சில ஊர்களின் பெயர்களை உச்சரித்த
மாத்திரத்தில், அந்த ஊர்களுக்கான ஒரு
பிரத்யேகமான உலகம் சிருஷ்டிக்கப்பட்டுவிடும். எந்த வர்ணனையுமே தேவையில்லை. நினைந்தவுடன் ஊரும் தாய்ப்பால் போல, சில ஊரின் நினைவுகளே காலங்கடந்த உலகிற்கு இட்டுச்
செல்லும்.
முதன் முதலில் ராமேஸ்வரம் சென்றபொழுதும் இதே
உணர்வுகள்தான். அந்த பிரம்மாண் டமான பாலத்தை, ரயில் தடக்-தடக் என விழுங்கிச் செல்லும் கணத்தில்,
மனது சடாரென யுகங்கள் தாண்டி பின்னோக்கிச் சென்றுவிட்டது.
காற்று முழுவதும் ராமரும் சீதையும்
கலந்திருந்தார்கள். கண்ணில் கண்ட
மாந்தர்கள் அனைவரும் ராம சேனையாகவே தோன்றினர். ஏதோ, மந்திரித்து விடப்பட்டவன் போல,
ராமகாவியத்தினூடே நானும் ஒரு ஏதோ ஒரு கதாபாத்திரமாக மாறி உலவக் கிளம்பிவிடுவேன். எங்கு
பார்த்தாலும், ராமாயண கதா பாத்திரங்கள் பேரில் ஒரு தீர்த்தம் இருக்கும். விதவிதமான
சாதுக்களும், யாத்ரீகர்களும், அக்னி தீர்த்தமும் நம்மை சரித்திரகாலத்திற்கு, டைம்
மிஷின் இல்லாமலேயே அழைத்துச் செல்லும்.
அதே போன்ற ஒரு பெயர்தான் கும்பகோணம்.
இன்று எங்களது குலதெய்வம் அமைந்திருக்கும் கன்னியாக்குறிச்சி
வடிவழகியம்மன் (என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர்?) கோவிலுக்குச் சென்றுவிட்டு வரும்
வழியில் மன்னார்குடி யையும், கும்பகோணத்தையும் தொட்டுவிட்டு சென்றேன்.
மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயிலைப்பற்றி
புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? பழமையும், அழகும் கொட்டிக்கிடக்கும் பிரும்மாண்டமான
கோயில். சென்ற சமயம் சந்தான ராஜ கோபலனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதுவரை காணக்
கிடைக்காத தரிசனம். அழகு கொஞ்சும் தாயார். திருப்தியான தரிசனம். (சந்தான கோபாலனை,
ஒரு தாம்பாளத்தில் அமர்த்தி அபிஷேகிக்க வேண்டாமா? அப்படியே சிமன்ட் திண்ணையொன்றின்
கிடத்தி அபிஷேபிப்பது கொஞ்சம் நெருடலாக இருந்தது. என்ன தாத்பர்யமோ தெரியவில்லை)
ஆனால் அங்கே, வெகுகாலமாக ஜாடைகாட்டிப் பேசும் பட்டாச்சார்யார் ஒருவர்தான் சந்தான கோபாலனுக்கு
அபிஷேகம் நடக்கப் போகிறது; போய்ப்பாருங்கள் என அனுப்பிவைத்தார். பங்குனி உத்திரம்
திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோயிலின் வெளியே மாஃபியாக்களின் போஸ்டர்.
உள்ளே அவர்கள் அளித்த ஓவியங்கள் சில, பிரதான இடத்தில்.
கோயிலைவிட்டு வெளியே வரும்பொழுது, எனது அபிமான
உபன்யாசகர் ‘ஜடாயு’ அவர்களின் உரை இன்று இரவு ஏழு மணிக்கு எனப் போட்டிருந்தது. அடாடா... முன்பேயே தெரிந்திருந்தால், வேறு
மாதிரி திட்டமிட்டு, அவரது சொற்பொழிவைக் கேட்டிருக்கலாமே என்று தோன்றியது. YouTubeல்
அப்லோட் செய்தால் பார்க்கலாம்.
அடுத்தது அபிமான குடந்தை!
துளிர் வெற்றிலையா, அகலமான வாழை இலையா, ‘கடுக்கென’
இருக்கும் மாவடுவா, தொட்டால் இரண்டு நாட்களுக்கு மணந்துகொண்டிருக்கும் பெருங்காயமா,
ரசத்திற்கு சுவையூட்டும் ஈயச் சொம்பா, பஞ்சகச்சத்திற்கேற்ற பத்தாறு வேஷ்டியா, ஜீவனுடன்
உருவாக்கப்படும் தெய்வங்களின் வெண்கலச் சிலைகளா, பரவசமூட்டும் குத்துவிளக்குகளா, எத்தனை
தடவை வந்தாலும் பார்ப்பதற்கு இன்னமும் விடுபட்டிருக்கும் முடிவில்லாத கோயில்களின்
பட்டியலா, மகாமகக் குளமா, பொற்றாமரைக் குளமா, கண்ணுக் கெட்டிய தூரத்திற்கு மலைகளே
இல்லாத சூழலில் வரைந்து வைத்தாற்போல இருக்கும் ராமர்கோயில் சிற்பங்களா, மலைப்பூட்டும்
சாரங்கபாணியா, வைத்தகண் வாங்காமல் பார்க்கவைக்கும் தாராசுரமா? யுகங்களைத் தாண்டி
நிற்பதாக புராணங்கள் சொல்லும் கும்பேஸ்வரரா,
மணக்கும் மங்களவிலாஸ் காபியா, இன்னமும் காலை ஒன்பது மணிக்கே சாப்பாடு தயாராகும்
வெங்கட்ரமணா ஹோட்டலா .... எதுதான் நம்மை
காலம் தாண்டி இழுத்துச் செல்லும் வல்லமையை கும்பகோணத்திற்கு தருகிறது?
தெரியவில்லை. இன்னும் சொல்லிக் கொண்டே
போகும் அளவிற்கு முடிவில்லாத பெருமைகளைக் கொண்டதல்லவா கும்பகோணம்! குடந்தை உருவாக்கிய தலைவர்கள், வித்தகர்கள்
எத்தனைபேர்? சில்வர் ட்ங் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளையும், கனிதமேதை ராமானுஜரையும்
மறக்கமுடியுமா?
குடந்தையைக் கடக்கும் பொழுது, இந்த ஊரைப்பற்றி மேலே
சொன்ன நினைவுகள் யாவும் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கியது. எனது நன்பர் BT Arasu குடந்தை
முராரி ஸ்வீட்ஸின் டிரை (Dry
Jamoon) பற்றிச் சொல்லியிருந்தார். ராமர் கோயிலுக்கு
வரும் வழியில் ஒரு முராரி ஸ்வீட்ஸைப்பார்த்து வண்டியை நிறுத்தி விசாரித்தால் அது ‘அண்ணா
முராரி’யாம். விலகிச் சென்று கொஞ்ச தூரம் பயணித்து ராமர் கோயிலுக்கு முன்பாக ஒரு
பெரிய முராரியைக் கண்டு, டிரைஜாமூனை வாங்கிக் கொண்டு, விசாரித்தால் அதுவும்
தலைமையக முராரியில்லையாம். அது பெரிய
கடைத்தெருவில் இருக்காம். இது ‘பெரியவர்’ முராரியாம். அட போங்கடா... இன்னும்
எத்தனை ஸ்ரீ முணியாண்டிவிலாஸ் இருக்கிறதோ தெரியவில்லை.
அதனால் என்ன?என் காதலி குடந்தைக்கு விஜயம்
செய்வதை விட்டு விடப்போகிறேனா என்ன?