Thursday, September 29, 2016

மீடியா மழை

இன்று எனது ஆத்ம நன்பர் ஒருவர் ஒருவர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். மனிதர், ஏகக் கடுப்பிலிருந்தார். காலை தமிழ் செய்திச் சேனல்கள் பார்த்திருக்கிறார். சென்னையில் நேற்று ஏதோ ஒரிடத்தில்,8 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. ஒரு சென்டி மீட்டர் கூட இல்லை.  கால் கட்டைவிரல் மூழ்கும் ‘வெள்ளத்தில்’ நின்று கொண்டு, “மழை எங்களைப் தொல்லைப் படுத்துகிறது.. பள்ளிக்குச் செல்லமுடியவில்லை.. மூக்கைச் சிந்தி துடைக்க முடியவில்லை.. முதுகு சொரிய முடியவில்லை”  என முழ நீள மைக்கின் முன் புலம்பியிருக்கின்றனர் ஜனங்கள். என்ன மாதிரியான மீடியா ரிப்போர்டிங் இது நன்பர்  சலித்துக் கொண்டார்.

மழையைப் போற்றாத இலக்கியங்கள், புலவர்கள், இதி காசங்கள் உண்டா? வள்ளுவர், கம்பர்  என  பலரும் “வானின்று அமையாது உலகு” என “மாமழையைப் போற்றி” யல்லவா பாடு கின்றனர்? ஆனால்  நம் மீடியாக்களுக்கு மட்டும்  நல்ல மழை என்று சொல்லத் தெரியாது; ‘பேய்மழை’, ‘பிசாசு மழை’ என்றுதான் வரும்.

நாம் செய்யும் செயல்களுக்கு மாத்திரமல்ல.. உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லுக்கும், ஏன்... மனதின் நினைவுகளுக்கும் கூட ஒரு பயன், அதற்கேற்ற வினை உண்டு.
மீடியா மக்களே, இப்படியே எப்ப தூற்றல் பொட்டாலும், ‘பேய்’ என்றே வருணியுங்கள். மழையும், பேய் போலத்தான் பெய்யப் போகிறது. பெய்தால் அடித்து நொறுக்கி; இல்லாவிடில் காய்ந்து போய், குடிக்க நீரில்லாமல் செய்யப் போகிறது.

இப்பொழுதுதான், கர்னாடகாவிடம், போராடி-போராடி தண்ணீர் பெற்றோம். பாலாறு காய்ந்துவிட்டது என புலம்பி, ஆந்திராவிடம் சண்டைக்கு நிற்கிறோம்.  உங்களது அமங்கல வார்த்தைகளையும் மீறி கொஞ்சம் மழைபெய்தால், உடனே புலம்புவோம்.

மழையைப் போற்ற பழகுங்கள் மீடியாக்களே! 

தண்ணீர் என்பது ‘டேங்கரில்’ தானாக வரும் வஸ்து அல்ல; அது நிலத்திலிருந்து பெருவது. நிலத்திற்கு மழைதான் ஆதாரம்.  நம்மாழ்வார் சொல்வார். “நீருக்கு கீழே நோண்டாதீர்கள்; வானைப் பாருங்கள்” என. எத்தனை நம்மாழ்வார்கள் வந்தாலென்ன? நம் புத்தி மாறவா போகிறது? 

இந்தம்மா கொண்டுவந்த்திலேயே, உருப்படியானது ‘மழை நீர் சேகரிப்புத் திட்டம்’. அதையும் அரசியல் காரணமாக ஊற்றி மூடியாகிவிட்டது.  நாமாக உணர்ந்து, நாமே செயலாக்க வேண்டிய திட்டமல்லவா அது?  நாம் பூமித்தாயிடமிருந்து பெற்ற நீரின் வட்டியைக் கூட பூமிக்குத் திரும்பச் செலுத்த வேண்டாமா?


Rain rain come again.