|
|
|
Sunday, April 29, 2012
Some Facts about Cancer
Thursday, April 19, 2012
கேன்ஸரின் அறிகுறிகள்:
அருமைத் தோழர்களே!
உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு கீழ்க்கண்ட சிம்டம்ஸ் இருப்பின் உடனடியாக ஸ்பெஷலிஸ்ட்
மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், கேன்ஸர் எவ்வளவு ஆரம்பத்தில் கண்டறியப்படுகிறதோ,
அவ்வளவு எளிதில் குணப்படுத்தக் கூடியது. பெண்கள் பலர் இந்த அறிகுறிகளை
உதாசீனப்படுத்துகிறார்கள். பெரும்பாலும், காலம் தவறித்தான் கேன்ஸர் நோய்
இருப்பதைக் கண்டறிகிறோம். சிம்டம்களை அலட்சியப்படுத்தாதீர்கள்! பின்பு என் போல வேதனைப் படாதீர்கள்!
1. காரணமற்ற எடை இழப்பு:
எடை இழப்பு என்பது பெண்களுக்கு இனிப்பான செய்திதான். ஆனால், திட்டமிடாத எடை இழப்பு
(மாதத்திற்கு 4 அல்லது 5 கிலோ) கவணத்தில் கொள்ளப்பட வேண்டியது.
2.
அடிவயிறு காரணமற்று
பருப்பது / வலிப்பது / இறுக்கமாக இருப்பது. இது ஓவரியன் கேன்சராக இருக்க்க்
கூடும்.
3.
மார்பக அமைப்பில்
மாற்றம். மார்பகங்களில் சிகப்பு திட்டு இருந்தாலோ, ஏதேனும் கட்டி போல தென்பட்டாலோ,
மருத்துவரை அணுகுவது நல்லது. பெண்கள் எப்படி தாங்களே சுய சோதனை செய்து கொள்ளலாம் என்ற
தகவல் பரவலாக வலையில் கிடைக்கிறது.
4.
பீரிடியட் களுக்கிடயே,
அசாதாரணமான உதிரப்போக்கு மற்றும் மெனோபாஸுக்குப் பின் சில சமயங்களில்
உதிரப்போக்கு. மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் மகளிர், இது சாதாரணமானதுதான் என
எண்ணுவார்கள். உண்மை அப்படியில்லை! இதை கைனகாலிஜிக் ஆங்காலஜிஸ்ட் உறுதி
செய்யட்டும்.
5.
சரும நிறம் மாற்றம்.
சருமம் திட்டாக நிறம் மாறினாலோ (மச்சம் போல) அல்லது இரத்தப் போக்கு இருந்தாலோ, மருத்துவரை
அணுகுங்கள்.
6.
விழுங்குவதில் சிரமம்.
இது அலட்சியப்படுத்தக்கூடிய விஷயம் இல்லை. நோட் கேன்ஸராக இருக்கக் கூடும்.
7.
அஜீரணம் / பசியின்மை.
காரணமின்றி இவை இருப்பின் செக் செய்து கொள்ளுங்கள்.
8.
வாயினுள் ஏதாவது
வெள்ளைத் திட்டு இருந்தாலும் சந்தேகியுங்கள்.
9.
வலி. காரணம்
கணடறியப்படாத வலி எதுவாக இருப்பினும் அது தீர ஆராயப்பட வேண்டியது.
10.
நெறிக்கட்டிகளில்
வீக்கம் / மாற்றம். (Lymph Nodes) லிம்ப் நோட்களில்
வீக்கமோ இருந்தால், குறிப்பாக கழுத்து / அக்குள் / மார்பகம் எங்கே இருந்தாலும் அது
கவலைக்குறியது.
11.
ஜுரம் / இருமல். விளக்கம் அடிக்கமுடியாத ஜூரம் மற்றும் இருமல் தொடர்ந்து
இருந்தால் அதுவும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டியதே.
12.
காரணமற்ற களைப்பு /
மலச்சிக்கல். இவைகளையும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மேற் சொன்ன சிம்டங்கள் இருந்தால், அது
புற்று நோயாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் இவை புற்று நோயின்
அறிகுறிகளாக இருக்கக் கூடும். காலத்தே கவணித்து சிகிச்சையளித்தால், நோய் எளிதில்
குணமாகக் கூடுமல்லவா?
Sunday, April 15, 2012
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி........
கடலூர் - ஜனவரி
-2012
எனது மனைவி, தனது
தொண்டை வலிப்பதாகக் கூறினார். விழுங்குவதில்
சிரமம் இருப்பதாகவும் சொன்னார். பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்து, உண்மையிலேயே
இருக்கிறதோ-இல்லையோ சதா புகார் தெரிவிக்கும் வழக்கம் உள்ளவர்கள் என்னும் கருத்து
எப்படியோ எனது மனதில் ஊறிப்போய் இருந்தது. இதுவும் அப்படிப்பட்ட ஒரு புகார்தான் என,
சில நாள் கண்டுகொள்ளவில்லை. எனினும் தொண்டை இன்ஃபெக்ட் ஆகியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில்,
உப்புத் தண்ணீர் கொண்டு ‘காகிள்’ செய்யுமாறு கூறினேன். பின்னர் தினசரி கவலைகளில் ‘தொண்டை வலி’ குறித்து, இருவரும் மறந்து போனோம்.
பிப்ரவரி – 2012.
மீண்டும் தொண்டை
வலிப்பதாக மனைவி கூறவே, மருத்துவரிடம் செல்லத் தீர்மானித்தோம். தொண்டை வலி
என்றதும் என்ன தோன்றும்?அதன்படி காது,
மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்றோம். திருப்பதி பெருமாள் தரிசன ‘கியூ’ போல நீண்டிருந்த கும்பலினுள், நாங்களும்
சென்று, முடிவின்றி காத்திருந்தோம். ஒரு வழியாக இரண்டு மணி நேர காத்திருப்புக்குப்
பின் ‘தரிசனம்’ கிடைக்கப் பெற்றோம். சில ‘ஆன்டிபயாடிக்குகளை’ எழுதிக் கொடுத்தார். “எதனால் இந்த வலி?
எப்போது சரியாகும்?” என்ற வினாக்களுக்கு, ‘பார்க்கலாம்.., அடுத்த வாரம் வந்து வாருங்கள்’ என்ற பதிலோடு சரி. தற்போது நிலவும்
மோஸ்தர்படி, தனது கிளினிக்குக்குள்ளேயே மருந்துக் கடையும் வைத்திருந்தார் டாக்டர்.
வாங்கும் மருந்துக்கு ரசீதெல்லாம் கிடையாது! மாத்திரைகளை போட்டுத் தரும் ‘பிரௌன்
நிற’ கவரின் மேலே மருந்துகளின் விலை கிறுக்கித் தரப்படும். கேள்வி கேட்க
முடியாது. மருந்தின் விலை தவறாமல் ரூ.500/-ஐத் தொடும். மருந்துதான் தீர்ந்த்தே தவிர வலி
குறைவதாக இல்லை. மீண்டும் மாத இறுதியில், இதே டாக்டரிடம்
படையெடுப்பு. மீண்டும் மருந்து-மாத்திரை. ஆனால் நிவாரணம் ஏதும் இல்லை.
மார்ச்-2012
நகரில் சிறந்த
காது,மூக்கு,தொண்டை நிபுணர்களில் ஒருவராக இருந்ததால்(!), அவரிடமே மீண்டும் பயணம்.
இம்முறையும் மருந்து மாத்திரைகள் தான். மூன்று முறை தொடர்ந்து வருகிறார்களே, வேறு ஏதாவதாக
இருக்கலாமோ என்ற சிந்தனை ஏதும் அவருக்கு இல்லை. ஒரு டெஸ்ட் எழுதிக் கொடுத்தார்.
அந்த டெஸ்ட் எடுக்க வேறு மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும். சென்றோம். FNAC டெஸ்ட். மூன்று நாள் காத்திருப்புக்குப் பின், டெஸ்ட்
எடுத்த டாக்டர் கொடுத்த ரிப்போர்ட், “மெடிக்கல் எதிக்ஸின் உச்ச கட்டம். “டெஸ்ட் எடுத்த சாம்பிள் போத வில்லை. எனெவே வேறு
ஒரு டெஸ்டோ அல்லது கிளினிக்கலாகவோ முடிவெடுத்துக் கொள்ளுங்கள்”.
(சாம்பிள்
எடுத்ததும் இவரே!)
எனது மகள் ஆக்ராவில்
இருக்கிறார். அவர் சொன்னார், ‘அப்பா, நீ அம்மாவை அழைத்துக் கொண்டு ஆக்ராவுக்கு
வந்துவிடு. இங்கே நல்ல இ.என்.டி ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார். அவரிடம்
காட்டலாம். அப்படியே உனது பேரப் பையன்களையும் பார்த்தது போலவுமிருக்கும்”. மகள்,
மரும்கன், குழந்தைகளைப் பார்த்து நாளாகிவிட்டதால், நாங்கள் புறப்பட்டு விட்டோம்.
அங்கு சென்ற இரண்டாம் நாள் உள்ளூர் இ.என்.டி ஸ்பெஷலிஸ்டிடம் அழைத்துச் சென்றார் எனது மகள்.
ஆரம்ப பரிசோதனைகளை
முடித்ததுமே, அந்த டாக்டரின் முகம் மாறியது. வேறு சில டெஸ்ட்களை எடுக்கச் சொன்னார். பின்
எனது மகளிடம் தனியாகச் சொன்னார். இது இ.என்.டி பிரச்சினை இல்லை. சம்திங் சீரியஸ்.
நீங்கள் உடனடியாக உங்களது ஊருக்குச் செல்லுங்கள்.
தாமதிக்காமல் ஃபிளைட்
பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம். சென்னையில் எனது உறவினர் ஒருவர், “அப்போலோ
ஸ்பெஷாலிட்டி” மருத்து மனையில் அப்பாயின்மென்ட் வாங்கி வைத்திருந்தார்.
ஏப்ரல் – 2012
சென்னை
அப்போலோவில் தொடர்ந்து ஒருவார காலம் விடாமல் பல்வேறு விதமான டெஸ்ட்கள்,ஸ்கேன்கள்
எடுக்கப்பட்டன. டெஸ்ட்களின் முடிவில்பின்னர் அப்போலோ டாக்டர் ஹேமந்த்ராஜ், அந்த
செய்தியைச் சொன்னார்.
உங்களது மனைவிக்கு
கேன்சர். ஆங்காலஜிஸ் டாக்டர் எம்.ஏ.ராஜாவுக்கு ரெஃபர் செய்தார். எம்.ஏ.ராஜா
அவர்கள், மீண்டும் சில டெஸ்களுக்குப் பின் புற்று நோயை உறுதி செய்தார். அடுத்த
நாள் முதல் டோஸ் ‘கீமோ தெரபி’ ஆரம்பிக்கலாம் என்று எழுதினார்.
இந்த செய்தி என்னை
கண்டதுண்டமாக வெட்டிப் போட்டது. ஒரே வீச்சில், ஒரே கணத்தில் என்னை எவரோ வெட்டி வீழ்த்தினர்.
இல்லை.. இல்லை, இவர் என் மனைவியைப் பற்றிச் சொல்லவில்லை. வேறு
ஏதொ சொல்கிறார். இருக்காது... அப்படி இருக்காது....
ஆனால், கையில்
வைத்திருக்கும் டெஸ்ட் ரிப்போர்ட்கள் அவ்விதம் சொல்லவில்லையே! அதிர்ச்சி, நம்ப
இயலாத அதிர்ச்சி. அந்த கணம் நான் அனுபவித்த உணர்வுகளை, வேதனையை வருணிக்க
வார்த்தைகள் அற்றுப் போய்விட்டது.
இவள் எவரிடமும், அன்பைத்
தவிர வேறெதையும் காட்டிய தில்லையே!. பிறருக்கு துன்பம் நேரும்போதெல்லாம் ஓடோடி
உதவி செய்தவளா யிற்றே!. தீய குணங்கள் எதையும் அவளிடம் தேடினாலும் கிடைக்காதே?.
அன்பு, பிறருக்கு உபகாரம், எவரைப் பற்றியும்-எதைப் பற்றியும் பொறாமைப் படாத உன்னத
குணம், பதறாமை, நிதானம், உறுதி எல்லாம் சேர்ந்த உத்தமியல்லவா இவள்? அவளுக்கா இந்த
கோரம்?
முப்பத்தேழு
ஆண்டுகாலம் என்னோடு வாழ்ந்தவள். தனக்காகவென்று ஒருபொழுதும், எந்த ஒன்றையும் கேட்டதில்லையே?
அவருடைய சிந்தனை முழுவதும் குடும்பம், தொழிற்சங்கம், சமூகம் இவற்றொடு மட்டுமே சம்பந்தப்
பட்டிருந்தது. பாஸிட்டிவ் திங்கிங் என்பதற்கு இலக்கணம் அவள். அவளுக்கா இப்படி நேர
வேண்டும்?
இதோ கழுத்துப்
பகுதி வீங்கிப் போய், முகமெல்லாம் கருத்துப் போய், வேதனையை வெளிக்காட்டாமல்,
கண்களின் ஓரத்தில் லேசான கண்ணீருடன் படுத்திருக்கும் அந்த உன்னதப் பெண்ணைப்
பார்க்கிறேன். என்னால் தாங்க இயலவில்லை. மனம் வெடிக்கிறது! வாய்விட்டு அழுதுவிட
துடிக்கிறேன்.
புராணங்களிலும்,
கதைகளிலும் வருமே, அது போல அவருடைய வியாதியை நான் வாங்கிக் கொள்ள முடியாதா? இந்தப் பாழாய்ப் போன வியாதி எனக்கு வந்திருக்கக்
கூடாதா? இது என்ன சோதனை?
மருகி,மருகி
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நோய், Node களை மட்டும் பாதிக்கும் ஒரு அலாதி கான்சர். கழுத்துப் பகுதியிலிருந்து,
இடுப்பு வரைஉள்ள அனைத்து Node களும் பல்வேறு ஸ்டேஜ்களீல் பாதிக்கப்
பட்டிருக்கிறது. நவீன மருத்துவம் இந்த நோயை குணமாக்கும் (அல்லது) கட்டுப்
படுத்தும் அளவுக்கு, வல்லமை பெற்றதுதான். ஆயினும் மனைவி அடையும் துயரம், வலி என்னை
வெகுவாகப் புரட்டிபோட்டது. அவளது வலியும் துயரமும் என்னைத்தான் பீடித்துக் கொண்டது.
எனது துயரம் கொண்ட முகத்தினால், இந்த நோயை எதிர்கொள்ளும் அளவிற்கு மனத் துணிவு
அற்றவனாக உறவினர்களால் தீர்மாணிக்கப் பட்டேன். அவர்களுக்கு நான் எப்படி
விளங்கவைப்பது, முப்பத்தேழு வருட பந்தம், அவள் துயரப்படுவதை காணவொண்ணாத
கலக்கம்தான் என்னை அழவைக்கிறது என்று?.
எனது தமக்கை,
அவரது கணவர், தமக்கையின் புதல்வர்கள் (இதில் கடைசி புதல்வன் தான் எனது மருமகன்), அவர்தம்
குடும்பங்கள் எனது மனைவிக்கு உதவியாகவும், ஆறுதலாகவும், மன உறுதியை அளிக்கும்
விதமாகவும் பழகினர்.
06/04/2012 அன்று முதல்
“கீமோ” அளிக்கப் பட்டது.
மனோ தைரியத் துடன் சிகிச்சையை எதிர்கொண்டார். சிகிச்சைக்குப் பின் கூட நம்பிக் கையுடன்
இருக்கிறார்.
இந்த சிகிச்சையினால், அவரது கான்சர் குணமாகும் சிம்டம் ஏற்பட்டால், சில டெஸ்ட்களுக்குப் பின், அடுத்த “கீமோ” 26/04/2012 அன்று தொடரும். இல்லாவிடில் வேறு
வகையான டிரீட்மென்ட் தேவைப்படும்.
அவர் பூரண குணம் அடைந்து, மீண்டும் தனது இயல்பான நகைச்சுவை,
புத்திசாலித்தனம், உற்சாகம் ஆகியவற்றோடு தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என
விழைகிறேன். அந்த நிலையை அடைய எல்லாவற்றிலும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறேன்.
வேறு என்ன சொல்ல?
============================================================================
கடலூரில், தொடர்ந்து மூன்று மாதங்கள் ஒரே டாக்டரிடம் சென்றோமே? அவர் ஏன்,
இது தொண்டை சம்பந்தப்பட்டதில்லை என சந்தேகிக்க வில்லை? கல்லாப் பெட்டியை
நிரப்பிக்கொள்ளும் ஆர்வம், தொழிலில் ஏன் இல்லை? ஒருவேளை ஆரம்பத்திலேயே, சென்னைக்கு
ரெஃப்ர் செய்திருந்தால், முன்னமேயே சிகிச்சை ஆரம்பித்திருக்கலாமே? ஆக்ரா டாக்டர்
பார்த்த உடனே டயக்னஸிஸ் செய்ததை, இவரால் ஏன் செய்ய முடியவில்லை? சென்னைக்கு ரெஃபர்
செய்கிறீர்களா என நாங்களே வாய்விட்டு, உங்களை
வினவினோமே? ஏன் செய்யவில்லை? நோயாளிகளின் உயிர் என்பது உங்களுக்கு வெறும் ‘கேஸ்’ தானா?
============================================================================
Subscribe to:
Posts (Atom)