ட் நேம், சர்நேம், லாஸ்ட் நேம்
குறித்த குழப்பத்திலும், பான் கார்டோடும், ஆதார் கார்டோடும், அவற்றை வருமானவரித்
துறையினரோடு இணைக்கவும் நீண்ட காலமாக மன்றாடிக் கொண்டிருந்தேன். இந்த லட்சணத்தில் அரசாங்கம் என்னும் ‘செக்கு
மாட்டு மந்த பூதத்தொடு’ போராடி நான் ‘பலராமன்’ தான் என்பதை விளங்க வைத்து,
பாஸ்போர்ட் பெறுவது நடக்காத காரியம் என்ற அவ நம்பிக்கையோடு, அலுவலகம் சென்றால், ஆச்சர்யம்
காத்துக் கொண்டிருந்தது. நான்
அள்ளிச்சென்ற பள்ளி சர்டிபிகேட், பான், டிபார்ட்மென்ட் ஐ.டி, வோட்டர் ஐ.டி,ரேஷன்
கார்டு எல்லாவற்றையும் அள்ளி என் கையிலேயே திணித்துவிட்டு, ஆதாரை மட்டும் எடுத்துக்
கொண்டனர். பதினைந்து நிமிடத்தில் வேலை முடிந்தது. ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியன் என்பதால், பாஸ்போர்ட்டைக்
கொடுத்துவிட்டு, பின்னர் காவல்துறை வெரிஃபிகேஷன் போதும் என்றனர். பாஸ்போர்ட் அலுவலகம் டி.ஸி.எஸ் ஊழியர்களால்
இயக்கப்படுகிறது. மின்னல் வேகம். அன்போடும், கர்டஸியோடும் நடந்து கொள்கின்றனர்.
பாஸ்போர்ட் தயாரிக்கப் படுகிறது, பிரிண்ட்
செய்ய அனுப்பப் படுகிறது, பிரிண்ட் செய்யப்பட்டுவிட்டது, தபாலில் அனுப்பப் பட்டுவிட்டது
என வரிசையாக குறுஞ்செய்தி. ‘இது இந்தியா தானா?’ என வியந்து கொண்டேன். போலீஸ்
வெரிஃபிகேஷன் முடிய நாள் எடுத்துக் கொண்டது
வேறு விஷயம். சட்ட ரீதியாகவே 21 நாட்கள் ஆகலாம்.
ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பாஸ்போர்ட் வந்துவிட்டது தான். அதைப்
பயன்படுத்திப் பார்த்தால் தானே, அது செல்லுபடியாகுமா ஆகாதா எனக் கண்டுபிடிக்க
ஏதுவாகும்!
குறிஞ்சிப்பாடிக்கோ, குள்ளஞ்சாவடிக்கோ செல்ல
பாஸ்போர்ட் தேவைப்படாது. சரி.., கட்டுப்படியாகும் கட்டணத்தில் எந்த நாட்டிற்குச்
செல்லலாம் என கூகுளாண்டவரை நோண்டிக் கொண்டிருந்த பொழுது, ‘மதுரை திருமுருகன் சுற்றுலா நிறுவனம்’ கண்ணில்
தென்பட்டது. ஏற்கனவே, இந்த நிறுவனம் பற்றி
நல்ல முறையில் கேள்விப்பட்டிருந்ததால், அவர்கள் மூலம் இலங்கை சென்றுவரத்
தீர்மாணித்தேன். நல்லவேளை, சந்தேகப்பட்டபடி இல்லாமல், செல்லுபடியாகும்
பாஸ்போர்ட்தான். Srilankan
ETA வந்துவிட்டது.
விமான
நிலைய, ‘இமிக்ரேஷன் ப்ரொஸிஜர்’ என்பது சலிக்க வைக்கும், தவிர்க்க முடியாத இம்சை. ஷூமுதல்,
பெல்ட் வரை கழற்று. பெல்டை எடுத்துவிட்டால், ஜீன்ஸ் இடுப்பில் நிற்காது
என்பெதெல்லாம் அவர்கள் கவலையா என்ன? ஏன் வந்தாய்? எத்தனை நாள் இருப்பாய்? உன்னை
அழைத்தது யார்? வந்த இடத்தில் உன் விலாசம் என்ன? உஃப்.... “இதற்கே இப்படி சலிச்சுக்கறீங்களே? அமெரிக்கா
போய்ப்பாருங்க. இமிக்ரேஷன் அங்கே ஒரு கெஜப்பிரசவம்” என்றார் ஒருவர். ஒரு வழியாக
வெளியே வந்தால், திருமுருகன் டூர் மேனேஜர் காத்திருந்தார்.
வழிகாட்டியாக,
‘திரு ஞானப்பிரகாசம்’ என்பவர் வந்திருந்தார்.
வழிகாட்டி உத்தியோகத்திற்கு மிகப் பொருத்தமான நபர். தமிழர். பன்மொழி
பேசுபவர். சதா புன்னகை செய்ய பழகிக்
கொண்டிருந்தார். ஃப்ரொஃப்ஷனல், தன்மையானவர், எதைச் சொல்ல வேணும், எந்தக் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும்,
நெருடலான விஷயங்களை எப்படி கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவேணும், எவற்றைக் காண்பிக்க வேண்டும் என்பவற்றையெல்லாம்
இயல்பாகச் செய்து கொண்டிருந்தார். ‘கண்டிப்பதைக்’ கண்டுபிடிக்க இயலாதவாறு செய்து
கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் பொழுதும், எவற்றைக் காண வேணும்,
எதைச் செய்யக் கூடாது, அந்த இடத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை ‘ஓர் எல்லைக்
குட்பட்டு’ தெளிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
எங்கெங்கு,
என்னென்ன பார்த்தேன் என்பவற்றை விஸ்தாரமாக
விவரிக்க வேண்டிய அவசியமில்லை என்ன நினைக்கிறேன்.
ஏனெனில் அவை யாவரும் அறிந்திருக்கும் விஷயங்களே! கீழே கொடுக்கப் பட்டிருக்கும் புகைப்படத்
தொகுப்பும் (சுட்டி), புகைப்படத்தினோடே, ஆங்காங்கே அடியில் கொடுக்கப்
பட்டிருக்கும் விவரணமும் போதுமானதென்று கருதுகிறேன். கண்டி, கண்டி-கதிர்காமம், கதிர்காமம்
– முருகன் கோயில்,நுவரிலியா (நுவர இலியா), கொழும்பு ஆகியவை பார்த்த நகரங்கள்.
நுவரலியா
நம் ஊட்டியைப் போல இருக்கிறது. நம் ஊர் அளவு நசுக்கித் தள்ளும் கும்பல் இல்லை.
மரங்களும் சோலைகளும் நன்கு பராமரிக்கப் படுகின்றன. இதமான குளிர். கட்டுக்குள் இருக்கும் கடைகள்; மக்கள் தொகை.
அனுபவிக்க இனிமையான கோடைவாசத்தலம்.
கண்டி-கதிர்காம்மும்,
கதிர்காமும் வெவ்வேறு இடங்கள். கண்டி-கதிர்காமம் கோயில், கண்டி நகரத்தில் உள்ளது.
இலங்கையில் மத்திய பூமி. எம்ஜிஆர் பிறந்த விட்டு இங்கேதான் இருக்கிறது.
கதிர்காமம்
இலங்கையின் தென் கடைக்கோடி. இங்கே
இஸ்லாமியர்கள், புத்தர்கள், இந்துக்கள் என பலரும் வருகின்றனர். நான் சென்ற பொழுது
மாலைப் பூஜை நடைபெற்றது. முருகனின் பூஜைக்கான சோடசோபாரங்கள் இஸ்லாமியர்களால்
கொண்டுவரப்படுகின்றன. முருகனின் திரைக்கு முன்னால், இஸ்லாமியர்கள் கைகூப்பி
வணங்குவதும், முருகன் சன்னிதானத்திற்குப் பின்னாலேயே இருக்கும் ஒரு புத்த விஹாமும்,
அருகிலேயே இருக்கும் ஒரு மசூதியும்... இதெல்லாம் கதிர்காமத்தில் மட்டுமே காணக்
கிடைக்கும் ஒரு காட்சி. அந்த ஏரியா முழுவதற்கும் (இந்து,புத்த,இஸ்லாமிய இடங்கள்)
அனைத்திற்கும் ஒரே Deed.
ஆச்சர்யமாக இல்லை?
கண்டியில்
எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்டிருக்கும் கோயில், மெய்
சிலிர்க்க வைக்கும் கதிர்காமம் முருகன் கோயில், ராவணன் நீர்வீழ்ச்சி (தற்போது
குறைந்த அளவே நீர் விழுகின்றது), ரம்போடா
நீர்வீழ்ச்சி, சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனம்,
ஹனுமன் சீதையைக் கண்ட இடம், அவர் எரித்த அசோகவனம், ஹனுமன் கோயில் ஆகியவை
நினைவில் நிற்பவை.
இலங்கையின்
கடற்கரைகள் ரம்மியமானவை. அழகு சொட்டுபவை.
வர்ணஜாலம் காட்டும் மணற்பாங்குகள். போர்ட்ப்ளேயரின் கடற்கரையை நினைவுபடுத்துபவை. சுனாமி பேரழிவின் சுவடுகள் இன்னமும் இலங்கையின்
கிழக்குக் கடற்கரையில் காணக் கிடைக்கின்றன. பல இடங்களில் கடற்கரையின் வடிவம்
சுனாமிக்குப் பிறகு மாறிப் போயிருக்கிறது.
கொழும்பு
நகரம், வளர்ந்துவரும் பெரிய நகரம். எங்கு பார்த்தாலும் வானுயர் கட்டிடங்கள்
கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஐந்து வருடம் கழித்துப்பாருங்கள். எங்கள்
கொழுப்புவை நீங்களெல்லாம் அண்ணாந்துதான் பார்க்கவேண்டும் என்றார் ஞானப்பிரகாசம்.
நம்மையெல்லாம்
80களில் கட்டிப்போட்டிருந்த ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின்’ சிறியகட்டிட்த்தையும் பார்த்தேன். மறக்கக்
கூடிய தினங்களா அவை? ராஜாவும், மயில்வாகனமும், அப்துல் ஹமீதும் அனைத்துத் தமிழர்கள்
மனதில் குடிகொண்டிருந்த தினங்களல்லவா அவை? ‘இரவின் மடியில்..’ கேட்காமல்
உறங்கமாட்டோமல்லவா?
ஆங்கிலேயர்களும்,
டச்சுக்காரர்களும் கட்டிய கட்டிடங்கள் இன்னமும் பிரமாண்டமாய் ஜொலிக்கின்றன. ‘சார்க்’ (South_Asian_Association_for_Regional_Cooperation) மாநாடு சார்க் கல்ச்சுரல் சென்டர் என்ற மிக அழகான கட்டிடத்தில் நடைபெற்றிருக்கிறது.
பல
இடங்களிலும் காணப்படும் தமிழ் அறிவிப்புப் பலகைகளும், வழிகாட்டியின் ஆங்கிலம்
கலக்காத தமிழும், வெளிநாட்டில் இருப்பதாக உணரவைக்கவில்லை. தமிழ் நாட்டின் மற்றொரு
மாவட்டத்திற்கு வந்த்தொரு உணர்வையே தந்தது.
இனி
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில விஷயங்கள்:
சாலைகளில்
எவரும் குப்பை போடுவதில்லை. எச்சில் துப்புவதில்லை. சாலைகள் கூடுமானவரை
நேர்த்தியாக இருக்கின்றன. சாலை விதிகள் யாவும் சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன.
பாதசாரிகள் சாலைகளைக் கடக்க மார்க் செய்யப்பட்டுள்ள இடங்களில் எவரேனும் வந்தால்,
வாகனங்கள் யாவும் நின்றுவிடுகின்றன.
காவல்துறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கட்டுப்பாடு இருக்கிறது. ‘ஹைவேயாக’
இருந்தாலும் கூட சாலையோரத்தில் எவரும் மலஜலம் கழிப்பதில்லை. எந்த மரத்தினடியிலும் ‘பாட்டில்களைக்’
காணமுடியவில்லை. பொது இடங்களில் புகை
பிடிப்பதில்லை. போக்குவரத்துக் காவல்துறையினர் விதிகளைக் கடைப்பிடிக்கின்றனர். ‘விதி’ களை வேறு எதற்கும்
பயன்படுத்துவதில்லை. இரவு ஏழு
மணிக்கெல்லாம் ஊர் பொதுவாக அடங்கிவிடுகிறது.
இந்திய
43 பைசாவிற்கு இலங்கையின் ஒரு ரூபாய் கிடைக்கும். நாட்டின் பொருளாதாரம் வெளிநாட்டு உதவிகளையும்,
சுற்றுலாவையும், டீ ஏற்றுமதியையும் நம்பியிருக்கிறது.
இன்றைய
தேதியில் எவரும் போரை விரும்பவில்லை.
நாற்பது வருட போர், அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.
தற்போதைய
பிரதமர், ரணில் விக்ரம சிங்கே ஆட்சியை ‘பரவாயில்லை’ என்கின்றனர் தமிழர்கள். ஒவ்வொரு சிங்களக் குழந்தையும் தமிழ் படித்தாக
வேண்டும். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும்
சிங்களம் கற்றாக வேண்டும். தமிழ்க்
குழந்தைகளும்-சிங்களக் குழந்தைகளும் தமிழ் பேசுவது ‘எவ்வளவு நன்றாக இருக்கிறது
தெரியுமா?’ என்றார் கைட்.
ஆனால்,
ரொட்டியின் எல்லாப் பக்கமும் ‘வெள்ளையாக’
இல்லை. ‘கருத்த’ பக்கமும் இருக்கிறது. இன்னமும் பல தமிழர்கள் ‘சிறைகளில்’ வைக்கப்
பட்டிருக்கின்றனர். தமிழர்களின் பல இடங்களிலிருந்து
ராணுவம் திரும்பப்பெறப் படவில்லை. தமிழர்களுக்கான
வீடுகள் கட்டித்தரப்படவில்லை. பலர் இன்னமும் முகாம்களில்தான் இருக்கிறார்களாம்.
புலிகள்
மீது பல புகார்கள் கூறப்படலாம். ஆனால் அவர்கள் இல்லையென்றிருந்தால், தமிழர்கள்
நிலைமை இன்னமும் கீழாக இருந்திருக்கக் கூடும். அந்த அளவிற்குத் தமிழர்கள் சொல்லொனா
துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள்.
அனைவரும்
புலிகள் ஆதரவாளர்கள் அல்ல. மலையகத்தோட்டத் தமிழர்கள்- யாழ்ப்பானத் தமிழர்கள்-மற்றதமிழர்கள்
என பலரும் பல்வேறுவகை எண்ண ஓட்டங்களைக் கொண்டிருக்கின்றனர். இந்தியா உட்பட, சர்வதேச
அரசாங்கங்கள் செய்யக் கூடிய காரியம் என்னவென்றால், தமிழர்கள் முழுமையான சரிசம
உரிமையோடு இலங்கையில் வாழ்வதற்கு ஏற்பாட்டையும், அதற்குண்டான உத்தரவாதத்தைச் செய்யச்
சொல்லி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது தான். முகாம்களில்
அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவித்து புணர்வாழ்வு வாழ ஏற்பாடு
செய்யப்பட வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தப்படுவது
(பேப்பரில் அல்ல-உண்மையாகவே) அவசியம்.