Monday, March 27, 2017

தூக்கம்.

தூக்க மாத்திரைக்கு அடிமையாகி இருபத்தைந்து வருஷங்களாகிவிட்டன. எந்தக் கணத்தில், எந்த தினத்தில் இந்த மாத்திரை என்னை ஆட்கொண்டது என சரியாக நினைவுக்கு வரவில்லை. 

என் தகுதிக்கு மீறி நானாக அலுவலகத்தில் ஏற்றுக் கொண்ட பொறுப்பின் சுமை தந்த அழுத்தமா அல்லது மனைவியின் பெரும் குறட்டை ஒலி ஏற்படுத்திய இடைஞ்சல் காரணமா தெரியவில்லை. தொலைந்த தூக்கத்தைப் பற்றி, ஒரு நாள் எனது நன்பர் ஒருவரிடம் புலம்பிக் கொண்டிருந்த பொழுது, ‘அதிகாலை நடைப்பயிற்சி’ ஆரோக்கியத்திற்கு நல்லது என சிபாரிசு செய்தார்.  இதுதான் தூக்க மாத்திரை குழியில் சிக்க வைத்துவிட்டது என நினைக்கிறேன்.

வீட்டிலிருந்து ஐந்து கி.மீ தள்ளியிருக்கும் ஸ்டேடியம் ஒன்றிற்கு  நடைப் பயிற்சி (வாக்கிங் என்பது எப்படி நடைப் ‘பயிற்சி’ ஆகும்?)  செல்ல வேண்டும். நன்பரது வீடு ஸ்டேடியத்திற்கு அருகில்தான். ஆனால் நான், அதிகாலை நாலு மணிக்கே எழுந்தால்தான் அவரோடு இணைந்து ‘பயிற்சி’ செய்ய சாத்தியமாகும். இரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்கு தூங்கி அதிகாலை நாலுமணிக்கு எழுவது சிக்கலை மேலும் சிடுக்காக்கியது.  இந்த வாக்கிங் ஷெட்யூல் எனக்கு ஒத்து வரவில்லை என புகார் செய்தபொழுது,  அவர் அந்த மாத்திரையை அறிமுகப் படுத்திவைத்தார். கடுகத்தனை மஞ்சள் மாத்திரை, எட்டு மணிக்குள்ளாக தூங்கவைத்து, அதிகாலையில் எழுவதை எளிதாக்கியது. போதிய தூக்கமும் கிடைத்ததாக சந்தோஷமாக உணர்ந்தேன்.  ஆனால் அது மெல்ல, மெல்ல என்னை விழுங்கிவருவதை, நான் முழுமையாக விழுங்கப்பட்டபின் தான் உணரமுடிந்தது.

முதலை என்னை விழுங்கிவிட்டதை உணர்ந்து வெளியே வர எத்தனித்த பொழுது, வேறு ஒரு அழுத்தம் வாழ்க்கையில் ஏற்பட்டது.  என் மனைவி நோய்வாய்ப்பட்டார்.  

என்றைக்குமே நான் ஒரு ஆரோக்கியனாக இருந்ததில்லை. அறுபது – அறுபத்தைந்தை நிறைவு செய்தாலே போதும், அதுவே பெரிய விஷயம்  என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, மிக ஆரோக்கியமான பெண்மணியான மனைவிக்கு வந்த நோய் என்னைப் பைத்தியம் பிடிக்க வைத்து விட்டது. நோய் கண்டுபிடிக்கப் பட்ட நாள்முதல், அவர் மறையும் வரையிலான இரண்டு ஆண்டுகள் பற்றி, இன்று எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. பித்து பிடித்தாற் போல, புலம்பியிருக்கிறேன். அழுது புரண்டிருக்கிறேன். வீட்டின் சகல அதிகாரங்களும், பொறுப்புகளும் அவரிடமே இருந்தது. 

இரவுகளில் அவர் பக்கம் அமர்ந்து ஒரு மொகலாய மன்னன் பிரார்த்திக் கொண்ட்துபோல என் உயிரை எடுத்துக் கொண்டு, மனைவியின் உயிரை விட்டுவிடுமாறு கடவுளிடம் இரைந்திருக்கிறேன். எவ்வளவு நாள்தான் தூங்காமலிருக்க முடியும்? மாத்திரையின் அளவை இரட்டிப்பாக்க வேண்டியிருந்தது.

இடி விழுந்தாற்போல அவர் மறைந்து போனபின், தூக்கம் என்பதேது? துக்கம், தனிமை, இயலாமை, சுய இரக்கம், உறவுகளின் உதாசீனம் எல்லாம் சேர்ந்து மாத்திரையின் துணையைத் தவிர்க்க இயலாததாக்கிவிட்டன.

சம்பிரதாயமான அறிவுரைகள் எதுவும் உதவவில்லை. குறித்த நேரத்தில் படு-தியானம் செய்-மனப்பயிற்சி, 4-5-6 மூச்சுப்பயிற்சி போன்ற இத்தியாதிகள் எல்லாவற்றிற்கும் பெப்பேதான்.

ஆயுர்வேதம், சித்தா, ஆங்கிலமருத்துவம் எதுவும் உதவவில்லை.  ஒரு ஆயுர்வேத மருத்துவர்  மட்டும் அணுசரனையாகச் சொன்னார். மனிதன் தூங்கியாக வேண்டுமே? ஏற்கனவே முதுமை அடைந்துவிட்ட நிலையில், சரியாகத் தூங்காமலிருப்பது, தூக்க மருந்து உண்பதால் ஏற்படும் விளைவுகளைவிட அபாயகரமானதாகும். எனவே, மருந்தின் அளவைக் கூட்டாமல், அப்படியே தொடருங்கள் என்றார். எனக்கும் அதுவே சரியெனத் தோன்றுகிறது.

அது சரி.... அந்தக் கதையை இங்கே ஏன் சொல்கிறேன்?

வியாதிக்கு மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அன்றாடம் நடைபெற்றாக வேண்டிய உடல் ரொட்டீன்களுக்கு மருந்தின் துணை நாடாதீர்கள்.
காலைக் கடன்களைக் கழிக்க மருந்து, பசி எடுக்க மருந்து, உண்டது ஜீரணமாக மருந்து, செக்ஸுக்கு மருந்து, தூக்கத்திற்கு மருந்து,  சத்துக்கு மருந்து என அவஸ்தைப் படுபவர்களை அறிவேன்.  இவையாவும் புதை குழி. மீளமுடியா ட்ராப்.

While any drug use often begin as voluntary behaviors, addiction prompts chemical alterations in the brain that affect memory, behavior and the perception of pleasure and pain. Conscious decisions turn into compulsive actions, and major health, financial and social consequences.

ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாய் இருந்துவிடுங்கள். 

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பிரதாயமான 

குறிப்புகள் (நெட்டில் ஏகமாய் காணக் கிடைக்கும்) ஆரம்ப 

காலங்களில் நிச்சயம் உதவும்.



3 comments:

  1. i share your grief.as i have suffered the same i can understand the hell lot u have undergone.But life goes on.
    anbudan
    karthik amma

    ReplyDelete
  2. அதெல்லாம ஒண்ணும் கவலைப்படாமல் இருங்கள் சார்.....
    அது addiction வகையில் வராது சார்.... சில நேரங்களில் நாம் மருந்து நாடியே வாழ வேண்டியுள்ளது...
    நண்பர் அறிமுகம் செய்ததால் சாப்பிட வேண்டாம் சார்.....
    உடல் தேவையை கேளுங்கள் சார்... மருத்துவர் உதவி நாடுங்கள்...

    ReplyDelete
  3. விஷயம் மனம் வருத்தம் தருவதுதான்
    ஆயினும் இறுதியாக அனைவருக்கும்
    பயன்படும்படியாக எழுதி இருந்த
    நான்கு வரிகள் இலட்சம் பெறும்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete