இன்று ‘தமிழ் ஹிந்து’ பத்திரிகையில்,
மனுஷ்யபுத்திரனுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை என்பது குறித்து, ஒரு
முழுப்பக்கக் கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரையின் சாரம் என்னவென்றால், அவர் குடியிருந்த வீட்டினை உரிமையாளர்
விற்றுவிட்டதால், வீட்டைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம், அவருக்கு ஏற்பட்டுள்ளது.
வேறு வீடு தேடிக் கொண்டிருக்கிறார். ஒட்டு
மொத்த சென்னையும் இந்துத்துவாவிற்குப் பின்னால் சென்றுவிட்டதால், ஷாகுல் ஹமீது என்னும் மனுஷ்யபுத்திரனுக்கு, அவர்
இஸ்லாமியர் என்ற காரணத்தாலேயே வாடகைக்கு வீடு மறுக்கப்படுகிறது என குற்றம்
சாட்டுகிறார்.இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையா எனக் கேட்டுள்ளார்.
கால ஓட்டத்தில், ஒரு
காலத்தில் ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’ என்றும் தற்போது ‘மவுண்ட் ரோடு மாவோயிஸ்டு’
என்றும் வர்ணிக்கப்பட்டு நக்கல் செய்யப்படும் இந்தப் பத்திரிகை, இக் கட்டுரையை,
இவ்வளவு பெரிய அளவில் வெளியிட்டுள்ளதன் நோக்கம் தெளிவானது.
அப்பத்திரிகை
நினைத்திருந்தால், ஒரு இந்துவிற்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு அமர்த்திக்
கொடுத்திருக்காதா?மேம்போக்காகப் பார்ப்பதற்கு, மதச் சார்பற்றவர்களை வெகுண்டெழ
வைக்கும் கட்டுரைபோலத் தோன்றினாலும், உண்மையில் இந்து-இஸ்லாமிய பாகுபாட்டை
தீவீரமாக்கும் உள் நோக்கம் கொண்ட கட்டுரை. சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும்
அடிப்படைவாத சக்திகளின் வேறு ஒரு முகம்தான் இக்கட்டுரை. வலது எக்ஸ்ட்ரீமுகு நேர் எதிர் முகாம். ஏதோ, மொத்த இந்தியாவும் முஸ்லீம்களுக்கு எதிராக
திரும்பிவிட்டது என்ற மாயத்தோற்றத்தை
ஏற்படுத்த வேண்டும்; அதன் மூலம் தனது ‘அரசியலுக்கு’ ஏதாவது இரை கிடைக்காதா என்று
ஏங்கும் நரித்தனம்தான் அந்தச் செய்தியின் பின்னனி என சந்தேகிக்கிறேன்.
அவர் குடியிருந்த வீடு,
ஒரு இந்துவுக்குச் சொந்தமானதுதான் என்பதை எங்கும் சொல்லவில்லை, திரு. ஹமீது.
உண்மையில் வீடு
வாடகைக்கு விடுபவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுப்பதில்லை
எனத் தீர்மாணித்துவிட்டார்களா என்ன? அப்படியெல்லாம் இல்லை.
வாடகைக்கு
விடுபவர்களின் நோக்கம் மூன்று தான்.
ஒன்று ‘அடிதடியில்
ஈடுபடும் நபர்கள்’, ‘ரௌடிக்கூட்டம்’, ‘சமுதாய விரோத/பண்பாட்டு விரோத ஆசாமிகள்’
யாரும் வாடகைக்கு வந்து விடக் கூடாது. இரண்டு ‘வாடகை தவறாது கொடுக்கும் நபராக
இருக்க வேண்டும். மூன்று, வீட்டினை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதுதவிர அசைவ
உணவு சமைப்பவர்கள் வேண்டாம் என்ற ஒரு சிறு பிரிவு இருக்கும். இதில் இஸ்லாமியர்கள்
எங்கே வந்தார்கள்?
1973-ல், நான்
வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஒண்டுக் குடித்தனம் கிடைத்தது. ஆனால்
ஓனர், ‘ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குத்தான்’ கொடுக்க இயலும் என்றார். அவர்
மறைமுகமாக குறிப்பிடும் சமுதாயத்தைச் சார்ந்தவந்தான் நான் என்று சொல்லி, வாடகைக்கு
வர எனக்கு விருப்பமில்லை. ‘சரி.. பரவாயில்லை, வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன்..’
எனக் கிளம்பும்போது, அவரே, ‘நீங்க
அசைவமா..?’ என்றார். ‘இல்லை..’ என்றேன். சரி மூன்று மாதம் மாத்திரம் இருந்து
கொள்ளுங்கள்; பிறகு காலி செய்யவேண்டும் என்று சொல்லி, மூன்று மாத வாடகையை
முன்னதாகவே வாங்கிக் கொண்டார். எனக்கு அப்போது அவசியம் வீடு தேவைப் பட்டதால்,
அதற்கு உடன் பட்டேன்.
இதில் ஒரு விசித்திரம்
இருக்கிறது. வீட்டின் ஓனர், அவர் குடியமர்த்த விரும்பிய சமுதாயத்தைச்
சார்ந்தவரில்லை. குடிவந்தபின் பிரிதொரு நாள், அவரிடம் கேட்டேன். “நீங்கள், அந்தச்
சமுதாயத்தைச் சார்ந்தவரும் இல்லை.. ஆனால் அந்த சமுதாயத்தவருக்குத்தான் வீடு வாடகைக்கு
விடுவேன் என்றீர்களே, எதற்காக? “ என்றேன். அவர் படு கேஷூவலாக, அதெல்லாம்
ஒன்றுமில்லைசார்.. அவர்கள் ஒண்ணாந்தேதியானா சரியா வாடகை கொடுத்து விடுவார்கள். வாடகை
ஏத்தினா மறுப்பேதும் சொல்ல மாட்டார்கள். சண்டை சச்சரவுக்குப் போக மாட்டாங்க. நம்ம
கண்டிஷனுக்கு பெரும்பாலும் ஒத்துகிட்டு, தலையை ஆட்டிகிட்டு போயிடுவாங்க.. அதான்”
என்றார்.
இது தான் வீட்டு
உரிமையாளர்களின் சைக்காலஜி. ரகளை, வம்பு - தும்பு இல்லாத ஆட்கள் வேண்டும்.
அவ்வளவே!
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; காவல் துறையைச் சார்ந்தவர்கள், வக்கீல்கள்,
ஆடிட்டர்கள், ரௌடி எலிமென்ட்ஸ், பல இடங்களில் பேச்சுலர்கள்.. என பலருக்கும் வீடு
கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இதைப்பற்றி இப்பத்திரிகை என்றாவது தமாஷாகக் கூட
எழுதியிருக்கிறதா?
இஸ்லாமியர்கள்
என்றாலே, வன்முறையாளர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது யார்? இந்த மீடியாக்கள்
தானே? மீடியாக்களுக்கு பரபரப்பு வேண்டும், சர்குலேஷன் ஏறனும். தனது முதலாளியின்
அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல, கருத்துருவாக்கம் செய்யும் வகையில், செய்திகளை ‘பிரசன்ட்’
செய்யனும். அவ்வளவுதான்.
இன்று பத்திரிகையில்
அவரது செய்தி வந்துவிட்டது. இனி, எவரேனும் இஸ்லாமியர் அல்லாத ஒருவர், வலிந்து தனது
வீட்டினை மனுஷ்யபுத்திரனுக்கு வாடகைக்குத் தரக்கூடும். அதை ‘ஹிண்டு’ வெளியிடாமலும்
போகும்.
நாடு பிரிவினை
அடைந்தபோது, தனது அக்கம்பக்கத்தி லிருக்கும் இஸ்லாமியர்களை தங்கள் வீட்டிற்குள்
ஒளித்துவைத்து, மதக் கலவரங்களிலிருந்து காப்பாற்றிய இந்துக்கள் இங்கே ஏராளம்.
அதுதான் இந்த நாட்டின் பாரம்பர்யம். அதைக் காப்பாற்றும் வகையில், முன்னெடுத்துச்
செல்லும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.
பொறுப்பற்றவகையில்
செய்திகளை வெளியிடுவது எந்தவகையான பத்திரிகை தர்மமென்று தெரியவில்லை.