Wednesday, March 29, 2017

மனுஷ்யபுத்திரனுக்கு வீடில்லை...

இன்று ‘தமிழ் ஹிந்து’ பத்திரிகையில், மனுஷ்யபுத்திரனுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை என்பது குறித்து, ஒரு முழுப்பக்கக்  கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரையின் சாரம் என்னவென்றால்,  அவர் குடியிருந்த வீட்டினை உரிமையாளர் விற்றுவிட்டதால், வீட்டைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம், அவருக்கு ஏற்பட்டுள்ளது. வேறு வீடு தேடிக் கொண்டிருக்கிறார்.  ஒட்டு மொத்த சென்னையும் இந்துத்துவாவிற்குப் பின்னால் சென்றுவிட்டதால்,  ஷாகுல் ஹமீது என்னும் மனுஷ்யபுத்திரனுக்கு, அவர் இஸ்லாமியர் என்ற காரணத்தாலேயே வாடகைக்கு வீடு மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டுகிறார்.இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையா எனக் கேட்டுள்ளார்.

கால ஓட்டத்தில், ஒரு காலத்தில் ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’ என்றும் தற்போது ‘மவுண்ட் ரோடு மாவோயிஸ்டு’ என்றும் வர்ணிக்கப்பட்டு நக்கல் செய்யப்படும் இந்தப் பத்திரிகை, இக் கட்டுரையை, இவ்வளவு பெரிய அளவில் வெளியிட்டுள்ளதன் நோக்கம் தெளிவானது.

அப்பத்திரிகை நினைத்திருந்தால், ஒரு இந்துவிற்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்திருக்காதா?மேம்போக்காகப் பார்ப்பதற்கு, மதச் சார்பற்றவர்களை வெகுண்டெழ வைக்கும் கட்டுரைபோலத் தோன்றினாலும், உண்மையில் இந்து-இஸ்லாமிய பாகுபாட்டை தீவீரமாக்கும் உள் நோக்கம் கொண்ட கட்டுரை. சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் அடிப்படைவாத சக்திகளின் வேறு ஒரு முகம்தான் இக்கட்டுரை. வலது எக்ஸ்ட்ரீமுகு  நேர் எதிர் முகாம். ஏதோ,  மொத்த இந்தியாவும் முஸ்லீம்களுக்கு எதிராக திரும்பிவிட்டது என்ற  மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அதன் மூலம் தனது ‘அரசியலுக்கு’ ஏதாவது இரை கிடைக்காதா என்று ஏங்கும் நரித்தனம்தான் அந்தச் செய்தியின் பின்னனி என சந்தேகிக்கிறேன்.

அவர் குடியிருந்த வீடு, ஒரு இந்துவுக்குச் சொந்தமானதுதான் என்பதை எங்கும் சொல்லவில்லை, திரு. ஹமீது.

உண்மையில் வீடு வாடகைக்கு விடுபவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுப்பதில்லை எனத் தீர்மாணித்துவிட்டார்களா என்ன? அப்படியெல்லாம் இல்லை. 

வாடகைக்கு விடுபவர்களின் நோக்கம் மூன்று தான்.
ஒன்று ‘அடிதடியில் ஈடுபடும் நபர்கள்’, ‘ரௌடிக்கூட்டம்’, ‘சமுதாய விரோத/பண்பாட்டு விரோத ஆசாமிகள்’ யாரும் வாடகைக்கு வந்து விடக் கூடாது. இரண்டு ‘வாடகை தவறாது கொடுக்கும் நபராக இருக்க வேண்டும். மூன்று, வீட்டினை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதுதவிர அசைவ உணவு சமைப்பவர்கள் வேண்டாம் என்ற ஒரு சிறு பிரிவு இருக்கும். இதில் இஸ்லாமியர்கள் எங்கே வந்தார்கள்?

1973-ல், நான் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஒண்டுக் குடித்தனம் கிடைத்தது. ஆனால் ஓனர், ‘ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குத்தான்’ கொடுக்க இயலும் என்றார். அவர் மறைமுகமாக குறிப்பிடும் சமுதாயத்தைச் சார்ந்தவந்தான் நான் என்று சொல்லி, வாடகைக்கு வர எனக்கு விருப்பமில்லை. ‘சரி.. பரவாயில்லை, வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன்..’ எனக் கிளம்பும்போது, அவரே,  ‘நீங்க அசைவமா..?’ என்றார். ‘இல்லை..’ என்றேன். சரி மூன்று மாதம் மாத்திரம் இருந்து கொள்ளுங்கள்; பிறகு காலி செய்யவேண்டும் என்று சொல்லி, மூன்று மாத வாடகையை முன்னதாகவே வாங்கிக் கொண்டார். எனக்கு அப்போது அவசியம் வீடு தேவைப் பட்டதால், அதற்கு உடன் பட்டேன்.  

இதில் ஒரு விசித்திரம் இருக்கிறது. வீட்டின் ஓனர், அவர் குடியமர்த்த விரும்பிய சமுதாயத்தைச் சார்ந்தவரில்லை. குடிவந்தபின் பிரிதொரு நாள், அவரிடம் கேட்டேன். “நீங்கள், அந்தச் சமுதாயத்தைச் சார்ந்தவரும் இல்லை.. ஆனால் அந்த சமுதாயத்தவருக்குத்தான் வீடு வாடகைக்கு விடுவேன் என்றீர்களே, எதற்காக? “ என்றேன். அவர் படு கேஷூவலாக, அதெல்லாம் ஒன்றுமில்லைசார்.. அவர்கள் ஒண்ணாந்தேதியானா சரியா வாடகை கொடுத்து விடுவார்கள். வாடகை ஏத்தினா மறுப்பேதும் சொல்ல மாட்டார்கள். சண்டை சச்சரவுக்குப் போக மாட்டாங்க. நம்ம கண்டிஷனுக்கு பெரும்பாலும் ஒத்துகிட்டு, தலையை ஆட்டிகிட்டு போயிடுவாங்க.. அதான்” என்றார்.

இது தான் வீட்டு உரிமையாளர்களின் சைக்காலஜி. ரகளை, வம்பு - தும்பு இல்லாத ஆட்கள் வேண்டும். அவ்வளவே! 

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; காவல் துறையைச் சார்ந்தவர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், ரௌடி எலிமென்ட்ஸ், பல இடங்களில் பேச்சுலர்கள்.. என பலருக்கும் வீடு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இதைப்பற்றி இப்பத்திரிகை என்றாவது தமாஷாகக் கூட எழுதியிருக்கிறதா?

இஸ்லாமியர்கள் என்றாலே, வன்முறையாளர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது யார்? இந்த மீடியாக்கள் தானே? மீடியாக்களுக்கு பரபரப்பு வேண்டும், சர்குலேஷன் ஏறனும். தனது முதலாளியின் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல, கருத்துருவாக்கம் செய்யும் வகையில், செய்திகளை ‘பிரசன்ட்’ செய்யனும். அவ்வளவுதான்.

இன்று பத்திரிகையில் அவரது செய்தி வந்துவிட்டது. இனி, எவரேனும் இஸ்லாமியர் அல்லாத ஒருவர், வலிந்து தனது வீட்டினை மனுஷ்யபுத்திரனுக்கு வாடகைக்குத் தரக்கூடும். அதை ‘ஹிண்டு’ வெளியிடாமலும் போகும்.

நாடு பிரிவினை அடைந்தபோது, தனது அக்கம்பக்கத்தி லிருக்கும் இஸ்லாமியர்களை தங்கள் வீட்டிற்குள் ஒளித்துவைத்து, மதக் கலவரங்களிலிருந்து காப்பாற்றிய இந்துக்கள் இங்கே ஏராளம். அதுதான் இந்த நாட்டின் பாரம்பர்யம். அதைக் காப்பாற்றும் வகையில், முன்னெடுத்துச் செல்லும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.
பொறுப்பற்றவகையில் செய்திகளை வெளியிடுவது எந்தவகையான பத்திரிகை தர்மமென்று தெரியவில்லை.

Monday, March 27, 2017

தூக்கம்.

தூக்க மாத்திரைக்கு அடிமையாகி இருபத்தைந்து வருஷங்களாகிவிட்டன. எந்தக் கணத்தில், எந்த தினத்தில் இந்த மாத்திரை என்னை ஆட்கொண்டது என சரியாக நினைவுக்கு வரவில்லை. 

என் தகுதிக்கு மீறி நானாக அலுவலகத்தில் ஏற்றுக் கொண்ட பொறுப்பின் சுமை தந்த அழுத்தமா அல்லது மனைவியின் பெரும் குறட்டை ஒலி ஏற்படுத்திய இடைஞ்சல் காரணமா தெரியவில்லை. தொலைந்த தூக்கத்தைப் பற்றி, ஒரு நாள் எனது நன்பர் ஒருவரிடம் புலம்பிக் கொண்டிருந்த பொழுது, ‘அதிகாலை நடைப்பயிற்சி’ ஆரோக்கியத்திற்கு நல்லது என சிபாரிசு செய்தார்.  இதுதான் தூக்க மாத்திரை குழியில் சிக்க வைத்துவிட்டது என நினைக்கிறேன்.

வீட்டிலிருந்து ஐந்து கி.மீ தள்ளியிருக்கும் ஸ்டேடியம் ஒன்றிற்கு  நடைப் பயிற்சி (வாக்கிங் என்பது எப்படி நடைப் ‘பயிற்சி’ ஆகும்?)  செல்ல வேண்டும். நன்பரது வீடு ஸ்டேடியத்திற்கு அருகில்தான். ஆனால் நான், அதிகாலை நாலு மணிக்கே எழுந்தால்தான் அவரோடு இணைந்து ‘பயிற்சி’ செய்ய சாத்தியமாகும். இரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்கு தூங்கி அதிகாலை நாலுமணிக்கு எழுவது சிக்கலை மேலும் சிடுக்காக்கியது.  இந்த வாக்கிங் ஷெட்யூல் எனக்கு ஒத்து வரவில்லை என புகார் செய்தபொழுது,  அவர் அந்த மாத்திரையை அறிமுகப் படுத்திவைத்தார். கடுகத்தனை மஞ்சள் மாத்திரை, எட்டு மணிக்குள்ளாக தூங்கவைத்து, அதிகாலையில் எழுவதை எளிதாக்கியது. போதிய தூக்கமும் கிடைத்ததாக சந்தோஷமாக உணர்ந்தேன்.  ஆனால் அது மெல்ல, மெல்ல என்னை விழுங்கிவருவதை, நான் முழுமையாக விழுங்கப்பட்டபின் தான் உணரமுடிந்தது.

முதலை என்னை விழுங்கிவிட்டதை உணர்ந்து வெளியே வர எத்தனித்த பொழுது, வேறு ஒரு அழுத்தம் வாழ்க்கையில் ஏற்பட்டது.  என் மனைவி நோய்வாய்ப்பட்டார்.  

என்றைக்குமே நான் ஒரு ஆரோக்கியனாக இருந்ததில்லை. அறுபது – அறுபத்தைந்தை நிறைவு செய்தாலே போதும், அதுவே பெரிய விஷயம்  என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, மிக ஆரோக்கியமான பெண்மணியான மனைவிக்கு வந்த நோய் என்னைப் பைத்தியம் பிடிக்க வைத்து விட்டது. நோய் கண்டுபிடிக்கப் பட்ட நாள்முதல், அவர் மறையும் வரையிலான இரண்டு ஆண்டுகள் பற்றி, இன்று எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. பித்து பிடித்தாற் போல, புலம்பியிருக்கிறேன். அழுது புரண்டிருக்கிறேன். வீட்டின் சகல அதிகாரங்களும், பொறுப்புகளும் அவரிடமே இருந்தது. 

இரவுகளில் அவர் பக்கம் அமர்ந்து ஒரு மொகலாய மன்னன் பிரார்த்திக் கொண்ட்துபோல என் உயிரை எடுத்துக் கொண்டு, மனைவியின் உயிரை விட்டுவிடுமாறு கடவுளிடம் இரைந்திருக்கிறேன். எவ்வளவு நாள்தான் தூங்காமலிருக்க முடியும்? மாத்திரையின் அளவை இரட்டிப்பாக்க வேண்டியிருந்தது.

இடி விழுந்தாற்போல அவர் மறைந்து போனபின், தூக்கம் என்பதேது? துக்கம், தனிமை, இயலாமை, சுய இரக்கம், உறவுகளின் உதாசீனம் எல்லாம் சேர்ந்து மாத்திரையின் துணையைத் தவிர்க்க இயலாததாக்கிவிட்டன.

சம்பிரதாயமான அறிவுரைகள் எதுவும் உதவவில்லை. குறித்த நேரத்தில் படு-தியானம் செய்-மனப்பயிற்சி, 4-5-6 மூச்சுப்பயிற்சி போன்ற இத்தியாதிகள் எல்லாவற்றிற்கும் பெப்பேதான்.

ஆயுர்வேதம், சித்தா, ஆங்கிலமருத்துவம் எதுவும் உதவவில்லை.  ஒரு ஆயுர்வேத மருத்துவர்  மட்டும் அணுசரனையாகச் சொன்னார். மனிதன் தூங்கியாக வேண்டுமே? ஏற்கனவே முதுமை அடைந்துவிட்ட நிலையில், சரியாகத் தூங்காமலிருப்பது, தூக்க மருந்து உண்பதால் ஏற்படும் விளைவுகளைவிட அபாயகரமானதாகும். எனவே, மருந்தின் அளவைக் கூட்டாமல், அப்படியே தொடருங்கள் என்றார். எனக்கும் அதுவே சரியெனத் தோன்றுகிறது.

அது சரி.... அந்தக் கதையை இங்கே ஏன் சொல்கிறேன்?

வியாதிக்கு மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அன்றாடம் நடைபெற்றாக வேண்டிய உடல் ரொட்டீன்களுக்கு மருந்தின் துணை நாடாதீர்கள்.
காலைக் கடன்களைக் கழிக்க மருந்து, பசி எடுக்க மருந்து, உண்டது ஜீரணமாக மருந்து, செக்ஸுக்கு மருந்து, தூக்கத்திற்கு மருந்து,  சத்துக்கு மருந்து என அவஸ்தைப் படுபவர்களை அறிவேன்.  இவையாவும் புதை குழி. மீளமுடியா ட்ராப்.

While any drug use often begin as voluntary behaviors, addiction prompts chemical alterations in the brain that affect memory, behavior and the perception of pleasure and pain. Conscious decisions turn into compulsive actions, and major health, financial and social consequences.

ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாய் இருந்துவிடுங்கள். 

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பிரதாயமான 

குறிப்புகள் (நெட்டில் ஏகமாய் காணக் கிடைக்கும்) ஆரம்ப 

காலங்களில் நிச்சயம் உதவும்.



Saturday, March 11, 2017

‘விருஞ்சிபுரம் – மார்க்க பந்தீஸ்வரர்’

ஒரு குடும்ப விழாவிற்கான அழைப்பிதழ் வந்தது. அனுப்பியவர் பெங்களூரில் வசிக்கிறார். விழா நடைபெறும் இடமாக அவர் குறிப்பிட்டிருந்தது ‘விருஞ்சிபுரம்’. சொந்த ஊரிலும் இல்லாமல், வாழும் இடத்திலும் இல்லாமல், இதென்ன ‘விருஞ்சிபுரம்?’

விழா நடைபெறும் விருஞ்சிபுரத்திற்குச் சென்றபொழுதுதான், அந்த தலத்தில், 'மார்க்கபந்தீஸ்வரர் -  மரகதவல்லி  திருக்கோயில் இருப்பதே தெரிந்த்து.  

தமிழ்நாட்டில் தான் எவ்வளவு கலைநயம் மிளிரும் கோயில்கள்? எந்தப் பெருமைமிகு பெரிய கோயில்களுக்கும் சளைத்ததல்ல, இத்தலம். கோயில் கோபுரமும், மூலவர் மார்க்க பந்தீஸ்வரரும், பரிவாரங்களும், மரகதவல்லியம்மனும் எவ்வளவு அழகு? இவ்வளவு நாட்களாக தரிசிக்காமல் இருந்துவிட்டாயே என என்னை நானே திட்டிக்கொள்ளும் அளவிற்கு பேரழில்.

இது  ஒரு வைப்புத் தலம்.  வேலூரிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில், 13வது கிலோ மீட்டரில் இருக்கிறது. பாலாற்றிலிருந்து சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது.  இவ்வாற்றை க்ஷீரநதி என்கிறார் கோயிலில் இருந்த ஒரு பெரியவர். (வடமொழியில் க்ஷீரம் என்றால் பால்) இறைப்பணிக்காக பாலாகவே ஓடிய நதி இது என்றார் அவர்.  பாலை விடுங்கள், தண்ணீரே இல்லை. அட...  தண்ணீர் கூட வேண்டாம். மணல் கூட இல்லை. கட்டாந்தரையாக புதர்கள் மண்டிக்கிடக்கிறது நதி.

சிவபெருமானின் தலைமுடியினைக் கண்டதாகப் பொய்யுரைத்த பிரம்மன் தண்டனை பெற்றதனால் , இவ்வூரில் சிவநாதன்-நயினா நந்தினி தம்பதிக்கு மகனாகப் பிறந்து இறைவனைப் பூஜித்தாராம். இவனுக்கு பிரம்மோபதேசம் செய்விப்பதற்கு முன்னரே தந்தை இறந்துவிட, சிவபெருமானே முதியவர் தோற்றத்தில் வந்து, தீட்சையும் உபதேசமும் செய்வித்தாராம்.பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயருண்டு. எனவே விரிஞ்சிபுரம்.  எனவேதான் , விழா நடத்த இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தத்தின் இரகசியம் புரிந்தது. 

தலவிருட்சம் ‘பெண் பனைமரம்’. ஆச்சர்யமாக இருந்தது. கோயிலின் உள்ளேயே  பிரகாரத்தில் உள்ளது இப்பனைமரம். மூலவர் சுயம்பு மூர்த்தி. பிரம்மனுக்கு (அந்த சிறுவனுக்கு) பூஜை செய்ய ஏதுவாக தலை சாய்த்து இருக்கிறாராம். பங்குனி மாதத்தில் மூலவர் மீது, சூரிய கிரணங்கள் விழும். 800 முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையான பழமையான கோயில்.

குழந்தைப்பேறு வேண்டியும், திருமண தடை நீக்கக்கோரியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

கோயில் உள்ளே, மூலவர் சன்னதிக்கு (வெளிப் பிரகாரத்தில்) நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. தூண்கள் யாவற்றிலும் கலை நயம். கும்பகோனம் ராமஸ்வாமி கோயில் தூண் சிற்பங்களை நினைவுபடுத்துகிறது. மாக்கல் போன்ற மென்மையான கற்கள் அல்ல; கடினக் கற்கள்! இதில் எப்படித்தான் இவ்வளவு நுட்பமான, நேர்த்தியான சிற்பங்களை வடித்தார்களோ? 

உண்மையில் விரிஞ்சிபுர மார்க்கபந்தீஸ்வர்ர் (வழித்துணை) கோயில் எதிர்பாரா ஆச்சர்யத்தைத் தந்த திருத்தலம். அருகில் ‘பள்ளி கொண்டா’ என்ற ஊரிலும், இரத்தினகிரி மலையிலும் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன.

வேலூர் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள். இக்கோயிலின் மதிலழகு.


 
முன் வாயில் - ராஜ கோபுரம்.

துவஜஸ்தம்பம் 




கற்பக்கிரஹத்தின் பின்புறம், கெஜப்ருஷ்ட வடிவில் 


தல விருட்சம் 

எத்தனை பேரின் பிரார்த்தனைகளோ 

சிம்ம தீர்த்த நுழைவாயில் 

மதிலழகு