Saturday, December 3, 2011

பல்வேறு உலகில் என் பயணம் (புத்தக விமரிசனம்)


நேர்மையாக எழுதப்பட்ட அனைத்து சுயசரிதங்களுமே படிப்பதற்கு சுவையானவை. அதுவும் புகழ்பெற்றவர்களின் சரிதம், நாம் இன்னொரு பிறவி எடுத்து வாழ்வது போன்ற அனுபவத்தை தரவல்லது.

இந்த வகையில்,  நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களது சுயசரிதம், “பல்வேறு உலகில் என் பயணம்(“Wondering in Many Worlds”) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. 2011-ஜூலை மாதமே, நெய்வேலியில்  நடந்த புத்தக்கண்காட்சியில் வாங்கிவிட்டாலும் கூட, இப்போதுதான் படிக்க முடிந்தது.

நீதிபதியின் வார்த்தைத் தேர்வு, சரளமான நடை, எழுத்தின் நேர்மை, வார்த்தைகளின் கண்ணியம் என படிப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் புத்தகம்.  நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது, கூடுமான வரை நிகழ்வுகளுக்கே முன்னுரிமை கொடுத்து எழுதியுள்ளார்.

திரு. வி.ஆர்.கே தலைசிறந்த நீதிபதி மாத்திரமல்ல; எழுத்தாளர், இயல்பான-மனிதாபிமானி, இடது சாரி சிந்தனாவாதி.  தனது  தீர்ப்புக்களை “‘கருணையோடும், குற்றவாளிகள் திருந்தும் விதமாக வுமே எழுதியதாக குறிப்பிடுகிறார். வழக்கறிஞராக, சட்டமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக, உயர் நீதிமன்ற நீதிபதியாக, சட்ட கமிஷன் உறுப்பினராக, உச்ச நீதிமன்ற நீதிபதியாக தான் பணியாற்றிய அனுபங்களை, மிக்க துணிச்சலுடனும், அசாத்திய நேர்மையுடனும் விவரித்துள்ளார். இந்திராகாந்தி தேர்தல் வழக்கினை விசாரித்த முறை பற்றி கூறியிருப்பது வியப்பிலாழ்த்துகிறது.   உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவிட்டு, தனது துறையின் மற்றொரு முகத்தினப்பற்றி, தயவு தாட்சயன்யமின்றி தீர்க்கமான எழதியிருப் பவை யாவும் இவரால் மட்டுமே எழுதக்கூடியன.

முன்னாள் உச்ச  நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ஆர்.சி.லஹோத்தி கூறியிருப்பது போல, இப்புத்தகம் வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞரும், அது அரசியலோ, இலக்கியமோ, நீதிபதியோ, மாணவனோ, ஆசிரியரோ எவராக இருந்தாலும் படிக்க வேண்டிய புத்தகம்.

வி.ஆர்.கே போன்ற மனிதர்கள் நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றக் கூடியவர்கள்.

விகடன் பிரசுரம், இப்புத்தகத்தின் தமிழாக்கத்தினை மிக நேர்த்தியாக வெளியுட்டுள்ளனர். தமிழில் திரு. ராணி மைந்தன்.

1 comment:

  1. நான் இப்புத்தகத்தைப் படித்ததில்லை. ஆனால், உங்களது விமரிசன்ம் மிக நன்றாகவும் புத்தகத்தை வாசிக்கத் தூண்டுவதாகவும் உள்ளது. நன்றி!
    -விஜி.

    ReplyDelete