Wednesday, February 8, 2017

ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டாணம்.

ஒரு முறை திருவெண்காடு (ஸ்வேதாரண்யம்) சென்றபொழுது,பரமசிவேந்திரர்  அதிஷ்டாணத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.   அங்கே நிலவிய சக்தி நிலையினைக் கண்டு மெய்மறந்து நிற்கும் பொழுது, அங்கே இருக்கும் காரியஸ்தர், கரூர் அருகே இருக்கும் சதாசிவபிரமேந்திரரின் ஜீவசமாதிக்கு சென்றிருக்கிறீர்களா என்றார் (அதிஷ்டாணம்) . இல்லை என்று சொல்ல, புன்னகைத்துவிட்டு, ‘சென்றுபாருங்கள்’ என்று மட்டும் சொன்னார்.

அதுமுதற்கொண்டு கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்திருக்கும் அந்த அதிஷ்டாணத்தை தரிசிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அத்திட்டம் ஏனோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  அவர் நம்மை கூப்பிடவில்லை என்று ஏமாற்றவிரும்பவில்லை. அங்கு சென்றுவர அவ்வளவு முயற்சி எடுக்கவில்லை என்பதே உண்மை.

நேற்று, சட்டென அங்கே சென்றுவரத் தீர்மாணித்து அதிகாலையில் புறப்பட்டேன். கரூரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது நெரூர் என்னும் சிற்றூர்.  பெரம்பலூர்-முசிறி வழியாக்ச் சென்றதால், கரூர் நகரத்தின் உள்ளே செல்லவில்லை.

இங்கே ஜீவ சமாதி கொண்டிருக்கும் சதாசிவ பிரமேந்திரர், பல பாடல்களை இயற்றியவர். அவர் இயற்றியவற்றுள் சிலவே கிடைக்கப்பெற்றன எனச் சொல்லப்படுகிறது. ‘மானஸ ஸஞ்சர்ரே..’, ‘ பஜரே ரகுவீரம்..’ போன்ற கீர்த்தனைகள் இவர் இயற்றியதுதான்.

துறவி. பிரம்ம ஞாணி. சுமார் 400 வருடங்களுக்குமுன் வாழ்ந்தவர். ஆடை துறந்தவர். அத்வைத ஞானி. இவரது ஜீவ சமாதி அளப்பறிய சக்தி வாய்ந்தது.  நம்பிக்கை உள்ளோர் உணரலாம். இவரது இயற்பெயர் சிவராம கிருஷ்ணன். காஞ்சி மடத்தின் 57வது பீடாதிபதி,  ஸ்ரீ பரசிவேந்திர சுவாமிகள், இவரது ஞானத்தைக் கண்டு, பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டினார். 

இவருக்கு காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்க அழைக்கப் பட்டதாகவும், அதை இவர் மறுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். இவர் மதுரையைச் சார்ந்தவர்.

பிரமாதமான வாதத்திறமை கொண்டவர். இதனாலேயே, மைசூர் மகாராஜா ஆஸ்தான வித்வானாக்கிக் கொண்டாராம். ஒரு முறை பரசிவேந்திரர்  இவரைப் பார்த்து, ‘ஏன் இவ்வளவு பேசுகிறாய்..உனக்கு நாவடக்கம் தேவை எனக் கூற, அது முதற்கொண்டு யாரிடமும் வாதம்புரிவதை நிறுத்திக் கொண்டார். மௌனகுரு.

அமைதியை விரும்பிய இந்த மகான், இறுதியில் வந்தடைந்த இடம் நெரூர். அருகிலேயே காவிரி. வறண்டு கிடக்கிறது. தென்னை பணை மரங்கள் உட்பட பல மரங்கள் பட்டுப்போய் நிற்கின்றன.

நேற்று (07/01/2017), இந்த மகான் அதிஷ்டாணம் அமைந்த, விஸ்வனாதர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஏழாவது வருடமாம். அபிஷேக ஆராதானைகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன. தற்செயலாக இந்த நாள் அமைந்தது அதிருஷ்டம்தான்.

இவரைப்பற்றி பல செய்திகளைக் கூறுகிறார்கள். அவர் வாழ்ந்த சமயத்தில், ஆற்றில் கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு, மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவை தன் மகிமையால் காண்பிப்பாராம். யாரோ ஒரு மன்னன், இவரது ஆடையற்ற நிலையினைக் கண்டு, இவரது கையை வெட்டிவிட, அதுபற்றி யாதொரு உணர்வுமின்றி அவர் போய்க் கொண்டிருந்தாராம். ஒருமுறை ஆற்று வெள்ளத்தின்போது, தவறுதலாக மௌன நிலையில் அமர்ந்திருந்த இவரையும் மணல் மூட்டைகளைக் கொண்டு மூடிவிட்டனராம். பின் சில நாட்களுக்குப் பிறகு தவறுணர்ந்து, மீண்டும் தோண்டிப் பார்க்க, எந்த நிலையில் இருந்தாரோ, அதே நிலையில் காணப்பட்டாராம். இப்படி பல கதைகளைச் சொல்கிறார்கள்.  

எது எப்படியோ, அவரது அதிஷ்டாணத்தருகே செல்லும் பொழுதே ஒருவித சக்தி பரவுவதை உணரமுடிகிறது. நானே ஏற்படுத்திக் கொண்ட பிரமையோ, உண்மையோ தெரியாது. பரவச நிலை உணர்ந்தேன் என்பது உண்மை. தஞ்சை சரபோஜி மன்னருக்காக, இவர்  ஏற்படுத்திய கோயில்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். புதுக்கோட்டை மன்னருக்காக மணலில் மந்திரம் எழுதிக் கொடுத்தாராம்.
இந்த மகான் அதிஷ்டாணத்திற்கு முன்பாகவே (அந்த வளாகத்திலேயே) விஸ்வனாதர் ஆலயம் உள்ளது. அழகான ஆலயம்.

நெரூரில் சமாதியான பொழுது, அரூபமாக ஏக காலத்தில் கராச்சியிலும் (பாகிஸ்தான்), மானாமதுரையிலும் (ஆனந்த வல்லியம்மன் கோயில்) சமாதியானதாகச் சொல்கிறார்கள்.

நம்பிக்கை உள்ளவர்கள் செல்லவேண்டிய தலம்.


செல்லும் வழி: கரூர் சென்று, அங்கிருந்து ஆட்டோ,லோக்கல் பஸ் மூலம் இந்த சிற்றூரை அடையலாம்.