சில கோஷ்டிகளுக்கோ அல்லது சிறிய குழுக்களுக்கோ தலைவராக இருப்பது எளிது. அங்கே முழு அமைப்பிற்கும் நன்மை பயக்கும் செய்திகளை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. குழுவாதத்தை மட்டுமே மையமாகக் கொண்டு குதூகலமாகப் பேசலாம்.
குழுவாதம் என்பது உற்சாகம், ஆரவாரம், சண்டைகள் மற்றும் வெறுப்புணர்வுகளை எளிதாகத் தூண்டும் வல்லமை மிக்கது; கிளர்ச்சியூட்டும் தன்மை கொண்டது.
ஆனால், அவரே ஒரு பரந்துபட்ட அமைப்பிற்குப் பொறுப்பேற்றுவிட்டால், அத்தகைய கிளர்ச்சியூட்டும் பேச்சுகளைப் பேச முடியாது. ஏனெனில், அங்குப் பொறுப்பு அதிகம்.
உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள், ஆன்மீக அன்பர்களால் ஒரு பொதுவான இந்து மத அபிமானியாகவே புரிந்து கொள்ளப்பட்டவர். அவரிடமிருந்து இத்தகைய குழுப் போக்கையோ அல்லது வெறுப்புப் பேச்சுகளையோ பக்தர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் வேளுக்குடி, "தான் அப்படிப்பட்ட பொதுவான ஆசாமி இல்லை; வெறும் சிறு பிரிவிற்கான ஆசாமிதான்" என்பதைத் தனது பேச்சால் நிரூபிக்கும் போது பக்தர்கள் திகைத்துப் போகின்றனர். இதில் தவறு அவரிடம் இல்லை! அவரை அவரது தகுதிக்கு மேல் உயர்வாக நினைத்த பக்தர்கள் மீதுதான் தவறு. அவர் என்றுமே தான் ஒரு 'சைவ வெறுப்பாளர்' என்பதை மறந்துவிடவில்லை போல!
அதனால்தான், இடம்-பொருள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், "புதுசா வந்த விநாயகர்" என்று வசைபாடியுள்ளார். இது தெய்வநிந்தனை என்றுகூட அவருக்குப் புரியவில்லை. தென்கலை வைணவர்களாக இல்லாத பல பக்தர்களும் ஆர்வலர்களும் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர்; அவரது ஆன்மீகப் பணிகளில் பங்கேற்றுள்ளனர் என்பதை அவர் மறந்தே போனார்.
ஏன் இப்படி விபரீதமாகப் பேசினார் என்பது அவருக்கே வெளிச்சம். அந்தப் பேச்சு, பலரையும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. புராணங்களிலும் கதைகளிலும் கிடைக்கும் மேற்கோள்களை அவரவர் நாவன்மைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கொள்ளலாம். வேளுக்குடி, பிள்ளையாரை நிந்தனை செய்யவே அத்தகைய மேற்கோள்களை எடுத்துக்கொண்டார் போலிருக்கிறது.
"புராணங்களில் விநாயகரைப் பற்றி எதுவுமே இல்லை; அவர் எங்கிருந்தோ புதிதாக வந்தார்" என்றெல்லாம் தேவையற்ற தீவிரப் பேச்சை விடுத்து, பேசுவதற்கு முன்பு நம் நாட்டில் விநாயகர் வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை யோசித்திருக்கலாம்.
இது குறித்துச் சமூகத்தளத்தில் ஒருவர் எழுப்பிய நியாயமான கேள்வி இது:
"இதிகாச புராணங்கள் எதிலும் இல்லாத விஷயங்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலும் உள்ளன என்பதை சுவாமி அறியாதவர் அல்ல. உதாரணமாக, ராம-ராவண யுத்தத்தின் இறுதியில் அரக்கர் படைகள் 'குழமணி தூரம்', 'பொங்கத்தம் பொங்கோ' என்று கூத்துகள் ஆடியதைப் பற்றித் திருமங்கையாழ்வார் வர்ணிப்பது, வால்மீகி ராமாயணத்திலோ அல்லது பிற புராண இராமாயணச் சித்திரிப்புகளிலோ இல்லாத ஒன்று. அதனை அருளிச்செயல் என்று ஏற்கும் பட்சத்தில், விநாயகரைப் பற்றிய விஷயங்களுக்கு மட்டும் புராணப் பிரமாணம் எங்கே என்று கேட்பது நியாயமானதல்ல."
மேலும், விநாயகர் வழிபாடு இல்லாத மரபுகள் இந்து மதத்தில் இல்லை. தற்போது நிலவும் அரசியல்-சமூகச் சூழலில், விநாயகரை ஒரு "சைவக் கடவுள்" என்பதாகக் கற்பனை செய்து வன்மத்தை வளர்ப்பது சிறுபிள்ளைத்தனம். காலம் காலமாகப் பிள்ளையார், எல்லாச் சம்பிரதாயங்களும் துதிக்கும் செல்லக் கடவுளாகவே திகழ்கிறார்.
நமது ஆழ்வார்கள் அருளிய திருவாய்மொழியிலும் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:
"அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே."
(ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய புரிதலுக்கு ஏற்பத் தங்களுக்குப் பிடித்தமான தெய்வங்களை 'இவரே என் கடவுள்' என்று சரணடைகிறார்கள். அப்படி அவர்கள் வணங்கும் அந்தந்த தெய்வங்களும், தங்களைக் கும்பிடும் பக்தர்களுக்குக் குறைவில்லாமல் பலன்களைக் கொடுக்கின்றன. ஏனெனில், அவரவர் செய்த நல்வினைப் பயன்களுக்கு ஏற்ப அந்தந்த தெய்வங்களின் வடிவில் நின்று அருள்பாலிப்பவன் ஒரே பரம்பொருள்தான்.)
இது நவீன யுகம். இந்து மதம் என்பதே காலத்திற்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வல்லமை மிக்கது என்பதை மறந்து, வேளுக்குடி இன்னும் 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் இதில் எந்தவிதச் சேதக் கட்டுப்பாடும் (Damage control) செய்ய முயல்வதாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சர்ச்சையை மேலும் கிளறாமல், அவரைப் புறம்தள்ளிவிட்டு நாம் கால ஓட்டத்தைத் தொடர்வோம்.
#Vekukkudi #Vinayagar #controvercy #vekukkudi krishnan