இது நவம்பர். ஓய்வு பெற்ற மத்திய அரசு
ஊழியர்கள், தாங்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை அரசாங்கத்திற்கு
நிரூபிக்க வேண்டிய மாதம். இதுவரை இருந்த நடைமுறை, பென்ஷன்தாரர்கள், தாங்கள் ‘உயிரோடுதான்
இருக்கிறோம்’ என்ற ஒரு சுய டிக்ளரேஷன் கொடுத்தால் போதுமானது. அப்படிக்கொடுக்க வில்லை யெனில்,
பென்ஷன் நிறுத்தப்படும்.
இயல்பிலேயே காத்துக் கிடப்பதற்கும், முடிவில்லா
வரிசையில் நிற்பதற்கும் தயங்கும் சோம்பல் பேர்வழி நான். இந்த ஒரு காரணத்தாலேயே, ‘அல்லோபதி டாக்டர்கள்
பக்கம்’ செல்வதைத் தவிர்ப்பேன். ஆனால் பென்ஷன் விஷயத்தில், ஓய்வூதியதாரர்களுக்கு
என்ன ஆப்ஷன் இருக்கு? எனவே, நான் பென்ஷன் வாங்கும் தபால் நிலையத்திற்கு டிக்ளரேஷன்
கொடுக்கச் சென்ற பொழுது, அங்கே கண்ட இமாலய
மக்கள் வரிசையைக் கண்டு, மிரண்டு திரும்பிவிட்டேன். கூட்டம் லைஃப் சர்டிபிகேட்
கொடுக்கும் கூட்டம் மட்டுமல்ல; தபால் நிலையத்தில் 500/1000 நோட்டுக்களை டிபாசிட் செய்யும்
கூட்டமும் கூட.
கூட்டம் சற்றே குறையட்டும், பிறகு செல்லலாம் என
ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தேன். குளத்தின்மேல் சினம் கொண்டு கால்கழுவாமற்
போனால், குளத்திற்கு என்ன நட்டம்? எனவே நேற்று, எனக்கு பென்ஷன் வழங்கும் தபால் நிலையத்திற்கு,
டிக்ளரேஷன் கொடுக்கச் சென்றேன்.
சம்பந்தப்பட்ட தபால் நிலைய அலுவலரை அணுகியபோது,
‘இனி நீங்கள் இம்மாதிரியான சர்டிபிகேட்டெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை’ என்றார். ‘ஆஹா..
என்னே என் பாக்கியம். மனிதர்களை அரசாங்கம் நம்ப ஆரம்பித்துவிட்டதே’ என குதூகலிக்க
ஆரம்பிக்கமுன், அவர் வேறொரு தகவலைச் சொன்னார். அதற்குப் பதிலாக, உங்களது ‘ஆதார் எண்ணையும்’ , ‘கைவிரல் ரேகையையும்’ பதிவு செய்யணும் என்றார். அதுதான் புதிய ஆணையாம் .
‘ஹாங்.. ஒவ்வொருவருடமுமா?’
‘ஆமாம் ஒவ்வொரு வருடமும்.’
‘அட கடவுளே! சரி அதற்கு யாரைப் பார்க்கணும்?’
பென்ஷன் ஆபீஸில் செய்யணும். ஆனால் உங்களது
கைரேகையை பதிவு செய்யும் கருவி இங்கேயே இருக்கு. உங்களது ஆதார் கார்டின் நகலை
எடுத்துக் கொண்டு, அதில் உங்களது பிபிஓ எண், சேவிங்க்ஸ் அக்கவுண்ட் நெம்பர்,
காண்டாக்ட் தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதி சமர்ப்பியுங்கள்.
நல்ல வேளையாக, யதேச்சையாக ஆதார் அட்டையை கையோடு
எடுத்துச் சென்றதால், அதை நகலெடுத்து,
அவர்கள் கேட்ட ஜாதகக் குறிப்புகளைக்
நிரப்பி எடுத்துக் கொண்டு சென்றேன். எனக்கு முன்னே, சில வயதானவர்கள் ‘கைவிரல்களை’
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். என் முறை வந்ததும், ஜாதகக் குறிப்புகளைக் கொடுத்துவிட்டு, காத்திருந்தேன்.
பின் அந்த அலுவலர் ‘பயோமெட்ரிக் அட்டென்டன்ஸில்’ பயன்படுத்தும் ஃப்ங்கர் பிரிண்ட்
ஸ்கேனரை, டிராயரிலிருந்து எடுத்தார்.
‘போன வருஷம், எந்த விரல் ரேகையை வைத்தீர்கள்?’
இது என்ன இம்சை!
‘தெரியலை
மேடம். மறந்திடுச்சே..’
ஒரு பார்வை பார்த்தார். பிறகு, வலதுகை
கட்டைவிரலில் ஆரம்பித்து, ஒவ்வொருவிரலாக, ஸ்கேனரில் வைத்து பொறுத்திப் பார்த்தார்.
காய்கறி நறுக்கியே, கைவிரல் ரேகைகள் எல்லாம் கருத்துப் போயிருந்த்து. காய்களை நறுக்குவதற்குப் பதிலாக, விரல்களை
நறுக்கி, நானாகப் போட்டுக் கொண்ட ‘ரேகைகள்’ ஏராளம். அதானால் அந்த மிஷின் குழப்பிப்
போய்விட்டதோ என கிலி பிடித்துக் கொண்டது. அதிலும், இன்று ‘வாழைப்பூ’
நறுக்கியிருந்தேன். இதனால், விரல்கள் எல்லாம் மேலும் கருப்பாகியிருந்தன. கொஞ்சம்
கூச்சமாகவும் இருந்தது. கையை இவ்வளவு கருப்பாகவா வைத்திருப்பார்கள் என நினைத்துக்
கொண்டால் என்ன செய்வது?
வலதுகையின் எந்த விரலும் மேட்ச் ஆகாததால், அதை
விட்டுவிட்டு, இடதுகை விரல்களை மேட்ச் செய்ய ஆரம்பித்தார் அலுவலர். ஒருவேளை இந்தக்கையின்
ரேகையும் ஒத்துப் போகவில்லையெனில், மாற்றாக என்ன செய்வது எனக் கவலை வந்துவிட்டது. மீண்டும்
ஆதார் நிலையத்திற்கே போகச் சொல்வார்களோ என்ற பீதி தலைசுற்ற வைத்தது. ஏனெனில் ஆதார் அட்டை வாங்குவதற்குள் உயிர்
போய்விடும்.
சினிமா க்ளைமேக்ஸ் போல பதட்டம்.
இடதுகை ஆட்காட்டி
விரலை வைக்கும் பொழுது, திடீரென கர்ஸர் வேறுஒரு விதமாக சுழன்று, ‘ஆதார் டாடாபேஸில்’
ரேகையை அடையாளம் கண்டுகொண்டது சாஃப்ட்வேர்.
விரல் ரேகை மறைந்து, ஆதார் டேட்டா பேஸில்
பதிந்திருந்த, அடியேனின் திருவுருவம் திரையில் தோன்றியது. அந்த உருவம் ‘பேய்’ போல
பயமுறுத்த, அந்தப் படம் நீங்கள் தானா என அந்த அலுவலர் கேட்டுவிடுவாரோ என அஞ்சிக்
கொண்டிருந்தேன். நல்லவேளை, அப்படி ஏதும் நிகழவில்லை. ஆதார் புகைப்படங்களைப் பார்த்துப்பார்த்து
பழகிவிட்டார் போல.
விஷயம் அத்தோடு முடியவில்லை. ‘உங்களது
மொபைலுக்கு ஒரு ‘OTP’
வந்திருக்கும் பாருங்க.. அதைச் சொல்லுங்க..’
இது அடுத்தகட்ட சோதனை போலும். சாதாரணமாக வெளியே
செல்லும்போது ஸ்மார்ட்ஃபோனை எடுத்துச் செல்லமாட்டேன். ஒரு பேஸிக் மாடல் சின்ன ஃபோனைத்தான்
எடுத்துச் செல்வேன். தொலைந்தாலும் சின்னதோடு போகும். இன்று என்னவோ ஸ்மார்ட்
ஃபோனையும் எடுத்துச் சென்றிருந்தேன். அதனால் OTP யை சொல்ல முடிந்தது. இன்றைய தினம் அதிர்ஷ்ட
தினம்தான்.
‘சார்...அடுத்த வருஷம் வரும்போது, மறக்காமல் இடதுகை
ஆட்காட்டிவிரலையே நீட்டுங்க..’
‘சரிங்க..’
ஒருவழியாக நான் உயிரோடுதான் இருக்கிறேன் என அரசாங்கத்திற்கு நிரூபித்துவிட்டு, பென்ஷனையும் வாங்கிக் கொண்டு ஒருவழியாக வீடு திரும்பினேன். இந்த
சமாச்சாரம் முடியஅரை நாள் செலவாயிற்று.
எனது சந்தேகம் இதுதான். ‘ஆதார் அட்டை’
ஆப்ஷனல்தான் என்பதில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது
ஏன்? கம்ப்யூட்டர்மயமாகியபின் வேலை சுலபமாவத்ற்குப் பதிலாக, இன்னும்-இன்னும்
காம்ப்ளிகேட் ஆவது ஏன்?
ஒரு ‘ஆப்’ வெளியிட்டு, அதன் மூலம், மூத்த
குடிமகன்களை அலையவிடாமல், வருடம் ஒருமுறை மொபைல் ஃபோன் மூலம் வீட்டிலிருந்தபடியே
கைரேகையை பெற்றுக் கொண்டு உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டால் என்ன?
போஸ்டாபீஸில் பென்ஷன் பெறும் நபர்களாவது அங்கே வைக்கப்படிருக்கும் ஸ்கேனர்
மூலம் பதிவேற்றலாம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர்
எல்லோரும் ‘பென்ஷன் ஆபீஸுக்கு’ செல்வது சாத்தியமா? அந்த அளவு கட்டமைப்பு
இருக்கிறதா? (பென்ஷன் ஆபீஸில் வேலை முடிப்பது என்பது வேதாளம்-விக்ரமாதித்தன்
கதைபோல, கொடுமையான அனுபவம்)
வங்கிகளில் பென்ஷன் பெறுவோர் என்ன ஆவார்கள்?
அங்கு இந்த ஸ்கேனரைப் பார்த்ததில்லையே?
ஏதோ, உடம்பில் கொஞ்சம் தெம்பிருப்பதால் அவர்கள்
இழுத்த இழுப்பிற்குச் செல்லமுடிகிறது. நடக்கமுடியாமல் இருப்போர், நோயுற்றிருப்போர், விபரமறியாத மக்கள், விதவைகள்...
இவர்களெல்லாமும் கூட இப்படி அலையத்தான் வேண்டுமா?
மூச்சு வாங்காமல், இருபதடி தூரம்கூட நடக்க
முடியாத கிழங்களை இந்த பாடுபடுத்த வேண்டுமா? உலகில் எங்காவது மூத்தகுடிமகன்களை
இப்படி இழுத்தடித்து, இம்சைப்படுத்தும் சிஸ்டம் இருக்கிறதா என்ன?
வங்கிகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ ஸ்கேனர்
இல்லையெனில், பென்ஷன் அலுவலகத்திற்குச் சென்று, டிஜிடல் லைஃப்சர்டிபிகேட் பதிவு
செய்து, பின் அவர்கள் தரும் (VM-NICSMS)
ப்ரணாம் எண்ணை கொண்டுபோய், பென்ஷன் தரும் அலுவலகத்தில்
சேர்ப்பிக்க வேண்டும். இதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமா இந்தியாவில்?
இறந்துபோன ஆட்களுக்கு பென்ஷன் பணம் போய்ச்
சேரவேண்டியதில்லைதான். அதற்கான வழிமுறைகளை எளிதாகச் செய்யாமல், எதற்காக இப்படி
படுத்துகிறார்களோ?